ஒரு மர்ம இரவு – 6

வீட்டிற்கு வந்தேன் அப்பா வாசலில் உட்கார்ந்து இருந்தார், என்னை கண்டதும் காலைல இருந்து எங்கடா போன என்றார், கிரிகெட் விளையாட போனம்பா என்று தயங்கி தயங்கி சொன்னேன், காட்டுல வேலை இருக்குனு நான் நேற்றைக்கே சொன்னேன் இல்ல… என்பேச்சை கேட்காம திரும்பவும் கிரிகெட் விளையாட போனியா ? என்று அப்பா கோபமாக கேட்டார், நான்தான் கடலைகொடி எல்லாம் பிடுங்கிட்டேன் இல்ல அப்புறம் என்ன என்றேன், என்னது கடலைகொடி எல்லாம் பிடுங்கிட்டியா? அப்போ நீதான் போய் அந்த கடலைச்செடி எல்லாத்தையும் பிடுன்கிபோட்டியா ? என்றார், ஆமாம் என்றேன், ஏண்டா! யாரோ காட்டுல புகுந்து கடலைச்செடி எல்லாத்தையும் பிடுங்கி போட்டுடாங்களே என்று நான் முழிச்சிகிட்டு இருக்கேன் நீதான் அந்த வேலையா செய்தியா ? எத்தனைபேர் போய் கடலைச்செடி பிடுங்கிநிங்க? எப்போ போனிங்க ? என்றார் அப்பா, நான் மட்டும்தான் போய் பிடுங்கினேன் ராத்திரி என்றேன்,

என்னடா சொல்ற நீ ? நீ மட்டுமா போன…?
ஆமாம்…!
ராத்திரியா போன…?
ஆமாம்…!
உண்மைய சொல்லுடா… நீ மட்டும்தனியா போனியா? அப்பா நம்ப முடியாமல் திரும்ப திரும்ப கேட்டார்….
ஆமாம்பா நான் மட்டும்தான் போய் கடலைசெடியை பிடுங்கினேன் என்று சொன்னேன்.

இதை கேட்டதும் அப்பாவிற்கு பயங்கர கோபம் வந்தது, பக்கத்தில் கிடந்த மாடு விரட்டும் சாட்டை குச்சியை எடுத்து அடிச்சாரு பாருங்க அடி உங்க வீட்டு அடி எங்க வீட்டு அடி இல்ல… அப்படி ஒரு அடி, நான் கத்தி கதறினேன் அப்பா வேண்டாம்பா விட்டுடுப்பா, இனிமே ராத்திரி நேரத்துல காட்டுப்பக்கம் போவியா…? கேட்டு கேட்டு அடித்தார்… இனிமே போகமாட்டேன்பா என்று சொல்லிக்கொண்டே அடித்தாங்க முடியாமல் கதறி அழுதேன், தடுக்க வந்த அம்மாவுக்கும் அடி விழுந்தது, என் புள்ளைய அடிச்சி கொல்லுலாமுன்னு பாக்குறியா என்று அம்மாவும் அழுதார்கள், ராத்திரி காட்டுக்கு போனானே அங்கேயே பேய் அறைஞ்சி பாம்பு பூச்சி கடிச்சி செத்து இருந்தா என்னடி பண்ணுவ …? என்று கூறிக்கொண்டே அப்பா என்னை விசாசினார், நான் கத்தி கதறினேன் பின்பு இறக்கப்பட்டு அடிப்பதை நிறுத்தினார், எவ்வளவு துணிச்சல் இருந்து இருந்தா ராத்திரி நேரத்துல நீ தனியா காட்டுக்கு போய் இருப்ப… அங்க எல்லை முனி அலையுது.

