“ஆனந்த் இந்தப் பூங்கா ரொம்ப அழகா இருக்குல்ல?”
“ஊட்டின்னாலே அழகுதான். அங்குள்ள பூங்காவின் அழகு பத்திச் சொல்ல வேணுமா என்ன?”
“இப்படியொரு அழகான பூங்காவை வேறு எங்கேயும் நான் பார்த்ததே இல்லை.”
“அதுசரி, இந்தப் பூங்காவுக்கு இன்னொரு ஸ்பெஷாலிட்டியும் இருக்கு தெரியுமா?”
“என்னது?”
“இந்தப் பூங்காவின் புல்வெளிகளில் கதாநாயகிகளோடு உருண்டு புரளாத கதாநாயகன்களே இல்லை, அதனால்தான் அப்படிச் சொன்னேன்.”
“என்னது… இங்கே ஷூட்டிங் எல்லாம் எடுப்பாங்களா?”
“ஆமாம்… இடைக்கால சினிமாக்கள் பார்த்தாலே தெரியும். அழகழகான பூங்காவையும், மலைப்பிரதேசங்கள்ல மட்டுமே பார்க்கக் கூடிய மரங்களையும் காட்டுவாங்க. அந்த இடம் வேறு எதுவும் இல்லை. இதே இடம்தான். ஏன்… இப்போ நாம நின்னுட்டு இருக்கோமே… இந்த இடத்துல நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் எல்லோரும் ஸ்ரீதேவி, அம்பிகா, ராதா கூட டூயட் பாடியிருக்காங்க. நீ ஆசைப்பட்டா நாமளும் ஒரு டூயட் பாடிடுவோம்.”
“எனக்கும் ஆசையாத்தான் இருக்கு. ஆனா, பேக்ரவுண்ட்ல சாங்க் எதுவும் ஓடாதே…”
“பேக்ரவுண்ட்ல சாங்க் ஓடலன்னா என்ன, மனசுக்குள்ள ஓட்டிட வேண்டியதுதான்…” என்று சொன்ன ஆனந்த், ஷ்ரவ்யாவின் இடுப்பில் கிடுக்கிப்பிடி போட்டுக் கொண்டு மெய்மறந்து நடந்தான். அவன் எந்தக் கவலையை மறக்க வந்தானோ, அவை சட்டென்று காணாமல் போய் இருந்தன.
அப்போதுதான் அவனுக்கு அந்த நினைவு வந்தது. தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து, சில சாக்லெட்டுகளை வெளியே எடுத்தான். ஷ்ரவ்யாவிடம் நீட்டினான்.
“என்னங்க… எனக்குத் தெரியாம சாக்லெட் எங்கே வாங்கினீங்க? அதுவும், சாப்பிட்டுட்டு கொடுக்குற மாதிரி இருக்குது.”
“உனக்குக் கொடுக்காம நான் மட்டும் எப்படி சாக்லெட் சாப்பிடுவேன். அதுவும், உனக்கு பிடிக்குமேன்னு வாங்கி இருக்கேன்.”
“எனக்கு சாக்லெட் பிடிக்கும்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“எல்லாப் பெண்களுக்கு பிடிச்ச விஷயம்தானே அது?”
“ஓ… நீங்க அந்த வழிக்கு வர்றீங்களா? அது சரி… இந்த சாக்லெட் ஏன், பைவ் ஸ்டார் சாக்லெட் மாதிரி பேக் செய்யப்படாம இப்படி ஓப்பனா இருக்கு…”
“நீ சொல்ற சாக்லெட் வேற. இது ஊட்டி சாக்லெட்!”
“என்னது… ஊட்டி சாக்லெட்டுக்குமா பேமஸ்?”
“ஆமா… அது உனக்குத் தெரியாதா?”
“தெரியாதுங்கறதுனாலதானே உங்கக்கிட்ட கேக்கறேன்…!”
“இந்த சாக்லெட்டுக்குப் பின்னாடி சுவாராசியமான ஹிஸ்ட்ரியே இருக்கு தெரியுமா?”
“அப்படீன்னா… சாக்லெட் பார்சலை அப்படியேக் குடுங்க…” என்று, அதை வாங்கிக் கொண்ட ஷ்ரவ்யா, சாக்லெட் துண்டுகளில் ஒன்றை எடுத்துக் கடித்தாள்.
“உண்மையிலேயே இந்த சாக்லெட் சூப்பரா இருக்கு ஆனந்த். வீட்டுச் சாப்பாடுன்னு சொல்வாங்க இல்லையா..? அந்த மாதிரியான ஒரு ஃபீலிங் இருக்கு.”
“நீ சொன்னதுதான் உண்மை. இந்த சாக்லெட்டோட பெயர் ஹோம் மேட் சாக்லெட். பெயர் ஒண்ணுதான்னாலும், க்ரன்ச், கேரமில்க், அல்மாண்ட் ஃபட்ஜ், பிஸ்தா ஃபட்ஜ், வால்நட் ஃபட்ஜ், ஃப்ரூட் அண்ட் நட்ஸ், நட் மில்க், ஹோல் நட், ரோஸ்டட் அல்மாண்ட்… இப்படி இருநூறுக்கும் மேற்பட்ட வெரைட்டீஸ் இதுல இருக்கு.”
