“மாப்ள திடுதிப்புன்னு ரெண்டு பேரும் ஊட்டிக்குப் போறீங்க. அங்கே எங்கே தங்குவீங்க? ரெண்டு பேரும் தனியா இருக்குறதுனால எந்த பயமும் இல்லீயே…” பஸ் புறப்படுவதற்கு முன்னர் தனது சந்தேகத்தை கேட்டாள் பாக்கியம்.
“பயப்படாதீங்க அத்த. இந்த ஹனிமூன் டிரிப் என்னோட மெட்ராஸ் ப்ரெண்ட்ஸ்ங்க அரேஞ் பண்ணினது. என்னோட மேரேஜிக்கு கிப்ட்டா, ஊட்டியில் உள்ள ஸ்டார் ஓட்டல் ஒன்றில் 5 நாட்களுக்கு ரூம் புக் செஞ்சிட்டாங்க. ஊட்டிய சுத்திப் பார்க்க ஆசைப்பட்டா, உடனே கார் வந்திடும். சாப்பிடனும்னாகூட அதுவும் போன்ல சொன்னாலே போதும்” என்றான் குணசீலன்.
“அப்போ பயப்பட எதுவும் இல்லன்னு சொல்றீங்க.”
“ஆமா அத்த. மறுபடியும் சொல்றேன். நீங்க எதையும் நினைச்சுப் பயப்பட வேண்டாம். புதுசா மேரேஜ் ஆன எல்லோரும் போகக்கூடிய இடம்தான் ஊட்டி. 5 நாள் முடிஞ்சதும் திரும்பி வந்துடப் போறோம். அதுக்கு அப்புறம் இங்கே ஒரு வாரம் இருந்துட்டு, அடுத்து நேரா சென்னைக்குத்தான்.”
தனது இரண்டு வார டூர் பிளானை மாமியாரிடம் சொல்லி விட்டான் குணசீலன். அவன் முகத்தில் ஊட்டிக்குப் போகிறோம் என்கிற மகிழ்ச்சி நிறையவே கொட்டிக் கிடந்தது. ஆனால், அமுதாதான் வழக்கம்போல் மூஞ்சை தூக்கி வைத்துக்கொண்டு மவுனமே உருவாக அமர்ந்திருந்தாள்.
சரியாகக் காலை 10 மணி ஆனதும் பேருந்தை நகர்த்தினார் டிரைவர். பாக்கியமும், அவரது கணவர் தங்கதுரையும் டாடா சொல்ல… பதிலுக்குப் புதுமணத் தம்பதியர் இருவரும் டாடா சொன்னார்கள். பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த சொகுசுப் பேருந்து தங்க நாற்கரச் சாலையில் கோவை நோக்கி வேகமாகப் பயணித்தது.
காதில் ஹெட் செட்டை மாட்டிக்கொண்டு சூரியன் எப்.எம்.மில் பாட்டு கேட்டுக் கொண்டே வந்தாள் அமுதா. மெலடி சாங்ஸ் அவளுக்கு பிடிக்கும் என்பதாலோ என்னவோ, அப்போது அவள் கேட்டுக் கொண்டிருந்த நிகழ்ச்சி முழுவதும் மெலடி காதல் பாடல்களாகவே ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.
பாடல் ஒலிபரப்பாகி முடிந்ததும் நேயர்கள் லைவ் ஆகத் தொடர்பு கொண்டு, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய இளம்பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒலிபரப்பான நிகழ்ச்சி காதலர்களுக்கானது என்பதால் காதலர்களே பேசினார்கள்.
ஒரு பெண் பேசியது அமுதாவின் ஆழமான நெஞ்சைத் தொடுவதாக இருந்தது.
“வணக்கம். நீங்க எங்கேயிருந்து பேசுறீங்க.”
“நாங்குநேரி பக்கத்துல உள்ள ஒரு கிராமத்துல இருந்து பேசுறேங்க.”
“நீங்க நிகழ்ச்சியில என்ன சொல்லப் போறீங்க. குறிப்பாக, நீங்க யாரை லவ் பண்ணுறீங்க?”
