“சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முன் மிகவும் முன்னேறிய ஒரு சமூகம் இருந்தது.. அது அழிவற்றது என்று தன்னைப்பற்றியே எண்ணிக்கொண்டது”
டாக்டர் பி.ஆர்.கோபால் (பிஎச்டி) தனது குறிப்புகளின் முதல் வரிகளை ஆயிரம் முறை படித்திருந்தாலும், அதன் மீது கண்கள் ஓடியதும், மனது தன்னையறியாமல் மறுபடி படித்தது. இந்த வருடம் புதிதாகச் சேர்ந்த மாணவர்களுக்கு மறுபடியும் முதலில் இருந்து வரலாற்றைச் சொல்ல வேண்டும். ஆனால் சிந்து சமவெளி நாகரிகம் அவனுக்கு அலுக்காத ஒன்று.
சமயத்தில் அதைப்பற்றி ஆழமாக வேறு யாராவது பேசினாலோ எழுதி விட்டாலோ தனது காதலியை வேறு எவனோ வர்ணித்ததைப் போல் எரிச்சலடைகிறான். பெரும்பாலும் புது மாணவர்கள் முதல் வகுப்பின் முடிவிலேயே அவனது ரசிகர்களாகியிருப்பார்கள்..
மெட்ராஸ் யுனிவர்சிட்டி வரலாற்று பிரிவின் பேராசிரியர்கள் வரலாற்றிலேயே மிகவும் வயது குறைந்தவனாக (32) இருந்த போதும், அதற்குள் வரலாறு/Archeological Survey of India – ASI/எபிக்ரஃபி வட்டார பெரிசுகள் பலரும் அவன் பெயரை தெரிந்து வைத்திருந்தார்கள். சமீபத்தில் கோபாலும் அவனது வழிகாட்டி டாக்டர் ராவும் சேர்ந்து எழுதிய ஆராய்ச்சி பேப்பர் சர்வதேச அளவில் தர்ம அடி வாங்கினாலும் நல்ல கவனத்தைப் பெற்றது. தோண்டி எடுக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்துருக்கள் ஒரு மொழியின் எழுத்துக்கள் என்பது அந்த ஆராய்ச்சியின் சாரம்.
எதிர்த்தரப்பு அவை வெறும் சின்னங்களே என்கிறது. தகவல்கள் இந்த அளவிலேயே கிடைத்திருப்பதால் அதன் அர்த்தங்களைப் பல்லாண்டுகளாகப் பலர் முயன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. என்றுமே கண்டுபிடிக்க முடியாமலும் போகலாம்.
கோபால் முந்தைய இரவு சரியாகத் தூங்காததால், பல ஆசிரியர்கள் உபயோகித்து மழுமழுப்பேரிய மேஜையில் சாய்ந்து கண்ணைச் சற்றே மூடியதும், அவனது அறைக்கதவில் யாரோ ‘டக் டகாடக் டக்’ என இசைத்தார்கள். இந்த ஒரு வாரத்திலேயே அந்த ராகமான கதவுத்தட்டல் அர்ச்சனாவுடையது என்று பழகியிருந்தான். Theoretical physicist. சுவிட்சர்லாந்தில் கடவுள் துகள் படைக்கும் CERNல் வேலை! ஆனால் துளி பந்தா இல்லை.
இங்கு ஏதோ நிகழ்ச்சிக்காக வந்தவள் கோபாலை தேடி தேடி வந்து பேசினாள். இவனைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்ததோடு, அவனது வேலையையும் கவனமாக நோண்டி நோண்டி கேட்டுக்கொண்டாள். இதெல்லாம் இயல்பாகவே அவள் பால் ஒரு பிடித்தம் ஏற்படுத்திவிட்டது. ஆனாலும் ரிசர்ச் செய்பவர்கள் அரசியல்வாதிகளை விட மோசமானவர்கள்.
ஏதோவொரு நோக்கத்தை மட்டுமே கொண்டு மற்ற எதையும் கண்டு கொள்ளாதவர்கள் ஆபத்தானவர்கள் தானே?
தொடரும்…