அமுதன் நம்பிக்கை இழந்தான். அவனது விழிகள் மெல்ல மூட ஆரம்பித்தன. அவனது அம்மாவை நினைத்து கண்ணீர் கொட்டியது. கைகளை விடதுணிந்த நேரம் அவனுக்கு ஓர் குரல் கேட்டது.
அமுதா… நீ இறக்கமாட்டாய்… கையை விட்டுவிடாதே..
அசரீரி மீது அவனுக்கு நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லை ஆனால் அன்று அவனதை நம்பினான். சுற்றும் முற்றும் தேடிப்பார்த்தான் கோபியும் விகியும் மட்டுமே பேயரைந்ததைப்போல் இருந்தனர். கொஞ்சம் அவனுக்கு தைரியம் பிறந்தது . மூடிய கண்களை நன்றாக திறந்து தேடினான். ஒன்றும் புலப்படவில்லை.
மீண்டும் அதே குரல் கேட்டது. இந்தமுறை அது அவனை சிந்திக்க விடாமல் தொடர்ந்து பேசியது.
அமுதா.. உன் அம்மா எங்கே.. அவள் புன்னகையை நினைத்துக்கொள்..வேறெதையும் கவனத்தில் கொல்லாதே…நான் யாரென்பதையும் யோசிக்காதே…உன் கையை பார்.. இப்போது அந்த துளை நன்கு அகலமாக உன் கைக்கு ஏற்றவாறு மாறும்.. இனி உன் கை சிறிது கூட வலிக்காது..மற்றொரு கையினை எடுத்து நீந்த முயற்சி செய்.. கவனத்தை சிதறவிடாதே. அனைத்தையும் உன்னால் சாதிக்க முடியும்.. உனக்கு நேரே தெரியும் நீரோட்டத்தை பார்.. மெல்ல வளைந்து வளைந்து ஓடும் ஆற்றினை நினை. ஆகா என்ன அழகு உன் தேவதை.. அவளது கள்ளசிரிப்பு.. அவளை முதன் முதலில் கண்டபோது என்ன நினைத்தாய்.. அவள் விழியின் தாக்கம் எப்படி இருந்தது. வா மெல்ல மெல்ல முன்னேறி நீந்தி வா..
இப்படி அந்த குரலுக்கு குழந்தை போல் தலையாட்டி அதனை உற்று கேட்டுக்கொண்டிருந்தான்..இவ்வாறாக இரண்டு நிமிடம் கரைந்தது. நீரின் ஓட்டம் மாறியது.. பின்னே இழுத்தவர் விடுப்பு எடுத்துக்கொண்டது போல அமுதனின் உடல் முன்னோக்கி தள்ளப்பட்டது. ஆனாலும் அமுதானால் நீந்த முடியவில்லை புதிதாய் நீச்சல் பழகுபவர் போல கையை தப் தப் என நீரின் மீது அடித்துக்கொண்டே நீரின் ஓட்டத்தில் சென்றான். அவனது கால்கள் தரையை தொட ஏங்கின. எப்படியோ அவனை ஆழமில்லா பகுதியில் கொண்டு சென்று தள்ளி விட்டு தண்ணீர் அதன் பயணத்தை தொடர்ந்தது.
அமுதனின் கால்கள் தரையை தொட்டவுடன் அப்படியே கரையில் கை வைத்து சாய்ந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டான்.
ஒன்று
இரண்டு
இரண்டு நிமிடத்திற்கு பிறகு கண்களை விழித்தான். பெரு மூச்சு இன்னும் நிற்காமல் மூச்சு வாங்கியது.
“மச்சான் ரொம்ப பயந்துட்டேன் டா… அவர்மட்டும் இல்லைனா..” என கோபி சொல்லி முடிப்பதற்குள்
அமுதன் திரும்பி யாரையோ பார்த்து கரையேறி வேகமாய் மறு கரைக்கு சைபர் ஐ தாண்டி ஓடினான்..அங்கே ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் போய்க்கொண்டிருந்தார்.
“ஐயா….”
அவர் திரும்பினார். அவனது பள்ளிகூட தமிழ் ஐயா நின்றிருந்தார்.
இன்றும் அவரிடம் புன்னகை மட்டும் பதிலாக வந்தது.
“நன்றி ஐயா… நானே உங்கள வந்து பாக்கணும் நு நெனைச்சேன்..”
“எதுக்குப்பா ” என வினவினார்.
அமுதான் விடுதியில் நடனத்தினை முழுவதும் கூறினான்.
“இப்பவும் பயப்படுறியா ?”
இல்லை என்பது போல் தலையை மட்டும் ஆட்டினான்.
“எங்கே.. மீண்டும் அந்த நீரில் போய் குதி..'” என்றார்.
அமுதன் அருகில் வேகமாய் சென்றான். நீரினை கண்டதும் அவனது கால்கள் நடுங்கின, கைகள் பயங்கரமாக வலிக்கதொடங்கின. திரும்பி அவரை பார்த்தான்.
சிரிப்புடன்..”பயம் உடனே போகாதுப்பா.. போகவும் கூடாது. அதுவும் உயிர் பயம் எப்பவும் இருக்கணும்.. அப்பத்தான் இந்த வாழ்கை நிலையில்லை என்பதை நீ புரிஞ்சுக்குவ. எதையும் முறையா கத்துக்கணும் னு நெனைப்ப.. ஆனாலும் அப்பப்ப நீ அந்த பயம் கூட விளையாடி பாக்கணும் அது உன் வீரத்தை செம்மையாக்கும். தப்பு செய்ய கூடாதுங்கற பயம் என்னைக்கும் உன் மனசுல இருக்கணும்.. அது எந்த விசயமா கூட இருக்கலாம்.கெட்டது செய்ய பயப்படனும் நல்லது செய்ய எவனுக்கும் பயப்பட கூடாது.
இதுக்கு தான் அன்னைக்கே திருக்குரள மனப்பாடம் பண்ணாத வாழ்கைல நெறியா எடுத்துக்கோ னு சொன்னேன்.!!”
இப்போது அவனுக்கு புரிந்தது. அவர் முன்னாடி ஒரு தெளிவு பிறந்தவனை போல நின்றான்.
” யாரும் நம்மை கேள்வி கேக்காத வச்சுக்க.. அந்த பயம் தான் நீ பண்ற ஒவ்வொரு சின்ன வேலையையும் சிறப்பா மாத்தும்.இத எல்லாரும் தொழில் பக்தி னு சொல்வாங்க.. பயம் இருந்தா நீ வழக்கை ல ஜெயிச்சுடுவ..” மனமுருக சொல்லிவிட்டு தன பாதையில் பயணிக்க தொடங்கினார்.
சற்று நேரம் அவரையே பார்த்துக்கொண்டு நின்றான் அமுதன்.
முற்றும்.