Home » அதிசயம் ஆனால் உண்மை » நாவல்கள் » இரண்டாம் தேனிலவு – 39
இரண்டாம் தேனிலவு – 39

இரண்டாம் தேனிலவு – 39

பக்கத்தில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் இறுக்கமான முகத்தோடு அமர்ந்திருக்க, எதிரே லேப்-டாப்பில் ஓடிக் கொண்டிருந்த காட்சிகளைப் பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் ஆனந்த். போலீஸ் நிலையத்தில் மட்டுமல்ல, எதிரே ஓடிக் கொண்டிருந்த வீடியோவிலும் பதற்றத்துடன்தான் அமுதாவின் அறைக்குள் பதுங்கி பதுங்கி வந்தான் ஆனந்த். அறையில் யாரையோ தேடியவன், தான் கொண்டு வந்த சிறிய பாட்டிலின் மூடியை வேகமாகத் திறந்தான். அங்கிருந்த மேஜை மீது வைக்கப்பட்டு இருந்த பெப்ஸி பாட்டிலில் அதை கலந்துவிட்டு அதே வேகத்தில் வெளியேறினான்.மேற்கொண்டு வீடியோ நகர்வதை தற்காலிகமாக நிறுத்திய இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், ஆனந்திடம் விசாரணையை ஆரம்பித்தார்.

“ஆனந்த்… நடந்தது எல்லாமே வீடியோவில் பதிவாகிவிட்டது. நீங்க பொய் சொல்றதுல எந்த பிரயோஜனமும் இல்லை. அதனால, உண்மையை மட்டுமே சொல்லுங்க. நீங்க செஞ்சது தப்பு இல்லன்னா, உங்களுக்கு எந்தத் தண்டனையும் கிடைக்காது. உண்மையிலேயே நீங்க செஞ்சது தப்புதான்னா தண்டனை நிச்சயம். அதுவும் கொலை வழக்குங்கறதுனால 10, 20 வருஷம் ஜெயில்லதான் இருக்க வேண்டியது இருக்கும்.”

இன்ஸ்பெக்டர் இப்படிச் சொன்னதும் குப்பென்று ஆனந்த்துக்கு வியர்த்துக் கொட்டியது. முகத்திலும் நிறைய வியர்வைத் துளிகள். அதை கர்ச்சிப்பால் அகற்றிவிட்டு சொன்னான்.

“உண்மையை சொல்லிடுறேன் இன்ஸ்பெக்டர். நான் செஞ்சது தப்பான காரியம்தான். நான் உயிருக்கு உயிரா காதலிச்ச அமுதா வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாதுங்கறதுனாலதான் இப்படியொரு காரியத்தை செய்யத் துணிஞ்சேன். பெப்ஸி பாட்டல்ல நான் கலந்தது விசம்தான். குணசீலனை கொல்றதுக்காகத்தான் அப்படியொரு காரியத்தை செஞ்சேன்.”

“குணசீலனை மட்டும்தானா? இல்ல… அமுதாவையும் சேர்த்துதானா?”

“அய்யோ…. அப்படியெல்லாம் சொல்லாதீங்க இன்ஸ்பெக்டர். அமுதா கூட 100 வருஷம் வாழணும்னு ஆசைப்பட்டவன் நான். அவளைப் போய் நான் எப்படிக் கொல்வேன்?”

“நீங்க பெப்ஸி பாட்டல்ல விசம் கலந்தது அமுதாவுக்கு தெரியாது, அப்படித்தானே?”

“ஆமாம்”

“ஒருவேளை… நீங்க விசம் கலந்த பெப்ஸியை குணசீலனுக்குப் பதிலா அமுதா குடிச்சா அவங்களும் செத்துப் போய் இருப்பாங்களே..!”

“அதை அவ நிச்சயம் குடிக்க மாட்டா..!”

“அமுதா அதை குடிக்க மாட்டான்னா, நீங்க அதுல விஷம் கலந்து இருக்கீங்கங்கறது அவங்களுக்கு தெரியுமா என்ன?”

