“மிஸ்டர் ஆனந்த். இந்த வீடியோ காட்சியிலதான், நடந்த உண்மைகள் எல்லாமே பதிவாகி இருக்கு. உங்களோட முன்னாள் காதலி அமுதா குளிக்கறத படம் புடிக்கறதுக்கு இந்த ராஸ்கல்தான் கீ-செயின் கேமராவை பாத்ரூம்ல கொண்டுபோய் வெச்சு இருக்கான். இந்த வீடியோவை நீங்களும் பார்த்தா மேலும் பல உண்மைத் தகவல்கள் கிடைக்கும்னு நினைக்கறேன். அதனால நீங்க அவசியம் இந்த வீடியோவைப் பார்த்து, எங்களோட விசாரணைக்கு முழு ஒத்துழைப்புத் தரணும்.”
“என்ன ஸார் சொல்றீங்க? நான் உயிருக்கு உயிராக் காதலிச்சப் பொண்ணு அமுதா. அவ எனக்கு கிடைக்கலன்னதும், அவளை யாருக்கும் கிடைக்கவிடாம செய்ய, கொலை பண்ணுற அளவுக்கு எனக்கு ஆவேசம் வந்தது என்னவோ உண்மைதான். ஆனா, இப்போ நடக்கக் கூடாதது எல்லாம் நடந்துட்டுது. இந்த நேரத்துல, இப்படியொரு வீடியோவை என்னால நிச்சயமாகப் பார்க்க முடியாது. அந்தக் காட்சிகளை பார்க்கக்கூடிய தைரியமும் எனக்கு இல்ல.”
“நான் சொன்னதுல எந்தத் தவறான அர்த்தமும் இல்லை மிஸ்டர் ஆனந்த். நீங்க நினைக்கற மாதிரியான எந்தக் காட்சிகளும் நல்லவேளையா அதில் பதிவாகல. அமுதா எதிர்பாராதவிதமா செஞ்ச தவறுதான், அவளோட மானத்தை மட்டுமல்ல, இந்தக் கொலையில ஈடுபட்ட குற்றவாளி யார்? உங்களுக்கும் அமுதாவுக்கும்… ஏன், நீங்க ஊட்டிக்கு அழைச்சிட்டு வந்த ஷ்ரவ்யாவுக்கும் என்ன தொடர்பு இருக்குன்னு தெரிஞ்சிக்க முடிஞ்சது. அதனால், நீங்க இந்த வீடியோவைக் கண்டிப்பாப் பார்த்து, எங்க விசாரணைக்கு ஒத்துழைப்பு தந்தா, இன்னும் சில நாட்கள்லயே கேஸை முடித்துவிடலாம்.”
“நீங்க இவ்வளவு தூரம் சொல்றதுனால விசாரணைக்கு ஒத்துழைப்பு தர்றேன்.”
கனத்த அமைதியோடு ஆனந்த் சொல்லவும், கீ-செயின் கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஓடவிட்டார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன். கூசிய கண்களோடு அதைப் பார்க்கத் துவங்கினான் ஆனந்த்.
அமுதாவும் குணசீலனும் தங்கியிருந்த லாட்ஜின் பாத்ரூம் அது. வீடியோவின் முதல் காட்சி அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. கீ-செயின் கேமராவை ஆன் செய்து, தன் முகத்துக்கு நேராக அதைக் கொண்டு வருகிறான் ரூம் பாய் விவேக். பிறகு, பாத்ரூமுக்குள் எவ்வளவு உயரத்தில் அதை வைத்தால், முழுமையான காட்சி பதிவாகும் என்பதை ஆராய்ந்து, அதன்படியே செய்துவிட்டு வேகமாக வெளியேறுகிறான். அடுத்த ஓரிரு நிமிடங்களில் குளிப்பதற்காக உள்ளே வருகிறாள் அமுதா. வந்ததும், தான் அணிந்திருந்த சேலையை கழற்றுகிறாள்.
