Home » அதிசயம் ஆனால் உண்மை » நாவல்கள் » இரண்டாம் தேனிலவு – 34
இரண்டாம் தேனிலவு – 34

இரண்டாம் தேனிலவு – 34

அமுதாவும் குணசீலனும் தங்கியிருந்த லாட்ஜ் அறை அது. கீ-செயின் கேமரா அந்த அறை முழுவதையுமே படம் பிடிக்க முடியாமல் தோற்றுக்கொண்டிரு ந்தது. ஏதோ அதிசயமாய் குணசீலன், பெட்டில் ஆன் செய்து வைத்துவிட்டு போன லேப் டாப்பைத் துல்லியமாகப் பதிவு செய்து கொண்டிருந்தது. லேப்-டாப்பில் திறந்து வைக்கப்பட்டிருந்த குணசீலனின் ஃபேஸ்புக் பக்கத்தில் அவனது நண்பர்கள் கமென்ட்களை அள்ளித் தெளித்துக்கொண்டிருந்தனர்.

குளித்து முடித்து ஆடை மாற்றிவிட்டு வந்த அமுதா எதார்த்தமாக லேப்-டாப்பைக் கவனித்தாள். அடுத்த நொடியே அதிர்ச்சியாகி, லேப்-டாப் எதிரே அமர்ந்துவிட்டாள். குணசீலனின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த படம் ஒன்றைப் பார்த்த பிறகுதான் இப்படி ஆனாள். அது வேறு யாருடைய படமும் அல்ல; அமுதாவுடைய படம்தான். டி-ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட்டில் அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றிருந்த குணசீலன் எடுத்த புகைப்படம்தான் அது.

குணசீலன் தன்னை பார்க்கும் பார்வை என்ன என்பதை புரிந்துகொண்ட அமுதா, தனக்குக் கல்யாணம் என்கிற பெயரில் நேர்ந்துவிட்ட சோகத்தை நினைத்து விம்மி விம்மி அழுதாள். நல்லவேளையாக பாத்ரூமில் அவளின் இன்ப உடல் குளியலை படம் பிடிக்கத் தவறிய கேமரா, இப்போது அவளது கயல் விழிகளின் துன்பக் கண்ணீர்க் குளியலைத் தெளிவாய்ப் படம் பிடித்துக்கொண்டிருந்தது.

வெளியே சென்றிருந்த குணசீலன் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அவளுக்கு! அவனை கொலை செய்ய வேண்டும் என்கிற வெறி ஏற்பட, ஆப்பிள் நறுக்குவதற்காக ரூம் பாய் உதவியால் வரவழைக்கப்பட்டு அறையில் வைக்கப்பட்டு இருந்த கூர்மையான கத்தியை எடுத்தாள்.

அதே ஆவேசத்தில், கதவைத் திறந்து குணசீலன் வருகிறானா என்று பார்த்தாள். ஆனால், அவன் வரவில்லை.

கதவைச் சாத்திவிட்டு மறுபடியும் அறைக்குள் திரும்பியவள், ஏனோ கதவைத் தாழ்ப்பாள் போடவில்லை. வேகமாகக் கத்தியுடன் படுக்கையைக் கடந்து சென்றாள். அடுத்த 20 நிமிடங்களுக்கு கேமராவில் வேறு எந்தக் காட்சியும் பதிவாகவில்லை. திடீரென்று அந்தக் காட்சியும் அப்படியே நின்றது.

காட்சியை நிறுத்தியவர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்.

“இங்கே பாருங்க மிஸ்டர் ஆனந்த், கத்தியை எடுத்துக்கிட்டு ஆவேசமாக போன அமுதா, நிச்சயமாகப் பாத்ரூமுக்குதான் போய் இருக்க வேண்டும். அங்கே ஏன் போனாங்க? அங்கே போய் என்ன பண்ணினாங்கங்கறது, ஆஸ்பத்திரியில அனுமதிக்கப்பட்டு இருக்கற அமுதா சுயநினைவுக்கு வந்த பிறகுதான் தெரியும்…” என்றவர் ஆனந்த்தைக் கூர்ந்து பார்த்தார்.

அந்தப் பார்வைக்கான அர்த்தம் தெரியாமல் குழப்ப ரேகையை முகத்தில் ஓடவிட்டான் ஆனந்த்.

“மிஸ்டர் ஆனந்த். இப்போ மணி 10 ஆகப் போகுது. இதுவரைக்கும் நீங்க பார்த்துட்டு இருந்த இந்த வீடியோவுல பதிவான காட்சிகள்ல நீங்க வரல. இனிதான் நீங்களும், நீங்க சென்னையில இருந்து அழைச்சுட்டு வந்த ஷ்ரவ்யாவும் வர்றீங்க. நீங்க ஏன் இங்கே வந்தீங்கங்கறது எங்களுக்கு நல்லாவேப் புரிஞ்சு போச்சு. நீங்க விஷம் இருந்த பாட்டிலைக் கொண்டு வந்ததும் தெரிஞ்சு போச்சு. அதே நேரத்துல, நீங்க கொண்டு வந்த விஷம் வேலை செய்யல. அது, ஏன்னுதான் எங்களுக்குப் புரியல. இந்தக் காரியத்தோட பின்னணியில ஷ்ரவ்யா இருக்கலாம்ங்கறது எங்களோட சந்தேகம். அவங்ககிட்ட அதுபற்றி நாளைக்குதான் விசாரிக்கப் போறோம்.

என்னோட முதல்கட்ட விசாரணையில உங்களையும் ஷ்ரவ்யாவையும் குற்றவாளியா பார்த்தாலும், உங்கள் இருவரால் குணசீலன் சாகவில்லை என்பது மட்டும் உண்மை என்று சந்தேகம் இல்லாமல் தெரியுது. அதனால, நீங்க ரெண்டு பேரும் நீங்க தங்கி இருக்கற லாட்ஜ்க்கு போகலாம். நீங்க எங்களோட விசாரணை வளையத்துல இருக்கறதுனால, நீங்க ரெண்டு பேரும் தப்பி ஓடாமல் இருக்க அந்த லாட்ஜில் போலீஸ் பாதுகாப்பு போட்டு இருக்கோம். நாளைக்குக் காலையில 8 மணிக்கு மறுபடியும் விசாரணை ஆரம்பிக்கும். இந்தக் கொலை வழக்குல நீங்க ரெண்டு பேரும் இதுவரைக்கும் எந்தத் தப்புமே பண்ணவில்லை என்பதுதான் என்னோட முடிவு.
அதைக் கடைசி வரைக்கும் காப்பாற்றுவீங்கன்னு நம்புறேன்…” என்ற இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், அவர்கள் இருவரையும் அவர்கள் தங்கியிருந்த லாட்ஜ்க்கே அனுப்பி வைத்தார்.

அதே நேரம், அவர் இன்னொரு கோணத்தில் விசாரணையைத் தொடங்கி இருந்தார். இது, ஆனந்த்துக்கும் ஷ்ரவ்யாவுக்கும் தெரியாது.

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top