Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » அண்டமும் குவாண்டமும் – 7 (நிகழ்வு எல்லை – Event Horizon )

அண்டமும் குவாண்டமும் – 7 (நிகழ்வு எல்லை – Event Horizon )

சூரியனைப் போலப் பல மடங்கு பெரிதாகவுள்ள ஒரு நட்சத்திரம், இறக்கும் நிலை வந்ததும் வெடித்துச் சிதறும். அப்போது அங்கே ஒரு கருந்துளை (Blackhole) பிறக்கிறது. உதாரணமாக, சூரியனைப் போல ஐம்பது மடங்கு பெரிய நட்சத்திரம் ஒன்று பல மில்லியன் வருடங்களாக எரிந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த நட்சத்திரத்தின் எரியும் சக்தி படிப்படியாகத் தீர்ந்துகொண்டு வரும்.நட்சத்திரத்திரம் எரிவதற்கு அடிப்படைச் சக்தியாக இருப்பது ஐதரசன்(H). நட்சத்திரத்தின் கோருக்குள் (Core) இருக்கும் ஐதரசன், ‘நியூக்ளியர் பியூஸன்’ (Nuclear Fusion) காரணமாக ஹீலியமாக(He) மாறும். இப்படி மாற்றமடையும் போது பிரமாண்டமான சக்தி வெளிவரும்.

இரண்டு அணுக்கருக்கள் ஒன்றாக இணைந்து, வேறொரு அணுவாக மாறுவதையே ‘நியூக்கிளியர் பியூஸன்’ என்கிறார்கள். தமிழில் ‘அணுக்கருப் பிணைப்பு’ என்று சொல்லலாம். ஐதரசன், ஹீலியமாக மாறும்போது உருவாகும் சக்தியால் ஏற்படும் கதிர்வீச்சையே ஒளியாகவும், வெப்பமாகவும் வெளியே அனுப்புகிறது நட்சத்திரம். ஒரு கட்டத்தில் கோருக்குள் இருக்கும் ஐதரசன் அனைத்தும் ஹீலியமாக மாறும் நிலை வரும். அப்போதும் ‘அணுக்கருப் பிணைப்பு’ தொடர்ந்து நடைபெறுவதால் ஹீலியம், கார்பனாக(C) மாறத் தொடங்கும்.

ஐதரசன் எப்படி ஹீலியமாக மாறியதோ, அதேபோல ஹீலியமும், கார்பனாக மாற ஆரம்பிக்கும். இப்போதும் அதிகளவு சக்தி வெளிவரும். ஐதரசன், ஹீலியமாக மாறுவதற்கு எட்டு மில்லியன் வருடங்கள் எடுக்கலாம். ஆனால், ஹீலியம் முழுவதும் கார்பனாக மாறுவதற்கு சுமார் அரை மில்லியன் வருடங்களே போதுமானது. இத்துடன் ‘அணுக்கருப் பிணைப்பு’ முடிந்து விடுவதில்லை. தொடர்ந்து கார்பன் நியானாகவும்(Ne), நியான் ஒட்சிசனாகவும்(O), ஒட்சிசன் சிலிக்கானாகவும்(Si), சிலிக்கான் இரும்பாகவும்(Fe) படிப்படியாக மாறுகின்றன.

இவற்றுக்கெல்லாம் முன்னரைப் போல அல்லாமல், மிகச்சிறிய கால இடைவெளிகளே போதுமானது. இறுதியாக உள்ள சிலிக்கான் அனைத்தும் இரும்பாக மாறுவதற்கு ஒரேயொரு நாள் மட்டுமே எடுக்கும். இரும்புதான் இறுதியானது. இரும்பு, ‘அணுக்கருப் பிணைப்பு’ மூலமாக எதுவாகவும் மாறாது. அதனால் அந்த நட்சத்திரத்தின் கோரானது, முழுமையான இரும்பாக மாறும் நிலையை அடையும்.

இங்கு ஒன்றைச் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். இரும்பு (Iron) என்றால், சாதாரணமாக ‘இரும்பு’ என்று நீங்கள் நினைப்பது அல்ல. இரும்பின் அணுக்கருக்கள்தான் (Iron Nucleus) இங்கு ஒன்றாகச் சேர்ந்து காணப்படுகின்றன. உங்கள் உள்ளங்கையளவேயான சாதாரண இரும்பை நிறுத்துப் பார்த்தீர்களானால், அது ஒரு கிலோகிராம் எடையுள்ளதாக இருக்கலாம்.

