Home » அதிசயம் ஆனால் உண்மை » நாவல்கள் » இரண்டாம் தேனிலவு – 32
இரண்டாம் தேனிலவு – 32

இரண்டாம் தேனிலவு – 32

ஊட்டி போலீஸ் நிலையத்தில் கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்திருந்தனர் ஆனந்தும், ஷ்ரவ்யாவும்! ‘இவ்வளவு நெருங்கிப் பழகியும், பெரிய ரகசியத்தை மறைத்துவிட்டாளே இவள்’ என்று ஷ்ரவ்யா மேல் கோபமாக இருந்தான் ஆனந்த். ஆனால், ஷ்ரவ்யாவுக்கு ஆனந்த் ஊட்டி வந்ததன் நோக்கம் தெரியும் என்பதால் அமைதியாக இருந்தாள்.

“உங்க ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சு? ரொம்ப நேரமா ரெண்டு பேரையும் கவனச்சிட்டுதான் இருக்கேன். பேசாம அமைதியா இருக்கீங்க. உண்மையை மறைச்சிட்டோமேங்கற தயக்கமா?” – லத்தியைக் கையில் சுழற்றியபடி கேட்டார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்.

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல ஸார். இப்படியொரு விபரீதம் நடந்த பிறகு, அவசரப்பட்டுட்டோமோன்னுதான் தோணுது. அதேநேரம், சாந்திங்கற பேருல இங்கே என்னோட வந்திருக்கும் இந்த ஷ்ரவ்யா, உண்மையிலேயே சாந்திதானான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு. அதை, நீங்களே அவகிட்ட கேட்டுச் சொல்லுங்க ஸார்” கொஞ்சம் வேகமாகவே சொன்னான் ஆனந்த்.

“கூல் ஆனந்த். ஒரு மீடியா பெர்சனான நீங்க, உங்களோட முன்னாள் காதலியை கொலை செய்யும் அளவுக்கு எப்படி துணிஞ்சிங்கங்கறதுதான் எங்களோட முதல்கட்ட விசாரணை. அந்த விசாரணை முடிஞ்ச பிறகு, நீங்க ஊட்டிக்கு கூட்டிட்டு வந்த இந்தப் பொண்ணுகிட்ட அதுபத்தி விசாரிக்கறோம். இப்போ, எங்களோட விசாரணைக்கு நீங்க முழு ஒத்துழைப்பு கொடுத்தா நல்லா இருக்கும்.”

வீரப்பன் ரேஞ்சுக்கு வளர்த்திருந்த மீசை வலது ஆட்காட்டி விரலால் நீவிவிட்டபடி சொன்ன இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், தனது மேஜை மீது வைக்கப்பட்டு இருந்த லேப்-டாப்பை ஆன் செய்தார்.

“கந்தசாமி, இங்கே வாங்க..!” – சில அடி தொலைவில், தனக்குரிய டேபிளில் அமர்ந்து எப்.ஐ.ஆர். நோட்டியில் வழக்கம்போல் எழுதிக்கொண்டிருந்த ஹெட் கான்ஸ்டபிள் கந்தசாமியை அழைத்தார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்.

“சொல்லுங்க ஸார். எதுவும் டீ, காபி வாங்கணுமா?”

“அதெல்லாம் வேணாம். இவங்க ரெண்டு பேரும் ரொம்பவும் டயர்டா இருக்காங்க. டிரெயினிங்ல இருக்கற பசங்களை ஓட்டலுக்கு அனுப்பி ஏதாவது டிபன் வாங்கிட்டு வரச் சொல்லுங்க. நீங்களும் கொஞ்ச நேரத்துக்கு வெளியே போய் நில்லுங்க. நான் கூப்பிட்ட பிறகு வந்தா போதும். இவங்க கிட்ட நான் தனியா விசாரணை நடத்த வேண்டியது இருக்கு…” என்று அழுத்தமாகச் சொன்ன இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், வலது கையில் இருந்த லத்தியை இடது கை விரல்களுக்குள் திணித்து முறுக்கிக் கொண்டார்.

இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனின் செய்கை ஆனந்துக்குக் கொஞ்சம் பயமாகவே இருந்தது. தான் பத்திரிகை நிருபராக பணியாற்றிய காலத்தில் எத்தனையோ போலீஸ் உயர் அதிகாரிகளிடம் வெகு உரிமையாடு பேசிய பழக்கம் இருந்தாலும், இப்போது… குற்றவாளியாக நிற்பதால், தன்னிடம் நடத்தப்படும் விசாரணை வேறு மாதிரியாக இருக்குமோ என்று நினைத்தான்.

“பயப்படாதீங்க ஆனந்த். நீங்க நிருபரா இருந்தப்போ, என்னைவிட மேல் அதிகாரிகள் நிறைய பேரிடம் சகஜமா பழகி இருப்பீங்க. அதுமாதிரியே என்கிட்டேயும் நீங்க பழகலாம். நான் ஒண்ணும் மோசமான ஆள் கிடையாது. ஆள் பார்க்கறதுக்கு வேணும்னா, கொஞ்சம் முரட்டு ஆளாத் தெரியலாம். மற்றபடி, கடவுள் பக்தி என்கிட்ட நிறைய உண்டு. சட்டம்னு ஒண்ணு இருந்தாலும், மனசாட்சிபடி நடக்கக்கூடியவன் நான். அதனால, நம்மள ஏதாவது பண்ணிடுவாங்களோன்னு நீங்க பயப்படாதீங்க. என்னைக் கூடப் பிறந்த அண்ணணாவே நினைச்சி, விசாரணைக்கு ஒத்துழைப்பு குடுங்க. அது போதும்.”

இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், இவ்வளவு ஆறுதலாகப் பேசவார் என்றும் ஆனந்த் சிறிது கூட எதிர்பார்க்கவில்லை.

“ஆனந்த்…. உங்களுக்கே தெரியாத ஒரு உண்மையை இப்போ உங்ககிட்ட நான் சொல்றேன். குணசீலனை கொன்னது நான்தான்னு நீங்க சத்தியம் பண்ணிச் சொன்னாலும், உங்களைக் கொலை குற்றவாளியாகக் கருதி தண்டனை தர முடியாது. ஏன்னு நீங்க கேட்கலாம். அதுபத்தி நீங்க தெரிஞ்சுக்கணும்னா இந்த வீடியோவை நீங்க மட்டுமில்ல, உங்களோட வந்திருக்கற ஷ்ரவ்யாவும் அவசியம் பார்த்தே ஆகணும்.”

இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சஸ்பென்ஸ் வெச்சுப் பேசியதால், அது என்னவாக இருக்கும் என்று யூகிக்க முடியாமல் திணறினர் ஆனந்தும் ஷ்ரவ்யாவும்! அவர்களிடம் கீ செயின் ஒன்றைக் காண்பித்தார் அவர்.

“இது, என்னதா இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க?”

“கீ-செயின்!”

“அதுதான் இல்லை. உங்களை அடையாளம் காட்டினதே இந்தக் கீ செயின்தான். இது, சாதாரண கீ செயின் இல்லை. இது, கீ செயின் கேமரா. இதனோட கேமராவுலதான் நீங்க ரெண்டு பேரும் பதிவாகி இருக்கீங்க. அதை வெச்சு நாங்க ஈஸியா கண்டுபுடிச்சிட்டோம்.”

இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் இப்படிச் சொன்னதும் ஆனந்தும் ஷ்ரவ்யாவும் இன்னும் அதிகமாகக் குழம்பினார்கள்.

“நீங்க ரெண்டு பேரும் தங்கி இருக்கற லாட்ஜ்ல நீங்க ரூம் கேட்டப்போ, நீங்க கணவன்- மனைவிதானான்னு சந்தேகப்பட்டு இருக்காங்க. அவங்ககிட்ட நீங்க கொஞ்சம் எமோஸனலாவே பேசி இருக்கீங்க. அதனாலேயே அவங்களுக்கு சந்தேகம் வர, உங்களையும் உங்களுக்குப் பக்கத்துல நின்னுக்கிட்டு இருந்த, இதோ… இந்த ஷ்ரவ்யாவையும், உங்களுக்குத் தெரியாமலேயே போட்டோ எடுத்து, தங்களோட கம்ப்யூட்டர்ல சேவ் பண்ணிட்டாங்க. அவ்வப்போது நாங்க லாட்ஜ்கள்ல சோதனை போடறது உண்டு. நீங்க தங்கி இருக்கற லாட்ஜ்ல எத்தனை பேர் தங்கி இருக்காங்கன்னு நாங்க விசாரிச்சப்போ, உங்க ரெண்டு பேரோட போட்டோவையும் காண்பிச்சாங்க. வழக்கமாக முகத்தை மட்டும்தானே போட்டோவா பதிவு பண்ணுவீங்க.

ஆனா, இந்த ஜோடியை முழுசா பதிவு பண்ணி இருக்கீங்களேன்னு கேட்டதுக்கு, அவங்க ரெண்டு பேரும் கணவன் – மனைவியான்னு எங்களுக்கு சந்தேகம் வந்ததுனால, ஏதாச்சு பிரச்னை வந்துட்டா ஈஸியா சமாளிக்கறதுக்காக இப்படி சேர்த்தே எடுத்துட்டோம்னு விளக்கம் சொன்னாங்க. அவங்க சொன்ன விளக்கத்துல உங்க ரெண்டு பேரோட முகம், குறிப்பா… இந்தப் பொண்ணோட முகம் டக்குன்னு என்னோட மனசுல பதிஞ்சுப் போச்சு…” என்று சொன்ன இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சிறிது நேரம் அமைதியானார்.

“ராஸ்கல்ஸ்… இப்படியெல்லாமா செய்வாங்க. விட்டா… நம்ம பெட்ரூம்ல வீடியோவை சீக்ரெட்டா மாட்டி, நம்ம மானத்தையே வாங்கிடுவானுவ போலிருக்கே…!” என்று ஆனந்த் சொல்லவும், “அதுவும் நடந்துவிட்டது” என்று சொல்லி அதிர்ச்சி வைத்தியம் தந்தார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்.

அவரது பதிலைக் கேட்ட இருவருக்கும் பயங்கர அதிர்ச்சி. தங்களுக்குள் ‘அந்த’ மாதிரியான உறவு எதுவும் நிகழவில்லை என்றாலும், நெருக்கமான அன்னியோன்யம் இருந்ததால்… அந்தக் காட்சிகள் மட்டும் வீடியோவில் பதிவாகி இருக்குமோ என்று பயந்தனர். அதுபற்றி, இன்ஸ்பெக்டரிடமே கேட்டனர்.

“ஆனந்த்… நீங்க ரெண்டு பேரும் அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்கீங்களே… உங்களை மாதிரியே எல்லோரும் இருந்துட்டா, எங்களுக்கு வேலை பாதியா குறைஞ்சிடும்” என்று சொன்னவர், ஆனந்த்தைக் கூர்ந்து பார்த்தவர், ஆனந்த் எதிர்பார்க்காத அந்தப் பதிலை சொன்னார்.

“ஆனந்த்… நீங்க நினைக்கற மாதிரி இது உங்களோட வீடியோ இல்ல. உங்களோட முன்னாள் காதலி அமுதாவுடையது!”

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top