“என்னோட மாமாப் பையனத்தான் லவ் பண்ணுறேன்.”
“சரி, உங்க பெயரை நாங்க தெரிஞ்சிக்கலாமா?”
“வேண்டாங்க…”
“சரி, அப்போ உங்க லவ்வர் பெயரையாவது சொல்லலாமே…”
“அவரு பேரு அசோக்.”
“உங்க பெயரைக் கேட்டா சொல்ல மாட்டேங்குறீங்க. ஆனா, உங்க லவ்வரோட பெயரை மட்டும் எப்படிச் சொல்றீங்க?”
“அது, அவருக்கு நான் வெச்ச பெயரு.”
தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பெண், இப்படிச் சொன்னதும், தன்னை அறியாமலேயே சீட் நுனிக்கு வந்து அமர்ந்தாள் அமுதா.
“உங்களோட லவ்வர் அசோக் கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம்னா எதை சொல்வீங்க?”
“நல்லாப் பேசுவாரு.”
“எல்லாப் பசங்களும், பொண்ணுங்ககிட்ட நல்லாப் பேசுவாங்களே…”
“நான் அப்படிச் சொல்ல வரல. நிறைய விஷயங்கள் பேசுவாரு. அவர் அவ்ளோ புத்திசாலி.”
“உங்க லவ்வர் புத்திசாலின்னா, கண்டிப்பா நீங்களும் புத்திசாலியாத்தான் இருப்பீங்க. நான் சொல்றது சரிதானே?”
“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. நான் கிராமத்துப் பொண்ணு. அவரும் கிராமத்துல பொறந்திருந்தாலும் இப்போ சிட்டியில வேலை பாத்துட்டு இருக்குறாரு.”
“என்ன வேலை பாக்குறாருன்னு சொல்லலாமா?”
“அய்யோ… நான் இப்ப உங்க கிட்ட பேசுறது எங்க வீட்டுல யாருக்குமே தெரியாது. விட்டா, நீங்க முழு அட்ரஸையும் வாங்கிடுவீங்க போல இருக்கே…”
“அப்படீன்னா… நாம பேச்ச மாத்திக்கலாம். நீங்க உங்க லவ்வர் கிட்ட எப்போ ஐ லவ் யூன்னு சொன்னீங்க-?”
“இன்னும் சொல்லல…”
“அவரு…”
“அவரும் சொல்லல.”
“வேற எப்படி, அந்தப் பையனை நீங்க லவ் பண்ணுறதா சொல்றீங்க?”
“ஐ லவ் யூன்னு சொன்னா மட்டும் அது காதல் இல்லீங்க. மனசுக்குள்ள பட்டாம்பூச்சி எல்லாம் பறக்கும்னு சொல்வாங்களே… அதுவும் காதல் இல்லீங்க. ரெண்டு பேரும் முழுமையா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டாலே அது தாங்க உண்மையான காதல். எங்களோட காதலும் அப்படிப்பட்டதுதான்.”
“நீங்க தொடர்பு கொண்டு பேசினதுக்கு ரொம்ப நன்றி. ஒவ்வொருத்தரோட காதலும் ஒவ்வொரு விதம்தான்னு சொல்லுது, கடைசியாக தொடர்பு கொண்டு பேசிய காலரோட காதல். காதல் பத்தி ரொம்ப அருமையா அவங்க சொன்னாங்க. அவங்களுக்காக இப்போ அழகான ஒரு சாங்க் வருது. கேட்டு என்ஜாய் பண்ணுங்க. தொடர்ந்து சூரியன் எப்.எம்.ல இணைஞ்சியிருங்க…”
சூரியன் எப்.எம். பெண் ரேடியோ ஜாக்கி பேசி முடிக்கவும், இசைஞானி இளையராஜா இசையில் வெளியான ஒரு பாடல் ஒலிபரப்பானது. கண்களை மூடி அந்த பாட்டை மனதிற்குள் கேட்டுக் கொண்டிருந்தாள் அமுதா. அந்தப் பாடல் முடியவும், ஹெட் செட்டை காதல் இருந்து எடுத்தாள். அவளது கண்களின் ஓரம் லேசாக ஈரமாகியிருந்தது.