பேய் வேற அலைச்சலா அலையுது எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்து இருந்தா நீ இந்த ராத்திரி வேலைல தனியா போய் இருப்ப என்றார் அப்பா…. பேயும் இல்ல ஒன்னும் இல்லாபா அது எல்லாம் சும்மா என்றேன் அழுதுகொண்டே, பாம்பு பூச்சி கடிச்சி இருந்தா என்னடா பண்ணுவா…? ராத்திரில செத்து தனியா கிடப்ப காட்டுல என்றார், நான் செத்தா செத்து போறேன் என்றேன், எதிர்த்து பேசின கொன்னுபோடுவேன் கொன்னு உன்னை இழந்துட்டு நாங்க எப்படிடா நிம்மதியா இருப்போம் என்றார் அப்பா, அவர் சொல்வது என் காதில் ஏறவில்லை நான் தேம்பி தேம்பி அழுதுகொண்டு இருந்தேன். வாழ்க்கையில் நான் அப்பாவிடம் வாங்கிய கடைசி அடி அதுதான்.

உடனே அப்பா வீட்டில் இருந்த ஒரு கோழியை பிடித்து அடித்து அம்மாவிடம் கொடுத்தார், இந்த கோழியை ரசம் வச்சி உன் மகனுக்கு கொடு, பாவம் புள்ள ராத்திரி பூரா காட்டுல வேலை செய்துவிட்டு பகல் முழுதும் கிரிகெட் விளையாடிட்டு இப்பதான் வந்தான் நான்வேற போட்டு அடிச்சிட்டேன் கோழி ரசம் சாப்டா உடம்பு வலி தீரும் என்றார் அப்பா, நான் அழுதுகொண்டே அப்படியே உறங்கிவிட்டேன்.

அம்மா என்னை எழுப்பினார்கள் எப்பா எழுந்திரிப்பா… சாப்டு படுத்துக சாமி என்று எழுப்பினார்கள், நான் எழுந்திரிக்கவில்லை அப்பா வந்து என்னை தூக்கி உட்கார வைத்தார், எனக்கு சோறும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்றேன், சாப்டு சாமி என்று அம்மா கோழி குழம்பு சேறு எனக்கு ஊட்டிவிட்டார்கள், நான் சாப்டுவிட்டு மீண்டும் படுத்து உறங்கிபோனேன்.

காலையில் எழுந்தேன் உடம்பெல்லாம் ஒரே வலி, அப்பா அடித்த அடி உடம்பெல்லாம் பட்டை பட்டையாக சிவந்து வீங்கி போய் இருந்தது, அம்மா மாட்டு சாணியை சுட்டு அடிபட்ட இடத்தில் ஒத்தடம் கொடுத்தார்கள், பின்பு சுடு தண்ணீரில் குளித்துவிட்டு, வீட்டைவிட்டு தெருவில் நடந்தேன் நண்பர்களை பார்க்க.

என் மகன் ராத்திரி தனியா பயப்படாம காட்டுக்கு போய் முக்கால் ஏக்கர் கடலைகொடியை பிடுங்கி இருக்கான்யா… ஆறு ஆள் செய்ய வேண்டிய வேலையை அவன் ஒருத்தன் எப்படித்தான் செய்தான்னு தெரியல, நானே ராத்திரில தனியா காட்டுக்கு போக பயப்படுவேன் அவனுக்கு எங்கிருந்து இவ்வளவு துணிச்சல் வந்துதுன்னு தெரியல, கேட்டா பேயும் இல்ல ஒன்னும் இல்லன்னு சொல்றான் என்று வீதியில் நான்கு ஐந்து பேர்களிடம் நெஞ்சை நிமிர்த்தி என்னைப்பற்றி பெருமையாக பேசிக்கொண்டு இருந்தார் அப்பா.

அவர் அடித்த அடி எல்லாம் மறந்து எனக்கு சிரிப்பு மட்டும்தான் அப்பொழுது வந்தது.

இப்பொழுதும் கணணி முன்பு அமர்ந்துகொண்டு ஏங்குகிறேன் ஒரு நாளாவது மீண்டும் அப்பாவிடம் அடிவாங்க மாட்டோமா… அம்மாவிடம் திட்டு வாங்க மாட்டோமா என்று.

முற்றும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top