அதிகாலை 5 மணி.
“டொக் டொக் ….”
பதிலேதும் வரவில்லை.
“டொக்..டொக்..டொக்..” கதவு இப்போது அதிகமாக தட்டப்பட்டது.
“அம்மா.. போய் பால் வாங்கும்மா…! ” அமுதனின் அண்ணன் குரல் உள்ளே இருந்து கேட்டது.
பொறுமை இழந்து அடுத்த முறை தட்ட முற்படும் போது கதவு திறந்தது.
“கண்ணு..! என்னடா திடீர்னு வந்துருக்க.. நேத்திக்கே காலேஜ் லீவ் தான.. அப்பவே கிளம்பி வரவேண்டிதான.. ஏதாவது வேலை இருந்துச்சா?” என அமுதனின் அம்மா கேள்வி கனைகளை தொடுத்தாள்.
அமுதன் பதிலேதும் சொல்லவில்லை. வழக்கத்திற்கு மாறாக மிக சோர்வுடன் காணப்பட்டான். கண்கள் ஐந்து நாட்கள் உறக்கத்தை காணாதது போல் இருந்தது. அம்மாவை விலக்கிவிட்டு உள்ளே நுழைந்தான். கால்கள் இன்றே கலந்து விழுவது போல் நடந்தான் அமுதன். அவன் அம்மாவிற்கு உயிரே இல்லை.
“என்ன சாமி ஆச்சு ஏன் இப்படி நடக்குற.?”
இதற்கும் பதில் இல்லை.
நேரே உள் அறைக்கு சென்றவன் கட்டிலில் அப்படியே விழுந்தான். இமைகள் ஒன்றுக்கொன்று காந்தம் வைத்து இழுத்ததுபோல் உடனே ஒட்டிக்கொண்டன. காதுகள் மட்டும் சில விசயங்களை வெளி இருந்து வங்கி உள்ளே அனுப்பி கொண்டிருந்தது.
“பையன் திடீர்னு இப்படி வந்துருக்கானே.. இப்ப பார்த்து இந்த மனுசன் டீ கடைக்கு போயிருக்கே..”
அவனம்மாவின் புலம்பல் தான் அது.
அமுதன் கண் விழித்தான். தொலைக்காட்சி ஓடும் சத்தம் கேட்டது. அதில் இருவர் பேசிக்கொண்டிருந்தனர். அதுவும் இவனைப்பற்றி. அமுதனுக்கு ஒன்றும் விளங்கவில்லை அமுதன் வெளி அறைக்கு வந்தான். அந்த உரையாடல் நின்றது.
அமுதனின் தாயும் அவனது நண்பன் கோபியும் தான் அந்த உரைடளுக்கு சொந்தக்காரர்கள்.அவர்களிடம் ஏதும் பேசாமல் சமயலறையில் நுழைந்து நீரை பருகிவிட்டு பின் உள்ளறையில் புகுந்துகொண்டான். அம்மா கோபியிடம் ஏதோ சொல்ல அவன் அமுதன் அருகில் வந்தான்.
அமுதன் அந்த அறையின் மூலையையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.
“ஏன்டா இப்படி இருக்க.. ? அம்மாகிட்ட பேசுடா. என்ன பிரச்சனையா இருந்தாலும் பார்த்துக்கலாம் டா. என்ன பொண்ணுகிட்ட லவ் வ சொல்லிட்டயா.?”
முறைத்தான் அமுதன். தேவையில்லாமல் பேசுகிறோம் என கோபிக்கு புரிந்து போனது.
“சரி வா. எப்பவும் போவமில்ல அங்க போவோம்.”
“இல்ல நான் வரல..”
“இல்ல நீ இப்ப வர..” கட்டாயப்படுத்தினான்.
சரி என்பது போல் தலையை மட்டும் ஆட்டினான் அமுதன்.
தொடரும்…