“என்ன ஆனந்த்… நீங்க மட்டும் தனியா போறதாச் சொல்றீங்க? நீங்க முதல்லயே சொல்லியிருந்தா நானும் உங்க கூட வந்திருப்பேன்; நைட் டிரெஸ்சுக்கு மாறியிருக்க மாட்டேன்ல?”
“இல்ல ஷ்ரவ்யா. இது என்னோட பெர்சனல் வேலை. அதனாலதான் நீ வேண்டாம்னு நினைக்கறேன்.”
“என்னோட பெர்சனல் விஷயங்கள் எத்தனையோ உங்ககிட்ட ஷேர் பண்ணியிருக்கேன். ஆனா, நீங்கதான் இன்னும் என்கிட்ட முழுமையா ஒட்டாம இருக்கீங்க.”
“உன்ன நான் எந்த அளவுக்கு புரிஞ்சியிருக்கேன்னு வந்து சொல்றேன். ஒரு அரை மணி நேரத்தை மட்டும் எனக்குத் தனியா விட்டுக்கொடேன்…”
ஆனந்த் ரொம்பவும் இறங்கி வந்து கேட்டதால்… சரி, போயிட்டு, சீக்கிரமாவே வாங்க… என்று அவன் வெளியே செல்ல அனுமதி கொடுத்தாள் ஷ்ரவ்யா.
ஆனந்த் அருகே இல்லாத இரவு பொழுது ஷ்ரவ்யாவுக்கு உடனேயே “போர்” அடிக்க ஆரம்பித்து விட்டது. அடுத்ததாக என்ன செய்யலாம் என்று அவள் பார்வையால் எதையோத் தேடிய போது, ஆனந்த் வைத்திருந்த டைரி தென்பட்டது.
அடுத்தவங்க டைரியைப் படிப்பது கூட “கிக்”கான விஷயம்தானே? என்று நினைத்தவள், ஆர்வமாய் அதைப் புரட்டினாள். பெரும்பாலான பக்கங்களில் கவிதையே எழுதப்பட்டு இருந்தது. முந்தைய நாள் வரையிலான தனது எண்ணங்களை அதில் எழுத்தாக வடித்திருந்தான் ஆனந்த்.
ஊட்டிக்கு அவர்கள் இருவரும் வந்த நாளன்று நிறையவே எழுதி இருந்தான். அதை ஆர்வமாக படித்தாள் ஷ்ரவ்யா.
“இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இதே சந்தோஷம் நான் முதன் முதலா சென்னைக்குப் பணி மாற்றலாகி வந்த போது கிடைத்தது ஞாபகத்துக்கு வருகிறது. அந்த திவ்யா இன்னிக்கும் என் கண்ணுக்குள்ளேயே இருக்குறா. நான் சென்னைக்கு வந்தப்போ என்னோட வயசு 24. திவ்யாவுக்கு 19 அல்லது 20 வயசுதான் இருக்கும். அவகிட்ட மணிக்கணக்கா பேசணும்னு ஆசைப்பட்டு இருக்கேன். ஆனா, அவளை நான் பார்த்தது என்னவோ 4 மணி நேரம்தான். அவளுக்கு எந்த ஊர், எங்கே படிக்கிறாள் என்பதுகூட தெரியாது. அதேநேரம், அவளோட பெயர் மட்டும் மந்திரம் போல் என் மனதில் எப்போதாவது ஒலிப்பது உண்டு.
இந்த ரயில் பயணத்தில்தான் திவ்யாவை முதன் முதலாகப் பார்த்தேன். அவள் கல்லூரி மாணவி என்பதும், அவளது பெயர் திவ்யா என்பதும் அவளது தோழிகள் பேசிய பேச்சில் இருந்து தெரிந்து கொண்டேன். நான் பயணித்தது முன்பதிவு செய்யப்படாத பெட்டி என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது. திவ்யாவோடு அவளது சக மாணவிகள் சுமார் 15 பேரும் வந்திருந்தனர். அவர்கள் வாலிபால் ப்ளேயர்களாம். அன்றைய தினம் தூத்துக்குடியில் நடந்த மாநிலக் கல்லூரி அளவிலான வாலிபால் போட்டியில் கலந்து கொண்டு விட்டு சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். 15 மாணவிகள் இருந்தாலும் திவ்யாவை எனக்கு ரொம்பப் பிடித்துப் போய்விட்டது.
முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் லக்கேஜ் வைக்கக்கூடிய பகுதியில் சக மாணவிகள் 3 பேருடன் அமர்ந்திருந்தாள் திவ்யா. அவளது தரிசனம் எனக்கு நேரடியாகக் கிடைக்கும்படி அவளுக்கு எதிரே தனி சீட்டில் அமர்ந்திருந்தேன் நான். அதனால், அவளது ஒவ்வொரு செய்கையையும் என்னால் ரசிக்க முடிந்தது. சுட்டிப் பெண்ணாக நடந்து கொண்டாள் திவ்யா.
