அமெரிக்கா ‘NASA’ என்றும், ஐரோப்பா ‘ESA’ என்றும், இந்தியா ‘ISRO’ என்றும் அமைப்புகளை உருவாக்கி வானியல் ஆராய்ச்சிகளைச் செய்கின்றன. இவையெல்லாவற்றிற்கும் அடிப்படையானது வானியல் இயற்பியல் படிப்புத்தான்.
மிகப்பெரிய தொலைநோக்கிக் கருவிகள் மூலம், விண்வெளியில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களை ஆராய்ந்து, இயற்பியல், கணிதவியல் சமன்பாடுகள் மூலம் எடுத்த பல முடிவுகளைக் கொண்டு, நமது அண்டம் உருவாகியது முதல், மனிதன் தோன்றியது வரையுள்ள மொத்த சரித்திரத்தையும் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
‘பிக் பாங்’ என்னும் சிறு புள்ளியின் பெருவெடிப்பின் ஆரம்பத்திலிருந்து, நேற்று சென்னையில் நடந்த அரசியல் மாநாடு வரையிலான தொடர் நிகழ்ச்சிகளுக்கான காரணங்களை ஒவ்வொன்றாக வரிசைப்படுத்திப் பட்டியலிடுகிறார்கள்.
இந்தப் பட்டியலின் வரிசையில் இருக்கும் ஒன்றுதான் ‘கருந்துளை’ என்று சொல்லப்படும் ‘ப்ளாக்ஹோல்’ (Blackhole). நமது அண்டத்தின் (Universe) அவிழ்க்க முடியாத பெரும் மர்ம முடிச்சாக இந்தக் கருந்துளை இருக்கிறது.
சில புராணங்களிலும், ‘மாயா’ (Maya) போன்ற இனங்களின் சரித்திரங்களிலும் ‘கருமையான இடம்’ அல்லது ‘கரும்பள்ளம்’ என்று விண்வெளியில் இருக்கும் இடமொன்றைச் சுட்டிக் காட்டியிருந்தாலும், அவை இப்போது சொல்லப்படும் கருந்துளைகளைத்தானா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
அதற்கப்புறம் கிபி 1798ம் ஆண்டளவுகளில் ‘லாப்பிளாஸ்’ (Simon Laplece) என்னும் கணிதவியலாளர் இந்தக் கருந்துளையைப் பற்றிச் சொல்லியிருப்பதாக கருதுகின்றனர். ஆனாலும் உண்மையான கருந்துளை 1972ம் ஆண்டு தொலைநோக்கிக் கருவிகள் மூலமாக முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அது அறிவியலில் ஒரு மைல்கல்லாகவும் அமைந்தது.
அதைத் தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான கருந்துளைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இன்றைய தேதியில் அண்டம் முழுவதும் நூறு மில்லியனுக்கு அதிகமான கருந்துளைகள் இருக்கின்றன என்கிறார்கள். இந்தக் கணக்கு ரொம்பவும் குறைத்துச் சொல்லப்பட்ட கணக்கு.
எங்கள் சூரியக் குடும்பம் இருக்கும் பால்வெளிமண்டலத்தின் மையத்தில் மிகப்பெரிய கருந்துளை ஒன்று (Supermassive Blackhole) இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு நட்சத்திர மண்டலங்களின் மையங்களும், இது போல ஒரு பெரிய கருந்துளையைக் கொண்டிருக்கும் என்கிறார்கள்.
இந்தக் கருந்துளைகள் ஏன் கருப்பாக இருக்கின்றன? அவற்றின் தண்மைகள் என்ன? என்று ஆராயும் போதுதான் பல ஆச்சரியமான தகவல்கள் நமக்குக் கிடைக்கத் தொடங்கின. அந்தத் தகவல்கள்தான் இப்போது இரண்டு இயற்பியலாளர்களுக்கிடையிலான போருக்கும் காரணமாகியிருக்கிறது.
நாம் வசிக்கும் பூமி எவ்வளவு பெரியது என்பது உங்களுக்குத் தெரியும். அதில் உள்ள மலைகள், பாறைகள், நீர்நிலைகள், உயிரினங்கள் என அனைத்தையும் சேர்த்து, நம் பூமியின் எடையை ஒருதரம் கற்பனை பண்ணிப் பாருங்கள்.
பூமியுடன் ஒப்பிடும் போது சூரியன், ஒரு கோடியே மூன்று லட்சம் பூமிகளை அதனுள் வைத்துவிடக் கூடிய அளவுக்குப் பெரியது. மூன்று லட்சத்து முப்பத்திமூன்றாயிரம் மடங்கு பூமிகளின் எடைக்குச் சமனானது சூரியன். இப்போது நமது சூரியன் எவ்வளவு பெரியதென்று கொஞ்சமாவது புரிகிறதல்லவா?
ஆனால், அண்டத்தில் நமது சூரியனைப் போல, பத்து மடங்கு, நூறு மடங்கு, இருநூறு மடங்கு என்று பெரிய நட்சத்திரங்களெல்லாம் வெகு சாதாரணமாக இருக்கின்றன. அவைகளுடன் ஒப்பிடும் போது நம் சூரியன் ஒரு குட்டிப்பாப்பா. நட்சத்திரங்கள் என்றாலே எப்போதும் எரிந்து கொண்டிருப்பவை என்று உங்களுக்குத் தெரியும்.
