இன்று சக்களத்தியை விடக்கூடாது நானே அவனோடு லஞ்சுக்கு போவேன் என்று நினைத்துக் கொண்டே ஆபீஸ்சுக்கு வந்தாள். வழக்கமாக நிறுத்தும் இடத்தில் அவன் வண்டியில்லை. ஆனாலும் பரவாயில்லை எப்போதாவது தான் அவளுக்கு முன்னால் வருவான். பாவம் செல்லம் ராத்திரி முழுக்க வேலை செஞ்சிருக்கும் என்று குழந்தையைப் போல தனக்குத்தானே பேசிக்கொண்டாள். தலை குளித்த ஈரமாக இருந்த கூந்தல். பெண்கள் தலை குளித்தாலே ஒரு அழகுதான். அதுவும் நன்றாக துடைத்த பிறகும் விட்டுப் போன சில நீர் துளிகள் சாவகாசமாய் நெற்றியில் கொட்டும் அழகு இன்று நந்தினியை இன்னும் அழகானவளாக காட்டியது.
சந்தோஷமாக உள்ளே நுழைந்தாள். தன் சீட்டுக்கு பாடிக்கொண்டே சென்றாள். வந்ததும் முதல் வேலையாக வாய்ஸ் மெயிலை நிறுத்திவிடுவாள். பிறகு ஏதாவது வாய்ஸ் மெயில் இருக்கிறதா என்று பார்ப்பாள். பிறகு ஈமெயில் பார்த்துவிட்டு காபி குடிக்கச் செல்வாள். ராமுவை கூப்பிடுவது இல்லை. நேராக கான்டீனுக்குச் சென்று அவளாகவே காபி போட்டுக் குடிப்பாள். வேண்டும் என்றே ராஜேஷின் கப்பில் கலந்து குடிப்பாள்.
மேடம் அது ராஜேஷ் சாரோடது என்று பதட்டப்படுவான் ராமு.
சரி சரி தெரியாம எடுத்துட்டேன் அவர்கிட்ட சொல்லிடாதே என்று விட்டு மறுபடியும் மறுபடியும் அந்த தப்பையே செய்வாள்.
அவளாகவே காப்பி போட வேறு ஒரு காரணம் இருக்கிறது. அப்போது தானே உள்ளே வந்து அவளுடைய ஆளின் காபினை கடந்து கான்டீனுக்குச் செல்ல முடியும்.
இன்று கான்டீனில் சக்களத்தி எதிர்பட்டாள். முதல் நாளில் இருந்த பந்தா இல்லை. கரும் பச்சை நிற சுடிதார் சாதாரண செருப்பு. வந்துவிட்டாயா தரைக்கு என்று நினைத்துக் கொண்டாள். இல்லை நீ விட்ட ஜொள்ளை என் ஆள் நேற்று லஞ்ச் நேரத்தில் கண்டுக் கொள்ளவில்லையா?
ஹாய் எப்படி இருக்கீங்க ராதிகா? நீ எப்படி இருந்தா எனக்கென்ன. மனக்குரல்.
நல்லா இருக்கேன். நீங்க?
நான் நல்லா இருக்கேன். ஏன் நீங்க டல்லா இருக்கீங்க? சரியா
தூங்கலையா நேத்து?
இல்லையே நல்லா தூங்கினேன். ஆனா காலையிலிருந்து ஏதோ தலைவலி.
தலைவலி எல்லாருக்குமே. குறிப்பா திருவிக்ரமனுக்கு.
யார் திருவிக்ரமன்?
என்ன ராதிகா ஜர்னலிஸ்டா இருக்கீங்க ஒரு ரிசப்ஷனிஸ்டப் போய் கேட்கறீங்களே! அமைச்சர் கொலை வழக்கை அவர்தான் ஹாண்டல் பண்றார். இன்னோரு அமைச்சரை கொன்னுட்டாங்க. அப்ப அவருக்குத்தலைவலி தானே.
சங்கடமாய் சிரித்துவிட்டு அங்கிருந்து அவசரமாய் நகன்றாள்.
9.45 இன்னும் வரவில்லை என் ஹீரோ. இங்கே ஒருத்தி காத்திருக்கேன்னு ஏதாவது பொறுப்பிருக்கா அவனுக்கு? கல்யாணத்திற்கு அப்புறம் ஒரு நிமிஷம் லேட்டா வந்தாலும் பட்டினி போடவேண்டியது தான். செல்லமாக கடிந்துக் கொண்டாள்.
இது காதலின் உச்சம். வெறும் காமத்தின் ஏக்கம் இல்லை. மூன்று வருடங்களாக அவனை தூரத்திலிருந்து ரசித்த பொறுமை. அவன் நன்றாக இருக்க வேண்டும் என்ற கரிசனம். அவனுக்காக எதையும் செய்யும் தியாகம். அவனுடன் வாழ் நாளை கழிக்க வேண்டும் என்ற மோகம். அவன் பிள்ளைகள் பெற்று அவனுடன் சேர்ந்து அவர்களை வளர்த்து பிறகு அவனுடன் வயது முதிர்ந்து பிறகு மறுபிறப்பிலும் அவனுடன் வாழு வேண்டி கனவு.
