(எல்லாரிடமும் விடைப்பெற்றுக் கொண்டு மீண்டும் காரில் செல்ல ஆயித்தமானார்கள் கலாவும் காமேஷும்.)
காமேஷின் கார், ஜிபி தியேட்டர் தாண்டி, நூறடி சிக்னலில் நின்றிருந்தது.
“அவளுக்கென்ன அம்பா சமுத்திரம்.. ஐயரு ஹோட்டலு அல்வா மாதிரி தாழம்பூவென தளதளதளவென வந்தா வந்தாள் பாரு..!
அவனுக்கென்ன ஆழ்வார்க்குறிச்சி அழகுத் தேவரு அருவா மாதிரிபர்மா தேக்கென பளபளபளவென வந்தா வந்தான் பாரு…………!”
– ஜில்லுனு சந்தோசமாக துள்ளல்ப் பாடலைக் கேட்டபடியே கலா- காமேஷ் ஜோடியைச் சுமந்த படி கார் பிரதான சாலையில் பயணப்பட்டிருந்தது.
கலாவின் முகத்தில் ஏதோ மாற்றம் தெரிந்ததை குறிப்பால் உணர்ந்தான் காமேஷ்.
“கலா… ரொம்ப பசிக்குதுமா… நம்ம ஃபேவரட் அஞ்சப்பர் போயி காலை டிபன் முடிச்சிட்டு நேரே உங்க வீட்டுக்கு போவோமே..!” என்று கெஞ்சலாக சொன்னான் காமேஷ்.
“நானும் அதைத்தான் சொல்ல நினைச்சேங்க..! சரிங்க… அப்பாவும் அம்மாவும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.. உங்க மொபைல் கொடுங்க.. நான் வீட்டுக்கு போன் பண்ணி லேட்டா வர்றதா சொல்லிடறேன் ” என்று சொல்லி காமேஷின் சட்டை பாக்கெட்டிலிருந்து
மொபைலை எடுத்து போன் செய்தலானாள் கலா.
அஞ்சப்பரில் காலை இடியாப்பம் சாப்பிட்டு முடித்து, நேரே கார் கோவைப்புதூரில் இருக்கும் கலாவின் வீட்டுக்கு புறப்பட்டார்கள்.
தடபுடலான வரவேற்புடன் மதிய விருந்து முடிந்து இருவரிடமும் ஆசி பெற்று திரும்புகையில் மணி மாலை 5ஐக் கடந்திருந்தது.
கலாவின் முகத்தில் அன்பு இல்லத்தில் ஏற்பட்ட மாற்றம் பற்றி விவாதிக்க இது தான் தருணமென்று முடிவெடுத்து எப்படி ஆரம்பிப்பது என்று யோசனையில் ஆழ்ந்திருந்தான் காமேஷ்.
கலாவே ஆரம்பித்தாள். “ஏங்க.. நான் அப்பவே கேக்கனும்னு நினைச்சேன்… அன்பு இல்லத்தில் ஒரு பெரியவரைப் பார்த்தோமே… ரத்னவேல் ஐயா அவரை எப்படி உங்களுக்கு தெரியும்??”.
காமேஷு மனதுக்குள் “அப்பாடா..” என்றான். காமேஷ் கேட்க தயங்கியதை கலாவே ஆரம்பிச்சது நிம்மதி அளித்தது.
உடனே காமேஷ், “அது இருக்கட்டும் கலா.. முதல்ல நீ சொல்லு… ஏன் அவரை நான் அறிமுகப்படுத்தறதுக்கு முன்னாடியே அவரைப் பார்த்து அதிர்ச்சியானே?? அவரை ஏற்கனவே உனக்கு தெரியுமா?” ஆச்சர்யத்தில் புருவத்தை உயர்த்திக் கேட்டான்.
கலா, உடனே… “ஆமாங்க..ஏற்கனவே அவரை பத்து வருடத்துக்கு முன்னால் பார்த்திருக்கேன்” என்றவாறு அனைத்து ஃபிளாஷ் பேக் நிகழ்வையும் சொல்லி முடித்தாள்.
“அதெல்லாம் இருக்கட்டும்.. .இவரை எப்படி நீங்க சந்திச்சீங்க?” விடாப்பிடியாய் கேட்டாள் கலா.
காமேஷ், “ரொம்ப ஆச்சர்யமா இருக்கு கலா.. நான் சந்தித்த அதே பெரியவரை நீ தா எனக்கு முன்னாலேயே சந்திச்சிருக்க.. ஆனா அப்போ, நீ யாரோ.. நான் யாரோ.. இப்போ பாரு.. ரெண்டு பேரும் ஒன்னா போயி சந்திச்சிருக்கோம்..” என்று புலகாங்கிதமாகி உணர்ச்சிவசப்பட்டான் காமேஷ்.
