“ஆனந்த்… எங்கே போனீங்க? முதுமலைக்கு போறோம்னு கூட்டிட்டு வந்தீங்க. கார்ல கொஞ்ச தூரம் போன உடனேயே, “என்னோட மணி பர்ஸையும், பிரஸ் ஐ.டி. கார்டையும் லாட்ஜ்லயே வைச்சிட்டு வந்துட்டேன்; அதை எடுத்துட்டு வந்திடுறேன்” னு சொல்லிட்டுப் போனீங்க. இப்போ, அரை மணி நேரம் கழிச்சு வர்றீங்க. ஏன், இவ்ளோ லேட்?”
“ஒண்ணும் இல்ல ஷ்ரவ்யா. என்னன்னு தெரியல, லாட்ஜ்க்குப் போய் மணி பர்ஸையும், ஐ.டி. கார்டையும் எடுத்துட்டு கீழே இறங்கும்போது திடீர்னு மயக்கமாயிடுச்சு. அப்படியே உட்கார்ந்துட்டேன். அதான் லேட்.”
“அய்யய்யோ… ஒரு போன் பண்ணியிருக்கக்கூடாதா? லாட்ஜ்க்கே வந்து இருப்பேனே..! இன்னிக்கு முதுமலைக்கு எல்லாம் போகவேண்டாம். நேரா ஹாஸ்பிட்டலுக்குப் போவோம்…” என்று பதற்றமானாள் ஷ்ரவ்யா.
“பயப்படாத ஷ்ரவ்யா. இது, சாதாரண தலைசுற்றல்தான். லேட்டுக்கான காரணம் கேட்டதுனால சொன்னேன். மத்தபடி, எனக்கு எந்தப் பிரச்னையும் இல்ல. நான் நார்மலாத்தான் இருக்கேன்.”
“இல்லீங்க… ஹாஸ்பிட்டலுக்குப் போவோம். இல்லன்னா, லாட்ஜ்க்கே போயிடுவோம். அங்கே இங்கேன்னு அலையாம ரெஸ்ட் எடுத்துக்கலாம்…” என்ற ஷ்ரவ்யா, ஆனந்தின் கையைப் படித்து இழுத்து காருக்குள் உட்கார வைத்தாள். அப்போது அவளுக்கு இன்னொரு சந்தேகம் வந்தது.
“ஆமா ஆனந்த்… நீங்க காலையில வரும்போது எல்லோ கலர் டி – ஷர்ட்தானே போட்டு இருந்தீங்க? இப்போ எப்படி சிகப்புக்கு மாறினீங்க?”
“அது… அதுவந்து…?”
ஓரிரு நொடிகள், காரணம் சொல்ல முடியாமல் திணறியவன், “அதான்… மயக்கமாகி படிக்கட்டுல உட்கார்ந்துட்டேன்னு சொன்னேன் இல்லீயா? அப்போ, நான் சுவர்ல சாஞ்ச இடத்துல ரொம்பவும் டஸ்ட் இருந்திருக்கு. அது பூராவும் ஷர்ட்ல அப்பிட்டதால, வேறு டி – ஷர்ட் போட்டுட்டு வந்தேன்.”
“நாம தங்கியிருக்கற லாட்ஜ், ஸ்டார் ஹோட்டல்தானே? என் பார்வைக்கு அப்படியெல்லாம் டஸ்ட்ஸ் இருந்த மாதிரி தெரியலீயே…”
“அப்படீன்னா… நான் பொய் சொல்றேன்னு நினைக்கிறீயா?”
“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. இப்போ நமக்கு அந்த பிரச்னை எதுக்குங்க? நீங்களே உறுதியா சொல்லுங்க… நாம இப்போ லாட்ஜ்க்கு போறாமா? இல்ல… முதுமலைக்கே போறோமா?”
ஷ்ரவ்யாவுக்கு பதில் சொல்லும் முன், ஏதோ ஒரு சிந்தனையை முகத்தில் ஓடவிட்டவன், “யாருமே இல்லாத, நாம மட்டுமே இருக்கற அமைதியான இடத்துக்கு போகணும்னு தோணுது. நாம திட்டமிட்டபடியே முதுமலைக்கே போயிடுவோம்” என்றான்.
