Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » அண்டமும் குவாண்டமும் – 6 (விண்வெளியில் கருந்துளை)

அண்டமும் குவாண்டமும் – 6 (விண்வெளியில் கருந்துளை)

நிகழ்வு எல்லையை மேல்பகுதியிலும் சிங்குலாரிட்டி என்று சொல்லப்படும் மிகச்சிறிய மையப்பகுதியைக் கீழ்ப்பகுதியாகவும் கொண்டு, ஒரு கூம்பு (Cone) வடிவத்தில் விண்வெளியின் மேற்பரப்பை கீழ்நோக்கி அமிழ்த்தியவாறு கருந்துளை காணப்படும். கருந்துளைக்கு இந்தக் கூம்பு வடிவம் எப்படி வந்தது என்று விளக்குவது கொஞ்சம் சிரமம் என்றாலும், அதையும் நாம் பார்த்துவிட வேண்டும். அதற்கு கருந்துளையாகும் ஒரு நட்சத்திரத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

விண்வெளியில் நெபுலாக்கள் (Nebula) வாயுக்களையும் (Gas), தூசுகளையும் (Dust) அடர்த்தியாகக் கொண்டிருக்கும். இது ஒரு காலக்ஸியின் அளவுக்கு பிரமாண்டமானதாகக் காணப்படும். இந்த வாயுக்களும், தூசுகளும் ஈர்ப்பு விசையினால் ஒன்று சேர்வதால், அங்கு ஒரு குழந்தை நட்சத்திரம் பிறக்கும்.

குழந்தை நட்சத்திரங்களை சினிமாக்களில் மட்டும் பார்த்த உங்களுக்கு, இதைக் கேட்க கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கும். இந்தக் குழந்தை நட்சத்திரம் படிப்படியாக வளர்ந்து ஒரு முழு நட்சத்திரமாகிறது. இப்படி லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் நெபுலாக்களின் மூலம் தினம் தினம் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு நொடியும் விண்வெளியில் நட்சத்திரங்கள் பிறந்து கொண்டே இருக்கின்றன.

இயற்கை என்பது எப்போதும் தனக்குள் ஒரு வட்டத்தை வைத்திருக்கிறது. இந்த வட்டத்தின் மூலம்தான் அது தன் சமநிலையையும் பாதுகாத்துக் கொண்டுவருகிறது. ஒருபுறம் நட்சத்திரங்கள் பிறந்து கொண்டிருக்க, மறுபுறம் நட்சத்திரங்கள் வயதாகி இறந்து கொண்டிருப்பது நடக்கும். பிறப்பதும் இறப்பதும் மனிதனுக்கு மட்டுமில்லை, நட்சத்திரங்களுக்கும் இருக்கிறது.

அது மட்டுமில்லாமல், ஒரு நட்சத்திரம் இறக்கும் போது, ஏற்படும் பிரமாண்ட வெடிப்பின் மூலம் நெபுலாக்களும் உருவாகின்றன. நட்சத்திரங்கள் நெபுலாக்களில் பிறக்கின்றன. நட்சத்திரங்கள் இறந்து நெபுலாக்களை உருவாக்குகின்றன. இது ஒரு அழகான வட்டம் இலையா? நட்சத்திரங்கள் நெபுலாக்களில் பிறப்பது என்பது ஒரு அழகான நிகழ்வு.

அதைத் தெரிந்து கொள்ளும் போது உண்மையில் மகிழ்ச்சியடைவீர்கள். ஆனால் இந்தக் கட்டுரையில் அது பற்றி நான் எழுதப் போவதில்லை. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். ஆனால் நட்சத்திரம் ஒன்று இறப்பது பற்றி இங்கு நான் விவரித்தே ஆகவேண்டும். காரணம் ஒரு நட்சத்திரத்தின் இறப்பின் உபநிகழ்வாகத்தான் கருத்துளை ஒன்றின் பிறப்பும் நடைபெறுகிறது.
விண்வெளியில் முக்கியமாகச் சொல்லக்கூடிய இரண்டு விதமான திடப்பொருட்கள் உண்டு. ஒன்று எரிந்து கொண்டிருக்கும் திடப்பொருள். மற்றது எரியாமல் இருக்கும் திடப்பொருள். எரியாமல் இருப்பவற்றை நாம் கோள்கள் என்கிறோம். நம் பூமியும் ஒரு கோள்தான். இவற்றுடன் துணைக்கோள்கள் என்று சொல்லப்படும் சந்திரன்களும் உண்டு.

