மணி மூன்றாம் சாமம் நன்கு, நான் ஊருக்குள் நுழைந்தேன் மணியும் என்னோடு வந்தான், தெருவிளக்குகள் அயர்ந்த உறக்கத்தில் ஒளிர்ந்துகொண்டு இருந்தன, இரவெல்லாம் பறந்து பறந்து அலுத்துப்போன களைப்பில் விளக்கு பூச்சிகள் சோர்வாக தெருவிளக்கை சுற்றி பறந்துகொண்டு இருந்தன. ஒரு சிலர் விழித்துக்கொண்டு மாடு பால் கறந்துகொண்டு இருந்தனர். நான் வீட்டிற்கு சென்றேன் இன்னும் யாரும் எழவில்லை எல்லோரும் உறங்கிக்கொண்டுதான் இருந்தார்கள், நான் சத்தம் போடாமல் சென்று கட்டிலில் படுத்துகொண்டேன், எனக்கான காட்டுவேலையை நான் செய்துவிட்டேன் நாளைக்கு நான் நிம்மதியாக கிரிகெட் விளையாட போகலாம், அப்பா அடிக்கமாட்டார் திட்டமாட்டார் என்று எனக்குள்ளே நான் மகிழ்ந்தேன், அப்படியே சிறிது நேரத்தில் நான் உறங்கிப்போனேன்.
எப்பா…. எப்பா…. என்று யாரோ கிணற்றுக்குள்ளிருந்து என்னை அழைப்பதைப்போல் உணர்ந்தேன், உடம்பு அசதியில் நான் பயங்கரமாக தூங்கிகொண்டு இருந்தேன், திரும்பவும் எப்பா… எப்பா என்று திரும்பவும் அழைக்க… ஒ… இது அம்மாவின் குரல் என்று புரிந்துகொண்டு தூக்கப்புத்தியிலேயே என்னமா… என்றேன், நாங்க காட்டுக்கு போறோம் நீ எழுந்து காட்டுக்கு வா உனக்கு சோறு நான் காட்டுக்கு எடுத்துகிட்டு போறேன் நீ அங்க வந்து சாப்டு என்று அம்மாவின் குரல் தூரத்தில் இருந்து சொல்வதைபோல் எனக்கு கேட்டது, தூக்ககலக்கத்திலேயே சரிமா என்று சொல்லிவிட்டு மீண்டும் உறங்கிப்போனேன்.
அதிகாலை ஏழுமணி எனது நண்பர்கள் வந்து என்னை தட்டி எழுப்பினார்கள், டேய் வாடா கிரிகெட் விளையாட போவோம் நேரம் ஆச்சி பஸ் வந்துடும் என்றார்கள், உடனே எழுந்தேன் அவசர அவசரமாக முகம் கழுவிக்கொண்டு பேன்ட் சட்டை போட்டுகொண்டு வெளியூருக்கு கிரிகெட் விளையாட கிளம்பிபோய்விட்டேன்.
அப்பாவும் அம்மாவும் கூலியாட்களை அழைத்துகொண்டு கடலைகொடி பிடுங்க காட்டிற்கு சென்று பார்த்திருக்கிறார்கள், என்ன அதிசயம் கடலைகொடி எல்லாம் பிடுங்கிகிடக்கிறதே எப்படி இது என்று ஆச்சர்யத்தோடும் அதிர்ச்சியோடும் குழம்பி போனார்கள், யாருடைய வேலையாக இருக்கும் இது திருடர்கள் வந்தால் திருடிக்கொண்டு போகாமல் இங்கே ஏன் பிடுங்கிபோட்டு வைத்திருக்கிறார்கள் ஒன்றுமே புரியவில்லையே என்று குழம்பி தவித்திருக்கிறார்கள், நான் தூக்க போதையில் இருந்ததால் அம்மாவிடம் இதை சொல்லமுடியாமல் போய்விட்டது, மணியும் சொல்லவில்லை, அந்த வேலமரத்து ஆந்தையும் சொல்லவில்லை, நிலவும் அவர்களிடம் சொல்ல அப்பொழுது இல்லை, யாரோ காட்டில் உள்ள கடலைகொடியை பிடுங்கிபோட்டுவிட்டார்கலாம் என்ற செய்தி தீபோல் ஊர்முழுக்க பரவிவிட்டது, ஊர்முழுக்க இந்த செய்தியை அதிசயமாக பேசிக்கொண்டு இருந்தார்களாம். எனக்கென்ன தெரியும் நான்தான் கிரிகெட் விளையாட போய்விட்டேனே…
அழைத்துகொண்டு சென்ற கூலியாட்களை வீட்டுக்கு திரும்ப அனுப்பிவிட்டு மீதி இருந்த கொஞ்சம் கடலைச்செடியையும் அப்பாவும் அம்மாவும் பிடுங்கிபோட்டுவிட்டு வீட்டுக்கு வந்து இருக்கிறார்கள்.
மாலை ஐந்துமணி நான் கிரிகெட் விளையாடிவிட்டு பஸில் வந்து இரங்கி வீட்டை நோக்கி தெருவுக்குள் நடந்தேன், அப்பொழுது ஒரு சின்ன பையன் என்னிடம் சொன்னான் அண்ணா உங்க காட்டுல யாரோ கடலைச்செடி எல்லாம் பிடுங்கிபோட்டுடாங்கலாம் என்று. அப்பொழுதுதான் எனக்கு மண்டையில் உரைத்தது அட இதை நாம் வீட்டில் சொல்லாமல் விட்டுவிட்டோமே என்று.
தொடரும்…