“நீங்களா எதையும் தப்புத் தப்பா கற்பனை பண்ணிக்காதீங்க இன்ஸ்பெக்டர். என்னோட அமுதா பற்றி எனக்கு நிறையவே தெரியும். கோக், பெப்ஸி எதையும் அவளும் குடிக்க மாட்டா; நானும் குடிக்க மாட்டேன். அந்த நல்லப் பழக்கத்துக்கு அவளை மாற்றினதே நான்தான்!”

“வெரிகுட் மிஸ்டர் ஆனந்த். நீங்க உணர்ச்சிக்கரமா பேசுறதப் பார்த்தா… நிச்சயம் பொய் சொல்லி இருக்க மாட்டீங்கன்னு நம்புறேன். அதே நேரத்துல, இன்னொன்னையும் நான் சொல்லியே ஆகணும். நீங்க பெப்ஸியில கலந்த விஷம் வேலை செய்யவே இல்லீயே..!”

“அது எப்படி உங்களுக்குத் தெரியும்?”

“என்ன ஆனந்த்… அப்பாவி மாதிரி கேட்குறீங்க..! உங்களுக்கு முன்னாடி 10, 15 தடவை இந்த வீடியோவை நான் பார்த்து, அலசி ஆராய்ந்திட்டேன். எங்களோட முதல் விசாரணையை நீங்க இதுல என்ன கலந்தீங்கங்கறதைத்தான். நாங்க, நீங்க விசம் ஊத்தினதா சொன்ன பெப்ஸியை பரிசோதிச்சு பார்த்ததுல, அப்படி எதுவுமே கலக்கலன்னு சொல்றாங்க. இந்த விசாரணையில நாங்க கண்டுபிடிச்சது, நீங்க கலந்தீங்கங்கறது உண்மைதான். ஆனா, நீங்க விசம் கலந்தேன்னு சொல்றதுதான் பொய். உண்மையை ஓப்பனா சொல்லணும்னா, விசத்துக்குப் பதிலா தேனை கலந்து இருக்கீங்க. இதுவும், இங்கே ஊட்டியில கிடைக்கற மலைத் தேனை! இந்த செய்தியைக் கேட்டு நான் மலைத்தேன்ங்கறதுதான் உண்மை!”

“இன்ஸ்பெக்டர்… நான் சொல்றது எல்லாமே உண்மைதான். பொய் சொல்லி தப்பிக்க நான் விரும்பல. நடந்ததை எல்லாம் சொல்லிடுறேன். சட்டம் தருகிற தண்டனையையும் ஏற்றுக் கொள்ளத் தயாரா இருக்கேன். அதுக்காக, நான் தேன் கலந்தேன்னு பொய்யெல்லாம் சொல்லாதீங்க.”

“பொய் சொல்லல மிஸ்டர் ஆனந்த். பெப்ஸியில விசத்தைக் கலந்துட்டு வெளியேறின நீங்க, அந்தக் குட்டியூண்டு பாட்டிலை என்ன பண்ணுனீங்க? அறைக்கு வெளியே வைக்கப்பட்டு இருந்த குப்பைத் தொட்டியிலதானே போட்டுட்டுப் போனீங்க?”

“ஆமா..!”

“அந்தப் பாட்டல்ல இருந்ததும் அதே மலைத்தேன்தான்! ஆக, குணசீலன் இன்னும் ஆரோக்கியமா இருக்கணும்னுதான் பெப்ஸியில தேனை கலந்துட்டு போய் இருக்கீங்க. அதுவும், அவருக்குத் தெரியாமல்! இந்தப் பாட்டில் விசாரணையில எங்களுக்குக் கிடைச்ச முடிவு இதுதான்.”

இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் இப்படிச் சொல்லவும், அவசரமாக எதையோ யோசித்தான் ஆனந்த்.

“நாம கொண்டு வந்தது உண்மையான விசம்தான். வேறு எப்படி பாட்டில் மாறிப் போனது? ஒருவேளை, இதற்குக் காரணம் ஷ்ரவ்யாவா இருக்குமோ?”

 

 தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top