1994-மார்கழி-24ம் நாள்…
மறுநாள் உதயமாக இருக்கும் நத்தார்…
கடைவீதிக்கு சென்று வந்த களைப்பில் … கதவைத்திறக்கும் மோகன், வனிதா …மகள் அக்ஷயா…
கதவைத்திறந்து கையில் பொதிகளுடன் மாடிப்படிகளில் ஏறி வந்த களைப்பில் …
ப்.ப்……. கொஞ்சம் தண்ணி… எடு… வனி
கொஞ்சம் பொறுங்க….. களைப்பில் சோபாவில் சாய்கிறாள்…
நான் தண்ணி கேட்கிறன்..நீ அங்க இருந்தா..என்ன அர்த்தம்… எரிந்து விழுகிறான் மோகன்..
என்ன அவசரம்…சாகப்போறிங்களா.. வனிதாவின் பதில்
ம்.. அதைத்தான்டி நீ பாத்திட்டிருக்க….
கடவுளே கடவுளே…அதுக்கு முதல் நான் போயிருவன்… எரிச்சலுடன் எழுந்து சென்றாள் வனிதா…
ம்… தண்ணீர்க்கோப்பையை அவனிடம் தந்தாள் வனிதா…
ஏன்டி…மாட்டைப்போல குடும்பத்துக்காக உழைக்கிறன்..கொஞ்சம் தண்ணி கேட்டா … உனக்கு அவ்வளவு திமிருல்ல…
ஆமா.. ஆமா இவர் மட்டுந்தானே குடும்பத்துக்காக…நான் ஏதோ பக்கத்து வீட்டுக்காரனுக்காகவா வாழ்றன்…
போதும் நிறுத்திடி…அதிகாரத்துடன் மோகன்…
ம்..அடக்குங்க அடக்குங்க…என்றைக்காவது நான் இல்லாட்டிப் புரியும் அருமை…
ஐயோ… பெரிய இவ… இவ இல்லாட்டி எங்களுக்கு கஷ்டமாக்கும்… பதிலுக்கு மோகன்..
அதானே… தாலி கட்டின பொண்டாட்டியா இருந்தா .. இப்படி பேசுவியளோ…
ஏய் ..ஏய்… வனி அளவுக்கு மீறி பேசுற நீ…
என்ன அளவுக்கு மீறி….
ஏன்டி…நான் உன்னோடதானே வாழ்றன்…ஏதாவது மாறுதலா நடக்குறனா…நீ தான்டி தேவையில்லாம…. ம்.. எனக்கு வர ஆத்திரத்துக்கு… பல்லைக்கடித்தவாறு கையில் எதையாவது தூக்க முடியுமா பார்க்கிறது அவன் மனது..
ஆ..ஊ ன்னா அடிக்க வாற… என்ன நினைச்சிட்டிருக்க ஒன் மனசுல…பொங்கி எழும் வனிதா…
ஏய்…பொத்துடி வாய… ரொம்பத்தான் பேசுற…
கொஞ்சம் தண்ணி கேட்டதுக்கு ஏன்டி ஆடி முடிக்கிற நீ…
மோகன் கேட்ட கேள்வியிலும் நியாயம் இருக்கிறதோ என்னவோ… ஒரு சிறு அமைதி சூழ்ந்துகொள்கிறது….
டிங்…டொங்…..டிங்…
அழைப்பு மணி…..
தலையைப் பிடித்துக்கொண்டு சோபாவில் சாய்ந்திருந்த மோகன் எழுந்திருக்க விரும்பவில்லை…
கதவைத் திறக்கச் சென்றாள் வனிதா..கூடவே மகள் அக்ஷயா..
கதவு திறக்கப்பட்டது…
ஹலோ…அக்சு குட்டி…. பாசத்துடன் சின்னவள் முகத்தைத் தடாவினான் ரகு…
வாங்க ரகு…
என்ன வனிதா..மோகன் வீட்லயா..
ஆமா இருக்கார்.. மேல வாங்க…
அக்ஷயாவை தோளில் சுமந்தபடி மாடிப்படிகளில் ஏறினான் ரகு…
வீட்டுக்கதவின் வெளியே போடப்பட்டிருந்த அந்த மேசை…
அதில் ஏறி அமர்ந்து கொண்ட ரகு… அக்ஷயாவுடன் சிரித்து விளையாடிக்கொண்டிருந்தான்….
கவனித்த மோகன்..மெதுவாக தனது கோபத்தைத் தனித்துக்கொண்டு…
எழுந்து வந்தான்…
என்னடா… மோகன் .. ரொம்ப டயர்டா…
அதெல்லாம் இல்லப்பா..
அப்புறம்…என்ன மூஞ்சியெல்லாம் தொங்குது…
விடுடா..
