கிணற்றுத் தண்ணீர் கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருப்பது ஏன்?
தரைமட்டத்திற்குக் கீழே சுமார் 50-60 அடி ஆழத்தில் கிணற்று நீர் கிடைக்கிறது. மண் அரிதில் வெப்பக்கடத்தி; எனவே கிணற்றின் ஆழத்தில் உள்ள நீர், ஏறக்குறைய 20-25 செ.கி. வெப்பநிலையில் எப்போதும் இருக்கிறது எனலாம். கிணற்றின் வெளிப்புற வெப்பம் பருவ காலங்களுக்கு ஏற்ப மாறுதல் அடையும். குளிர் காலத்தில் சில பகுதிகளின் சுற்றுச்சூழல் வெப்பநிலை 4-5 செ.கி. அளவுக்கும் செல்வதுண்டு. அந்நிலையில் கிணற்றுநீர் 20-25 செ.கி. அளவில் இருப்பதால், அது வெதுவெதுப்பான நீராக உணரப் பெறுகிறது.
இதற்கு நேர்மாறான நிலை கோடைக்காலத்தில் உண்டாகிறது. கோடையில் சில பகுதிகளின் வெப்பநிலை 40-45 செ.கி. அளவில் இருப்பதை நாம் அறிவோம். அக்காலங்களிலும் கிணற்றுநீர் 20-25 செ.கி அளவில் இருப்பதால், சுற்றுச்சூழல் வெப்பநிலையோடு ஒப்பிடுகையில், கிணற்றுநீர் குளிர்ந்த நீராக நம்மால் உணரப் பெறுகிறது.
ரோபோ தொழில்நுட்பத்தில் இருதய அறுவை சிகிச்சை
ரோபோ உதவியுடன் இரண்டு பேருக்கு இருதய அறுவை சிகிச்சையை சென்னை மருத்துவர்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இருதய அறுவை சிகிச்சையில் இது ஒரு முக்கியமான திருப்பம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரோபோ உதவியுடன் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையினால் நோயாளிகளுக்கு சில வசதிகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இம்முறையை பயன்படுத்துவதால் நோயாளிக்கு வலி குறையும் என்றும், அறுவை சிகிச்சையின்
போது விரையமாகும் இரத்தத்தின் அளவும் கட்டுபபடுத்தப்படுவதால் இது நோயாளிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
இந்த அறுவை சிகிச்சை முறையில் சென்னையில் உள்ள செட்டிநாடு ஹெல்த் சிட்டி மருத்துவமனை மருத்துவர்கள் இரண்டு இளைஞர்களுக்கு இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சையின் போது குறைந்த அளவு திசுக்களே
சேதமடைவதால் குறைந்த அளவே இரத்த விரையம் ஏற்படுகிறது. இதனால் நோயாளிக்கு
குறைந்த அளவே இரத்தம் செலுத்தினால் போதுமானது.
இந்த சிகிச்சை முறையினால் குறைந்த அளவு பகுதிகள்தான் பாதிக்கப்படுகின்றன. அதனால் அறுவை சிகிச்சையின் போது போடப்படும் தையல் உறுதியாகவும் இருக்கும் என்று இம்
மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் தெரிவித்துள்ளார்.
விண்வெளிக் கலங்களை ஏவும்போது, இறங்குமுகமாக எண்களைக் கூறுவது ஏன் ?
விண்வெளிக்கலங்களை ஏவுவதற்கு முன்னர் அதனுடைய எல்லா அமைப்புகளும் சரியாக உள்ளனவா என்பதை ஐயத்திற்கு இடமின்றி அறிந்திடுவது மிக முக்கியம்; ஏதேனும் ஒரு
படிநிலையில் (stage) நிகழும் சிறு தவறும் பேரிழப்பை உண்டாக்கிவிடும். எனவே பொறியாளர்கள் விண்கலங்களைச் செலுத்தும் முறையைப் படிப்படியாக மேற்கொள்ளுகின்றனர். இந்தப் படிநிலைகளின் எண்ணிக்கையை 10, 9, 8, 7, ———— 0 என இறங்குமுகமாக (count down) கணக்கிடுகின்றனர்.
இதில் ஒவ்வொரு எண்ணும் ஒரு படிநிலையைக் குறிப்பதாகும். கடைசி எண்ணான பூஜ்யத்தைக்
குறிப்பிடும் போது கலம் விண்வெளியில் செலுத்தப்பட்டுவிட்டது என பொருள்படும். இந்த இறங்குமுக எண்ணிக்கையின்போது கலத்தில் ஏதேனும் தவறு கண்டறியப்பட்டால் எண்ணுவது நிறுத்தப்பட்டு, தவறை நீக்கியபின் மீண்டும் எண்ணுவது தொடரும்.
ஒவ்வொரு படிநிலையிலும் விண்கலம் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்வதற்கும், பூஜ்யத்தை அடைந்தபின் கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்பதை அறியவும் இறங்குமுகமாக எண்ணும் முறை மிக சிறந்ததாகக் கருதப்படுகிறது. பூஜயம் என்பது ஒரு இறுதி நிலை.
மாறாக பூஜ்யம் தொடங்கி வளர்முகமாக எண்ணத் தொடங்கினால் இறுதிநிலை என்று எந்த எண்ணைக் கூற இயலும்; எல்லாப் படிநிலைகளும் சரிபார்க்கப்பட்டனவா என்பதை அறுதியிட்டுக்கூற இயலாமல் குழப்பம்தான் மிஞ்சும்; எனவேதான் இறங்குமுக எண்ணிக்கை மேற்கொள்ளப்படுகிறது.