அடுத்த நிமிடமே கார் முதுமலைக்குப் பறந்தது. சுமார் 36 கி.மீ. தொலைவைக் கடந்ததும் முதுமலை வனவிலங்குகள் சரணாலயம் வரவேற்றது. தமிழகம், கர்நாடகம், கேரளா ஆகிய 3 மாநில எல்லையில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் வனவிலங்கு சரணாலயம் அது. சரணாலயம் அமைந்துள்ள பகுதி, எப்போதும் பசுமையாக இருக்கும் வெப்ப மண்டலக் காடு என்பதால் யானை, சிறுத்தை, புள்ளிமான், கோழையாடு, கரடி, காட்டுப்பன்றி போன்ற காட்டு விலங்குகளையும், கொம்பிறகுப் பறவை, குயில் வகைகள், காட்டு கோழிகள் போன்ற அரிய உயிரினங்களையும் காண முடியும்… என்று விளக்கம் சொன்னது, அங்கிருந்த அறிவிப்பு பலகை.
சரணாலயத்துக்குள் சிறிது தூரம் நடந்து சென்றவர்கள், சுற்றுலாப் பயணிகளைச் சவாரி அழைத்துச் சென்ற யானையை ஆச்சரியத்தோடு பார்த்தனர். அதுவரை பதற்றத்தோடு இருந்த ஆனந்த், யானை சவாரியைப் பார்த்ததும் கொஞ்சம் உற்சாகம் ஆனான். அதைக் கவனித்து விட்டாள் ஷ்ரவ்யா.
“ஆனந்த்… நாமளும் யானை சவாரி போவோமா?”
“அய்யய்யோ… யானைன்னாலே எனக்கு பயம். யானை பக்கத்துல போகுறதுக்கே பயப்படுற ஆசாமி நானு. நீ வேணும்னா யானை சவாரி போய்ட்டு வா. நான் இங்கேயே நின்னுக்கறேன்.”
“சரி, ரெண்டு பேரும் யானை சவாரி போக வேண்டாம். அமைதியான இடத்துக்கு போகணும்னு சொன்னீங்கள்ல? அந்த மாதிரியான இடத்துல உட்கார்ந்து பேசிட்டு வருவோம்” என்று, இறுதியாகத் தீர்ப்பு சொன்னாள் ஷ்ரவ்யா.
அங்கிருந்த பூங்காவுக்குச் சென்றவர்கள், அங்கே போடப்பட்டு இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள். இயற்கையின் ஆச்சரியங்களை பார்த்து ரசித்தபடியே அவர்களின் பேச்சு தொடர்ந்தது. ஒருகட்டத்தில் தோளோடு தோள் உரசி அமர்ந்த ஷ்ரவ்யாவை அணைத்துக் கொண்டான் ஆனந்த். அந்த ஸ்பரிசத்தில் இருவருக்கும் நேரம் போனதே தெரியவில்லை.
இருவரது மகிழ்ச்சியையும் காண செல்போனுக்குப் பிடிக்கவில்லை போலும்! திடீரென்று அலறியது.
“இங்கே கூட டவர் கிடைக்குதா?” என்று கேட்டபடியே மொபைலை ஆன் செய்தான் ஆனந்த். அவன் பேசுவதற்கு முன்பாகவே எதிர்முனையில் பேச்சு கேட்டது.
“பொள்ளாச்சியில் இருந்து பேசுறேன். இது, கோயம்புத்தூர்தானே?”
“இல்லீங்க… இது முதுமலைங்க. கரெக்ட்டான நம்பர் போட்டு பேசுங்க…” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டிக்க முயன்ற போதுதான், அந்த செல்போன் பேச்சின் பின்னணியில் சைரன் ஓசை கேட்டது.
அதைக் கேட்ட மாத்திரத்தில், பயங்கர அதிர்ச்சிக்கு ஆளானான் ஆனந்த். அந்த அதிர்ச்சியின் வேகத்தில், தன் தோளோடு சாய்ந்திருந்த ஷ்ரவ்யாவைக் கூடத் தள்ளிவிட்டு விட்டான்.