Home » அதிசயம் ஆனால் உண்மை » நாவல்கள் » இரண்டாம் தேனிலவு – 4
இரண்டாம் தேனிலவு – 4

இரண்டாம் தேனிலவு – 4

பகல் முழுக்க வானில் நடந்து நடந்து களைத்துப் போன சூரியன், தூக்கம் கொள்ளத் தயாராகிக் கொண்டிருந்தான். அதற்கு முன்னதாக அவன் மஞ்சள் தேய்த்துக் குளித்தானோ என்னவோ, அவன் அன்று கடைசியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மேற்கு வானத்தில் மஞ்சள் நிற மேகங்களின் சிதறல்கள் அழகான இயற்கை ஓவியத்தை வரைந்து விட்டிருந்தது.இப்படி, இயற்கை வீட்டிற்கு வெளியே வர்ணஜாலங்களை நிகழ்த்திக் கொண்டிருக்க… வீட்டிற்கு முன்பு வந்து நின்ற டாடா இன்டிகா காரின் ஹாரன் சப்தம் கேட்டு வேகமாக வந்தாள் பாக்கியம். அவளது மருமகன் குணசீலன்தான் காரிலிருந்து இறங்கி வந்தான்.

“மாப்ள… நீங்க மட்டும்தான் வந்தீங்களா? வேறு யாரும் வரலீயா?” & ஆர்வமாக விசாரித்தாள் மாமியார் பாக்கியம்.

“இல்ல அத்த. அமுதாவுக்கு என்னன்னு தெரியல. எங்க வீட்டோட இன்னும் ஒட்ட மாட்டேங்குறா. அதனாலதான் நான் மட்டும் வந்தேன்.”

“அய்யய்யோ… நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல மாப்ள. கல்யாணம் ஆன புதுசுல்ல, அதான் காரணம். வேறு எதுவும் இல்லை” என்று கூறி, மருமகன் தனது மகள் மீது அடுத்தக் குற்றச்சாட்டை கூற விடாமல் அவனது வாயை அடைத்தாள்.

வீட்டிற்குள் நுழைந்த குணசீலன், தனது புது மனைவி எங்கே என்று தேடினான். அட்டாச்டு பாத்ரூமில் இருந்து வெளிப்பட்ட அமுதா அவனது பார்வையில் தெரிந்தாள்.

அம்மா மட்டும்தான் வீட்டில் இருக்கிறாள் என்கிற தைரியத்தில் பாவாடையால் மட்டுமே மார்பு வரை மறைத்திருந்தாள். தலைமுடி தண்ணீரில் நனையாமல் இருக்க, அதை அழகாய் முடிந்து கொண்டை போட்டிருந்தாள். அவள் குளியலுக்குப் பயன்படுத்திய சீயக்காய் பவுடரின் வாசனை அவளுக்கு முன்பாக குணசீலனின் மூக்கை முத்தமிட்டு அவனை புது உற்சாகம் கொள்ளச் செய்தது.

புதுமனைவியை ஒரு மாதிரியாக பார்த்தவன் சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்தான். தான் அரைகுறை ஆடையோடு இருப்பதை உணர்ந்த அமுதா வேகமாக பெட்ரூமிற்குள் பாய்ந்தாள். அதேவேகத்தில் கதவையும் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள்.

“அமுதா… கதவ திற…”

கதவைத் தட்டிக் கொண்டே குரல் கொடுத்தான் குணசீலன். ஆனால், அமுதாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

மறுபடியும் குணசீலன் கதவைத் தட்ட… அவனைப் பார்த்து விட்டாள் பாக்கியம். டம்ளரில் சூடாக இருந்த பசும்பாலை ஆற்றிக் கொண்டே வந்தவள், குணசீலனைப் பார்த்ததும் அவனுக்கு சில அடி தூரம் தள்ளியே நின்று விட்டாள்.

“மாப்ள… அங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”

மாமியார் குரல் கேட்டதும் சட்டென்று திரும்பினான் குணசீலன்.

