“ஸாரி… இன்ஸ்பெக்டர். இந்த இடத்துலதான் நீங்க மட்டுமல்ல; இந்த ஒட்டுமொத்த சமூகமே தப்பு பண்ணுது. ஒரு பொண்ணு ஓர் ஆணால் ஏமாற்றப்பட்டு இருக்கா. அதுவும், அவளை அவளுக்குத் தெரியாமலேயே பாலியல் பலாத்காரம் செஞ்சுட்டு, அதை வீடியோவும் எடுத்து இன்டர்நெட்ல பரவவிட்டு இருக்கான். அவனைத் தண்டிக்காம, அந்தப் பொண்ணு ஒதுங்கி இருக்கலாம்னு சொல்றீங்களே…”
“ஸாரி ஷ்ரவ்யா… நான் சொல்றத நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்கன்னு நினைக்கறேன். லேகா தப்பு பண்ணினாங்கன்னு நான் சொல்லற வரல. அவங்க எடுத்த முடிவுதான் தப்புன்னு சொல்ல வர்றேன்.”
“லேகா எடுத்த முடிவு தப்புண்ணு நீங்க சொல்றீங்க. அவளை அப்படியொரு முடிவு எடுக்க தூண்டியதே இதே போலீஸ்தானே?”
“என்ன சொல்றீங்க ஷ்ரவ்யா?” -இலேசான அதிர்ச்சியை முகத்தில் காட்டிக் கொண்டார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்.
“ஆமாம் இன்ஸ்பெக்டர். குணசீலன் பெரிய இடத்து பையன். ஐ.டி. கம்பெனியில மாதம் ரெண்டு லட்சம் ரூபாய் சம்பாதிக்கறான். அரசியல் பலமும் ஆள் பலமும் இருக்கு. இந்த பலங்களுக்கு முன்னாடி என்னோட லேகா வெறும் தூசுதான். அதனாலத்தான், அத்தனை பலங்களுக்கு முன்னால போராட முடியாம அப்படியொரு முடிவை எடுத்துட்டா.”
“ஷ்ரவ்யா… உங்களோட ஆதங்கம் எனக்கு புரியுது. லேகா விஷயத்துல காவல்துறை கண்டுக்கவில்லைன்னு சொல்றீங்களா?”
“ஆமா! காதல்ங்கற பேர்ல தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மோசம் போனது பற்றி போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெய்ன்ட் கொடுக்கப் போனா. தப்பு பண்ணினவன் பெரிய இடத்து பையன்னதும், அவன் வீட்டுக்கு போன்ல தகவல் சொல்லிட்டு, நீதானே அந்த பையன்கூட விருப்பப்பட்டு படுத்தியாம். வீடியோ எடுத்தது கூட உன் சம்மதத்தோடதான் நடந்ததாமே என்று விசாரணை பண்ணின போலீஸ் அதிகாரி கேட்க… பாவம் என் லேகா! இந்தக் கேஸை நீங்க பதிவு பண்ணவே வேண்டாம்னு சொல்லிட்டு, ஹாஸ்டலுக்கு வந்து உயிர விட்டுட்டா. அவளோட சாவுல கூட அவளுக்கு நியாயம் கிடைக்கல. வயிற்றுவலி தாங்க முடியாமல் கல்லூரி மாணவி தற்கொலைன்னு, நடந்த விபரீதத்தை அப்படியே மறைத்து விட்டார்கள். நடந்த உண்மை எனக்கு மட்டும்தான் தெரியும். தற்கொலை பண்ணிக்கறதுக்கு முன்னாடி அவ எனக்கு போன் பண்ணலன்னா, பல விஷயங்கள் எனக்கும் தெரியாம போயிருக்கும்…” என்று சொல்லிவிட்டு நீண்ட அழுகையை வெளிப்படுத்தினாள் ஷ்ரவ்யா.
சிறிது நேரம் அங்கே நிலவிய மவுனத்துக்குப் பிறகு இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் பேசினார்.
