Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » கடைசி பேட்டி – 17 ( மர்மத் தொடர் )

கடைசி பேட்டி – 17 ( மர்மத் தொடர் )

ரவியும் பல முறை போன் செய்துவிட்டான். பதில் இல்லை. ராதிகாவும் அவனுடைய மொபைலில் முயற்சி செய்துவிட்டு அமைதியானாள். ராஜகோபாலுக்கு ஒரே குழப்பம். ராஜேஷையும் காணவில்லை அவனைத் தேடச்சென்ற நந்தினியையும் காணவில்லை.

ரெயின் டிவிக்கு செய்தி சென்றடைந்திருந்தது. அவர்களுக்கு ஒரே குதுகலம். சின்ன எழுத்துக்களில் அவர்களுடைய நிகழ்ச்சிகளின் நடுவே ப்ளாஷ் நியூஸ் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அமைச்சர்கள் கொலை. ஒரு பெரிய தொலைக்காட்சியின் நிருபர் கைது. மேலும் விவரங்கள் இல்லை என்று கலக்கிக் கொண்டிருந்தனர். வெறும் வாயயை மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்தால் என்ன செய்வார்கள்?

இதை பார்த்த ராஜகோபால் ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கணக்குப் போட்டிருந்தார்.

நந்தினி உள்ளே அவசரமாய் வந்தாள். அவள் வருவதை பார்த்ததும் ராதிகா என்னாச்சு என்றாள். ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு நடந்தாள். ரவி எங்கே ராஜேஷ் என்று பதட்டத்துடன் கேட்டான். சொல்றேன் என்று சொல்லிவிட்டு பாஸின் அறைக்குச் சென்றாள்.

பாஸ் ராஜேஷை பார்த்தேன். போலீஸ் ஸ்டேஷனில் இருந்தார். ஏதோ ஓவர் ஸ்பீடிங்க கேஸ். ஒன்னும் பயப்படத் தேவையில்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கிருப்பார் என்றாள் புத்திசாலித்தனமாக.

ராஜகோபால் அவளைஅமரச் சொன்னர்.

சின்னப் பெண்ணே நீ அழகா இருக்கேன்னு தான் உன்னை ரிசிப்ஷனிஸ்ட்டா போட்டேன். உன் குரலும் இனிமையா இருக்கு. ஆனா ரிப்போர்டர் வேலையை செய்யச் சொல்லலை என்றார் காட்டமாக.

அவள் நெளிந்தாள்.

அங்க பாரு என்று ரெயின் டிவி ப்ளாஷ் நியூஸை காண்பித்தார்.

அவள் குழப்பத்துடன் ஸாரி சார் என்று விட்டு நடந்ததை கூறினாள்.

எப்ப வருவாரு என்றார் யோசனையுடன்.

எனக்கு இப்ப மொபைல்ல கால் பண்ணாரு. உங்க கிட்டயோ ராதிகா கிட்டயோ மொபைல்ல பேசமுடியாது. மதியம் மூன்று மணிக்கு வருவேன்னு சொன்னாரு என்றாள்.

அது இன்னும் அவரை குழப்பத்தில் ஆழ்த்தியது. அவருக்கு மட்டுமே தெரிந்திருந்த அவனுடைய இன்னொரு எண்ணில் போன் செய்தார்.

ஸ்பீக்கர் போன் ஆனாக இருந்தது. நந்தினிக்கு அவன் குரல் கேட்டதும் உள்ளுக்குள் பூரிப்பு. அதைவிட பாஸ் தன் மேல் இத்தனை நம்பிக்கை வைத்து ஸ்பீக்கர் போனில் நம் முன் பேசுகிறாரே என்று ஆனந்தம்.

சீஃப். எந்த பிரச்சனையும் இல்லை. தலமை காவல்
நிலையத்திலிருந்து வெளியே வந்துட்டேன். விக்ரமனோட ஒரு ரகசிய சந்திப்பு இருக்கு.அது முடிஞ்சதும் உங்களுக்கு விவரம் கொடுக்கறேன். ஒன்னும் பயப்படத்தேவையில்லை என்றான்.

ராஜேஷ் நிலமை புரியாமல் பேசறீங்க என்று சொல்லிவிட்டு ப்ளாஷ் நியூஸை படித்துக் காண்பித்தார்.

என்ன பைத்தியக்காரத்தனம் இது. நம்ம ரத்தம் கீழே விழ காத்திருக்காங்களா. இது நியூஸா இல்லை அவங்க கற்பனையா? நம்மகிட்ட நல்லா அடிவாங்கியும் திருந்தலை அவங்க. அப்புறம் பார்த்துக்கலாம் சீஃப் என்று விட்டு நிலமை சகஜமாக்க

அப்புறம் இன்னோரு விஷயம் …

என்ன?

வீ ஹாவ் அ ப்யூடிஃபுல் லேடி இன் அவர் ரிசெப்ஷன். நான் அடுத்த தடவை போலீஸ்ல மாட்டினா அவளையே வந்து என்னை பார்க்கச்சொல்லுங்க என்றான் சிரித்துக்கொண்டே.

அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது.