“ஒண்ணும் இல்ல அத்த… இப்பதான் அமுதா குளிச்சிட்டு வெளியே வந்தா. அவகிட்ட பேசலாம்னு முயற்சி பண்ணினா, அவ கதவை பூட்டிக்கிட்டா. அதான் கதவை தட்டிட்டு நிக்கிறேன்.”

குணசீலனின் பதிலில் அவன் லேசாக வழிந்ததும் பாக்கியத்திற்கு தெரியாமல் இல்லை. அவளும் திருமணம் ஆகிப் பிள்ளைகள் பெற்று, அவர்களுக்குத் திருமணமும் செய்து கொடுத்தவள்தானே? திருமணம் ஆகி ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் முதலிரவைக் காணாத தனது மாப்பிள்ளையின் ஏக்கத்தை அவள் புரிந்து கொண்டாள்.

“முதல்ல இங்கே வந்து உட்காருங்க. இந்தப் பாலை குடிச்சுட்டு வெயிட் பண்ணுங்க. அவளே கொஞ்ச நேரத்துல வந்திடுவா…” என்றவள், நேராக அமுதா தாழ்ப்பாள் போட்டிருந்த கதவை தட்டினாள்.

“அம்மாடி… மாப்ளதான் வந்திருக்காரு. டிரெஸ் பண்ணி முடிச்சதும் அவரு கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு இரு. நான் பூக்காரம்மா வீட்டு வரைக்கும் போயிட்டு கொஞ்ச நேரத்துல வந்திடுறேன்.”

அமுதாவின் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து அகன்றாள் பாக்கியம்.

குணசீலனுக்கு நேரம் போகவில்லை. விவசாயமே கதியென்று கிடக்கும் மாமனார் தங்கதுரை வீடு திரும்ப தினமும் இரவு 7 மணி தாண்டிவிடும் என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததால், மீதமிருக்கும் கொழுந்தியாளிடமாவது பேசலாமே என்று வாணியை தேடினான். அவளும் வீட்டில் இல்லை. அமுதா தாழ்ப்பாளிட்ட கதவையே சிறிது நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த கதவு இப்போதைக்கு திறப்பதற்கான அறிகுறியே தென்படாததால், தான் கையோடு கொண்டு வந்திருந்த லேப்டாப்பைக் கையில் எடுத்து ஆன் செய்தான். ரிலையன்ஸ் டேட்டா கார்டையும் லேப்டாப்போடு இணைத்தவன், கூகுள் வழியாக தனது ஜி மெயிலுக்குள் நுழைந்து, தனக்கு வந்திருந்த திறக்கப்படாத மெயில்களை திறந்து படிக்க ஆரம்பித்தான்.

ஷைலஜா என்ற பெயரில் வந்திருந்த மெயிலை அவன் திறந்த போது, அதில் இன்னும் ஆர்வமாக மூழ்கினான். ஹாய் ஷாம்… என்று ஆரம்பித்த அந்த மெயில் கடிதத்தை கீ போர்டால் எழுதிய ஷைலஜா, தனது பெர்சனல் போட்டோக்கள் சிலவற்றை இணைத்திருந்தாள். அவற்றில் ஜீன்ஸ், டி-சர்ட் மற்றும் மெல்லிய சேலையில் அழகாக பளிச்சிட்டுக் கொண்டிருந்தாள் ஷைலஜா.

ஒவ்வொரு படத்தையும் பெரிதாக்கிப் பார்த்து ஜொள் விட்டவன், கடைசியாக சில வரிகளில் எழுதப்பட்டு இருந்ததைப் படித்து லேசாக அதிர்ந்தான்.