ஆனால் எரிந்து கொண்டிருப்பவற்றை நட்சத்திரம் என்கிறோம். பூமிக்கு மிக அண்மையில் இருக்கும் நட்சத்திரம் நம் சூரியன்தான். சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதைப் பலர் சிந்திப்பதேயில்லை. நம் சூரியன், பால்வெளிமண்டலம் (Milkyway Galaxy) என்னும் நட்சத்திரக் கூட்டத்தில் ஒரு நட்சத்திரமாக இருக்கிறது. இந்தப் பால்வெளி மண்டலத்தில் மட்டும் 200 முதல் 400 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன என்று குத்துமதிப்பாகக் கணித்துள்ளனர். எப்படிப் பார்த்தாலும் 300 பில்லியன்களுக்குக் குறையாது.

சமீபத்தில் ஜேர்மனில் எடுக்கப்பட்ட கணிப்பின்படி மில்க்கிவே காலக்ஸியைப் போல, 500 பில்லியன் காலக்ஸிகள் அண்டத்தில் இருக்கின்றன. இப்போது சிந்தித்துப் பாருங்கள் அண்டத்தில் மொத்தமாக எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன என்று. நட்சத்திரங்கள் அனைத்தும் அவற்றின் பருமனைப் பொறுத்து வேறுபடுகின்றன. சூரியன் நம்முடன் தொடர்புபட்டிருப்பதால், ஏனைய நட்சத்திரங்களின் பருமனை சூரியனுடன் ஒப்பிட்டே அளவிடுகின்றனர்.

நட்சத்திரங்கள் அனைத்துமே என்றாவது ஒருநாள் எரியும் சக்தி தீர்ந்து போகும் போது, இறந்து போகின்றன. அப்படி இறந்து போகும் நட்சத்திரங்கள், அவற்றின் பருமைனைப் பொறுத்து, ‘வெள்ளைக் குள்ள நட்சத்திரமாகவோ (White Dwarf), நியூட்ரான் நட்சத்திரமாகவோ (Neutron Star), கருந்துளையாகவோ (Blackhole), பிரமாண்டக் கருந்துளையாகவோ (Supermassive Blackhole) மாறும்.

சூரியனைப் போல பருமனில் பத்து மடங்குக்கு இருக்கும் நட்சத்திரங்கள் இறக்கும் போது, ‘சுப்பர் நோவா’ என்னும் நிலையை அடைந்து வெடிப்பதன் மூலம் ‘நியூட்ரான் நட்சத்திரங்கள் தோன்றுகின்றன. ஆனால் சூரியனின் பருமனை விட நூறு மடங்களவில் இருக்கும் நட்சத்திரங்கள் இறக்கும் போது, ஹைப்பர் நோவா என்னும் நிலையை அடைந்து வெடிப்பதால் கருந்துளைகள் தோன்றுகின்றன.

சூரியனைப் போல ஆயிரம் மடங்கு எடையுள்ள நட்சத்திரங்கள் வெடிக்கும் போது, பிரமாண்டக் கருந்துளைகள் உருவாகின்றன. இப்படியொரு பிரமாண்டமான கருந்துளைதான், மில்க்கிவே காலக்ஸியின் நடுவிலும் உள்ளது என்று கண்டுபிடித்திருக்கிறர்கள். சொல்லப் போனால், ஒவ்வொரு காலக்ஸியும் ஒரு பிரமாண்டமான கருந்துளையை மையமாகக் கொண்டு இருக்கும் என்கிறார்கள்.

ஒரு நட்சத்திரம் ஏன் இறக்கிறது. அது இறக்கும் போது சுப்பர்னோவாவாகிப் பெரிதாகி, திடீரென ஏன் வெடிக்கிறது என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். அது தெரியும் பட்சத்தில்தான், ஒரு கருந்துளையின் நிகழ்வு எல்லையில் என்ன நடைபெறுகிறது என்பதையும், கருந்துளையின் ஈர்ப்பு சக்தியால் ஒளிகூடத் தப்ப முடியாமல் எப்படி உள்ளே இழுக்கப்படுகிறது என்பதையும், இந்தக் கட்டுரையின் முதலாம் பகுதியின் இறுதியில் நாம் விட்டுச் சென்ற கேள்விகளுக்கான பதில்களையும் விளங்கிக் கொள்ள முடியும்.

கருந்துளைகளைப் பற்றி ஏதோ ஒரு அறிவியல் செய்தியாக நினைத்து நாம் அறிந்து கொள்ள நினைக்கலாம். ஆனால், கருந்துளைதான் நாங்கள், நாங்கள்தான் கருந்துளை என்னும் நிலைமைக்கு நம்மை நவீன அறிவியல் கொண்டுவந்து விட்டிருக்கிறது. நம் வாழ்வுக்கும் கருந்துளைக்கும் நிறையவே சம்மந்தம் இருக்கிறது என்கிறார்கள். அது என்ன சம்மந்தம் என்பதைப் படிப்படியாக நாம் அறிந்து கொள்வோம்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top