Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » அண்டமும் குவாண்டமும் – 8 (நிகழ்வு எல்லை – Event Horizon )

அண்டமும் குவாண்டமும் – 8 (நிகழ்வு எல்லை – Event Horizon )

காட்டாறின் வேகம், நீர்வீழ்ச்சியிலிருந்து நீர் கீழே விழுவதற்கு சற்று முன்னே ஒரு குறித்த எல்லையில் அதிகரிக்க ஆரம்பிக்கும் அல்லவா? அந்த இடம்தான் கருந்துளையின் ‘நிகழ்வு எல்லை’ என்று சொல்லப்படும் ‘Event Horizon’. அந்த எல்லையில் உலகமகா நீச்சல் வீரனின் வேகமும் சக்தியும், நீர்வீழ்ச்சியின் வேகத்துக்கும் சக்திக்கும் சமமாக இருந்தது என்று பார்த்தோம்.

அங்கு நீச்சல் வீரனின் வேகம் அந்தப் புள்ளியைப் பொறுத்தவரை பூச்சியமாகிறது என்றும் பார்த்தோம். இப்போது, நீச்சல் வீரனை ஒளியென்று எடுத்தால், நிகழ்வு எல்லையில் ஒளியின் வேகம் பூச்சியமாகிறது. அதாவது, ‘நிகழ்வு எல்லையில்’ அண்டத்திலேயே அதியுயர் வேகத்தில் செல்லக் கூடிய ஒளியானது பூச்சியமாகி, உறைந்து போய்விடுகிறது.

ஒளிதான் அண்டத்தில் காலத்தை நிர்ணயிக்கும் ஒன்றாக இருக்கிறது. அத்துடன் காலம் (Time), வேகம், தூரம் என்னும் அனைத்துமே ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை என்று உங்களுக்குத் தெரியும். வேகமும், தூரமும் பூச்சியமாகும் போது, காலமும் அங்கு பூச்சியமாகிவிடுகிறது. அதாவது கருந்துளையின் ‘நிகழ்வு எல்லை’ என்னும் இடத்தில் காலம் பூச்சியமாகி உறைந்துவிடுகிறது.

புரிகிறதா? எதிர் நீச்சல் செய்ய்யும் நீச்சல் வீரனைப் பொறுத்தவரை தான் அதிவேகமாக நீச்சல் செய்வதாகவே நினைத்துக் கொள்வான். அவனைப் பொறுத்தவரை அவன் அதிகளவு வேகத்துடனே நீந்திக் கொண்டிருப்பான். ஆனால் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு, அவன் நீந்தாமல் ஓரிடத்தில் நிற்பது போலவே இருக்கும்.

இது போலத்தான், கருந்துளையின் நிகழ்வு எல்லையில் காலம் உறைந்து போயிருக்க, அண்டத்தில் உள்ள ஏனைய இடங்களில் காலம் வழமை போலவே நகர்ந்து கொண்டிருக்கும். கருந்துளையின் நிகழ்வு எல்லைப் புள்ளியில் நுழையும் ஒளி, அந்தப் எல்லையைத் தாண்டியதும் ஒருமைப் புள்ளியை நோக்கி இழுக்கப்பட்டுவிடும்.

‘கருந்துளையில் ஒளி கூடத் தப்பிவிட முடியாது’ என்று கூறுவது இதனால்தான். அதனுடன் சேர்ந்து கருந்துளையின் நிகழ்வு எல்லையில் காலம் பூச்சியமாகிவிடுகிறது என்பதையும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

இப்போது நான் சொன்னது மட்டும் உங்களுக்குப் புரிந்திருக்குமானால், உலகிலேயே மிகவும் சிக்கலான ஒரு கோட்பாட்டைப் புரிந்தவராகிவிடுவீர்கள். இதைப் புரியவைக்கப் பலர் தலையால் மண்கிண்டுகிறார்கள். நான் கூடச் சரியான முறையில் புரிய வைத்தேனோ தெரியவில்லை. ஆனாலும் புரியும் என்று நம்புகிறேன்.

‘கருந்துளையில் காலம் உறைகிறது என்பதை நாம் சரியாகப் புரிந்து கொள்வோமானால், ‘பிக்பாங்’ பெருவெடிப்பின் போது ‘காலம்’ (Time) எப்படி உருவாகியது என்பதையும் நம்மால் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும்’ என்கிறார் பிரபல இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங்.