ஆனால், அதே உள்ளங்கை அளவில் இரும்பின் அணுக்கருக்களை மட்டும் எடுத்து நிறுத்துப் பார்த்தால், அவை பல ஆயிரம் டன்கள் எடையாக இருக்கும். சாதாரண இரும்புக்கும், இரும்பின் அணுக்கருவுக்கும் ஏன் இவ்வளவு எடை வித்தியாசம் என்பதை விரிவாக, இதன் தொடர்ச்சிக் கட்டுரையில் எழுதியிருக்கிறேன்.

உள்ளங்கையளவு இரும்பு அணுக்கருக்கள் பல ஆயிரம் டன்கள் எடையாய் இருக்கும் போது, ஒரு நட்சத்திரத்தின் மையப் பகுதியான ‘கோர்’ முழுமையாக இரும்பாக மாறினால் எவ்வளவு எடையிருக்கும் என்பதை நீங்களே கற்பனை பண்ணிப் பாருங்கள்.

இப்போது புரிகிறதா, ஒரு நட்சத்திரம் இறக்கும் போது ஏன் அதன் மையப்பகுதி அளவில்லாத எடையைக் கொண்டிருக்கிறது என்பது? அந்த அளவில்லா எடை காரணமாகவே, அது முடிவற்ற ஈர்ப்புவிசையையும் பெற்றுக் கொள்கிறது. கோர் முழுவதும் இரும்பாக மாறிய நிலையை ஒரு நட்சத்திரத்தினால் தாங்கிக் கொள்ளவே முடியாது.

அதிக எடையினால் அப்போது கோருக்குள் ஒரு நிலைகுலைவுத் தண்மை ஏற்படுகிறது. ஒரு நொடிக்கும் குறைவான குறித்த கணத்தில் நட்சத்திரம் படீரென வெடித்துச் சிதறுகிறது. அதனால், அங்கே முடிவில்லாச் சக்தியும், எடையும், ஈர்ப்பு விசையும் கொண்ட கருந்துளையொன்று தோன்றுகிறது.

கருந்துளையின் அளவிடமுடியாத எடையின் காரணமாக, அதன் மையம் ‘புனல்’ போன்ற வடிவத்துடன் கிழ்நோக்கி அமிழ்ந்த நிலையில், விண்வெளியில் (Space) காணப்படும். கருந்துளையின் மையம் மிகச்சிறிய புள்ளியாகவே இருக்கும்.

அந்தப் புள்ளியை ‘ஒருமை மையம்’ (Singularity) என்பார்கள். இந்த ஒருமை மையத்தின் ஈர்ப்பு விசையானது முடிவிலியாக (Infinity) இருக்கும். இதன் ஈர்ப்பு விசையிலிருந்து எதுவுமே தப்பிவிட முடியாது. எதுவும் என்றால் அண்டத்தில் உள்ள எதுவுமே! தனக்கு அருகே இருக்கும் அனைத்தையும், தன் ஈர்ப்பு விசையால் உள்ளே இழுத்துக் கொள்ளும்.

ஒளிகூட இதிலிருந்து தப்ப முடியாது. பலருக்கு ‘ஒளியைக் கூடக் கருந்துளையானது உள்ளிழுத்துக் கொள்கிறது’ என்று சொல்லும் போது, அதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. அண்டத்தில் உள்ள அனைத்திலும் அதிவேகமாகச் செல்லக் கூடியது ஒளிதான்.

இதை நாம் ஒரு உதாரணத்தின் மூலம் பார்க்கலாம். இந்த உதாரனத்தினால், கருந்துளையின் பல தண்மைகளை நாம் இலகுவில் புரிந்து கொள்ளலாம். இதுவும் நாம் முற்பகுதியில் எடுத்துக் கொண்ட நீர்வீழ்ச்சி உதாரணம்தான். உலகிலேயே மிகவும் வேகமாக நீந்தக் கூடிய இருபது நீச்சல் வீரர்களை ஒன்றாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அவர்களில் ஒருவன், உலகில் உள்ள அனைவரையும் விட அதிவேகமாக நீச்சல் செய்யக் கூடியவனாக இருப்பான். இவர்கள் அனைவரையும் மலையுச்சியிலிருந்து நீர்வீழ்ச்சியாகக் கீழே விழப் போகும் காட்டாறு ஒன்றுக்கு அழைத்துச் செல்லலாம்.

