மேட்டுப்பாளையம் ப்ளாக் தண்டரைத் தாண்டி ஊட்டியை நோக்கி மலையேறத் துவங்கியிருந்தது ஆனந்தும், ஷ்ரவ்யாவும் பயணித்த கார்.
நீண்டு வளர்ந்த பாக்கு மற்றும் யூகலிப்டஸ் மரங்கள், கிளைகள் பரப்பித் தாறுமாறாக வளர்ந்திருந்த காட்டுப் பலா, தேக்கு மரங்களின் நிழலில் கோடை வெயில் கொஞ்சம் கொஞ்சமாக விடை பெற்றுக் கொண்டு வந்தது.
அடிக்கடி குறுக்கிட்ட கொண்டை ஊசி வளைவுகள் வழியாக பயணித்த போதெல்லாம் கரு மேகங்களை எளிதில் தொட்டு விடலாம் போலிருந்தது. ஆங்காங்கே மரங்களில் அமர்ந்து கொண்டு சேட்டைகளில் ஈடுபட்டிருந்த குரங்குகளும் இனம் புரியாத மகிழ்ச்சியைத் தந்தன.
மலை மேல் ஏற… ஏற… நகரத்து ஏ.சி.க்களில் இருந்து வெளிப்படும் குளிர்ந்த காற்றை, அங்கே இயற்கையன்னை இலவசமாக தந்தாள்.
ஷ்ரவ்யா இப்போதுதான் முதன் முறையாக ஊட்டிக்குச் செல்கிறாள் என்பதால் அவள் முகத்தில் ஏகத்துக்கும் மகிழ்ச்சி அப்பிக் கிடந்தது. அதை கவனித்துவிட்டான் ஆனந்த்.
”ஷ்ரவ்யா… நீ ரொம்பவும் உற்சாகமாக இருப்பது போல் தெரிகிறதே…?”
”ஆமாம்… இதுக்கு முன்னாடி நான் ஊட்டிக்கு வந்தது கிடையாது. சினிமாக்களில் ஊட்டி அழகைப் பார்த்ததோடு சரி. இப்படியொரு இன்பம் கிடைக்கும் என்று தெரிந்திருந்தால் எப்போதோ ஊட்டிக்கு வந்திருப்பேன். கூடவே, ஒவ்வொரு வருடமும் தவறாமல் ஊட்டியில் ஆஜராகியிருப்பேன்.”
”இப்போதுதான் ஊட்டிக்கு வந்தாகி விட்டதே… இனி, ஒவ்வொரு தடவையும் ஊட்டிக்கு வந்துவிடு; அவ்வளவுதானே!”
”நாம் இன்னும் ஊட்டிக்குச் செல்லவில்லை. அதற்குள் இயற்கை இவ்வளவு ஜில்லென்று இருக்கிறதே… ஊட்டிக்குப் போக இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?”
”மலையேறத் துவங்கி அரை மணி நேரம்தானே ஆகிறது? இன்னும் ஒன்றரை மணி நேரம் பயணித்தால் ஊட்டியில் நாம் தங்கும் லாட்ஜ் முன்பு காரில் போய் இறங்கிவிடலாம்.”
”என்னது… இன்னும் ஒன்றரை மணி நேரமா? இப்போதே நாம் ஒரு மலை மீது முழுவதுமாக ஏறிவிட்டோமே… அப்படியென்றால், நாம் இன்னும் நிறைய மலைகளை ஏறிக் கடக்க வேண்டுமா?”
”ஆமாம்… இன்னும் நிறைய மலைகளைத் தாண்டினால்தான் ஊட்டிக்குப் போக முடியும்…” என்ற ஆனந்தை, திடீரென்று முகத்தில் பல கேள்விகளை வைத்துக்கொண்டு பார்த்தாள் ஷ்ரவ்யா.
“என்னாச்சு ஷ்ரவ்யா? ஏதோ கேட்க நினைக்கிறாய்; ஆனால், வார்த்தைதான் வாய் வரை வந்து, அப்படியே நின்றுவிட்டது. எதைக் கேட்க நினைத்தாயோ, அதைத் தைரியமாகக் கேள்.”
“திடீரென்று எனக்கு ஸ்கூல் ஞாபகம் வந்தது.”
“அதற்கும், உன் கேள்விக்கும் என்ன சம்பந்தம்?”
