கருந்துளை மிகச் சிறிதாக இருந்து தனக்கு அருகே வருபவற்றை ஒவ்வொன்றாக விழுங்குவதால், தன் உருவத்தையும் பெரிதாக்கிக் கொள்கிறது. அதிக உணவை உண்பதால் நாம் பெருப்பது போல. கருந்துளைக்கு உணவாக இருப்பவை நட்சத்திரங்களும், கோள்களும், நெபுலாக்களும் ஆகும்.
நட்சத்திரமாக இருந்தாலென்ன, கோள்களாக இருந்தாலென்ன, நீங்களாக இருந்தாலென்ன, ஒரு நாய்க்குட்டியாக இருந்தாலென்ன அனைத்தும் அணுக்களின் கட்டமைப்பினாலேயே உருவாக்கப்பட்டவை. ஏதோ ஒரு ஒழுங்கற்ற ஒழுங்குடன் கூடிய ஒரு கட்டமைப்பின் மூலம் இவையெல்லாம் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உங்கள் உருவத்தை நீங்கள் கண்ணாடியில் பார்த்திருப்பீர்கள்.
நீங்கள் பார்க்கும் உருவம் மேலோட்டமாகப் பார்க்கையில் அழகாக உங்களுக்குத் தெரிந்தாலும் (ஒவ்வொருவரும் அவரவர் கண்களுக்கு அழகாய்த்தான் தெரிவார்கள்), அதில் ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கு இருப்பதைக் கவனிக்கலாம். நீங்கள் ‘செல்கள்’ என்னும் கலங்களால் அடுக்கப்பட்டு உருவாகப்பட்டவர். இந்தச் செல்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்தால், நீங்கள் ஒரு சதுரமானவராகவோ, நீள்சதுரமானவராகவோதான் இருப்பீர்கள்.
‘நான் சொல்வது புரியவில்லையா? சரி, இப்படிப் பாருங்கள்’. நீள்சதுர வடிவமான செங்கற்களை ஒரு ஒழுங்குடன் மேலே மேலே அடுக்கிக் கொண்டு வாருங்கள். அதாவது நீள, அகல, உயரங்களில் அடுக்கும் செங்கற்கள் ஒரே அளவாக இருக்க வேண்டும். அதைத்தான் ஒழுங்கு என்பார்கள். அப்படி அடுக்கும் போது, உங்களுக்குக் கிடைப்பது ஒரு நீள்சதுரமான உருவமாகத்தான் இருக்கும். ஆனால், அதே செங்கற்களை ஒழுங்கற்ற ஒரு ஒழுங்கில் அடுக்கிக் கொண்டு வந்தால், அழகான வீடு ஒன்று உருவாகும்.
ஒழுங்கற்ற ஒழுங்கு என்பது என்னவென்று இப்போது புரிகிறதா? இதுபோலத்தான், நீங்களும் செல்களால் ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கில் அடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள். முகத்தில் இருக்கும் மூக்கு முன்னோக்கியும், காதுகள் இரண்டு பக்கங்களில் துருத்திக் கொண்டும், கைகள் தனியானதொரு பகுதியாக தோள்களிலிருந்து பிரிந்து வளர்ந்ததும் இந்த ஒழுங்கற்ற தண்மையினால்தான்.
ஆனாலும், வலது காது உருவாகும் போது, அதேபோல இடது காது உருவாகியதும், வலது கை உருவாகிய போது, அது போலவே இடது கை உருவாகியதும், மொத்தத்தில் உங்களுக்கு ஒரு சமச்சீரான உருவம் கிடைத்தது எல்லாமே கலங்களின் ஒரு ஒழுங்கான அமைப்பின் அடுக்கினால்தான். உங்களை நீங்கள் இனியொரு தடவை கண்ணாடியில் பார்க்கும் போது கவனியுங்கள், உங்கள் உருவத்தில் ஒரு ஒழுங்கும் இருக்கும், அது ஒழுங்கின்மையும் இருக்கும்.
உங்கள் உருவம் ஒழுங்குடனும், ஒழுங்கற்ற முறையிலும் அமைக்கப்பட வேண்டுமென்றால், அதற்கான தகவல்கள் (Informations) உங்கள் மரபணுக்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும். உங்கள் உருவம் என்றில்லை, மிருகங்கள், பறவைகள், கட்டடங்கள், பொருட்கள் எல்லாமே தகவல்களின் அடிப்படையிலேயே உருவாகியிருக்கின்றன. அதிகம் ஏன், நாம் வாழும் பூமி, சூரியன், கோள்கள், நட்சத்திரங்கள் எல்லாமே தகவல்களின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இதைப் பற்றி விரிவாகக் கடந்த பகுதியில் பார்த்திருந்தோம். ஒன்று உருவாவதற்கு அடிப்படையாகத் தேவையானவை உபஅணுத்துகள்களும், அவை அமைக்கப்படத் தேவையான தகவல்களும்தான். இவை இரண்டும் எப்போதும் அண்டத்திலிருந்து அழிந்து போய்விடாது.