“ஷ்ரவ்யா… உங்க தோழிக்கு நேர்ந்த கொடுமைகளுக்காக நான் வருந்துகிறேன். காபி வாங்கிட்டு வரச் சொல்றேன். அதை சாப்பிட்டு நீங்க ரிலாக்ஸ் ஆனபிறகு நான் பேசுறேன்…” என்ற இன்ஸ்பெக்டர் அங்கிருந்து அகன்றார்.
15 நிமிடங்களுக்குப் பிறகு, காபி குடித்துவிட்டு, சற்று சோகம் கலைந்திருந்த ஷ்ரவ்யாவிடம் மறுபடியும் விசாரணையை ஆரம்பித்தார் இன்ஸ்பெக்டர்.
“ஷ்ரவ்யா… இன்னிக்குள்ள விசாரணையை முடிச்சிடணும்னு நினைக்கறேன். நான் கேட்கற கேள்விக்கு சரியா பதில் சொல்வீங்கன்னு எதிர்பார்க்கறேன்…”
இன்ஸ்பெக்டர் சொல்ல, சரி என்பது போல் தலையாட்டினாள் ஷ்ரவ்யா.
“லேகா உயிர்விட்டதுக்குப் பலி வாங்கத்தான் குணசீலனை கொலை செய்ய ஊட்டி வந்தீங்களா?”
“ஆமா.”
“குணசீலன் ஊட்டிக்கு ஹனிமூன் கொண்டாட வந்தது உங்களுக்கு எப்படி தெரியும்? அதுவும், ஆனந்த்தோட அத்தை மகள்தான் அமுதாங்கறதும் எப்படி தெரியும்?”
“இதுக்கு நான் உங்களுக்கு பெரிய விளக்கமே சொல்ல வேண்டியது இருக்கும்…”
“தாராளமா சொல்லுங்க..!”
“லேகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பற்றி செய்தி வெளியிட்ட … பத்திரிகை நிருபர் ஆனந்த், இந்தத் தற்கொலையின் பின்னணியில் பண பலமும் படை பலமும் விளையாடி இருக்கலாம் என்கிற சந்தேகத்தை எழுப்பி இருந்தார். நடந்த உண்மைச் சம்பவம் எனக்கு மட்டும்தானே தெரியும்? இவருக்கு எப்படித் தெரியும் என்று நான் விசாரித்தபோது, அவர் நேரடியாகக் கல்லூரிக்கு வந்து விசாரித்துவிட்டு செய்தி வெளியிட்டது தெரிய வந்தது. அந்தச் செய்தி வெளியான மறுநாளே இந்த வழக்கு தொடர்பாக சிறப்புக் கட்டுரை ஒன்றையும் அவர் எழுதி இருந்தார்.
உண்மையை எழுதியதற்காக அதை எழுதிய ஆனந்த் குண்டர்களால் மிரட்டப்பட்டு இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையிலும், அவரிடம் மேற்கொண்டு பல உண்மைகளைச் சொல்லவும் அவரது பத்திரிகை ஆபீசுக்குப் போனேன். அவரது கேபினில் அவர் இல்லை. ஆபீஸ் பாய் சற்றுநேரம் காத்திருக்கச் சொன்னான். ஆனந்த் வருவதற்கு வெகுநேரம் ஆனதால் அந்த ஆபீஸ் பையனிடம் மெதுவாகப் பேச்சு கொடுத்தேன். நான் எந்தச் செய்தி விசயமாக வந்திருக்கிறேன் என்பதை சொன்னதும், அவன் எல்லா உண்மைகளையும் சொல்லிவிட்டான். அதாவது, போலீஸ் எப்.ஐ.ஆரில் பதிவு செய்ததற்கு மாறாக உண்மைச் செய்தியை வெளியிட்டதால் வெளியாட்களால் ஆனந்த் மிரட்டப்பட்டு இருந்த அதே நேரத்தில், அவரது பத்திரிகை ஆசிரியரும் கண்டித்து இருக்கிறார்.
