Home » அதிசயம் ஆனால் உண்மை » நாவல்கள் » இரண்டாம் தேனிலவு – 41
இரண்டாம் தேனிலவு – 41

இரண்டாம் தேனிலவு – 41

ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமுதாவின் கண்களில் கண்ணீர் நிரம்பியிருந்தது. எப்போது வேண்டுமானாலும் உணர்ச்சிகளின் அணை உடைந்து, கண்ணீர் பெருக்கெடுக்கலாம் என்பதுபோல் இருந்தது.

“சொல்லுங்க மிஸஸ் அமுதா. ஆனந்த்துக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?”

இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் இப்படி கேட்டதுதான் தாமதம்; அமுதாவின் கண்களில் இருந்து பொலபொலவென்று உதிர்ந்து விட்டது கண்ணீர். அவளிடம் வெகுநேரம் மவுனம். இன்ஸ்பெக்டர் என்ன கேட்டாலும் அவளிடம் இருந்து அழுகையே பதிலாக வந்தது. 15 நிமிடங்களுக்குப் பிறகு மனதை தேற்றிக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.

“ஆனந்த் என்னோட முறைப் பையன்தான். அதாவது, அத்தைப் பையன். அந்த உரிமையில்தான் நாங்கள் பேசினோம், பழகினோம். நாளடைவில் அதுவே எங்களுக்குள் காதலா மாறிடுச்சு. நான் கிராமத்துப் பொண்ணு. காதல்ங்கறது அங்கெல்லாம் கெட்ட வார்த்தை மாதிரி. ஆனந்துக்கு என்னை மனைவியாக்கிக் கொள்ளும் தகுதி இருந்தாலும், நாங்கள் காதல்ங்கற எல்லைக்குள்ள அத்து மீறல. அவன் ரொம்ப திறமைசாலி. அவன்கிட்ட பேசிட்டே இருக்கலாம். நேரம் போகுறதே தெரியாது.

ஒரு விஷயத்தை நாம ஒரு கண்ணோட்டத்துல பார்த்தா, அதுக்கு வேறு விதமா விளக்கம் தர்ற திறமை அவனுக்கு உண்டு. அதனாலதான் என்னவோ அவன்கிட்ட அடிக்கடி பேசணும்னு எனக்குத் தோணும். நான் என்னதான் அவனோட மாமா பொண்ணா இருந்தாலும், ஒரு கிராமத்து பெண்ணுக்கு இருக்கற வெட்கம், கூச்சம் என்கிட்டேயும் இருந்துச்சு. அதனால அளவாத்தான் பேசுவேன். ஆனால், ஆனந்த் ரொம்ப ஜாலி டைப். நேர்ல வேணும்னா, இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு கேட்கற அளவுக்கு இருக்கற அவன், பொதுஅறிவுன்னு வந்துட்டா பிச்சு எடுத்துடுவான். அதுக்காகவே அவன்கிட்ட பழகினேன். ஒருகட்டத்துல எங்களோட பேச்சு மணிக்கணக்கா நீண்டு போச்சு.

… ஒருநாள் அவன் என்கிட்ட தன்னோட காதலை வெளிப்படுத்தினான். ‘ஐ லவ் யூ’ன்னு சொல்றதுக்கு அவன் பட்ட தவிப்பு, இன்னிக்கும் எனக்குள்ள உணர்வோடவும் உயிரோடவும் இருக்குது. “நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னா, நீ என்ன பதில் சொல்லுவ”ன்னு அவன் கேட்டப்போ, “ஷாக்” அடிச்ச மாதிரி ஆயிட்டேன் நான். அதுவும், இன்ப அதிர்ச்சி! அவனை காதலனா – கணவனா நினைச்சு, எத்தனையோ இரவுகளை கற்பனையில் கொண்டாடி இருக்கேன். ஆனாலும், அவன் திடீர்னு கேட்ட கேள்விக்கு என்னால உடனடியா பதில் சொல்ல முடியல. அவனோட கேள்விக்கு என் மவுனம்தான் பதிலா இருந்துச்சு. “மவுனம் சம்மதம்தானே”ன்னு அவன் கேட்டப்போ… எப்படியோ எனக்குள்ள தைரியம் வந்திடுச்சு. “அப்படியும் எடுத்துக்கலாம்”னு என்னோட சம்மதத்தை சுற்றி வளைச்சுச் சொன்னேன்.

