அப்படித் தோன்றிய அந்தப் புள்ளியின் ஆற்றலால், அருகில் இருக்கும் எதுவும் தப்ப முடியாமல் அதன்பால் ஈர்க்கப்பட்டு, அதனுள் நுழைந்து காணாமல் போகும். வெளிச்சத்தால் கூட அதன் ஈர்ப்பு விசையிலிருந்து தப்பிவிட முடியாது. ஒளியைக் கூட விழுங்கியது அந்தப்புள்ளி. ஒளி விழுங்கப்பட்டதால், அந்த இடமெங்கும் கருப்பாக தோன்றியது. வட்டமான ஒளியில்லாத அந்தப் புள்ளி ‘கருந்துளை’ என்று அழைக்கப்பட்டது.
நயாகரா நீர்வீழ்ச்சியை உங்களில் பலர் சென்று பார்த்திருக்க மாட்டீர்கள். சிலர் சென்று பார்த்திருக்கலாம். சிலர் காணொளிகளாகக் கண்டிருக்கலாம். நயாகரா நீர்வீழ்ச்சியைக் கண்டவர்கள் நயாகராவையும், அதைக் காணாதவர்கள், சாதாரணமான வேறு நீர்வீழ்ச்சியைக் கண்டிருந்தால் அதையும், இவையிரண்டையும் காணாதவர்கள், ஆற்றில் அல்லது நீர் நிலைகளில் ஏற்படும் ஒரு பெரிய சுழலையாவது கற்பனை செய்து கொள்ளுங்கள்.
நயாகரா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கீழே விழும் புள்ளிவரை, மேலே உள்ள ஆற்றில் தண்ணீர் சமதரையில் அமைதியாகவே ஓடிக் கொண்டுவரும். நிலைக் குத்தாகக் கீழே விழவேண்டிய ஒரு குறித்த இடம் வரும்வரை, அந்த நீர் எந்தச் சலனமும் இல்லாமல், அமைதியாகவே ஓடிக் கொண்டு வரும்.
நீர்வீழ்ச்சியில், கீழே விழுவதற்கு குறித்த சில மீட்டர் முன்னால் வரை ஆற்றின் வேகத்தில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் ஒரு குறித்த இடத்தை அடைந்ததும், அதாவது நீர்வீழ்ச்சியில் நீர் விழுவதற்கு முன்னர், மேலே உள்ள சமதரையில் உள்ள ஆற்று நீரில் சில மீட்டர்கள் முன்னாலேயே, நீரின் இழுவை வேகம் அதிகமாக காணப்படும். கீழே விழும் நீரின் ஈர்ப்பின் இழுவைச் சக்தி, மேலே உள்ள நீரில் சில மீட்டர்களில்தான் தெரிய ஆரம்பிக்கும். நீர்வீழ்ச்சியின் மேலே உள்ள ஆற்றில் நாம் சாதாரணமாக நீந்திக் கொண்டிருக்கலாம்.
அந்த நீர்வீழ்ச்சியின் நீர்விழும் அந்தக் குறித்த இடம் வரும்வரை பிரச்சனை இல்லாமல் நீந்தலாம். ஆனால், அந்தக் குறித்த எல்லை இடத்துக்கு நாம் நீந்தி வருவோமானால், நீர்வீழ்ச்சியின் விசையினால் கீழே இழுக்கப்படுவோம். அந்த எல்லை வரை நீந்த முடிந்த நமக்கு, அந்த எல்லை வந்ததும் நீர் இழுக்கும் வேகத்தை எதிர்த்து நீந்த முடியாமல், நீர்வீழ்ச்சியை நோக்கி இழுக்கப்பட்டுக் கீழே விழுந்துவிடுவோம். அந்த எல்லையை ‘திரும்பி வரமுடியாத எல்லை’ என்று சொல்லலாம் அல்லவா? இது போன்று திரும்பி வரமுடியாத ஒரு எல்லை கருந்துளைக்கும் உண்டு என்கிறார்கள்.