அணுக்கள் மற்றும் உபஅணுத்துகள்களை எடுத்துக் கொண்டால், அவை ஒன்றிலிருந்து இன்னுமொன்றாக மாற்றப்படுமேயொழிய முற்றாக அழிக்கப்பட முடியாதவை. அது போலத் தகவல்களும் அழிக்க முடியாதவை.
ஒரு பொருள் கருந்துளையினுள் நுழையும் போது, அது உபஅணுத்துகள்களாக சிதைக்கப்பட்டு மையம் நோக்கிச் சென்றாலும், அந்தப் பொருள் உருவாக்கப்பட்ட தகவல்கள் நிகழ்வு எல்லையின் மேற்பரப்பில் செய்திகளாகப் பதிவு செய்யப்படுகின்றன என்று நவீன அறிவியலில் சொல்கிறார்கள்.
ஒரு கருந்துளை உருவாகியது முதல் கொண்டு, அதனுள் செல்லும் அனைத்துப் பொட்களினது (பொருட்களா?) தகவல்களும், கணணியொன்றில் பதிவு செய்யப்படுவது போல, நிகழ்வு எல்லையில் பதிவு செய்யப்படுகிறது. இப்படிப் பதிவுசெய்யப்படும் தகவல்கள் அதிகரிக்க அதிகரிக்க, நிகழ்வு எல்லையின் அளவும் விரிவடைந்து பெரிதாகிக் கொண்டே போகும்.
இதனால் கருந்துளையின் அளவும் பெரிதாகிறது என்கிறார்கள். பதிவு செய்யப்பட்ட தகவல்கள் கருந்துளையினால் வெளிவிடப்படும் கதிர்வீச்சின் காரணமாக, ஒரு சினிமாப்படத்தைப் போல விண்வெளியின் மேற்பரப்பில் முப்பரிமாணத்தில் ஒளிபரப்புச் செய்யப்படுகின்றது.
விண்வெளியின் மேற்பரப்பு இரண்டு பரிமாணங்களையுடையது (2D). அந்த இரண்டு பரிமாண மேற்பரப்பில் ஒளிபரப்பாகும் காட்சிகள் ஹோலோகிராம் (Hologram) போல, மூன்று பரிமாணக் காட்சிகளாகத் (3D) தெரிகின்றன.
இப்படிப்பட்ட காட்சிகளாகத்தான் நமது பூமியும், அதில் வாழும் நாமும் ஒளிபரப்புச் செய்யப்படுகிறோம் என்று சொல்கிறார்கள். அதாவது விம்பங்களாகத் தெறிக்க்கப்படும் நாம், உண்மையாக வாழ்வதாகக் கற்பனை செய்து கொள்கிறோம் என்கிறார்கள். நான் இதை எழுதுவதாகவும், நீங்கள் வாசிப்பதாகவும் கூடக் கற்பனையே செய்கிறோம் என்கிறார்கள்.
அனைத்தும் நிஜமாக நடப்பதாகவே நாம் நினைத்துக் கொள்கிறோம். முன்னர் இருந்த பூமியும், அதில் வாழ்ந்த நாங்களும் எப்பொழுதோ கருந்துளையொன்றினால் விழுங்கப்பட்டுவிட்டோம்.
ஆனாலும் எங்களைப் பற்றிய தகவல்களும், பூமியைப் பற்றிய தகவல்களும் அந்தக் கருந்துளையின் நிகழ்வு எல்லையில் பதிந்து, இப்போது காட்சிகளாக ஒளிபரப்புச் செய்யப்படுகிறது என்கிறார்கள்.
‘என்ன, தலை சுற்றுகிறதா?’ இதை வாசிக்கும் போது உங்களுக்குத் தலை சுற்றினாலும், அதுவும் ஒரு கற்பனயே! இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துக் கொளும் மாயை. இந்து மதத்தின் மாயைத் தத்துவம் இதற்குள் பொருந்துவது தற்செயலானதோ தெரியவில்லை.
அல்லது மாயைத் தத்துவம் என்ற ஒன்று இருக்கிறது என்பதையும் கற்பனைதான் பண்ணுகிறோமோ தெரியவில்லை. இப்படிப் பார்க்கும் போது எல்லாமே சுலபமாகிவிடும். உங்களுக்கு நெருங்கிய ஒருவர் இறந்தாலும், அதுவும் கற்பனையென்று அமைதியாக இருந்துவிடலாம். இறப்பும் பொய், பிறப்பும் பொய் என்றாகிவிடுகிறது. நவீன அறிவியல் நம்மை ஒரு வழிபண்ணிவிட்டுத்தான் ஓயும் போல.
முற்றும்.