என்னடா…. டிஸ்டர்ப் பண்ணிட்டனா….போகட்டா… ஒரு அசட்டுச் சிரிப்புடன்…
ம்..எப்ப பாரு உனக்கு அந்த நினைப்புத்தான்…
பின்ன என்ன மச்சி.. என்ன விசயம்..
ஒன்றுமில்லை விடுடா….
சகஜ நிலையில் நண்பர்கள் இருவரும் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள்…
மோகன்…வயது 32.. நிறுனமொன்றில் விற்பனை முகவர்….வனிதாவுடன் இரண்டாவது திருமணம்…முதலாவது மனைவி வெளிநாட்டில்…பணிப்பெண்ணாக..
வனிதாவுடன் காதல் வயப்பட்டு…இப்போது சேர்ந்து வாழ்கிறான்….
வனிதா….வயது 35… ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்குத் தாய்…
கணவனுடன் ஏற்பட்ட பிரச்சனை விவாகரத்து வரை வளர.. குழந்தை அக்ஷயாவுடன்…பிரிந்து வாழ்ந்தாள்… மோகனுடன் ஏற்பட்ட காதலில்..
மீண்டும் ஒரு குடும்ப வாழ்க்கை…
காட்சிக்கு வருவோம்….
ரகு அண்ணா…. என்ன குடிக்கிறிங்க..பரிவோடு வனிதா…
ம்… விடுங்க வனிதா…கடைத்தெருவுக்கு போய் வந்து களைப்பா இருப்பிங்க…எதுக்கு வீணா…
ஓ… அதையும் சொல்லிட்டாரா…சற்று கடுப்பாகவே…
எதையும்…. இல்லைங்க… வெளிய போய் வந்ததா சொன்னான்..வேற எதுவும் சொல்லலியே…
நல்லா சொல்லுடா…இவளுக்கு எப்ப பாரு… சந்தேகம்..சண்டை…
ஆமா..ஆமா…நாங்க அலையுறம்… வனிதா..
ஏய்…சரி தான் போடி…. மோகன்..
என்னப்பா… சின்னக் குழந்தை போல… சரி வனிதா சூடா ஒரு கப் டீ கொடுங்க…. இடையறுத்தான் ரகு…
வனிதா நகர…
டேய் என்னடா … எப்பவும் இப்படித்தானா…காதல் ஜோடிகளாச்சே…
ம்..உனக்கு நக்கல் வேற .. மோகன்
பின்ன என்னப்பா.. சும்மா சும்மா வாக்குவாதம்…ஏன்டா…. ஆர்வத்துடன் கேட்டான் ரகு…
உனக்குத் தெரியாது…அவ எதுக்காக கோபப்படுறா..ன்னே புரிஞ்சுக்க முடியல…சும்மாவே சண்டைக்கு வாறா…
சரி…நீ கொஞ்சம் விட்டுக்கொடுக்கிறது…
ம்… விட்டுக்கொடுத்துட்டுத்தான்டா … இந்த ஒரு வருஷ வாழ்க்கையும் ஓடுது… அலுப்புடன் மோகன்
ஏதோ…வாழ்க்கை மச்சி…யோசிச்சு பண்ணுடா…
ம்… சொல்லுங்க நல்லா சொல்லுங்க…இடையில் வனிதா…
எதுக்கெடுத்தாலும் எதிர்க்கதையும்…சண்டையும்…இப்பவெல்லாம் இவருக்கு என்னை பிடிக்கிறதே இல்லை….
என்ன வனிதா..இப்படி சொல்றிங்க..மோகன் உங்க மேல ரொம்பப் பிரியமா இருக்கான்… சில சமயங்கள்ல குடும்பங்கள்ல பிரச்சனைகள் வரும்தான்…அதுக்காக உறவு இல்லாம போயிடுமா… ரெண்டு பேரும் அட்ஜஸ்ட் பண்ணித்தானே வாழனும்…. அன்புடன் ரகுவின் அட்வைஸ்
என்னமோ… இவருக்கு அவ நினைப்பு வந்தா..இப்படித்தான்…வனிதா
ஏய்………. திஸ் இஸ் டூ மச்…. கத்தினான் மோகன்
நீ பாட்டுல கதைக்கிற…எதுக்குடி சம்பந்தமில்லாம கதைக்கிற..ஹா..நான் உனக்கு என்ன பண்ணன்….
மகாராணி மாதிரி பாக்குறனே…எதுக்கு வீணா அவள இவள இழுக்கிற…கோபத்தில் கத்தினான் மோகன்…
ஏய்…கூல்டா… மோகன்… ஆசுவாசப்படுத்தும் ரகு…
ஆமா ஆமா உள்ளத சொன்னா கோபம் வருதாக்கும்…வனிதாவின் கிண்டல்…
ஏய்;….போ…இங்க நீ நின்னா…அப்புறம் என்ன நடக்கும் என்று எனக்கே தெரியாது…டேய் ரகு இவள போகச்சொல்லு அங்கால….
