கோபால் நிச்சயம் வருவான் என்று எண்பது பேர் கொண்ட அவளின் டீமுக்குத் தெரிந்திருந்தது. இவனுக்கான ஏற்பாடுகள் முன்னரே தயார் நிலையில் வைத்திருந்தனர். அர்ச்சனா அவனிடம் விளக்கிய ஒவ்வொரு வார்த்தையும் பல நூறு பக்க கணித சமன்பாடுகளாக உருப்பெற்றுக் கிடந்தது. ஏகப்பட்ட உபகரணங்களுடன் அந்த இடம் வயர்கள் செழித்து வளரும் வயல் போலிருந்தது. கருந்துளையைச் சுவிட்சர்லாந்தில் இருந்து வெற்றிட பெட்டியில் கொண்டு வந்தும் விட்டார்கள்.
எந்த இடத்தில் கருந்துளையில் நுழைகிறோமோ, ஐயாயிரம் வருடங்களுக்கு முன் அதே இடத்தில் இறங்குவோம். ஆகவே அது கடலாகவோ காடாகவோ இருந்துவிடாமல், மனித குடியிருப்புகளின் மிக அருகில் இருக்கும் இடமாக இருக்க வேண்டும். குஜராத்தில் லோத்தல் கிராமத்தை தேர்ந்தெடுத்திருந்தார்கள். அந்தக் காலத்தில் கப்பல் போக்குவரத்துக்குப் பெயர் போன இடம், வெளிநாட்டு வர்த்தகர்கள் வந்து போயிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கும் இடம்.
ஊருக்குள் கோபால் ஒரு வெளிநாட்டு வர்த்தகர் என்று சொல்லிக்கொண்டு நுழைவதாக ஏற்பாடு. அந்தக் காலத்தில் மதிப்பு நிறைந்ததாகக் கருதப்படும் செம்பு, தங்கம் போன்றவற்றைக் கொடுத்தனுப்புகிறார்கள். அதனுடன் ஒரே ஒரு துப்பாக்கி.
கூடவே மக்காமல் இருக்கப் பிளாஸ்டிக்கில் பேக் செய்யப்பட்ட கதிரியக்க ஐசோடோப்கள் சிலவற்றைப் பழைய ஊர்களின் முக்கியத்துவம் பொதிந்த இடங்களில் புதைத்து விடவேண்டும். பிறகு நிகழ்காலத்தில் Zinc Sulfide டிடக்டர்கள் மூலம் அந்த இடங்களைக் கண்டு பிடித்து ASI உதவியுடன் அகழ்ந்து கிடைக்கும் பொருட்களைச் சாவகாசமாக ஆராய்ந்து கொள்ள வேண்டியது.
இவனது வேண்டுகோளுக்கு இணங்க, சிந்து எழுத்துக்களில் தகவல்களைப் பதிக்கும் இடங்களில் அந்த ஐசோடோப்களைப் போடுவதற்கு ஒப்புக்கொண்டார்கள். அங்கு இருக்கப்போகும் சில நாட்களில் கோபாலின் முக்கிய வேலை அந்த எழுத்துக்கள் பற்றியும் அந்தக்கால வார்த்தைகளையும் தெரிந்து கொள்வது. மற்ற அறிவியல்களை விஞ்ஞானிகள் பார்த்துக்கொள்வார்கள். சொல்லப்போனால் அவர்களைப் பொறுத்தவரை இதெல்லாம் போனஸ், அவர்களுக்குக் காலப்பயணம் சாத்தியப்பட வேண்டும், அவ்வளவுதான்.
பயிற்சியே மூன்று வாரத்திற்குக் கொடுத்தார்கள். கிளம்ப வேண்டிய தினம் வந்ததும் விண்வெளி பயணம் போகிறவர்களுக்கான அதே உடையில் கோபால் ஆர்ம்ஸ்டிராங் மாதிரிதான் தெரிந்தான்.
முலாமிட்ட கை பெட்டியில் மற்ற சமாச்சாரங்கள். எல்லோரிடமும், அர்ச்சனாவிடமும் சொல்லிக்கொண்டு வெற்றிட பெட்டிக்குள் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்த கருந்தகட்டை நோக்கி இறங்கினான். அதனுள் குதிக்குமுன் கலங்கிய கண்களை முகக்கவசத்தைத் தாண்டி துடைக்கக் கூட முடியவில்லை. குதித்தான்.
தொடரும்…