‘ஷாம்… நானும் எத்தனை நாளைக்குத்தான் பேச்சுலராகவே இருப்பது. நானும் உன்னைப் போன்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து விட்டேன். வீட்டில் ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்கள். மாப்பிள்ளை வீட்டில், எனது போட்டோவைக் கேட்டிருக்கிறார்கள். என்னை அழகாக புகழ்ந்தவர்களில் நீதான் டாப். அதனால்தான் இந்தப் போட்டோக்களை உனக்கு அனுப்பி இருக்கிறேன். உனக்குப் பிடித்த போட்டோவை செலெக்ட் செய்து அனுப்பு. அதையே நான் மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி விடுகிறேன். உனக்கு பெர்சனலாக ஒன்றை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். உன்னுடன் நான் எத்தனையோ முறை படுக்கையை பகிர்ந்து இருக்கிறேன்.

அதுதான் சொர்க்கம் என்றும் நினைத்திருக்கிறேன். இதையெல்லாம் தாண்டி ஒரு பந்தம் இருக்கிறது. அதுதான் திருமணம். நீ உன் விருப்பப்படி கிராமத்துப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு விட்டாய். நானும் உன் வழியிலேயே படித்த கிராமத்துப் பையனைத்தான் எதிர்பார்க்கிறேன். எனக்கும் உன்னைப் போன்று கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒரு பையனே கணவனாக கிடைக்க வேண்டும் என்று உன் இஷ்ட தெய்வத்திடம் எனக்காக வேண்டிக்கொள். நானும் உன் நல்வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்கிறேன். இப்படிக்கு, அன்புடன் ஷைலஜா.’மெயில் கடிதத்தைப் படித்தவன், டி சர்ட்டில் ஒய்யாரமாக போஸ் கொடுத்துக் கொண்டிருந்த ஷைலஜா உருவப்படத்தின் மீது விரல்களால் வீணை மீட்டிக் கொண்டிருந்தான். கடைசியாக அவன் தனது ஆள்காட்டி விரலால் தொட்ட இடம் அவனையே வெட்கம் கொள்ளச் செய்தது. அக்கணமே ஷோபாவில் தலை சாய்த்து ஓரிரு நொடிகள்தான் கண்களை மூடி இன்ப வெள்ளத்தில் மூழ்கியிருப்பான். அடுத்த நொடியே கண்களைத் திறந்தான். எதிரே அமுதா நின்று கொண்டிருந்தாள்.

“ஆமா… இதுல என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”

அமுதா கேட்ட கேள்விக்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல் திணறியவன், “தப்பா நினைக்காத அமுதா. அது, எனக்கு வந்த மெயில் இல்ல. வேறு யாருக்கோ போக வேண்டியது எனக்கு வந்து விட்டது. அது யாருக்கு வந்திருக்கும்னு யோசிச்சிட்டு இருந்தேன். அதுக்குள்ள நீ வந்துட்ட…” என்றான்.

“நீங்க என்ன சொல்றீங்க? ஏதோ டி.வி. மாதிரி கையிலே வெச்சு இருக்கீங்களே… அது என்னன்னு தெரிஞ்சுக்கலாமேன்னுதான் கேட்டேன்.”

அமுதாவின் பேச்சில் வேகம் இல்லாததால், லேப்டாப்பில் தான் செய்து கொண்டிருந்ததை அவள் பார்க்கவில்லை என்று அவசரமாக கணித்துக் கொண்டான் குணசீலன். அதேநேரம், அவள் லேப்டாப்பை டி.வி. என்று தவறாக சொன்ன வார்த்தையை சரியாக பிடித்துக் கொண்டான்.

“ஆமா… இது என்னன்னு சொன்ன?”

தான், கையில் வைத்திருந்த லேப்டாப்பை அமுதாவிடம் காண்பித்துக் கேட்டான் குணசீலன்.

“இது சின்ன டி.வி. பாக்ஸ் தானே?”

மடி கணினிதான் லேப்டாப் என்பதுகூட தெரியாமலேயே வாழ்ந்திருக்கிறாள் அமுதா.

“இது டி.வி. பாக்ஸ் இல்ல அமுதா. இதுவும் ஒரு கம்ப்யூட்டர்தான். இதோட பெயர் லேப்டாப். இத எங்கே வேண்டுமானாலும் நாம எடுத்துட்டுப் போகலாம்.”