“நீங்க சொல்றதப் பார்த்தா… இந்தச் சாக்லெட் உருவான கதை கண்டிப்பா சுவாராசியமாத்தான் இருக்கும். நடந்து கிட்டே நீங்க அந்தக் கதையைச் சொன்னா நான் மறந்துடுவேன். அதோ… அந்த இடத்துல அழகான புல்வெளி தெரியுது. அங்கே உட்கார்ந்து, சாலெட் சாப்பிட்டுக்கிட்டே பேசுவோமே…” என்ற ஷ்ரவ்யா, ஆனந்தை அங்கே அழைத்துச் சென்றாள்.
“சரி, இப்போ நீங்க சொல்லக்கூடிய ஊட்டி சாக்லெட்டுக்கும் பிரிட்டிஷ்காரங்களுக்கும் சம்பந்தம் இருக்கா என்ன?”
“எப்படி கரெக்ட்டா கண்டுப்பிடிச்ச?”
“உங்ககூட பேசிப் பேசியே நானும் அறிவு ஜீவி ஆயிட்டேன்.”
“என்னை ரொம்பப் புகழ்றேன்னு நினைக்கிறேன் ஷ்ரவ்யா. ஆனா, எனக்கு இந்தப் புகழ்ச்சி எல்லாம் பிடிக்காது.”
“பில்டப் கொடுத்தது போதும்… இப்போ ஊட்டி சாக்லெட் கதையை சொல்லுங்க…”
“இதோ சொல்றேன்…” என்ற ஆனந்த், ஊட்டி சாக்லெட் வந்த கதையை தெளிவாகச் சொன்னான்.
“இந்தியாவைக் கைப்பற்றி ஆங்கிலேயே ஆட்சி முறையை அமல்படுத்திய பிரிட்டிஷ்காரர்கள் சென்னையைத் தலைநகரமாகக் கொண்டிருந்தாலும், அவர்களுக்கு என்னவோ பிடித்த இடம் என்றால் அது ஊட்டிதான். அங்கு நிலவிய குளுகுளு சூழ்நிலை அவர்களுக்குப் பிடித்து இருந்தாலும், ஒரு விஷயத்தில் மட்டும் அவர்கள் நிறையவே ஏங்கினர். அதற்குக் காரணம், சாக்லெட்! இங்கிலாந்தில் அவர்கள் நினைத்த இடத்தில், நினைத்த நேரத்தில் விதவிதமான சாக்லெட்களை வாங்கி ருசிக்கலாம். ஆனால், ஊட்டிக்கு வந்து குடியேறிய ஆங்கிலேயர்களுக்கு சாக்லெட் நினைத்த மாத்திரத்தில் கிடைக்கவில்லை.
“சஸ்பென்ஸ் வெச்சுப் பேசினது போதும். அப்படி என்ன நன்மைதான் இந்த சாக்லெட் சாப்பிடுறதுனால கிடைக்குது?” ஆர்வமாகக் கேட்டாள் ஷ்ரவ்யா.
“ஊட்டி ஹோம் மேட் சாக்லெட், ப்யூர் சாக்லெட்ங்கறதுனால அதைத் தொடர்ந்துச் சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளக்கும். இதயத்துக்கும் நல்லது. சர்க்கரை நோயாளிகளும் இதை சாப்பிடணும்ங்கறதுக்காக சுகர் ஃப்ரீ சாக்லெட்டும் இப்போ கிடைக்குது. இந்தச் சாக்லெட்டோட ஸ்பெஷாலிட்டி என்னான்னா… இந்தச் சாக்லெட்டை இங்கே தவிர, வேறு எங்கேயும் தயாரிக்க முடியாது.”
ஆனந்த் இப்படிச் சொன்னதும், “ஏன் தயாரிக்க முடியாது” என்று அப்பாவியாய் கேட்டாள் ஷ்ரவ்யா.
“ஊட்டியில தயாராகுற ஹோம் மேட் சாக்லெட்களை வெறும் கண்ணாடியில் வெச்சுதான் விற்கிறார்கள். ஊட்டியோட க்ளைமேட் காரணமா அது கெட்டுப் போகாம அப்படியே இருக்கும். ஆனா, மற்ற ஊர்கள்ல இதை செஞ்சா, ஃபிரிட்ஜ்ல வெச்சிருந்தா மட்டும்தான் அப்படியே இருக்கும். ஃபிரிட்ஜில் இருந்து வெளியே எடுத்தா… ஐஸ்கிரீம் மாதிரி உருகிப் போயிடும்…”
ஊட்டி ஹோம் மேட் சாக்லெட் உருவான கதையை விலாவாரியாகச் சொன்ன ஆனந்த்தை, ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஷ்ரவ்யா.