ரகுவுக்கும் திண்டாட்டம்…. வனிதா நீங்களாவது எதிர்த்துக் கதைக்காம இருக்கலாமே…..ப்ளீஸ் போங்க அந்தப்பக்கம்…
ஆமா ஆமா நம்பி வந்த எனக்கு இது தேவைதான்..இரு இரு நான் நெருப்பு வைச்சிக்கறன் ஒரு நாளைக்கு… புலம்பிக்கொண்டே செல்கிறாள் வனிதா…
ஆமா..வைச்சுக்கோ…இதோட இத தொள்ளாயிரம் தடவை கேட்டுட்டன்…இன்னுமா வைச்சுக்கல… ம்… இங்க வைக்காதடி… போ போய் எங்கயாவது பீச் ஓரமா வை…. அப்பதான் லேசா போயிறலாம்…. நாலு பேர் பிடிக்கயும் மாட்டானுக…போ… பதிலுக்கு எரிந்து தள்ளினான் மோகன்…
டேய்…மோகன் ..என்ன பேச்சு இது…அவதான் அப்படினா..நீயும் ஏட்டிக்குப்போட்டியாவே பேசுறியே…. விடுடா… வா வெளிய போகலாம்…
தோளில் தட்டிக்கொடுத்து வெளியில் அழைத்துச் செல்லத் தயாராகினான்…ரகு…
வனிதா…நான் மோகனை வெளிய கூட்டிட்டுப்போறன்….சாப்பாடெல்லாம்…வெளிய பாத்துக்கறம்..என்ன… வனிதாவுக்கும் கேட்கும் வண்ணம் சற்ற உரக்கக் கூறினான் ரகு…
போங்க … போங்க… அப்படியே அவனுக்கு நல்ல புத்தியும் சொல்லுங்க…
இந்த மறுமொழியை ரகுவும் எதிர்பார்க்கவில்லை…மோகனும் எதிர்பார்க்கவில்லை….
விடு…விடு ரகு… விடுடா என்னை… எகிறிப்பாய எத்தனிக்கும் மோகனைத் தடுக்கிறான்…ரகு..
விடுறா…அவ ஏதோ ஆத்திரத்தில கதைக்கிறா..
நான் தான் ஒன்னுமே பண்ணலயே…அப்புறம் என்ன…
சரி …வா வா… மோகனை இழுத்துப்பிடிக்கிறான் ரகு…
இதற்கிடையில் இந்த சத்தத்தைக் கேட்டு அங்கே வந்தாள் வனிதா…
என்ன…என்னவாம்… என்ன செய்யப்போறாராம்…சும்மா துள்ளறாரு….
வனிதாவின் இந்த ஏளனம்…எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போலாயிற்று…
எதிர்பார்க்கவில்லை…ஆனால் ரகுவின் பிடியிலிருந்து விடுபட்டான்..மோகன்….
பளார்!!!!!!!!!!
வனிதாவின் இடது கன்னத்தில் மோகனின் கை ஓங்கி அறைந்தது…
இதை அவளும் எதிர்பார்க்கவில்லை…
அதிர்ச்சியானாள்….
ரகு வேறு நிற்கிறான்… என்னை அடிச்சிட்டல்ல…. ஆத்திரத்தில் வனிதா..
ஆமாடி… நானும் பாத்திட்டே இருக்கன்…எதுக்குன்னே தெரியாம சும்மா சும்மா சண்டை பிடிக்கிற…ஹா…ஓவரா பேசுற…எத்தனை நாளைக்குத் தான் பொறுமையா இருக்கிறது…. இது மோகனின் ஆத்திரத்தில் வெளியான ஒரு சில நியாயமான கேள்விகள்….
ஆனாலும்…வனிதாவிற்கு இதைத் தாங்க முடியவில்லை…
எதற்காக என்று குறிப்பிட்டுக் கூற முடியாது…ஆனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம்… சில சமயங்களில் முடிவே கிடையாது…கடந்த பல மாதங்களாக…இப்படி அடிக்கடி நடைபெறுகிறது…. யார் மீது குற்றம் சுமத்துவது என்று சிந்திக்க முடியாதபடியொரு கோளாறு…
ஏன் என்ற கேள்விக்கு…விடை தெரியாது….
அடி வாங்கிய ஆத்திரத்தில்….மேசையில் அமர்ந்திருந்த அக்ஷயாவை இழுத்துக்கொண்டு…உள் நோக்கி வேகமாகச் சென்றாள்…வனிதா…
எதுவுமே பேச முடியாத நிலையில் … கீழ் நோக்கிச் சென்றான்….ரகு
அடித்துவிட்டோமே….என்ற கவலையில் கதவு நிலையோடு சாய்ந்தான்…மோகன்… அந்த ஒரு கனம் அமைதியாக இருந்தது….
