நீங்கள் உங்கள் நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ ஒரு தமிழ்த் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். அந்தப் படத்தில் திரிஷா நடித்துக் கொண்டிருப்பார். படத்தில் திரிஷாவின் காரக்டர் அன்றாடம் நாம் காணும் ஒரு பெண்னின் காரக்டராக இருக்கும். படத்தில் திரிஷவைப் பார்த்தவுடன், ‘அட! நம்ம திவ்யா மாதிரியே அச்சு அசலாகத் திரிஷா இருக்கிறாரே!’ என்று உங்களுக்குத் தோன்றும்.
‘திவ்யா’ என்பது உங்கள் உறவுப் பெண்ணாகவோ, நட்பு வட்டாரத்தில் இருக்கும் பெண்ணாகவோ, உங்கள் கனவில் அடிக்கடி வந்து தொந்தரவு செய்யும், நீங்கள் விரும்ப விரும்பும் ஒரு பெண்ணாகவோ இருக்கலாம். திரிஷா, திவ்யா மாதிரி இருப்பது உங்களுக்குப் பெரிய ஆச்சரியத்தைத் தரும்.
அந்தத் திரைப்படத்தில் திரிஷாவின் அனைத்து முகபாவனைகளும் திவ்யாவையே ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும். அதை மனதுக்குள் வைத்திருக்காமல் அங்கிருப்பவர்களிடம், “திரிஷாவைப் பார்க்க அப்படியே திவ்யா மாதிரி இருக்கு, இல்லையா?” என்று சொல்வீர்கள்.
அப்போது, உங்களைச் சுற்றியிருக்கும் அனைவரும் உங்களை ஒரு வினோத ஜந்து போலப் பார்ப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொருவிதமான அபிப்பிராயம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் உங்களைத் தவிர, படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் எவருக்கும் திரிஷா, திவ்யா மாதிரியே தெரிய மாட்டார்.
ஒரு அசப்பில் கூட திவ்யா போலத் தெரியாது. அனைவரும் உங்களை ஏளனம் செய்வார்கள். “போயும் போயும் திவ்யாவைத் திரிஷா போல இருக்கு என்று சொல்கிறாயே!” என்று கலாய்ப்பார்கள். ஆனால் உங்களுக்கு அதற்கு அப்புறமும் திவ்யா மாதிரியே, திரிஷா தோன்றிக் கொண்டிருப்பார். இது உங்களுக்கு ஆச்சரியமாகவும் இருக்கும்.
‘திவ்யாவில் இருக்கும் ஏதோ ஒருவித அபிமானம்தான், திரிஷா போலத் திவ்யாவை இவனுக்குக் காட்டுகிறது’ என்று அவர்கள் நினைப்பார்கள். நீங்களோ உங்கள் கணிப்பில் மாற்றமில்லாமல் இருப்பீர்கள். இது போலச் சம்பவங்கள் பலருக்குப் பல சமயங்களில் நடந்திருக்கும். ஒருவரைப் பார்க்கும் போது, வேறு ஒருவரைப் போல இருப்பதாக தோன்றுவது அடிக்கடி நடப்பதுதான். ஆனால் மற்றவர்களிடம் கேட்டால், அப்படி இல்லவேயில்லை என்று மறுப்பார்கள்.
இந்தச் சம்பவங்களில் என்ன நடக்கிறது? இங்கு யாரில் தப்பு இருக்கிறது? உங்கள் பார்வையிலா? அல்லது உங்கள் நட்புகள், உறவினர்கள் பார்வையிலா? அல்லது ஒருவரில் இருக்கும் அதீத ஈடுபாட்டின் வெளிப்பாடா? இது பார்வை சார்ந்த விசயமே இல்லாத வேறு ஒன்றா? இங்கு யார் சொல்வது பொய்? யார் சொல்வது உண்மை? நவீன அறிவியல் என்ன சொல்கிறது தெரியுமா? ‘நீங்கள் சொல்வதும் உண்மை.
உங்கள் நண்பர்கள் சொல்வதும் உண்மை’ என்கிறது நவீன அறிவியல். ‘அது எப்படிச் சாத்தியம்’ என்ற கேள்வி இப்போது உங்களுக்குத் தோன்றும். திவ்யா, திரிஷா மாதிரி இருப்பதும், இல்லாமல் இருப்பதும் ஒன்றாகச் சாத்தியமாக முடியாதே! இரண்டுமே உண்மையாக இருக்க எப்படி முடியும்? இந்தக் குழப்பமான இடத்தில்தான், அறிவியல், ஆச்சரியமான கருத்து ஒன்றைச் சொல்கிறது.
