“கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆச்சு அது கருந்துளைதான்னு எங்களுக்குத் தெரிய. அதை அளவில் பெரிதாக்கவும், ஸ்திரமாக வைக்கவும் இத்தனை வருஷம் ஆகியிருக்கு. இப்போது ஒரு ஆள் அவனுக்குத் தேவையான பொருட்களோட நுழையும் அளவுக்குக் கொண்டு வந்தாச்சு!”
“வார்ம்ஹோலின் ஒரு முனை இங்க இருக்கு சரி.. எதிர் முனை?”
“அது எங்க கணக்குப்படி இன்னிலேர்ந்து ஐயாயிரம் வருஷத்துக்கு முன்னால் இறுத்தினா மட்டுமே சரிப்படும்னு தெரிஞ்சிருக்கு”
ஐயாயிரம் வருடம் என்றதும் அவனுக்கு முதலில் சிந்து சமவெளி தான் நினைவுக்கு வந்தது. அப்போது கூட அவள் எதை நோக்கி போகிறாள் என்பது அவனுக்கு உரைக்கவில்லை.
“எடுத்த எடுப்புலேயே ஆளையா அனுப்ப போறீங்க?”
“ஏற்கனவே ஒரு வீடியோ கேமரா, குரங்கு இதெல்லாம் அனுப்பியாச்சு”
“என்ன ஆச்சு”
“ஒண்ணுமே ஆகல. அந்தப் பக்கம் என்ன நடந்ததுன்னே தெரியலை.. நாங்களும் விதவிதமா முயற்சி செஞ்சி பாத்தாச்சு. ஒரு முக்கியமான விஷயம், கருந்துளையை ஸ்திரமாக வைக்க அதை வெற்றிட பெட்டியில் (அதான் Vacuum chamber) வைக்கனும். இந்தப் பக்கம் அத செஞ்சாச்சு. அந்தப் பக்கம் போன உடனே அதை வெற்றிடத்தில் அடைக்கணும். இல்லனா எதுவும் திரும்ப வராது. அதுக்குதான் ஒரு மனுஷன அனுப்ப முடிவெடுத்திருக்காங்க”
சிறிது நேரம் மின்விசிறி சப்தம் மட்டும் பெரிதாகக் கேட்டது. ஆரம்பத்தில் இருந்து அவனுக்குள் ஓடிய கேள்வியை அவளின் பார்வையைப் பார்க்க பயந்து ஜன்னலை பார்த்துக்கொண்டு கேட்டே விட்டான். “இதெல்லாம் ஏதோ கனவுல கேக்கறா மாதிரி இருக்கு. இதுல நான் என்ன செய்யணும்?”
ஐயாயிரம் வருடங்களுக்கு முன் என்றால் ஏதோ ஒரு பண்டைய நாகரிகத்தில் போய்ச் சேரவே சாத்தியம். அதைப்பற்றி ஓரளவிற்கு அறிந்த ஒருவனால் தான் அங்குச் சென்று தாக்குப்பிடித்துத் திரும்பி வர முடியும். கூடவே அறிவு நுட்பமும், உடல் தகுதியும் அவசியம். ஆக எகிப்து, மெசபடோமியா, சிந்து என்று மூன்று இடங்கள் பரிசீலிக்கப்பட்டு, அரசியல் காரணங்களால் இந்தியா தான் அவர்களின் முதல் தேர்வு. அதிலும் அங்கு போய் வர கோபால் தான் எல்லாவற்றுக்கும் பொருந்தி வருகிறான். ஆகவே அவனுக்கு மனித வரலாற்றிலேயே முதல் காலப்பயணியாகும் வாய்ப்பு. அப்படி நடந்தால் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கே தேடி வந்து அவனுக்குக் கும்பிடு வைத்துவிட்டு போகக்கூடும்.
இதையெல்லாம் வேக வேகமாக மெல்லிய குரலில் அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே இவனுக்கு வேறு யோசனை ஓடியது.
இதெல்லாம் சாத்தியம்தானா, ஒப்புக்கொண்டு போனாலும் திரும்பி வர முடியுமா? என்னதான் சிந்து காலகட்டத்தை நேரில் பார்க்க வாய்ப்புக் கிடைத்தாலும், முடிந்தால் அவர்களின் மொழியைக் கற்றுக்கொண்டு வந்தாலும்..
அவனுக்கென்று அப்பா தவிர யாருமில்லை, அவரும் ஆசிரமத்தில் சாமியாகி பல வருடங்களாகி விட்டது. அவன் பெரிதாகச் சாதா பயணங்களே போனதில்லை. இதையெல்லாம் விட முக்கியமாக M.Sc., சமயத்தில் சௌம்யாவுடன் ஒரு குருட்டுச் சந்தர்ப்பத்தில் மேலாக நெருக்கமாக இருந்ததைத் தவிர, வாழ்க்கையில் பெரிய சுகங்கள் எதையும் பார்த்துவிடவில்லை. இப்போது காலப்பயணம் செய்யும் முன் தனது முழுக்காதலையும் அவளிடம் வெளிக்காட்டலாம் என்றால் கூடக் காலம் கடந்துவிட்டது. அவளும் அவளது கணவனும் சேர்ந்து ஜோடியாக உதைப்பார்கள்.
“எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகலீங்க”
அதனாலும் தான் உன்னைத் தேர்ந்தெடுத்தது என்று சொல்லாமல், ‘யோசிச்சி சொல்லுங்க..” என்று மட்டும் சொல்லிவிட்டு அர்ச்சனா போய் விட்டாள்.
தொடரும்…