ஆனால், உண்மையில் ஹாக்கிங் சொன்னது வேறு. ‘அண்டத்தில் எங்கும் கருந்துளைகள் இல்லை’ என்று அவர் சொல்லவில்லை. ‘இப்போது நாம் கருந்துளைகள் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அதுபோல போலக் கருந்துளைகள் இருக்காது’ என்று சொன்னார்.
‘கருந்துளைகள் இப்படித்தான் இருக்கும் என்று நம்மிடம் ஒரு வரையறை உண்டு. அப்படி நாம் வரையறுத்து வைத்திருப்பது போலக் கருந்துளைகள் இல்லை’ என்றார். இவை மட்டுமில்லாமல், வேறு சில புரட்சிகரமான கருத்துகளையும் சேர்த்துச் சொல்லியிருக்கிறார் ஹாக்கிங்.
‘கருந்துளைகள் கறுப்பு நிறமாக இருக்காது’ என்றும், ‘அவை சாம்பல் நிறத்தில் இருக்கும்’ என்றும் சொல்லியிருக்கிறார். இவற்றையெல்லாம் ஏதோ ஒரு அனுமானத்தின் மூலம் அவர் சொல்லிவிடவில்லை. பலவிதமான இயற்பியல், கணிதச் சமன்பாடுகளை முன்வைத்துச் சொல்லியிருக்கிறார். இவர் இப்படிச் சொன்னது சக இயற்பியலாளர்களை, குறிப்பாக வானியல் இயற்பியலாளர்களைப் (Astrophysicist) பெரும் குழப்பத்திற்குள் கொண்டு சென்றிருக்கிறது.
இவர் சொல்வதை ஏற்றுக் கொள்வதா? இல்லையா? என்ற முடிவுக்குக் கூட இன்னும் யாராலும் வரமுடியவில்லை. இவர் சொல்வது மட்டும் உண்மையாக இருக்குமானால், இதுவரை வானியல் இயற்பியலில் உண்மைகள் என்று நம்பப்பட்டு வந்த பல விசயங்களை மாற்றிக் கொள்ள வேண்டிவரும். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை இந்த முடிவுகள்.
ஆனால், இப்படிப்பட்ட முடிவுகளுக்கான ஆராய்ச்சிகள் நடைபெறுவதற்குக் காரணமாக இருப்பது, இரண்டு பேருக்கிடையில் நடக்கும் போர்தான் என்கிறார்கள். கோபமில்லாமல், வெறுப்பில்லாமல், ஆயுதமற்று, மூளையை மட்டும் மூலதனமாக வைத்து நடக்கும் ஒரு போர் இது. இந்தப் போர் பலவருடங்களாக நடந்துவரும் ஒரு போர். போரில் எதிரெதிராக நின்று அதில் பங்குபற்றும் இருவருமே உலகமகா அறிவியலாளர்கள். பெரும் புத்திசாலிகள்.
இயற்பியல் விற்பன்னர்கள். அந்த இருவரில் ஒருவர், நான் மேலே சொன்ன ஸ்டீபன் ஹாக்கிங். மற்றவர் ‘லெனார்ட் சஸ்கிண்ட்’ (Leonard Susskind) என்பவர். இந்த சஸ்கிண்ட் என்பவரும் சாதாரணமான ஒருவர் கிடையாது. உலகப் புகழ்பெற்ற ஸ்ட்ரிங் தியரியின் (String Theory) கட்டமைப்பாளர்களில் ஒருவர்.
‘ஊர் இரண்டுபட்டால் யாருக்கோ கொண்டாட்டம்’ என்று சொல்வழக்கு உண்டு. அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், சஸ்கிண்டும் ஹாக்கிங்கும் இரண்டுபட்டதால், இயற்பியல் உலகு, அறிவியல் உலகு, அதிகம் ஏன் ஒட்டுமொத்த உலகிற்கே கொண்டாட்டம்தான்.
இருவருமே மற்றவர் சொல்வது தப்பு என்று நிரூபிப்பதற்காக ஆவேசமாக ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, கணிதச் சமன்பாடுகளை நசித்துப் பிசைந்து பல அறிவியல் உண்மைகளை வெளியிடுகின்றனர். இதில் பிரச்சனைகளும் இல்லாமல் இல்லை. இவர்கள் இருவரில் யார் சொல்வது சரியென்று குழப்பம் மிஞ்சுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆனாலும், இந்தக் குழப்பங்களைக் கையிலெடுத்துக் கொண்டு, இனிவரும் இளம் விஞ்ஞானிகள் ஆராய ஆரம்பிக்கும் போது சரியான விடைகள் பின்னாளில் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. இப்படியே பேசிக் கொண்டு போனால், இவர்கள் என்ன போர் செய்தார்கள் என்று பார்க்க முடியாமல் போய்விடும். ஆகவே முதலில் எதை முன்வைத்து இவர்களின் போர் நடந்தது என்பதை நாம் பார்க்கலாம்.
இயற்பியலில் (Physics) ‘வானியல் இயற்பியல்’ (Astrophysics) என்பது தற்போது மிக முக்கியமான பிரிவாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் வானியல் ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியா கூட அதில் தன்பங்கை வலிமையுடன் செலுத்த ஆரம்பித்துவிட்டது. விண்வெளிக்கு சாட்லைட்டுகளை அனுப்புவதிலிருந்து, அயல்கிரகங்களுக்கு ராக்கெட்டுகளை அனுப்புவது வரை முன்னேறியாகிவிட்டது.
பூமியிலிருந்தே விண்வெளியைப் பெரும் தொலைநோக்கிக் கருவிகளைக் கொண்டு அவதானிக்க ஆரம்பித்துவிட்டோம். அதன் உச்சமாக, சாட்லைட்டுகள் மூலம் தொலைநோக்கிக் கருவிகளை விண்வெளியில் நிறுவி, அங்கிருந்தே விண்வெளியை ஆராயவும் செய்கிறோம்.
தொடரும்…