சூரியனை விடப் பத்துமடங்கு பெரிய ஒரு நட்சத்திரத்தின் மையப்பகுதியில் (Core) உள்ள கதிர்த்தொழிற்பாட்டு எரிதண்மை தீர்ந்து போகும் வேளையில், அந்த நட்சத்திரம் இறக்கும் நிலையை அடைகிறது. அப்போது அந்த நட்சத்திரம் தன் உருவத்தில் ஊதிப் பெரிதாக உருமாறி ‘சுப்பர்நோவா’ (Supernove) என்று சொல்லப்படும் நிலையை அடைகிறது.
அப்போது, அந்த நட்சத்திரத்தின் மையத்தில் ஏற்படும் நிலையற்ற ஸ்திரத் தண்மையாலும், அதிகளவு ஈர்ப்புவிசையாலும் திடீரென ஒரு சுருக்கம் ஏற்பட்டு, நட்சத்திரம் படீரென வெடிக்கின்றது. இந்த வெடிப்பு அண்டத்தின் ஆரம்ப வெடிப்பான பிக்பாங்கை ஒத்ததாக இருக்கும். இந்த சுப்பர்நோவா வெடித்ததன் மூலம், ‘நியூட்ரான் நட்சத்திரம்’ (Neutron Star) என்ற ஒன்று உருவாகும். நியூட்ரான் நட்சத்திரம் என்பது விண்வெளியில் காணப்படும் மிகச்சிறிய ஆனால் மிகச் சக்திவாய்ந்த ஒன்றாகும்.
அதிக அடர்த்தியும், நினைத்துப் பார்க்க முடியாத எடையும் கொண்ட மிகச்சிறிய நட்சத்திரம் அது. ஐந்து கிலோமீட்டர்கள் அகலமுள்ள ஒரு நியூட்ரான் நட்சத்திரம், ஐம்பது மடங்கு சூரியனின் எடையுடன் இருக்கும். அவ்வளவு அடர்த்தியும் சக்தியும் வாய்ந்தது நியூட்ரான் நட்சத்திரம்.
சூரியனைப் போல பத்து மடங்கு நட்சத்திரம் சுப்பர்நோவாவாக மாறி வெடிக்கிறது என்று பார்த்தோம்.
அது போல, சூரியனைப் போல நூறு மடங்கு பெரிதான நட்சத்திரத்துக்கு இப்படியானதொரு நிலை ஏற்பட்டால், அதாவது சூரியனைப் போல நூறு மடங்குள்ள ஒரு நட்சத்திரம், மைய எரி நிலை போதாமையால் இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அதுவும் மிகப்பெரிதாக ஊத ஆரம்பிக்கிறது. அப்படிப் பெரிதாகியதும் அது ‘சுப்பர் நோவா’ என்று அழைக்கப்படுவதில்லை.
மாறாக, ‘ஹைப்பர் நோவா’ (Hypernova) என்று அழைக்கப்படுகின்றது. இந்த ஹைப்பர் நோவாக்கள் பெரிய அளவில் காமாக் கதிர்களை வெளிவிடக் கூடியவை. இவையும் சுப்பர் நோவாக்கள் போலவே, மையத்தில் (Core) ஏற்படும் ஸ்திரத்தண்மை இழப்பினாலும், ஈர்ப்பு சக்தி அதிகரிப்பினாலும் ஒரு குறித்த கணத்தில் பிக்பாங்க் போல, மிகப் பெரிய வெடிப்பாய் வெடிக்கின்றன.
அந்த வெடிப்பின் போது ஏற்பட்ட சுழற்சியினாலும், எல்லையில்லா ஈர்ப்பு சக்தியினாலும் (Gravity), ஒரு சிறு புள்ளியை மையமாகக் கொண்டு அனைத்தும் ஒடுங்க ஆரம்பிக்கின்றன. அந்தப் புள்ளியே கருந்துளையாகப் (Blackhole) பிறப்பெடுக்கிறது.
திடீரெனத் தோன்றிய பெரிய வெடிப்பு, அதனால் ஏற்பட்ட அதிவேகச் சுழற்சி, அப்போது ஏற்பட்ட அளவிடமுடியாத வெப்பநிலை, அதனால் உருவான கதிர்வீச்சு மற்றும் ஆவியாதல் போன்ற நிகழ்வுகள், அதனால் உருவான உபஅணுத்துகளின் சிதறல்கள், சிதறிய துகள்களெல்லாம் ஈர்ப்புவிசையினால் ஒன்றாக, ஒரே புள்ளியாகச் சேர்தல், அந்தப் புள்ளி முடிவற்ற எடையை அடைதல், அதனால் அந்தப் புள்ளியின் ஈர்ப்புவிசையும் முடிவற்றதாக அதிகரித்தல் என்ற அனைத்துச் செயல்பாடுகளும் ஒரு நொடிக்கும் குறைந்த நேரத்தில் நடைபெறுகிறது.
தொடரும்…