கருந்துளைகளுக்கும் ஸ்டீபன் ஹாக்கிங்குக்கும் நிறையவே சம்மந்தம் உண்டு. ஸ்டீபன் ஹாக்கிங் தன் வாழ்க்கையில் பெரும்பாண்மையான காலத்தை, கருந்துளைகளைப் பற்றி ஆராய்வதிலேயே செலவிட்டார். கருந்துளை பற்றி இவர் வெளியிட்ட கணிதச் சமன்பாடு ஒன்று இயற்பியல் வரலாற்றில் மைல்கல்லாக அமைந்தது.

தன் இளம் வயது முதல் சக்கர நாற்காலியிலேயே கழித்து வரும் ஹாக்கிங்கை நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றே கொள்ளலாம். கருந்துளை பற்றிப் பல கருத்துகளை வெளியிட்டவர் ஸ்டீபன் ஹாக்கிங். இதுவரை அவர் வெளியிட்ட கருந்துளை பற்றிய கருத்துகள், ஏனைய விஞ்ஞானிகளுக்குப் பல முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உதவியாக இருந்தது.

கருந்துளை பற்றித் தெரிந்து வைத்திருக்கும் போது, ஸ்டீபன் ஹாக்கிங் பற்றியும் சுருக்கமாக நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இயற்பியலிலும், கணிதவியலிலும் சிறந்தவரான ஹாக்கிங், நம்மைப் போலச் சாதாரண மனிதனாகத் தற்போது இல்லை. ’Neuro Muscular dystrophy’ (Amyotrophic Lateral Sclerosis – ALS) என்னும் உடலியல் பக்கவாத நோயினால் உடலுறுப்புகள் படிப்படியாகச் செயலிழக்கப்பட்டு, இன்று சக்கர நாற்காலியில் அசையவே முடியாத நிலையில் இருக்கிறார்.

இவரால் அசைக்கக் கூடிய அங்கங்கள் கண்ணும், புருவமும் மட்டுமே. ஆனாலும் அவர் சிந்திப்பது மட்டும் வற்றிப் போகவில்லை. அது மேலும் விரிவடைந்து கொண்டே செல்கிறது. இப்போதும் அவர் பல ஆராய்ச்சிகளைக் கண்டுபிடித்து, வெளியிட்டுக் கொண்டேதான் இருக்கிறார்.

அவர் சிந்திப்பதையும், கண்டுபிடிப்பதையும் நம்முடன் பகிர்ந்து கொள்வதற்கெனப் பிரத்தியேகமாக ஒரு கணணி உருவாக்கப்பட்டிருக்கிறது. அவர் சொல்ல வருவதை கண் மற்றும் புருவத்தின் அசைவுகளால் கணணி மூலமாக, ஒலியாக வெளிக் கொண்டு வருகிறார்கள்.

ஹாக்கிங்கின் புத்திசாலித்தனம் எவ்வளவு அதிசயமோ, அதுபோல அவர் நம்முடன் கண்மூலம் பேசுவதும் அதிசயம்தான். ஹாக்கிங், விண்வெளியியல் ஆய்வுக்கு ஆற்றிய சேவை மிகப்பெரியது. இதில் கருந்துளை பற்றிய ஆய்வு முக்கியமானது.

இவர் எழுதிய ‘A Brief History of Time’ என்ற நூல் மிகவும் பிரபலமானது. பிரபஞ்சம் உருவானதற்குக் காரணமான ‘பிக் பாங்’ (Big Bang) குறித்த கருத்தையும், மற்றும் அதற்கு முந்தைய காலகட்டத்தையும் இந்த நூலில் அவர் எளிமையாக விளக்கியுள்ளார். இங்கிலாந்தின் ‘சன்டே டைம்ஸ்’ இதழின் சிறந்த புத்தக வரிசையில் தொடர்ந்து 237 வாரங்கள் முதலிடத்தில் இருந்து சாதனை படைத்தது இந்தப் புத்தகம்.

கருந்துளை பற்றிய பல விபரங்கள் இந்த நூலில் இருக்கின்றன. இந்த நூல் போலவே இவர் எழுதிய ‘The Grand Design’ என்ற இன்னுமொரு நூலும் மிகப் பிரபலமானது. இதில் அவர் புரட்சிகரமான கருத்தொன்றைச் சொல்லியிருந்தார். ”இந்த அண்டத்தை யாரும் வந்து உருவாக்க வேண்டிய அவசியமே இல்லை. அதுவாகவே தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளது.

