மருதேயன் கழுத்தில் முந்தாநாள் சாத்திய மாலை வாடி வதங்கி கிடந்தது, வரிசையாக குத்திவைக்கப்பட்டு இருந்த அம்புகளில் எலுமிச்சை பழம் குத்தி வைக்கப்பட்டு இருந்தது, திருநீறு வாசனை சுவாசத்தில் நுழைய நான் மருதேயன் கோவிலை கடந்து நடந்தேன், எனது உடம்பெல்லாம் வியர்வையும் மண்ணும் அப்பி இருந்ததால் குளிக்க முடிவு செய்தேன், பாதையின் அருகில் இருந்த ஒட்டன் கிணற்றுக்கு சென்றேன், கிணற்றில் தண்ணீர் நன்றாக சுரந்து கிடந்தது.
துளைக்குழியில் நின்று கிணற்றை எட்டிப்பார்த்தேன், துளைகுழி என்றால் கிணற்றில் ஏத்தம் கட்டி நீர் இரைப்பதற்காக இரண்டு நீளமான சலவை கருங்கல்லில் இரு புறமும் இரு துளைகள் இட்டு அதை கிணற்றுக்கு உள் கொஞ்சம் இருக்கும்படியும் மீதியை தரையில் நீளமாகவும் பதிந்து வைத்திருப்பார்கள் இதையே துளைகுழி என்று எங்கள் ஊர் பக்கம் கூறுகிறார்கள். துளைக்குழியில் இருந்து கிணற்றை பார்க்கும்பொழுது கிணற்றில் நிலாப்பெண் தக தகவென தன் பொன்னிற மேனியில் ஆடையே இல்லாமல் குளித்துகொண்டு இருந்தாள். நான் இடுப்பில் துண்டை கட்டிகொண்டு துளைக்குழியில் இருந்து நிலவின்மேல் நேராக குதித்தேன், குதித்த வேகத்தில் நீரின் ஆழத்திற்குச் சென்று மீண்டும் வெளியே தலை தூக்கி பார்த்தேன்.
அட நிலவுப்பெண் இப்பொழுது களைந்து சென்று இருந்தாள். எனது மணி துளைகுழியில் அமர்ந்துகொண்டு கிணற்றுக்குள் நான் குளிப்பதை வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தான். போன வருடம் நதியா என்ற வயசுப்பெண் குளிக்கும்பொழுது நீச்சல் தெரியாமல் இந்த கிணற்றில்தான் நீரில் மூழ்கி இறந்து போனாள். அந்த பெண்ணின் நியாபகம் அப்பொழுது எனக்கு வந்தது ஆனால் எனக்கு அச்சம் இல்லை. இப்பொழுது பின்னிரவு மணி நான்கு இருக்கும் என்று நினைக்கிறேன், குளித்துவிட்டு ஆடைகளை போட்டுகொண்டு பாதையை பிடித்து வீட்டுக்கு நடந்தேன்.
சுடகாட்டை கடக்கும்பொழுது சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தேன், எங்கயாவது ஆவிகள் மாநாடு நடக்கிறதா என்று ஒன்றையும் காணவில்லை, போன வாரம் புதைக்கப்பட்ட நாவம்மாள் பாட்டியின் குழிமேட்டில் காய்ந்த மாலைகளும் வெட்டி வைக்கப்பட்ட இளநீர் காயும் அப்படியே இருந்தது, நான் சுடுகாட்டை கடந்து நடந்தேன் பாடாம்பத்தி வன்னி மரத்தில் பிணங்களில் போடப்படும் மாலைகள் மாட்டிவைக்கப்பட்டு காய்ந்து கிடந்தன, அதிலிருந்து ரோஜா மாலைகளின் நாற்றம் நாசியில் பாய்ந்தது, பாடம்பத்தியையும் தாண்டி ஊரை நோக்கி நடந்தேன்.
தொடரும்…