“இங்கே எதுக்காக இத எடுத்துட்டு வந்தீங்க?”

“என்ன அமுதா இப்படியொரு கேள்வி கேட்டுட்ட? என்னோட டியூட்டியில இது இல்லாம எதுவும் முடியாது.”

“அப்படியா?”

இதற்கு மேல் அமுதாவால் அதுபற்றி விளக்கம் கூட கேட்க முடியவில்லை.

வீடே கதியென்று கிடந்து விட்டதால் உலக அளவில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியைக் கூட அவளால் அளவிட முடியவில்லை. அதேநேரம், ‘எனக்கு ஒரு லேப்டாப் வேண்டும்; அதை வாங்கப் பணம் கொடுங்கள்…’ என்று சில மாதங்களுக்கு முன்பு தனது தங்கை வாணி அடம் பிடித்தது இப்போது அமுதாவுக்கு நினைவுக்கு வந்து போனது.

‘அப்படியென்றால், அவளும் பெரிய படிப்புதான் படிக்கிறாள். படிப்பு முடிந்ததும் பட்டணத்திற்குப் போய் நிறைய சம்பாதிப்பாள்’ என்று மனதிற்குள் தனக்கு தானே சந்தோஷப்பட்டுக் கொண்டாள்.

“அமுதா… என்ன யோசிச்சுட்டு இருக்க? லேப்டாப்னா என்னன்னு தெரியாம வளர்ந்துட்டோமேன்னு வருத்தமா இருக்கா? அது பெரிய விஷயமே கிடையாது. நானே உனக்கு எல்லாத்தையும் கத்துக் கொடுக்கிறேன்” என்ற குணசீலன், அவளை அவசரமாக அமைதிப்படுத்தினான்.

‘இங்கே என்ன நடக்குது? மருமகன் வேற கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் வீட்டுக்கு வந்தாரு. அமுதாவும் வீட்டுலதான் இருக்கா. வேற ஏன் வீட்டுக்கு வெளியே லைட் போடாம இருக்குறா?’

தனக்குத்தானே சொல்லிக் கொண்டே, வெளியே சென்ற பாக்கியம் வீட்டிற்குள் நுழைந்தாள். அவள் கொண்டு வந்த கூடை நிறைய மல்லிகைப்பூ இருந்தது. அவள் வீட்டிற்குள் நுழையும் முன்பே, மல்லிகையின் வாசனை வந்துவிட்டது.

வீட்டிற்குள் மகளையும், மருமகனையும் பார்த்தவள், “ஓ… நீங்க இங்கேதான் இருக்குறீங்களா? மொட்ட மாடிக்கு போயிட்டீங்களோன்னு பார்த்தேன்” என்று சொன்னபடியே, தான் கொண்டு வந்த மல்லிகைப்பூக்கள் நிரம்பியிருந்த கூடையை அமுதாவிடம் கொடுத்தாள்.

“இதெல்லாம் மல்லிகைப்பூதான். உங்களுக்காகத்தான் வாங்கிட்டு வந்தேன். பெட்ரூமில் கொண்டுபோய் வை…” மகளின் முகத்தைக் கூட பார்க்காமல் சொல்லிவிட்டு அகன்றாள்.

மாமியார் எதற்காக அவசரமாக மல்லிகைப்பூ வாங்கி வந்திருக்கிறார் என்பது குணசீலனுக்கு புரிந்துவிட்டது. திருமணமாகி ஒரு வாரம் மேலாகியும் இன்னுமே நடக்காத முதலிரவுக்கான ஏற்பாடுதான் அது என்பதை அறிந்து குஷியானான்.

அமுதாவுக்கும் புரிந்து விட்டது. அதுவரை, லேப்டாப் கூட தெரியாமல் வளர்ந்துவிட்ட தனது அறியாமையை எண்ணி வருந்தியவள், சட்டென்று கோபமானாள்.

மல்லிகைப்பூ கூடையோடு பெட்ரூமிற்குள் நுழைந்தவள், அதை வேகமாக வீசியெறிந்தாள்.

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top