பயணிகளின் கனிவான கவனத்துக்கு, விழுப்புரம், திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் வழியாக தூத்துக்குடி வரை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் நான்காவது பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும்..! என்கிற, கம்ப்யூட்டர் ரெக்கார்டர் வாய்ஸ் எக்மோர் ரயில் நிலையத்தில் இருந்து கசிந்து வந்து கொண்டிருந்தது. முத்துநகர் எக்ஸ்பிரஸை பிடிக்கவும், அதற்கு அடுத்ததாக புறப்பட தயார் நிலையில் இருந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கவும் ஏராளமான பயணிகள் ஓட்டமும் நடையுமாக ரயில் நிலையத்தின் முன்புற வாயிலில் பரபரத்துக் கொண்டிருந்தனர்.
இத்தனை பரபரப்புகளுக்கு மத்தியில், எக்மோர் ரயில் நிலையத்தின் முன்பாக அமைந்திருந்த ஆனந்தபவன் உணவகத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் நிசப்தமான அறையில் மங்கிய மஞ்சள் வெளிச்சத்தில் மவுனமாக இருந்தனர் சாந்தியும் ஆனந்தும்!
“சாந்தி! நான் சொன்ன நேரத்துக்கு கரெக்டா வந்துட்டீங்க. நிறைய விஷயங்கள் உங்ககிட்ட பேச வேண்டியது இருக்கு. போன்ல டீட்டெயிலா பேச முடியாதுங்கறதுனாலத்தான் உங்களை இங்கே வரச் சொன்னேன்.”
ஆனந்தின் பேச்சு நீண்டாலும் சாந்தியிடம் மவுனமே நீடித்தது.
“ஆமா சாந்தி, வந்தவுடனேயே உங்ககிட்ட கேட்கணும்னு நினைச்சேன். ஏன் நீங்க பர்தா போட்டு இருக்கீங்க? ஒருவேளை நீங்க முஸ்லிமா?”
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. திடீர்னு நிறையபேர் வந்து போகுற இடத்துக்கு வரச் சொல்லிட்டீங்க. ஏற்கெனவே எனக்கு அறிமுகம் ஆனவங்க இங்கே வரலாம். அவங்க, உங்க முன்னாடியே என்கிட்ட வேறுவிதமாக பேசுவாங்க. தேவைப்பட்டா, அடுத்த என்கூட வர்றியான்னுகூட கேட்பாங்க. அப்படியொரு சூழ்நிலை எனக்கு பழக்கப்பட்டு இருக்கலாம். ஆனா, உங்களுக்கு இதுதான் புதுசுன்னு நினைக்கிறேன். உங்களோட பழக்க வழக்கத்தைப் பார்க்கும்போதே அது தெரியுது.”
“நீங்க சொல்றத புரிஞ்சிகிட்டேன் சாந்தி. நீங்க அழகான பொண்ணு மட்டுமல்ல, புத்திசலித்தனமாவும் நடந்துக்கறீங்க! என்கிட்ட நிறையபேர் சொன்ன டயலாக்தான் இதுன்னாலும், இப்பத்தான் உண்மையிலேயே அதை நான் ரசிக்கிறேன். தேங்ஸ் சாந்தி. என்னோட தவிர்க்க முடியாத சூழ்நிலையிலதான் இப்படியொரு முடிவை நான் எடுக்க வேண்டி இருக்கு. என்னோட பெர்சனல் லைஃப்ல நான் எதிர்பார்க்காத சில விஷயங்கள் நடந்துட்டு இருக்குது.
இப்படிச் சொன்ன சாந்தியின் வார்த்தைகளில் பரிதாபம் தெரித்தாலும், உதட்டோரம் விஷமமான புன்னகையும் வந்துபோனது.
“… இப்படித்தான் ஆனந்துக்கும் எனக்கும் இடையே பழக்கம் வந்தது. நான் விபச்சாரம் செய்யக்கூடிய பெண்ணுன்னு நினைச்சுதான் அவர் என்னை ஊட்டிக்கு அழைச்சுட்டு வந்தார். ஆனா, நான் அவர்கூட வர்றதுக்கு வேறு ஒரு காரணம் இருந்தது. குணசீலனை பழிக்கு பழி வாங்கணும்ங்கறதுதான் அது!”
இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் முன்பு உண்மையை போட்டு உடைத்தாள் ஷ்ரவ்யா.
“மிஸ் ஷ்ரவ்யா. நீங்க கால் கேர்ள் இல்லங்கறதை நாங்க ஒத்துக்கறோம். வேற எப்படி நீங்க சாந்தியா வந்து ஷ்ரவ்யாவா மாறினீங்க? அது, ஆனந்துக்கு தெரியுமா?
“தெரியும். சாந்திங்கறது என்னோட இயற்பெயர். மார்டனா நான் வெச்சுக்கிட்ட பெயர் ஷ்ரவ்யான்னு சொன்னதை அவர் நம்பிட்டாரு.”
“ஷ்ரவ்யா… நீங்க சாந்திங்கற பேருல ஆனந்த்கூட ஊட்டிக்கு வந்து இருக்கீங்க. ஆனா, உண்மையிலேயே சாந்திங்கற பேருல உள்ள விபச்சாரம் செய்யக்கூடிய பெண்தான் அனுப்பப்பட்டு இருக்கிறாள். ஆனா, நீங்க இடையில எப்படியோ புகுந்து இருக்கீங்க? இப்போ, குணசீலனோட கொலை வழக்கோட, காணாமல் போன சாந்தி பற்றியும் விசாரிக்க வேண்டியது இருக்கு. அந்தப் பெண்ணுக்கு ஏதாவது ஆகியிருந்தா, அதுக்கு நீங்கதான் பொறுப்பு ஏற்கணும். அதனால், உண்மையை மறைக்காம சொல்லுங்க. அந்த சாந்தி இப்போ எங்கே இருக்கா?”
மிரட்டல் தொணியில் இன்ஸ்பெக்டர் கேட்ட கேள்விக்கு உண்மையை சொல்லிவிட தீர்மானித்தாள் ஷ்ரவ்யா.