Home » அதிசயம் ஆனால் உண்மை » நாவல்கள் » இரண்டாம் தேனிலவு – 17
இரண்டாம் தேனிலவு – 17

இரண்டாம் தேனிலவு – 17

மாலை 5.30 மணிக்கெல்லாம் நன்றாக இருட்டத் துவங்கியிருந்தது . இயற்கை தீட்டிய பச்சை வண்ணங்களுக்கு மத்தியில் எழுந்திருந்த கட்டிடங்கள் மீது மோதிக் கொண்டு நின்றிருந்த மேகக்கூட்டங்கள்… யூகலிப்டஸ் இலைகளை இறுக்கித் தழுவி, அதன் வாசனையை அள்ளிக் கொண்டு வந்த குளிர்ந்த காற்று… மேற்கு சிவக்காத வானம்… என்று ஊட்டியின் அன்றைய க்ளைமேட் ஆனந்தையும் ஷ்ரவ்யாவையும் உற்சாகம் கொள்ளச் செய்தது. பயணம் தந்த களைப்பை மறந்து அந்த உற்சாகத்தில் திளைத்திருந்தனர் அவர்கள். அப்போதுதான் ஆனந்துக்கு அந்த ஞாபகம் வந்தது.

“ஷ்ரவ்யா… நம்ம டிரெஸ் எல்லாமே வண்டியோட போய்விட்டதே… இன்னிக்கு நைட்டுக்கு மட்டுமல்ல, இன்னும் ஒரு வாரத்துக்குப் போட்டுக்க டிரெஸ் வேணும் இல்லீயா-?”

“டிரெஸ் இல்லாட்டாலும் நான் அட்ஜெஸ் பண்ணிப்பேன்.”

“ம்ம்ம்… மெட்ராஸ் குசும்பு?”

“குசும்பும் கிடையாது, குழம்பும் கிடையாது. உண்மையாத்தான் சொல்றேன்…” என்ற ஷ்ரவ்யா, சற்றே முகத்தை திருப்பிக் கொண்டு ஆனந்துக்குத் தெரியாமல் மெல்லியதாகச் சிரித்து வைத்தாள்.

”சரி, நக்கலா சிரிச்சது எல்லாம் போதும். வா… நல்ல டிரெஸ்ஸா ஆளுக்கு ரெண்டு வாங்கிட்டு வருவோம்.”

“எனக்கு ரெண்டே ரெண்டு டிரெஸ்தானா?”

”ரெண்டு இல்லம்மா… இருபது கூட எடுத்துக்கலாம். முதல்ல எந்திருச்சி வெளியே வா.”

அடுத்த நிமிடமே, ரூமை பூட்டிவிட்டு வெளியேறியிருந்தனர் இருவரும்.

பொட்டானிக்கல் கார்டன் செல்லும் சாலை வழியே ஆனந்தும் ஷ்ரவ்யாவும் ”வாக்கிங்” சென்றபடியே நல்ல துணிக்கடை தென்படுகிறதா என்று பார்த்தார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த மாதிரியான கடைகள் இல்லை. வேறு வழியில்லாததால் இரண்டு தளங்களில் இயங்கி வந்த ஒரு துணிக் கடைக்குள் புகுந்தனர். மற்ற ஆடைகளைக் காட்டிலும் ஸ்வெட்டர்களையே அதிகமாக வாங்கிக் குவித்து வைத்திருந்தனர். ஜீன்ஸ் பேண்ட், டீ- சர்ட்டைத் தேடினான் ஆனந்த். அவன் எதிர்பார்த்த வெரைட்டிகள் கிடைக்கா விட்டாலும், வாங்கியே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் தலா நான்கு ஜீன்ஸ், டீ – சர்ட்களை தனக்கு தேர்வு செய்தான்.

ஷ்ரவ்யாதான் ஆடையை தேர்வு செய்யாமல் குழப்பத்தோடு நின்றிருந்தாள்.

”என்னாச்சு ஷ்ரவ்யா-? உனக்கு டிரெஸ் செலெக்ட் பண்ணலீயா?”