“பெருசா ஒண்ணும் இல்லை. நான் ஸ்கூலில் படிக்கும்போது ஊட்டிக்கு மலைகளின் அரசின்னு இன்னொரு பெயர் இருப்பதாக படித்திருக்கிறேன். ஆனால், இந்த ஊட்டியை உருவாக்கியது யார் என்று தெரியாது. அதுபற்றி கேட்கலாம் என்று தோன்றியது. ஆனால், உங்களுக்கு அதுபற்றி தெரிய வாய்ப்பு இருக்கிறதா? என்று தெரியவில்லை. அதனால்தான் அமைதியாகி விட்டேன்.”
“இது சாதாரண மேட்டர். ஜர்னலிஸ்ட் ஆக இருந்து கொண்டு இதுவும் தெரியவில்லை என்றால் என்ன அர்த்தம்?”
“அப்படியென்றால் ஊட்டி வரலாற்றை சொல்லுங்களேன்… எனக்கு என்னவோ அதுபற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.”
“சரிங்க அம்மணி. உத்தரவு போட்டுட்டீங்க… இதோ விடையைச் சொல்றேன்…” என்ற ஆனந்த், ஊட்டியின் வரலாற்றை சொல்ல ஆரம்பித்தான்.
“கடல் மட்டத்தில் இருந்து 2,239 மீட்டர், அதாவது 7,347 அடி உயரத்தில் ஊட்டி என்கிற இந்த உதகமண்டலம் அமைந்துள்ளது. உதகமண்டலத்தைச் சுருக்கமாக உதகை என்றும் அழைப்பார்கள். ஊட்டி அமைந்துள்ள மாவட்டம் நீலகிரி என்று அழைக்கப்படுகிறது.” இதற்கு மேல் ஆனந்த்தை பேச விடாமல் தடுத்தாள் ஷ்ரவ்யா.
“நான் என்ன கேட்டேன்?”
“ஊட்டி வரலாறுதானே?”
“ஊட்டி வரலாறுதான். அதுக்காக, ஊட்டிக்கு உதகை, உதகமண்டலம்னு பெயர் இருக்குன்னு சின்னக் குழந்தைகளுக்கு சொல்ற விஷயங்களை எல்லாம் சொல்ல வேண்டாம். எனக்குத் தெரியாத மேட்டருக்கு வாங்க.”
“மறுபடியும் உத்தரவுங்க அம்மணி.”
“ஆமாம்… நான் முதல்லயே கேட்கனும்னு நினைச்சேன். என்ன… திடீர்னு அம்மணி இம்மணின்னு கோயமுத்தூர் பாஸையில கூப்பிடுறீங்க?”
“எல்லாம் ஒரு மரியாதைக்குதாங்க…”
“சரி, சரி… மரியாதை மனசோட இருந்தா போதும்…” என்ற ஷ்ரவ்யா, செல்லமாக ஆனந்தின் கன்னத்தைக் கிள்ளினாள். கன்னத்தைக் கிள்ளிய வேகத்தில் அவன் மடியில் விழுந்தும் விட்டாள். அவளைத் தடுக்க கைகளால் அணை போட்டான் ஆனந்த். அதில், அவனது கரங்கள் அவளது உடலில் ஏடாகூடமாகப் பட… சிலிர்த்துப் போய் சட்டென்று எழுந்துவிட்டாள்.
இவர்களது இன்பச் சேட்டைகள் கார் டிரைவரையும் ஒருமாதிரியாக நெளிய வைத்தது. இருக்கையில் வளைந்து நிமிர்ந்தவன், “இதற்குப் பிறகும் அந்தக் காட்சியைப் பார்த்தால் எதிரே வரும் வண்டி தெரியாமல் போய்விடும்; ஜாக்கிரதை!” என்று தன்னைத்தானே எச்சரித்துக் கொண்டான்.
“என்னாச்சு ஆனந்த்… ஊட்டி வரலாறு இன்னிக்கு இவ்ளோதானா?”
“நிறைய இருக்குத்தான்.”
“அப்படீன்னா சொல்லுங்க… அதை விட்டுட்டு தேவையில்லாதத பத்தி கற்பனை பண்ணிக்காதீங்க.”
“நீ என்ன சொல்றன்னு எனக்கு நல்லாவே புரியுது. இப்போ எதுவும் வேணாம்னு நினைக்கிறேன்…” என்றவன், “சரி… அதுபற்றி இப்போ பேசிக்க வேண்டாம். நேரா ஊட்டி வரலாறுக்கே வந்து விடுகிறேன்.”