‘நீங்கள் பார்த்து, உங்கள் மனதில் பதிந்து வைத்திருக்கும் திரிஷாவின் உருவத்தை, மற்றவர்களின் மனது அப்படியே பதிந்து வைத்திருப்பதில்லை. உங்களுக்குத் திரிஷா எப்படித் தெரிகிறாரோ, அதே தோற்றத்தில் மற்றவர்களுக்கு தெரிய மாட்டார்’. அதாவது ஒரு பொருளோ, ஒரு உருவமோ ஒருவருக்குத் தெரிவது போல, அடுத்தவருக்குத் தெரியாது.
திரிஷாவைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும், தனித்தனியாக வெவ்வேறு வடிவத்திலான திரிஷாக்களே தெரிந்து கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு திரிஷாவுக்கும் நுண்ணிய வித்தியாசங்கள் இருக்கும். ஆனால் நாம் ஒரே திரிஷாவைப் பார்ப்பதாகத்தான் நினைத்துக் கொள்கிறோம். நான் பார்க்கும் திரிஷாவைத்தான் நீ பார்க்கிறாய் என்று எங்கும் நம்மால் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. என்ன புரிகிறதா?
நவீன இயற்பியலின்படி, குறிப்பாக குவாண்டம் இயற்பியலின்படி, பூமியில் இருக்கும் அனைத்தும் தகவல்களாகவே (Information) அமைக்கப்பட்டிருக்கின்றன. நான், நீங்கள், அந்த நாற்காலி, வீட்டின் அருகே இருக்கும் கோவில் என எல்லாமே, இன்பார்மேசன்களின் மூலம் அடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை என்கிறது அறிவியல்.
இது நிச்சயம் புரிந்து கொள்ள முடியாத சிக்கல்தான் இல்லையா? ஒரு உதாரணம் மூலம் இதைப் பார்க்கலாம். ஒரு வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வீடு முழுவதுமே செங்கற்களால் கட்டப்பட்டவை என்றும் வைத்துக் கொள்ளுங்கள். வீட்டின் வெளியே நின்று அதன் அமைப்பைப் பார்க்கும் போது, அது விதவிதமான வடிவங்களில் நவீனமாக அமைக்கப்பட்டிருக்கும்.
ஆனால் அதை நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால் அவையெல்லாம் பல செங்கற்களின் ஒழுங்கான அமைப்பின் மூலம் உருவானது என்பது தெரியும். ஒவ்வொரு செங்கல்லும் செவ்வக வடிவில் காணப்பட்டாலும், அவற்றை வைத்து அடுக்கிக் கட்டப்பட்ட வீடு, வளைந்து அழகிய வடிவத்தில் காணப்படும்.
இப்போது, இந்தச் செங்கற்களை ஒழுங்காக அடுக்குவதற்கு எது உதவியது என்று பார்த்தால், அந்த வீடு கட்டுவதற்கென்று ‘வரைவு’ ஒன்று, இதற்கென்றே படித்துப் பட்டம் பெற்ற ஒருவரால் வரையப்பட்டிருக்கும். அந்த வரைவு, கணணி மூலமாக கணித விதிகளின்படிவரையப்பட்டிருக்கும்.
அந்த வரைவை அடிப்படையாக வைத்தே அந்த வீடு கட்டப்பட்டிருக்கும். இந்த வரைவை எடுத்துக் கொண்டால், அந்தக் கட்டடம் அமைப்பதற்கான சகல தகவல்களையும் (informations) அது கொண்டிருக்கும். அதாவது, அமைக்கப்படும் அந்த வீடும் இந்தத் தகவல்களைக் கொண்டதாகத்தான் இருக்கும். புரிகிறதா?
இது போலத்தான் ஒரு மனிதனும். ‘கலம்’ (Cell) என்று சொல்லப்படும் மிகச் சிறிய ஒன்றினால் உருவாக்கப்பட்டிருக்கிறான். நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கும் கலங்களின் கட்டட அமைப்பே மனிதன். மனிதன் இந்த வகையில் அமைக்கப்பட வேண்டும் என்ற தகவல்களை அவனுள் இருக்கும் மரபணுக்கள் (DNA) வைத்திருக்கும். சொல்லப்போனால், DNA யில் இருக்கும் இன்பார்மேசன்களின் வெளிப்பாடுதான் ஒரு மனிதன்.