“எந்த டிரெஸ்ஸுமே குவாலிட்டியா இல்ல. ஆனால், விலை மட்டும் ரெண்டு, மூணு மடங்கு அதிகமா வெச்சியிருக்காங்க.”

“இங்க மட்டுமில்ல, ஊட்டியில எந்த கடையில போயி டிரெஸ் வாங்கினாலும் இப்படித்தான் விலை இருக்கும். சென்னை சில்க்ஸ், போத்தீஸ் ரேஞ்சுக்கு இங்கே எதிர்பார்க்க முடியாது, எதிர்பார்க்கவும் கூடாது.”

ஆனந்த் இப்படிச் சொன்னதால் சுடிதார் செக்சன் பக்கம் போனாள் ஷ்ரவ்யா.

“ஷ்ரவ்யா..” திடீரென்று அழைத்தான் ஆனந்த்.

“மெரூன் கலர் சேலை, எல்லோ கலர் ஜாக்கெட், தலைநிறைய மல்லிகைப்பூ வெச்சிட்டு வந்தா நீ தேவதை மாதிரி இருப்ப. அந்த அழகான கோலத்துல உன்னப் பாக்கணும்னு ஆசைப்படுறேன். நீ விருப்பப்பட்டா, அந்தக் கலர் சேலையை செலெக்ட் பண்ணேன்.”

“செலெக்ட் பண்ணுறதுல பிரச்னை இல்ல ஆனந்த். ஆனா, ஜாக்கெட்டை எங்கேப் போய் தைக்கக் குடுக்குறது?”

“ஆமால்ல… நான் மறந்துட்டேன். பரவாயில்லை… உனக்குப் பிடிச்ச டிரெஸ்ஸையே செலெக்ட் பண்ணிக்கோ…” என்ற ஆனந்த், தான் தேர்வு செய்த ஆடைகளை எடுத்துக் கொண்டு பில் போடச் சென்றான். சற்றுநேரத்தில் ரெடிமேட் சுடிதார் இரண்டும், ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் ஆகியவை தலா இரண்டும், சில உள்ளாடைகளும் வாங்கிக் கொண்டாள். கூடவே, வெட்டிங் நைட்டி இரண்டும் வாங்கி இருந்தாள். அதுவும் சிவப்பு நிறத்தில்!

பில் போடும்போதுதான் அந்த நைட்டிகளைப் பார்த்தான் ஆனந்த். மிகவும் கவர்ச்சியாகத் தெரிந்தன.

“இவ, இதை எதுக்கு வாங்கியிருக்கா” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும், அதுபற்றிக் கேட்க முடியாமல் பில்லுக்குரிய பணத்தைக் கொடுத்தான். பில் தொகை 10 ஆயிரம் ரூபாயை நெருங்கியிருந்தது.

ஆடைகளை வாங்கிக் கொண்டு கடையைவிட்டு வெளியேறிய பிறகுதான் ஷ்ரவ்யாவிடம் அந்தக் கேள்வியைக் கேட்டான் ஆனந்த்.

“ஷ்ரவ்யா… நீ ரெண்டு நைட்டி வாங்கி இருந்தீயே… அது ரொம்பவும் அழகா இருந்துச்சு.”

“ஆமாங்க… அதனாலத்தான் நானும் அதை வாங்கினேன். அதோட பேரு, மேரேஜ் நைட்டி.”

“சாதாரணமா எல்லோரும் அணியக்கூடிய நைட்டி கூட அழகா இருக்குமே.வேற எதுக்கு இந்த மேரேஜ் நைட்டி?”

“என்ன ஆனந்த்… ஒண்ணும் தெரியாத மாதிரி கேட்குறீங்க. இன்னிக்கு காலையிலதானே நமக்கு கோயில்ல கல்யாணம் நடந்துச்சு. அதனாலதான் இந்த நைட்டி!”

ஷ்ரவ்யா இப்படியொரு பதிலை சொல்வாள் என்று எதிர்பார்க்கவில்லை ஆனந்த். மவுனமாகவே அவளுடன் நடந்தான்.

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top