கருந்துளை என்பது முடிவற்ற ஈர்ப்பு விசையைக் கொண்டது என்கிறார்கள். அதன் ஈர்ப்பு, அதன் மையத்தை நோக்கி அனைத்தையும் இழுக்கும். ஆனால் அப்படிப்பட்ட கருந்துளையையும் நாம் அணுகலாம். ஒரு குறித்த எல்லைவரை நமக்கு எதுவும் நடக்காது. நயாகரா நீர்வீழ்ச்சி போல. ஆனால் ஒரு குறித்த எல்லையை நாம் கருந்துளையில் அடைந்தோமானால், அதன் ஈர்ப்புவிசையிருந்து நம்மால் தப்பிவிட முடியாது.
கருந்துளையின் திரும்பி வர முடியாத எல்லையாக இருப்பதை ‘The Point of no return’ என்று சொல்கிறார்கள். அத்துடன் அந்த எல்லைக்கு ‘நிகழ்வு எல்லை’ (Event Horizon) என்று விசேசமான பெயரிட்டும் அழைக்கிறார்கள். வட்டவடிவமான ஒரு எல்லையாக அது காணப்படுகிறது. கருந்துளைக்குள் ஈர்க்கப்படும் அனைத்தும் இந்த ‘நிகழ்வு எல்லை’ வழியேதான் அதன் மையம் நோக்கி இழுக்கப்படுகின்றன.
ஒளியைக் கூட இந்தக் கருந்துளைகள் உள்ளே இழுப்பதால், கருப்பு நிறமாகக் காட்சிதருகிறது என்றும், கருந்துளையின் ஈர்ப்பு எல்லையாக, ‘நிகழ்வு எல்லை’ (Event Horizon) என்பது இருக்கிறது என்றும் இதுவரை நம்பிவந்தோம். ஆனால், இவை இரண்டுமே தப்பு என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங். கருந்துளை என்று சொல்வதே தவறு. அது சாம்பல் நிறமானது என்றும். அதற்கு Event Horizon என்பதே கிடையாது என்றும் சொல்லியிருக்கிறார்.
ஆனால், இதற்கு எதிர்ப்புக் குரலை, ‘சேச்சே! ஹாக்கிங் சொல்வதுதான் தப்பு. Event Horizon என்பது நிச்சயம் இருக்கிறது. அது சாதாரணமானது கிடையாது. சினிமாப்படத்தை ஒளிபரப்பும் புரஜெக்டர் சாதனம் போல, அது பல காட்சிகளை விண்வெளியில் ஒளிபரப்புகிறது. அது ஒளிபரப்பும் திரைப்படக் காட்சிகள்தான் நானும், நீங்களும், அமெரிக்க ஜனாதிபதியும், பூமியில் இருக்கும் அனைத்தும். பூமியில் நாம் பார்க்கும் எதுவுமே உண்மையில்லை.
நாம் அனைவருமே கருந்துளைகள் தெறிக்க விடும் மாயைத் தோற்றங்கள். இந்த ப்ளாக்ஹோல்களின் Even Horizon வெளிவிடும் தகவல்கள் (Information) வெளிப்படுத்தும் தோற்றங்களைத்தான், நாம் நடப்பதாக நினைத்துக் கொண்டு ஏமாறுகிறோம்’ என்று கிலியுடன் கிளப்புகிறார்கள்.
இது என்ன புதுப்புரளி? என்ன நடக்கிறது கருந்துளைகளில்? Evend Horizone என்பது என்ன? அது உண்மையில் திரைப்படக் காட்சிகளைப் போலப் படத்தை ஒளிபரப்புகிறதா? தலையைச் சுற்ற வைக்கும் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தெளிவான பதில்களை சஸ்கிண்ட் தெளிவாகத் தருகிறார். அவர் தரும் அந்தப் பதில்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்……..!
தொடரும்…