அமெரிக்கா வாசம் அவளை எள்ளளவும் மாற்றவில்லை. அமெரிக்காவில் இது போன்று ஒரு ஆண்மகனை கண்டதில்லை. ஆபிஸில் அவளுக்கு கடலை போடாதவர் யாரும் இல்லை. ஆனாலும் இன்று வரை அவன் இவளை ஏறெடுத்துப் பார்த்ததில்லை. இவளுடைய லோகட் அங்கிகள் அந்த ஆஞ்சனேய பக்தனை இம்மி அளவும் அசைக்கவில்லை. அமெரிக்காவில் டேட்டுக்குச் சென்ற ஐந்தாவது நிமிடம் இடையில் கை போட்டவரை பார்திருக்கிறாள். இங்கோ அவன் ம் என்று சொன்னாள் அனைத்தையும் தர இவள் தயார். விநோதமான மனம். விநோதமான பெண் நந்தினி.
10.30 இன்னும் வரவில்லை என் நாய்குட்டி. எங்கேடா போயிட்ட? நல்லா தூங்கிகிட்டு இருக்கியாடா? இரு உன்னை எழுப்புறேன்.
மறுபுறம் இன்டெர்காம் ஒலித்தது. பாஸ் தான். என்ன நந்தினி இன்னும் ராஜ் வரவில்லை. மொபைல் ஆஃப் ஆயிருக்கு வீட்டு நம்பர் அடிச்சிகிட்டே இருக்கு? அக்பரைவிட்டு அவர் வீட்டுக் போய் பார்த்திட்டு வரச்சொல்லுங்க.
சார் எனக்கு வெளியே சின்ன வேலை இருக்கு. நானே போய் பார்த்துட்டு வரட்டுமா?
உங்களுக்கு எதுக்கு சிரமம் நந்தினி?
இல்லை சார். சிரமம் இல்லை. நானே போறேன் என்றுவிட்டு பறந்தாள்.
ஆக்டிவாவை மாற்ற வேண்டும். என் சக்களத்தி வெச்சிருக்கிற வண்டி மாதிரி நான் ஏன் வெச்சிக்கனும்?
ஒரு புறம் இன்பமாக இருந்தது. மறுபுறும் கலக்கம். உடம்பு சரியில்லையோ? அப்படி இருந்தாலும் போன் ஆஃப் ஆயிருக்காதே? வீட்டு நம்பர் அடித்தால் ரங்கன் எடுத்திருப்பானே? தலையிலிருந்த கட்டு எடுக்கப்பட்டிருந்தாலும் பாண்ட் எய்ட் போட்டிருந்தான். சிறது முன் முடியும் வழிக்கப்பட்டிருந்தது அவனுக்கு. ஆனால் வெளி அழகை மட்டும் பார்த்து மயங்கியவளில்லை இவள். அவன் உயிரோடு கலந்துவிட்டவள்.
அவன் வீட்டிற்கு முன் போலீஸ் நின்றிருந்தது.
யார் நீங்க?
நான் அவரோட வேலை செய்யறேன்? என்ன பிரச்சனை கான்ஸ்டபிள்?
அவரை அரஸ்ட் பண்ணியிருக்கோம். இப்ப கமிஷனர் ஆபீஸ்ல இருக்காரு. நீங்க வேணா அங்க போய் பாருங்க.
என்ன? அதிர்ந்து போனாள். என் செல்லம் எந்த தப்புத்தண்டாவுக்கும் போகாதே.
ரங்கன் பதட்டமாக நின்றிருந்தான். அம்மா அம்மா தம்பியை பாக்கனும். நீங்க அவரை வெளிய எடுங்கம்மா என்று கெஞ்சினான்.
பயந்தவன் அருகே இன்னோரு பயந்தவன் இருந்தால் முதல் பயந்தவன் தைரியசாலி ஆகிவிடுவான் அல்லவா? இவள் அவனுக்கு ஆறுதல் சொன்னாள்.
ஒன்னும் பயப்படாதீங்க வாங்கப் போகலாம் என்று அவனை வண்டியின் பின்புறம் உட்காரவைத்துவிட்டு வண்டியை துவக்கினாள்.
ராதாகிருஷ்ணன் சாலையில் நின்றிருந்தபோது ரங்கன் விம்மி அழும் சத்தம் கேட்டது. என்னைவிட ராஜேஷை விரும்பவன் யாரென்று திரும்பி ரங்கனைப்பார்த்தாள். அவன் வண்டிவிட்டு இறங்கி என்னை மன்னிசிடுங்கம்மா என்று ரோட்டிலேயே சாஷ்டாங்கமாக கீழே விழுந்தான்.
என்னாச்சு அண்ணே எந்திரிங்க ரோடு இது. சிக்னல் விழுந்தா ட்ராபிக் ஜாம் ஆயிடும் வாங்க என்னாவாக இருந்தாலும் அந்த டீக்கடையில போய் பேசிக்கலாம் என்று வண்டியை ஒரம் கட்டினாள்.
அவளை பின் தொடர்ந்து வந்த காவல் இந்த குழப்பத்தில் அவள் எங்கு போனாள் என்று தெரியாமல் கமிஷ்னர் ஆபிஸை நோக்கிப் போனது.
தொடரும்…