கார் இப்போது கோவைபுதூரில் உள்ள இன்பாண்ட் ஜீசஸ் சர்ச் முன்னர் நிறுத்தி விட்டு, காமேஷ், “கலா.. இங்கு இருக்கும் ஐயப்பன் கோயிலும் நாகப்பிள்ளையார் கோயிலும் இன்பாண்ட் ஜீசசு சர்ச்சும் ரொம்ப பிரபலமாமே. அங்கு போயிட்டு பின்பு வீட்டுக்கு போவோம் டா.” என்றவாறே கலாவுடன் இறங்கி நடக்கலானான்.
சற்று தூரம் காலாற நடந்த படியே பேசிக் கொண்டு சென்றனர். சிறிது தூரத்தில் ஐயப்பன் கோயில் இருந்தது.
கோயிலுக்குள் சென்று வழிபட்டு, சந்தனம் வைத்துவிட்டு பின்பு சிறிது தூரம் நடந்து இன்பாண்ட் ஜீசஸ் சர்ச்சுக்குள் வந்தனர்.
அங்கு மெழுகுவர்த்தி ஏத்தி வழிபட்டுவிட்டு, வெளியே வந்து கார் எடுத்து நாகப்பிள்ளையார் கோயில் நோக்கி பயணப்பட்டனர்.
வழிபாடுகள் முடிந்து ஒரு வழியாய் காரில் ஏறி தங்களின் வீடு நோக்கி பயணமானார்கள். இப்போது மணி மாலை 5.45.
அதுவரை சஸ்பென்ஸ் பொறுத்துப் பார்த்த கலா.. அதற்கு மேல் பொறுக்க முடியாமல், திரும்ப அந்த டாப்பிக்கை ஆரம்பித்தாள்.
“ஏங்க.. நான் கேட்டதுக்கே இன்னும் பதிலைக் காணோமே.. அந்த பெரியவரை எங்கே எப்போ எப்படி சந்திச்சீங்க??” ஆர்வமாய் கேட்டாள் கலா.
“சொல்றேன்மா.. உன்கிட்ட சொல்லாம வேற யார் கிட்ட சொல்லப்போறேன்..” என்றவாறே… காரை மெதுவாக்கி, தன் ஆள்காட்டி விரல் கொண்டு கலாவின் முகத்தின் முன் வட்டவட்டமாய் சுற்றிச் சிரித்தான் காமேஷ்.
“என்னங்க பண்றீங்க… சின்ன பிள்ளை மாதிரி..” புரியாமல் கேட்டாள் கலா.
“ஃபேளேஷ் பேக் போகப் போறோம். அதான்.. சுழல் உருவாக்கினேன்.” என்றான் கலகலச்சிரிப்புடன் காமேஷ்.
“போங்க.. உங்களுக்கு எப்பவுமே விளையாட்டு தான்” செல்லமாய் அவனது கையைத் தட்டிவிட்டபடி சிணுங்கினாள் கலா.
“நான் பி.எஸ்.ஜி கல்லூரியில் படிச்சிட்டிருந்த நேரத்துல.. பயங்கரமா பைக்கை ஸ்பீடா ஓட்டுவேன்.. அப்போ அதிகமா இருந்தது இளமைத் திமிர்.. எல்லாரும் புருவம் உயர்த்தி பார்க்க வைக்கும் ஒரு பிரபல கல்லூரியில் படிக்கறேன்கிறதுல கூடுதல் மிதப்பு எனக்கு இருந்துச்சு.. ஒரு தடவ அப்படித்தான்.. வேகமா பை ஓட்டிட்டு அவிநாசி ரோட்டில் ஹோப்ஸ் காலேஜ் தாண்டி போயிட்டு இருந்தேன்.
ஒரு திருப்பத்தில் இந்த முதியவர் திடீரென்று சாலையின் குறுக்கே வர… அதிர்ச்சியில் ப்ரேக் போடுவதற்குள் அவர் மேல் எனது முன் வண்டிச்சக்கரம் கொஞ்சம் இடித்து அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து மயக்கமாயிட்டார். நானும் விழுந்து வண்டி என் மேல் விழந்து அடியில் மாட்டிக் கொண்டேன்.. ஹெல்மட் போட்டிருந்ததால் தலைக்கு ஒன்றும் ஆகலை.. அப்போ.. அந்த பெரியவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து ட்ரீட்மெண்ட் தந்தேன்.
தொடரும்…