அந்த நேரத்தில்தான் அவரது மேஜை மீது கிடந்த போட்டோவைக் கவனித்தேன். அதைப் பார்த்ததும் அதிர்ந்து போனேன். மாலை சகிதமாக குணசீலனும் அமுதாவும் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர், அந்தப் போட்டோவில்..! அந்தப் போட்டோவை நான் கையில் வைத்திருந்ததை பார்த்துவிட்ட ஆபீஸ் பையன், நான் எதிர்பார்க்காத அந்தத் தகவலையும் சொன்னான்.
“மேடம்… இந்தப் போட்டோவுல இருக்குற பொண்ணு பேரு அமுதாவாம். எங்க ஆனந்த் ஸாரோட அத்தைப் பெண்ணாம். அந்தப் பெண்ணும், இவரும் காதலித்து வந்திருக்கிறார்கள். இப்போது, வேறு யாருடனோ திருமணம் நிச்சயம் செய்திருக்கிறார்கள். இன்னும் இரண்டு நாளில் கல்யாணமாம்” என்கிற தகவலையும் சொன்னான்.
ரொம்ப நேரம் ஆகியும் ஆனந்த் அங்கே வராததால் ஆனந்தின் மொபைல் நம்பர் தர முடியுமா என்று ஆபீஸ் பையனிடம் கேட்டேன். அவன் தந்தான். ஆனந்தின் மொபைல் நம்பரை எனது மொபைலில் டயல் செய்வதற்காக மொபைலை எடுத்தபோது அது சார்ஜ் இல்லாமல் “ஆப்” ஆகி இருந்தது. அவரது டேபிளில் பேப்பர் ஏதேனும் இருக்கிறதா என்று தேடிய போது, நியூஸ் பிரிண்ட் நோட் பேடு இருந்தது. அந்த நோட் பேடின் முதல் பேப்பரில் அவரது மொபைல் எண்ணை எழுதி, தாளைக் கிழித்து எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டேன்.
“மேடம்… உங்க நம்பரையும் நோட்ல எழுதி வெச்சிட்டுப் போயிடுங்க. ஸார் வந்ததும் நீங்க தேடி வந்தது பற்றி சொல்லிடுறேன்” என்றான். நானும் எனது மொபைல் நம்பரை எழுதி வைத்துவிட்டு வந்துவிட்டேன்.
பத்திரிகை ஆபீஸைவிட்டு வெளியே வந்து கால் டாக்ஸியில் ஏறியதும், காரில் சிறிது நேரம் எனது மொபைலுக்கு சார்ஜ் போட்டுவிட்டு ஆனந்துக்கு பேசுவதற்காக நம்பரை டயல் செய்ய முயன்றேன். அதற்குள் எனது மொபைல் அலறியது. மொபைல் திரையில் தெரிந்தது ஆனந்த் மொபைல் நம்பர்.
நான் ஹலோ சொல்லவும், அவரே பேச ஆரம்பித்துவிட்டார்.
“சாந்தி… புரோக்கர் பிரகாஷ் உங்க நம்பரைக் குடுத்தார். என் பெயர் ஆனந்த். நான் …. பத்திரிகையில வேலை பார்க்குறேன். ஒரு வாரத்துக்கு நீங்க என்கூட தங்கப் போறீங்க. அதுக்கான அமவுன்ட்டை நான் பிரகாஷ் அக்கவுண்ட்க்கு அனுப்பிட்டேன். இப்போ இதுக்கு மேலே நான் உங்ககிட்ட பேச முடியாது. இன்னிக்கு ஈவ்னிங் 6.30க்கு, எக்மோர் ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரே இருக்கற ஆனந்தபவனுக்கு வந்திருங்க. நாம அங்கே பேசிக்கலாம்…” என்று சொல்லிவிட்டு அவராகவே துண்டித்துக் கொண்டார். இங்கேதான் விதி விளையாட ஆரம்பித்தது!”
நீண்ட விளக்கத்தைச் சொல்லிவிட்டு, அருகே இருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து வேகமாகக் குடிக்க ஆரம்பித்தாள் ஷ்ரவ்யா. விதி எப்படி விளையாடி இருக்கும் என்கிற சிந்தையில் ஆழ்ந்தார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்.