அந்தக் காட்டாறு நினக்கவே முடியாத வேகத்தில் பாய்ந்தபடி ஒடிக்கொண்டிருக்கிறது. சிறிது தூரத்தில் அது நீர்வீழ்ச்சியாகக் கீழே விழுகிறது. இந்த இருபது நீச்சல் வீரர்களையும் அந்த ஆற்றில் தள்ளிவிடுகிறோம். அனைவரும் ஆற்றின் திசைக்கு எதிரான திசையில் தங்களால் முடிந்தவரை நீந்த ஆரம்பிக்கிறார்கள்.

ஆனால் அந்த ஆறு எதையும் இழுக்கும் சக்தி வாய்ந்த அளவுக்கு நீரின் இழுவையைக் கொண்டிருக்கிறது. எல்லாரும் ஆற்றின் திசையில் அடித்துக் கொண்டு செல்லப்படுகிறார்கள். ஆனால், நீர்வீழ்ச்சியின் அருகே சென்றதும் கீழே விழுந்து விடுவோம் என்னும் பயத்தில் அனைவரும் தங்கள் சக்தி அனைத்தையும் பிரயோகித்து எதிர்த் திசையில் வேகமாக நீந்துகின்றனர்.

நீர் கீழே விழும் இடத்துக்கு மிக அருகே, குறிப்பிட்ட எல்லையில் ஆற்றின் இழுவை மேலும் அதிகமாகிறது. ஒருவனைத் தவிர அனைவரும் அப்படியே நீர்வீழ்ச்சியை நோக்கி இழுக்கப்பட்டு கீழே விழுகிறார்கள். ஆனால் உலகிலேயே அதிவேகமாக நீந்தக் கூடிய நீச்சல் வீரன் மட்டும் தன் பலம் கொண்டவரை எதிர்த்து நீந்துகிறான்.

தன் இறுதி முடிவு நெருங்கிவிட்டதை அறிந்து, அதிக சக்தியை வரவழைத்து நீந்துகிறான். அப்போது அவன் நீர்வீழ்ச்சி கீழே விழும் இடத்துக்குச் சிறிது முன்னால் இருக்கும் அந்த எல்லையில் இருக்கிறான். அந்த இடத்தில், அவன்  நீந்தும் வேகமும், ஆறு கீழே விழுவதால் ஏற்படும் வேகமும், அதாவது ஆற்றின் இழுவைச் சக்தியும் சமமாக இருக்கிறது.

அப்போது என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அந்த நீச்சல் வீரன் கீழே விழாமலும், எதிர்த் திசைக்குச் செல்லாமலும் ஒரே இடத்தில் நின்று நீந்திக் கொண்டே இருப்பான். காரணம் எதிரெதிரான இரண்டு வேகமும் அந்தப் புள்ளியில் சமமாகிறது. அதனால், அதி வேகத்தில் நீந்தும் அந்த உலக நீச்சல் வீரனின் வேகம் அந்தப் புள்ளியில் பூச்சியமாகிவிடுகிறது.

ஆற்றின் கரையில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவன் ஒரே இடத்தில் நின்று கொண்டே நீந்துவது போலத் தெரியும். எப்பொழுதும் அப்படியே நீந்திக் கொண்டிருக்க முடியாதல்லவா? அதனால், ஒரு கட்டத்தில் அந்த எல்லைப் புள்ளியைக் கடக்கும் நீச்சல் வீரனால் அதற்குமேல் நீர்வீழ்ச்சியின் எதிர்ப்பைத் தாங்க முடியாமல் கீழே விழுந்துவிடுகிறான். யாரும் தப்ப முடியாத நீர்வீழ்ச்சி அது.

இப்போது, இந்த நீர்வீழ்ச்சியையும், உலகமகா நீச்சல் வீரனையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நீர்வீழ்ச்சிதான் கருந்துளை. நீரைக் கீழ்நோக்கி இழுப்பது கருந்துளையின் மையமான ஒருமைப்புள்ளி. உலகமகா நீச்சல் வீரன்தான் ஒளி.

நீச்சல் வீரனான ஒளிக்கு, மூன்று இலட்சம் கிலோமிட்டர்கள் ஒரு நொடிக்கு நீந்த முடியும். ஆனால் அந்த கீழ்நோக்கி இழுக்கும் நீர்வீழ்ச்சியான கருந்துளையின் ஒருமைப்புள்ளியின் இழுவை வேகமோ அதைவிடப் பல மடங்கு அதிகம்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top