… ஆனந்த், தன்னோட காதல என்கிட்ட வெளிப்படுத்தினது அந்த கடவுளுக்கே பிடிக்கல போல. அடுத்த மாதமே ஒரு மாப்பிள்ளை வீட்ல என்னை பெண் பார்க்க வந்தாங்க. அந்த மாப்பிள்ளைதான், என்னைத் தொட்டு தாலிக்கட்டுன குணசீலன். “என் பையன் நிறைய படிச்சு இருக்கான். சென்னையில சாப்ட்வேர் கம்பெனியில வேலை பாக்குறான். மாசம் 75 ஆயிரம் சம்பளம். அதனால, குடும்பத்துக்கு அடக்கமான பொண்ணா… குறிப்பா, கிராமத்து பொண்ணா தேடிட்டு இருக்கோம்.

உங்கப் பொண்ணு, ரொம்பவும் நல்லப் பொண்ணுன்னு கேள்விப்பட்டுதான் வந்தோம். எங்களுக்கு நகை முக்கியம் இல்லை. பெண்தான் முக்கியம். உங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு நகை போட்டாலே போதும். கல்யாணத்துக்கு அப்புறம் நாங்க 50 பவுனோ, 100 பவுனோ வாங்கிக் குடுத்துடுறோம்…” என்று அவர்கள் தரப்பில் சொல்ல, பணத்துக்கு ஆசைப்பட்ட எங்கள் அம்மா குணசீலனுக்கு என்ன கல்யாணம் பண்ணிக்கொடுக்க சம்மதிச்சிட்டாங்க…”

“ஆனந்த்கிட்ட இதுபற்றி பேசி உடனடியா கல்யாண ஏற்பாடுகளை நிறுத்தி இருக்கலாமே..!” – இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்தான் கேட்டார்.

“நானும் அப்படித்தான் செஞ்சேன். ஆனந்த்கிட்ட அதுபற்றி சொல்லி கதறி அழுதேன். எங்க அம்மா கிட்டேயும் சொன்னேன். ஆனந்தையே கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னேன். “பேப்பர் கம்பெனியில 7 ஆயிரத்துக்கு வேலை பார்க்கற அவன் எங்கே! வீடு தேடிவந்து பெண் கேட்டுட்டுப் போன குணசீலன் வாங்குற 75 ஆயிரம் சம்பளம் எங்கே”ன்னு கேள்வி கேட்டு, எங்கள் காதலுக்கு அர்த்தமே இல்லாம பண்ணிட்டாங்க. எங்க அம்மாவின் பிடிவாதமான போக்குல, எங்களோட இந்த கல்யாணத்துக்கு எதிரான முயற்சிகள் எல்லாமே தோத்துப் போச்சு.

“நீ மட்டும் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்கலன்னா நான் தற்கொலை பண்ணிப்பேன். உனக்கு பின்னாடி வயசுக்கு வந்த 3 தங்கச்சிகளும் தற்கொலை பண்ணிப்பாங்க. நீ மட்டும் எவன் கூடவோ சந்தோஷமா வாழு”ன்னு சொல்லி, அம்மா தற்கொலைக்கு முயற்சி பண்ணினப்போ… என்னால காதலை பற்றி நினைச்சிக் கூட பார்க்க முடியல. வேண்டாம் வெறுப்பா குணசீலனை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிட்டேன். பாவம், அந்த ஆனந்த்தான்! என்னையே நினைச்சி உருகிப் போயிட்டான்.”

“ஸாரி மிஸஸ் அமுதா! உங்கள் வாழ்க்கையில இப்படியெல்லாம் நடந்திருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆனாலும், உங்ககிட்ட விசாரணை பண்ணுறது என்னோட கடமை. உண்மையைச் சொல்லுங்க… குணசீலனை நீங்கதானே கொன்னீங்க?”

இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் கேட்ட இந்தக் கேள்வி அமுதாவிடம் எந்தவிதமான அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை.

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top