சில்லறைக் காசுகளை மார்பிள் தரையில் சிந்தியது போன்ற வெட்கச் சிரிப்பு, சக தோழிகளைச் செல்லமாக அதட்டும் விதம், வாலிபால் விளையாட்டில் நடந்த சுவாரஸ்யங்கள்… என்று அவள் பேசிய விஷயங்கள் நிறைய! கூடவே, தனது ஆங்கிலப் புத்தகத்தைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு, நெஞ்சோடு அணைத்து தனக்குத்தானே மனப்பாடம் செய்து கொண்ட செயல், அவள் மீதான எனது ரசனையை இன்னும் அதிகப்படுத்தி விட்டது. 4 மணி நேரம் போனதே தெரியவில்லை.
ரயில் திண்டுக்கல்லை நெருங்கிய போதுதான் அந்த மாணவிகள் கூட்டம் கலைய ஆரம்பித்தது. அவர்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷன் அதுதான் போலும்! எல்லோரும் பரபரப்பாக அவரவரது லக்கேஜ்களை ஒன்று சேர்க்கும் வேலையில் ஈடுபட்டனர்.
லக்கேஜ் வைக்க வேண்டிய இடத்தில் அமர்ந்து பயணித்த திவ்யா கீழே இறங்கினாள். அவளது லக்கேஜை எங்கேயோ வைத்து விட்டாள் போலும்! பதற்றமாகத் தேடினாள். திடீரென்று அவள் பார்த்தபடி என்னை நோக்கி வந்தாள். எனக்கு திக்கென்று இருந்தது. “நாம ரொம்ப நேரமா அவளது செய்கைகளை ரசிச்சிட்டு இருந்தோமே… அதை, அவள் தப்பா எடுத்துக்கிட்டாளோ…” என்றுகூட யோசித்தேன். ஆனால், திவ்யா அப்படி நினைக்கவில்லை.
கையில் வைத்திருந்த வாலிபாலை என்னிடம் கொடுத்தாள். “கொஞ்சநேரம் இதை வெச்சிக்கோங்க…” என்று சொல்லி, அதை என்னிடம் கொடுத்து விட்டுத் தனது லக்கேஜைத் தேடினாள். ஒரு வழியாக அதைக் கண்டுபிடித்து விட்டு மறுபடியும் என்னருகில் வந்தாள். பந்தைக் கேட்டு வாங்கினாள். அதைக் கொடுக்க மனமில்லாமல் கொடுத்தேன். “ரொம்ப தேங்க்ஸ்” என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு நகர்ந்தாள். என்னையே மறந்து நின்றேன் நான்.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் நிற்க… திவ்யா உள்ளிட்ட எல்லா மாணவிகளும் இறங்கி விட்டார்கள். கூடவே என் மனமும்தான்! திவ்யா எங்கே? என்று தேடினேன். வாசல் வரை ஓடி வந்து அவள் போகும் திசையைப் பார்த்தேன். அவள் ஒருமுறை பார்க்க மாட்டாளா என்று மனசுக்குள் ஏக்கம். அந்த ஏக்கம் திவ்யாவுக்கும் புரிந்துவிட்டது. நம்ம சினிமாக்களில், கதாநாயகி தனது காதலை மறைமுகமாக வெளிப்படுத்தும் வகையில் கதாநாயகனை ஒருவித சிரிப்போடு திரும்பிப் பார்ப்பாளே… அதேபோல் திரும்பினாள் எனது திவ்யாவும்! அவளது அந்தப் பார்வையில் என் மனம் மட்டும் திண்டுக்கல்லில் இறங்கிக் கொண்டது. அவள் நினைவுகளோடு சென்னைக்குப் பயணித்தேன்.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கடைசியாக திவ்யா ஒரு சிரிப்பு சிரித்தாளே… அந்தச் சிரிப்பு தந்த அதே இன்பம், பரவசம் சில வருடங்களுக்குப் பிறகு இன்று எனக்கு கிடைத்து இருக்கிறது. அந்த திவ்யாவே இந்த ஷ்ரவ்யாவாக இருக்கக்கூடாதா?” என்று எழுதி முடித்திருந்தான் ஆனந்த்.
டைரியைப் படித்து முடித்த ஷ்ரவ்யாவின் கண்களின் ஆனந்தக் கண்ணீர் பெருகி நின்றது. ஆசை நாயகியாக தன்னை அழைத்து வந்தவன், தன்னை ஆசைக் காதலியாகப் பார்ப்பதை நினைத்து, அந்த இனம்புரியாத மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர்த் துளிகளை இன்னும் கூடுதலாய் உதிர்த்தாள்.