“ஸ்டாப் இன்ஸ்பெக்டர்…” ஆனந்த் வேகமாகக் கத்தவும், ஓடிக்கொண்டிருந்த வீடியோவை நிறுத்தினார் இன்ஸ்பெக்டர்.
“டென்ஷன் ஆகாதீங்க ஆனந்த். நீங்க நினைக்கற மாதிரி எதுவும் தப்பா பதிவாகல.”
“என்ன சொல்றீங்க இன்ஸ்பெக்டர்? உயிருக்கு உயிராக் காதலிச்ச பொண்ணு குளிக்கறத பப்ளிக்கா பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளான துரதிர்ஷ்டசாலி நானாகத்தான் இருப்பேன். இதுக்கு மேலே அந்தக் காட்சிகளை எனக்குக் காட்ட வேண்டாம். இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா, நிச்சயமா நான் ஊட்டிக்கு அப்படியொரு எண்ணத்தோடு வந்திருக்க மாட்டேன். எல்லாம் என் தலையெழுத்து!”
“ஆனந்த்… மறுபடியும் சொல்றேன். உங்களோட முன்னாள் காதலிக்கு களங்கம் ஏற்படுகிற அளவுக்கு இந்த வீடியோவுல எந்தக் காட்சியும் பதிவாகல. நான் உங்களை ஒரு குற்றவாளியா நடத்தி இருந்தா, இந்த வீடியோக் காட்சியை உங்க முன்பு போட்டுக் காட்டணும்ங்கற அவசியம் எனக்குக் கிடையாது. நீங்க மதிப்புமிக்க துறையில… ஐ மீன், நீங்க ஜர்னலிஸ்ட்டா இருக்கறதுனால, எதையும் மறைக்காம சொல்லிடுவீங்கங்கற நம்பிக்கையிலதான் இந்த வீடியோ உங்களுக்குப் போட்டு காட்டுறேன். மற்றபடி, உங்க மனதைக் காயப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் என்னிடம் துளியும் இல்லை. மறுபடியும் வீடியோவை ஓடவிடுறேன். தயவுசெஞ்சு எங்க விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுங்க…” என்ற இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், இரண்டாவது முறையாக வீடியோவை ஓடவிட்டார்.
குளியல் அறைக்குள் மேலாடை களைந்த நிலையில் நின்றிருந்த அமுதா, தான் கொண்டுவந்த டர்க்கி டவலை தோளில் போடுவதற்காக அதைத் தோளில் வேகமாகப் போட்டாள்.
அப்போதுதான் அந்த நல்ல காரியம் நிகழ்ந்தது. அவளுக்குத் தெரியாமல் அவள் குளிப்பதை படம் பிடித்துக் கொண்டிருந்த கேமரா மீது அந்த டவலின் நுனி வேகமாகப் பட… அக்கணமே அது கீழே விழுந்தது, அவளுக்குத் தெரியாமல்… அதன்பிறகு, அடுத்த 15 நிமிடங்களுக்கு அந்த கேமராவில் பதிவான காட்சி அமுதாவின் கால்கள் மட்டும்தான்.
இதன் பிறகுதான் ஆனந்துக்கு நிம்மதி வந்தது.
“நான்தான் சொன்னேனே மிஸ்டர் ஆனந்த், இதுல நீங்க பயப்படுற மாதிரி எதுவும் இல்லேண்ணு! ஆனா, இந்தக் காட்சியில பதிவானது அமுதாதான்னு நாங்க உறுதியாகக் கண்டுபிடிச்ச காட்சி இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும். அந்தக் காட்சி வந்த அடுத்த இரண்டு மணி நேரத்துலதான் நீங்க அமுதாவை தேடி வர்றீங்க. நீங்க எதுக்காக வந்தீங்கங்கறது அதுல துல்லியமாக பதிவாகி இருக்குது!”
இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் இப்படிச் சொல்லவும் அதிர்ச்சியில் உறைந்து போனான் ஆனந்த்.