இந்த அண்டம் முற்றிலும் இயற்பியல் சார்ந்ததே” என்று அந்த நூலின் மூலம் சொல்கிறார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது உங்களுக்குப் புரியும் என்றே நினைக்கிறேன்.

இனி நாம் மீண்டும் நிகழ்வு எல்லைக்கு வரலாம். ஹாக்கிங்கிற்கும், சஸ்கிண்டுக்கும் இடையில் ஒரு அறிவியல் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது என்று முதல் பகுதிகளில் கூறியிருந்தேன். நாற்பது வருடங்களுக்கு முன்னர் கருந்துளை பற்றி ஹாக்கிங் சொன்ன கருத்து ஒன்றின் தொடர்ச்சியாகத்தான் அந்த யுத்தம் ஆரம்பமாகியது. கருந்துளைகளில் வந்து விழும் அனைத்தும் அதன் மையம் நோக்கி நகர்த்தப்பட்டுவிடும் என்று ஹாக்கிங் சொல்லியிருந்தார்.

கருந்துளையின் மையம் என்பது ஒருமைப் புள்ளி. அந்த ஒருமைப் புள்ளியுடன் அனைத்தும் சேர்ந்து, அவை அப்படியே இல்லாமல் போய்விடும் என்றார். சமயத்தில் கருந்துளைகளும் இல்லாமல் மறைந்து போய்விடும் என்றும் சொல்லியிருந்தார். இப்படி ஹாக்கிங் சொல்லியிருந்த கருத்தே, சஸ்கிண்ட் அவரை எதிர்ப்பதற்கான யுத்தத்தை ஆரம்பித்து வைத்தது. உதாரணமாக, நாம் வாழும் பூமி கருந்துளையின் உள்ளே சென்றுவிடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

பூமியென்று சொன்னால், பூமியில் உள்ள கட்டடங்கள், மனிதர்கள், மிருகங்கள், மலைகள், ஆறுகள், ராஜ்சிவா, இதைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள், கணணி என அனைத்துமே கருந்துளைக்குள் சென்றுவிட்டால், அது அப்படியே ஒருமை மையத்தில் மறைந்துவிடும் என்றார் ஹாக்கிங்.

ஆனால், சஸ்கிண்ட் இதை எதிர்த்தார். “அண்டத்தில் உள்ள அனைத்துமே ஒரு கட்டமைப்பின் மூலம் உருவானவை. பூமியை எடுத்தால், மேலே நான் சொன்னவை அனைத்தும் ஒருவித கட்டமைப்புகளுடன் உருவானவை. அந்தக் கட்டமைப்பில் ஒரு ஒழுங்கு இருக்கிறது.

அந்தக் கட்டமைப்பும், ஒழுங்கும் தகவல்களைக் (Informations) கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றன. அண்டத்தில் எந்தத் தகவல்களையும் இல்லாமல் அழிக்க முடியாது. ஒரு தகவலை இன்னுமொரு தகவலாக மாற்ற முடியுமேயொழிய அவற்றை அழிக்க முடியாது. ஆகவே ஹாக்கிங் சொன்னது போல, கருந்துளைக்குள் செல்லும் தகவல்களும் அழிய முடியாது.

அண்டம் ஒரு சமநிலையிலேயே இயங்குகிறது. சமநிலையில் இயங்கும் அண்டத்தில், குவாண்ட இயற்பியலின்படி எந்தத் தகவல்களும் அழிந்து போகாது. இல்லாமல் போவதாக நாம் நினைக்கும் எல்லாத் தகவல்களையும் நவீன இயற்பியலால் மீளப் பெறமுடியும். எனவே ஹாக்கிங் சொன்னது மாபெரும் அறிவியல் தவறு” என்றார் சஸ்கிண்ட்.

சஸ்கிண்ட் கூறியதை உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொண்டார்கள். அதிகம் ஏன், ஹாக்கிங் கூட ஏற்றுக் கொண்டார். சஸ்கிண்டின் எதிர்ப்பை கணக்கிலெடுத்து, தனது தவறைத் திருத்தும் வகையில் வேறு ஒரு கருத்தையும் ஹாக்கிங் முன்வைத்தார். ஆனால் அதில் அவர் முழுமையாகத் திருப்தியடையவில்லை. அதனால், மீண்டும் ஒரு புதுக் கருத்தைச் சமீபத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் ஹாக்கிங்கின் கருத்துகள் பலரை ஏமாற்றமடைய வைத்தது.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top