‘கலா குட்டி…!! எங்கடா இருக்கே??’ என்று தன் மனைவியை கூப்பிட்டபடியே வீட்டிற்குள் நுழைந்தான் காமேஷ்.
அடுப்படியில் தம் பிரிய கணவருக்காக கேசரி செய்து இறக்கிய கலா, ‘இதோ வர்றேங்க..!!’ என்று கூறிய வண்ணமே முகப்பு அறைக்கு வந்து நின்றாள்.
‘இந்தா..!! நான் உனக்கு என்ன வாங்கி வந்திருக்கேன்னு பாரு டா…?!!’
‘எதுக்குங்க இப்ப பட்டுபுடவை எல்லாம்? அதான் வீட்ல நிறைய இருக்கே! நாம ஏற்கனவே முடிவு செஞ்சதை மறந்துட்டீங்களா?’
‘என்ன முடிவு???’ என்று புருவத்தை உயர்த்தி யோசிக்கலானான் காமேஷ்.
‘ரொம்ப யோசிக்காதீங்க…அப்புறம்… தலைவலிக்குதுடா கலான்னு… டீ போட்டு தான்னு இரவு எந்திரிச்சி உக்காந்துட்டு தொல்லை பண்ணுவீங்க.. நானே சொல்றேன்.
நம்ம முதல் வெட்டிங்க் டே அன்னிக்கி அனாதை இல்லதில் இருக்கும் முதியோர்களைக் கண்டு ஒரு நாள் முழுக்க அவங்களோட இருந்து உணவு கொடுத்து ஆசி வாங்கிட்டு வரனும்னு முடிவு பண்ணினோமே?? மறந்துபோச்சா??’
‘ஓ…… அதுவா?? அதை எப்படிடா மறப்பேன்…! நல்லா ஞாபகம் இருக்கு. இருந்தாலும் உனக்கு ஏதாவது ஆசையா வாங்கி கொடுக்கனும்னு தோனிச்சி… அதான் வாங்கிட்டு வந்திட்டேன்.
உனக்கு புடவை பிடிச்சிருக்கா??’
வெளிர் ஊதா நிறத்தில் வேலைப்பாடுகள் நிறைந்து பட்டுப்புடவை நேர்த்தியாய் ஜொலித்தது. பிரித்துப் பார்த்த வண்ணமே கலா, ‘ரொம்ப பிடிச்ச்சிருக்குங்க…!! உங்கள மாதிரியே இருக்கு…!!’ சொல்லிவிட்டு வெட்கப்பட்டு சமையல் அறை நோக்கி சட்டென்று ஓடிச் சென்றாள்.
‘கலா…கலா….!!’ என்று கூப்பிட்டவாறே காமேஷ் பின்னாலேயே ஓடினான்.
‘கலா! நாளைக்கு நம்மலோட ஃபஸ்ட் வெட்டிங் ஆனிவெர்சரி. அதனால ஆபிஸ்ல லீவ் போட்டிருக்கேன் டா… நீயும் நானும் நேர கோயிலுக்கு போயிட்டு அப்படியே “அன்பு முதியோர் இல்லம்” போகலாம்! அங்கு ஒரு முக்கியமான ஒருவரை உனக்கு அறிமுகப்படுத்தப் போறேன்.’
‘என்னங்க…!! யாருங்க அது??’ அழகான பெரிய ப்ரவுன் நிற கண்கள் விரிய ஆவலாய் கேட்டாள் கலா.
‘பொறுடா.. கலா..! நாளைக்கு தான் பார்க்க போறியே… அப்போ சொல்றேன்..’ சஸ்பென்ஸ் வைத்தான் காமேஷ் நகைத்தபடி..!!
‘சரி…. ஃப்ரஷ் ஆயிட்டு வாங்க! உங்களுக்குப் பிடிச்ச கேசரி செய்து வைத்திருக்கிறேன்.. சூடா சாப்பிடலாம்..! சீக்கிரம் வாங்க..!!’
ஆதவன் மெதுவாக நீல நிற கடலின் பின்னால் ஒளியத்துவங்கினான்.. நட்சத்திரக்கூட்டம் ஆதவனைத் தேடி… அங்கும் இங்கும் கண்கள் சிமிட்டி தேடிப் பார்க்க துவங்கியிருந்தன..
இரவு உணவைப் பரிமாறி, அடுப்படி வேலை முடித்து கலா கண்ணயர 10.30 மணி ஆனது.
காலையில் சீக்கிரமே எழுந்து கிளம்ப, அதிகாலை 4 மணிக்கே அலாரம் வைத்து உறங்கியிருந்தான் காமேஷ்.
விடியக்காலை… வேகமாக எழுந்து பல் துலக்கி, வாசல் பெருக்கி கோலம் போட வெளிப்பட்டால் கலா. அவர்கள் இருக்கும் வீடு சிட்டியை விட்டு கொஞ்சம் உள்ளே…அதிகம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி.
அமைதியான இயற்கை எழில் சூழ்ந்த நகரத்தின் ஆக்கிரமிப்புகளிலிருந்து எஞ்சியிருக்கும் ஒரு நகரத்தின் மிச்சப்பகுதி.
ஆங்காங்கே தெரியும்…. வீடுகள்..!!
வாசலுக்கு முகம் கழுவி, கோலம் போட கோலப்பொடியை துலாவியபடியே சின்ன விரல்களால் வானத்து நட்சத்திரங்களை தரையில் தற்காலிகமாக இறக்கிவைத்தவண்ணம் இருந்தாள்.
அப்போது, அவள் அருகில் மிகக் கொடிய நாகம் ஒன்று மிக அருகில் வந்து காலருகே நின்றது. புள்ளி வைத்துவிட்டு திரும்பிய அவள், அதனைக் கண்டு அஞ்சி திரும்பி ஓடத் துவங்கினாள்.
வீட்டிற்குள் செல்ல இயலாமல் கதவருகே அது இருந்ததால்…வெளியில் ஓடுவது தவிர வேறு வழியே இல்லை கலாவிற்கு…. பின்னாலேயே பாம்பும் துரத்தியது. அதிகாலை நேரமாதலால் ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்தது.
கலா கலங்கும் நெஞ்சுடன், ஓடிக்கொண்டே இருந்தாள்… ஒரு ஒற்றையடிப்பாதையில் உயிரைப் பணயம் வைத்து…தூரத்தில் அந்த ஒற்றையடிப்பாதை ஒரு கோயிலில் போய் முடிந்தது. ஒரு பழைய கோபுத்தை பார்த்தாள் கலா..
கலா…. கோயிலின் முகப்பினை நெருங்கிக் கொண்டிருந்தாள். உள்ளே, பிரகதீஸ்வரர் உருவில் சிவபெருமான் வீற்றிருக்கிறார்.
பின்னால் பாம்பும் விடாமல் துரத்தி வருகிறது. செய்வதறியாது கோயிலுக்குள் நுழைகிறாள் கலா…!!
தொடரும்…