இது போலத்தான் அனைத்துமே! அணுவிலிருந்து அண்டம் வரை அனைத்தும் ஒரு வகைத் தகவல்களின் அடிப்படையிலேயே அதனதன் உருவங்களை எடுத்திருக்கின்றன. இப்போது கணணியை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் நாம் பார்க்கும் படங்கள், காணொளிகள், பாடல்கள், பேச்சுக்கள், எழுத்துகள் எல்லாமே 0, 1 என்னும் பைனரி வகைத் தகவல்களாகவே கணணிக்குள் இருக்கின்றன. கணணியில் நீங்கள் பார்க்கும் அழகான ஒரு போட்டோ, இரண்டேயிரண்டு கணித இலக்கங்களால் உருவாக்கப்பட்ட தகவல்கள் என்றால் நம்பவே முடியாமல் இருக்கிறதல்லவா? கணணியை விடுங்கள். தொலைக்காட்சி, வானொலி, தொலைபேசி, சாட்லைட் என அனைத்துமே மின்காந்த அலைகள் என்று சொல்லப்படும் தகவல்களதான். உங்கள் வீட்டுக்குள் இருக்கும் தொலைக்காட்சியில் தெரியும் கமலஹாசன் நடப்பார், இருப்பார், சிரிப்பார், நடிப்பார் எல்லாமே செய்வார்.
இவையெல்லாம் மேலே பறந்து கொண்டிருக்கும் சாட்லைட் மூலமாக ஒளிபரப்பப்படும் மின்காந்த அலைகள்தான் (Electromagnetic wave). அந்த அலைகளில் கமலஹாசன் தகவல்களாக மாறி, தானும் ஒரு அலையாக நம் வீட்டின் தொலைக்காட்சியிலும் நடக்கிறார், சிரிக்கிறார், வருகிறார்.
அண்டம் முழுவதும் இருக்கும் திடப்பொருட்கள் அனைத்துமே ஒரு தகவல்களின் கட்டமைப்பின் மூலமே கட்டியமைக்கப்பட்டிருக்கின்றன. தகவல்களின் ஒழுங்கமைப்புத்தான் என்னையும், உங்களையும், நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த ‘உயிர்மை’ இதழையும் வடிவமைத்திருக்கிறது. நவீன அறிவியல் இதைத்தான் தெளிவாகச் சொல்கிறது.
இதை மையமாக வைத்துத்தான் காலப் பிரயாணத்தின் (Time Travel) சாத்தியத்தையும் கணித ரீதியாக நவீன அறிவியல் நிறுவவும் செய்கிறது. இப்போதும் புரியவில்லை என்றால், ஒரு சின்ன உதாரணத்தைச் சொல்கிறேன். நீங்கள், உங்கள் காதலிக்கு ஒரு அழகிய கண்ணாடியிலான தாஜ்மஹால் உருவப் பொம்மையைப் பரிசாக வாங்கிச் செல்கிறீர்கள்.
அதைக் கைகளில் கொடுக்கும் போது, அவள் அடையப் போகும் மகிழ்ச்சியையும் உணர்ச்சியையும் சிந்தித்துக் கொண்டே செல்வதால், எதிரே இருக்கும் விளக்குக் கம்பத்தைக் கவனிக்காமல் அதில் மோதிவிடுகிறீர்கள். கையிலிருந்த தாஜ்மஹால் நிலத்தில் விழுந்து சிதறுகிறது. அதன் கண்ணாடிச் சிதறல்கள் நிலம் முழுவதும் பரவிக் கிடக்கின்றது.
ஆனால் உங்களிடம் இறந்தகாலத்துக்குப் பயணம் செல்லக் கூடிய ஒரு கருவி (Time Machine) இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதிகமெல்லாம் வேண்டாம், சில நிமிடங்கள் மட்டும் இறந்த காலத்திற்குப் பின்னோக்கிச் செல்லும் சக்தி உள்ள கருவி அதுவாக இருந்தால் மட்டுமே போதும்.
அந்தத் தாஜ்மஹால் பொம்மை சிதறிய அந்தக் கணத்திலிருந்து ஒரு நிமிடம் பின்னாடி பயணம் செல்கிறீர்கள் என்̀று வைத்துக் கொள்ளுங்கள். திரைப்படங்களில் காட்டுவார்களே ‘ஸ்லோ மோஷன்’, அதுபோல மெதுமெதுவாக அந்த ஒரு நிமிடம் பின்னோக்கி நகர்கிறது என்று சிந்தியுங்கள்.
தொடரும்…