“நீங்க சொல்றதுதான் கரெக்ட். ஊட்டி ஹிஸ்ட்ரிய முதல்ல சொல்லுங்க.”
“சரி…” என்ற ஆனந்த், தொண்டையை சற்று இறுமிக் கொண்டு, ஊட்டி புராணத்தை மறுபடியும் தொடர்ந்தான்.
“உதகமண்டலம் என்பதுதான் ஊட்டியோட ஆரம்ப கால பெயர். இந்தப் பெயர் வந்ததுக்கு பல காரணங்கள் சொல்றாங்க. ஒத்தைக் கல் மந்து என்ற பெயரே உதகமண்டலம் ஆனதா இங்கு இப்போதும் வாழும் மலைவாழ் மக்கள் சொல்றாங்க. மூங்கில் காடு இருந்ததாலும், நீர் அதிகம் இருந்ததாலும் அந்த பெயர் வந்ததா இன்னொரு தகவலும் உண்டு.
உதகம் என்றால் தண்ணீர் என்று பொருள். மண்டலம் என்றால் வட்ட வடிவம். அதாவது, வட்ட வடிவில் அமைந்துள்ள தண்ணீர் என்பதுதான் உதகமண்டலத்தின் பொருள். இப்படிப் பார்த்தால் உதகமண்டலம் என்பது அங்கிருக்கும் ஏராளமான ஏரிகளை குறிக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஒட்டெகமண்ட் எனவும் இது அழைக்கப்பட்டது. அதுவே சுருங்கி ஊட்டி ஆகிவிட்டது.
12-ஆம் நூற்றாண்டில் நீலகிரி மலையானது ஹோய்சாளர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. பிறகு, மைசூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த திப்பு சுல்தான் வசமானது. 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் கைக்கு மாறியது. அப்போது கோவை மாவட்ட ஆளுநராக இருந்த ஜான் சுலிவன் என்பவர், இப்பகுதியின் குளுமையான தட்பவெட்ப நிலையை விரும்பி அங்கு தங்க நினைத்தார். இதையடுத்து, அங்கிருந்த தோடர், இரும்பா, படுகர் போன்ற பழங்குடியின மக்களிடம் இருந்து நிலங்களை வாங்கினார். இவரே உதகமண்டலத்திற்குச் சென்ற முதல் வெள்ளையர் ஆவார். அடுத்த சில ஆண்டுகளில் அவர் அங்கு ஒரு வீட்டை கட்டினார்.
அதன்பிறகு ஆங்கிலேயர்கள் அதிக அளவில் ஊட்டிக்கு படையெடுத்தார்கள். அங்கே மக்கள் தொகை அதிகரித்தது. கி.பி. 1855ல் இது நகராட்சியாக மாறியது. பின்னாளில், ஊட்டிக்கு மலை ரெயில் பாதையும் போடப்பட்டு, ரெயில் போக்குவரத்து துவங்கியது. இங்கிலாந்தில் உள்ள காலநிலை ஊட்டியில் நிலவியதால், ஆங்கிலேயர்கள் கோடைக்காலத்தில் அன்றைய மதராஸில் இருந்து ஊட்டிக்கு தங்களது தலைநகரத்தை மாற்றிக்கொண்டு ஆட்சி செய்திருக்கிறார்கள்…” மூச்சுவிடாமல் ஊட்டி வரலாற்றை ஷ்ரவ்யாவுக்கு சொல்லி முடித்தான் ஆனந்த்.
அப்போது, கார் டிரைவர் திடீரென்று பேசத் துவங்கினான்.
“ஸார்… ஊட்டிக்கு இவ்ளோ பெரிய வரலாறு இருக்குன்னு எனக்கே தெரியாது ஸார். ஆனா, நீங்க கைடு மாதிரி புள்ளி விவரமாச் சொல்றீங்க. எங்கே இருந்து இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டீங்க ஸார்…?” என்றான் அவன்.
“அப்போ, இவ்ளோ நேரமாக நாங்க என்ன பேசிட்டு வந்தோம்னுதான் கவனிச்சிட்டு இருந்தீங்களா? இந்த மலைப் பயணத்துல இது ஆகாது. பேசாம வண்டியை ஓரம் கட்டுங்க.”
ஆனந்தின் பேச்சில் கண்டிப்பு தெரிந்தது.