நீங்க எனக்கு விலை மதிப்பற்றவர். ஜாக்கிரதையா இருங்க என்றார்.

தெரியும் சீஃப். உங்களுக்காக எதுவேண்டுமானாலும் செய்யக் காத்திருக்கேன் என்று சொல்லிவிட்டு போனைத் துண்டித்தான்.

நீங்க எனக்கும் தான் விலை மதிப்பற்றவர் என்று நினைத்தப்படியே அறையிலிருந்து வெளியேறினாள் நந்தினி. இன்னொரு அவார்ட் கிடைத்துவிட்டது இன்று.

நுங்கம்பாக்கம் ஹைரோடில் இருக்கும் பாம் குரோவ் ஹோட்டலுக்கு 2.00 மணிக்குச் சென்றடைந்தான்.

அதற்கு முன் ரங்கன் கையால் தேனீர். நல்ல மூலிகைக்குளியல். வெள்ளைச் சட்டை கரு நீல கால் சட்டை. சிவப்பு நிற டை. தலையை பாராசூட் க்ரீமினால் படியவைத்திருந்தான். க்ளீன் ஷேவ். எப்போதுமே பார்க் அவன்யூ சோப் பார்க் அவன்யூ ஷேவிங்க க்ரீம் ஆஃப்டர் ஷேவ் லோஷன் என்று பார்க் அவன்யூப் பிரியன்.

பல நாட்களுக்குப் பிறகு குளித்தது போல இருந்தது.

வெளியே வந்து சேகர் எம்போரியம் எதிரில் இருந்தப் பெட்டிக்கடையில் எல்லா பேப்பரையும் வாங்கி அமைச்சர் கொலைகளைப்பற்றி ஒரு முறை படித்தான். பிறகு தன் காரில் பாம் குரோவ் வெஜிடெரியன் ரெஸ்டாரெண்ட் சென்றடைந்தான்.

ஒரு சவூத் இண்டியன் தாலி 100 ரூபாய். 2.00 மணிக்கு மேல் கூட்டமிருக்காது. ஒரு கார்னர் சீட்டில் இருவரும் அமர்ந்தனர். இரண்டு தாலி ஆர்டர் செய்தார் திருவிக்ரமன்.

நீங்க வெஜிடேரியனா? என்று ஆச்சர்யமாக கேட்டான்.

சிரித்துக்கொண்டே ஆம் என்றார். போலீஸ் உடை களைந்து சாதாரண உடையில் வந்திருந்தார். ரகளையாக இருந்தார். வெள்ளை டீ ஷர்ட். நீல ஜீன்ஸ். இன்னும் வயது குறைந்தவர் மாதிரி இருந்தது. முடியை கலைத்துவிட்டிருந்தார்.

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அமைச்சர்களின் சீரியலைப்பற்றி விளக்கினான். தன் எண் எழுதும் பழக்கத்தை விளக்கினான். தான் வருவதற்கு முன்பாக வீட்டில் எப்படி அந்த சிலிப் வந்தது என்பதைப்பற்றி கூறினான். ஆபீஸ்சில் சந்தேகப்படும் படியாக யாரும் இல்லையென்றும் அவன் பாஸ் எந்தவிதத்திலும் இதில் சம்பந்தப்பட வாய்பில்லை என்றும் கூறினான்.

புதிதாக சேர்ந்த ராதிகாவைப்பற்றியும் அவள் அன்று கூப்பிட்டதால் வந்தது பற்றியும் பிறகு அவரிடம் மாட்டிக் கொண்டதைப்பற்றியும் கூறினான்.

அவனுடைய சீக்ரெட் ப்ராஜெக்ட்டினால் பல தலை உருள முடியும் என்றும் அதனால் போலீஸ் ரிக்கார்டில் எதுவும் சொல்லவில்லை என்றும் கூறினான்.

ராதிகா கொலையில் சம்பந்தப்பட வாய்ப்பில்லை என்றும் முதல் கொலை நடந்த பிறகே அவள் கம்பெனியில் சேர்ந்ததாகவும் கூறினான்.

குறுக்கே கேள்வி கேட்காமல் அமைதியாக அனைத்தையும் கேட்டுக் கொண்டார். குறிப்பு எதுவும் எடுக்கவில்லை.

சொல்லி முடித்து விட்டு இன்னும் ஏதாவது தெரியவேண்டுமா என்பது போல பார்த்தான்.

ஒன்றும் இல்லை என்பது போல அவரும் பார்த்தார்.

ஒரு நிமிஷம் சார் உங்க மொபைல் மாடல் நல்லா இருக்கே பார்க்கலாமா என்று கேட்டான்.

ஓ ஷ்யுர் என்று கொடுத்தார் அவரும்.

அதில் ஏதோ தட்டிப்பார்த்துவிட்டு சார் இப்ப நாம பேசின அனைத்தும் நீங்க ரிக்கார்ட் செஞ்சிங்க இல்லை. அதை நான் எரேஸ் பண்ணிட்டேன் என்றான் புன்னகையுடன்.

நீங்க மேதாவி என்றார் சிரித்துக்கொண்டே. பில் கொடுத்துவிட்டு விடை பெற்றனர் இருவரும்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top