“வாங்க அர்ச்சனா.. கான்ஃபிரன்ஸ் முடிஞ்சதா?”
“இல்லை.. ரொம்ப அறுவை.. அதான் நழுவி இங்க ஓடி வந்துட்டேன். நீங்க கிளாஸ்க்கு போகனுமா?”
“இல்லை லஞ்சுக்குப் பிறகுதான்.. நீங்க சொல்லுங்க”
“கேக்கணும்னு இருந்தேன். அன்னிக்கு பேசிட்டு இருந்தப்போ நீங்க ஒரு வார்த்தை சொன்னீங்க.. சிந்து நாகரிக மக்கள் பல ஆயிரம் வருஷத்துக்கு முன்ன எழுதி வச்சிட்டு போன விஷயங்களைப் படிச்சு புரிஞ்சிக்க என்ன வேணாலும் செய்வேன், எவ்வளவு தூரம் வேணாலும் போவேன்னு..”
“அது ஒரு வார்த்தை இல்லை.. பல வார்த்தைகள்”
ஒரு சிலரின் சிரிப்போ அழுகையோ செயற்கை என்று கண்டுபிடிக்கவே முடியாது. அப்படி ஒன்றை சிரித்துவிட்டு, “ஐயோ.. சரி பல வார்த்தைகள்.. அதுக்காக எவ்வளவு தூரம் போவீங்க?”
அவளின் கேள்வி அந்த இடத்தில் பொருந்தாமல், அவளது குரலின் விளையாட்டுத்தனத்தையும் மீறி தொக்கியிருந்த முக்கியத்துவம் அவனுக்கு நெருடியது.
“அப்படிப் படிச்சிட முடியும்னா, என் உயிரைக்கூடக் கொடுப்பேன்” அவனை மீறி வார்த்தைகள் வந்து விழுந்தன. அவ்வளவு தீர்க்கத்தை அவளும் எதிர்பார்க்கவில்லை.
“நான் ஒரு முக்கியமான விஷயம் பத்தி பேசணும். எங்க ஆரம்பிக்கனு தெரியலை”
“சும்மா தயங்காம சொல்லுங்க அர்ச்சனா”
“சுருக்கமா சொன்னா லூசோன்னு நினைப்பீங்க.. அதனால விலாவாரியாவே சொல்றேன். இது மிகவும் ரகசியம். வெளியில் போகாமல் பாத்துக்கறது உங்க பொறுப்பு.. For friends’ sake!”
தெரியாத ஒருவர் தன்னிடம் அவ்வளவு ஆர்வம் காட்டியது அவனுக்காக அல்ல, வேறு எதற்காகவோ என்பது வழக்கமான அயர்ச்சியைத் தந்தாலும், இவனுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் கோபாலை வேறு எதையும் யோசிக்க விடவில்லை.
“நிச்சயம் யார்ட்டயும் சொல்லலை. ரொம்பப் பயமுறுத்தாம சீக்கிரம் சொல்லுங்க”
“வார்ம்ஹோல் கொண்டு காலப்பிரயாணம் பத்தி உங்களுக்குத் தெரியுமா? ஐன்ஸ்டைன் கூட அதப்பத்தி சொல்லியிருக்கார்”
கூகுள் காலத்தில் எல்லாருக்கும் எல்லாமும் தெரிகிறது. ஆனால் யாருக்கும் முழுமையாகத் தெரிவதுமில்லை. அவனுக்குத் தெரிந்த கொஞ்சத்தைச் சொன்னான். வார்ம்ஹோல் என்பது இரண்டு காலங்களுக்கு இடையில் இணைப்பை ஏற்படுத்தும் ஒரு பாதை மாதிரி.. இந்தப் பக்கம் நுழைந்து அந்தப் பக்கம் வந்தால் வேறு ஒரு காலத்தில் இருப்போம்.. ஆனால் அது எப்படிச் சாத்தியம் என்பதை அவனுக்கு விளக்க தெரியவில்லை.
அர்ச்சனா ‘ஓரளவு சரிதான்’ என்று சொல்லிவிட்டு இவ்வாறு விளக்கினாள்:
இரு வேறு கால வெளிகளுக்கு இடையே சுரங்கப்பாதை போல் ஒரு இணைப்பை ஏற்படுத்தினால் அதுதான் வார்ம்ஹோல். *வளவளகொழகொழ* பாதையின் இரண்டு பக்கமும் நுழைய Funnel மாதிரி நுழைவாயில்கள். *வளவளகொழகொழ*
ஆனால் இந்த நுழைவாயில்கள், பாதை எல்லாம் உருவாக்குவது அவ்வளவு சுலபம் அல்ல. பிரபஞ்சத்தில் இயற்கையாகவே காணப்படும் பிளாக் ஹோல் மூலம் இந்த நுழைவாயில்கள் சாத்தியம் என்று நிறைய அறிஞர் மண்டைகள் கருதின.
*வளவளகொழகொழ* பிளாக் ஹோல் தெரியுமல்லவா? ஒரு மாபெரும் நட்சத்திரம் இறக்கும்போது அளவில் மிகவும் சிறுத்து, அவ்வளவு நிறையும் ஒரு புள்ளியில் தேங்கி உருவாவது. அதன் அடர்த்திக் காரணமாக மைய ஈர்ப்பு மிக அதிகமாக, சுற்றி இருக்கும் அனைத்தையும் இழுக்கும். அனைத்தையும் என்றால் ஒளியை கூடத் தப்பவிடாமல் இழுப்பதால் அதன் பெயர் கருந்துளை. *வளவளகொழகொழ* கிட்டத்தட்ட பிரபஞ்சத்தின் அனைத்து கேலக்சியின் மத்தியிலும் இப்படி ஒரு கருந்துளை உருவாகி சுற்றி இருப்பவற்றை இழுத்துக்கொண்டிருக்கிறது.
இப்படி ரொம்ப ரொம்பக் குட்டியான இடத்தில் மாபெரும் அடர்த்தியை உருவாக்க முடிந்தால், கருந்துளையைப் பூமியிலேயே செய்ய முடியும். ஆனால் அதற்கு அபிரிமித சக்தியும், பூமியை அது உறிந்துவிடாமல் கட்டுக்குள் வைக்க மெகா உபகரணங்களும் தேவை. CERNஇல் இருப்பது போல்.
இப்படியெல்லாம் விளக்கிவிட்டு படபடப்பாக நிறுத்தினாள்.
பாதிப் புரிந்து பாதிப் புரியாமல் கேட்டான் “நீங்க கருந்துளையை உருவாக்கிட்டீங்களா என்ன?”
“2005 லேயே”
இன்னும் முழுசாக அதன் பெருமை தெரியாததால் பெரிய ஆச்சர்யம் காட்டாமல் ‘வாவ், குட் வொர்க்’ என்றான்..
“உனக்கு நான் என்ன சொல்ல வரேன்னு புரியலையா?”
அவள் கேட்டதை யோசித்ததும் சிறிது நேரம் விட்டு கோபாலுக்கும் படபடக்க ஆரம்பித்தது.
“நீங்க.. அங்க.. வார்ம்ஹோல் காலப்பயணம்?”
“யெஸ்.. யெஸ்” அவள் குதித்ததில் மேஜையில் இருந்து ஏதோ கீழே விழுந்து உருண்டது. இருவருமே அதைக் கண்டுகொள்ளவில்லை. அவளே தொடர்ந்தாள்.
தொடரும்…