திடீரென்று……….
சாய்ந்திருந்த நிலையிலிருந்து திடுக்கிட்டு சுதாரித்த மோகன்…பதறியபடி கீழ் நோக்கி ஓடுகிறான்…
ரகுவுக்கு ஒரு சந்தேகம்… எதையோ எடுத்துக்கொண்டு மோகனை அடிக்க வருகிறாள்…வனிதா…. டேய் நில்லுடா…..நில்லு… இல்லை… அவனையும் தாண்டி கீழ் நோக்கி மோகன் ஓட…மேல் நோக்கி ரகு ஓடி….மோகன் நின்றிருந்த கதவை அடைகிறான்…..
ஓ…அவனிடமிருந்து ஒரு அலறல் சத்தம்…கீழே குனிகிறான்…
என்ன நடக்கின்றது … ஆராய முடியாது…அவன் கீழே குனியவும்…பெரிய அளவில் ஒரு நெருப்புச் சுவாலை அவன் நின்றிருந்த இடத்தை அரவணைக்க முயற்சிக்கவும் நேரம் சரியாக இருந்தது….
ரகு ஒரு கால்பந்தாட்டக்காரன்…ஆவேசமாக அந்த நெருப்புச் சுவாலையை எட்டி உதைக்கிறான்…வீழ்கிறது..பற்றி எரியும் நெருப்பு…நிலம் நோக்கிச் சரிகிறது…. மோகன்…டேய்…மோகன்…அலறலாக அழைக்கும் ரகுவின் குரல்….
எங்கே … மோகன் …எங்கே… அவன் வரவில்லை….
அருகில் கிடந்த….செருப்பு.. அதைக்கொண்டு தட்டியணைக்க ரகுவின் முயற்சி…… இல்லை முடியவில்லை…வேகமாக எரிகிறது நெருப்பு…
மோகனைத் தேடும் எண்ணம் இப்போது ரகுவுக்கு….ஓடினான்…
படிகளின் கீழே கதவைத்திறக்க முடியாமல் தடுமாறும் மோகனை சட்டையில் பிடித்து இழுத்த ரகு……….
டேய்…….நீயெல்லாம் மனுசனா…..பார்….வனிதா வேகிக்கொண்டிருக்காள்…எங்கடா…ஓடுற….
முடியவில்லை…மோகனுக்கும் பதில் கூற முடியவில்லை…மறு விநாடி…இருவரும் திரும்ப…படிகளின் உச்சியில்…கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு…உடல் கருகிக்கொண்டிருக்கும் நிலையில்….வனிதா!!!
எழுந்து வந்து நிற்கும் வனிதாவைப்பார்த்து…பேயை பிசாசை நேராகக்காண்பதை விட அகோரமான பயம்…மோகனிடம்….ஆம் …இப்பொழுது ரகுவிடமும்….
படிகளில் இறங்க முற்படுகிறாள்…வனிதா…
கால் தடுமாறியது…
படிகளில் உருண்டு வருகிறது அவள் கொழுந்து விட்டெரியும் உடல்…
தப்பித்துக்கொள்ள இருவரும் படிகளில் பாய்நதுகொள்கிறார்கள்…
உடலைத் தாண்டியதும்…அதே இடத்தில் மண்டியிட்டான் மோகன்…
ஓடிச்சென்று வீட்டிற்குள் இருந்து ஒரு போர்வையை எடுத்து வந்தான் ரகு…
போர்வையால் போர்த்தினான்…அடித்தான்…விசிறிப்பார்த்தான்…………
அந்தோ பரிதாபம்…….
அடங்காத தீப்பிழம்பு…வேதனையில் அவள் அழுகுரல்….
பிரம்மை பிடித்த நிலை…அது!
மேலும் சில போர்வைகள்…உடலில் வீசியெறியப்படும்…தண்ணீர்….
பதினைந்து நிமிட போராட்டத்தின் பின்…. அடங்கிக்கொள்ளும்….தீ….
பித்துப்பிடித்த நிலையில் தத்தளிக்கும்…நிலை…. சிறு சிறு தீக்காயங்களுடன் மயங்கிக்கிடக்கும்….சிறுமி அக்ஷயா….அழுது வடிக்கும் மோகன்…அத்தனையையும் ஆத்திரத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்…ரகு……….
சூழ்நிலை வார்த்தைகளால் சித்தரிக்கப்பட முடியாதது….
ஏ……….ங்……………..க………….. முணகும் வனிதா……….
சொல்லு வனி….சொல்லு வனி………..தலையை அடித்துக்கொள்கிறான்…மோகன்….
எ…….ன்…..னை … கைவிட மாட்டிங்களே…………
இல்லை…இல்லை….சத்தியமா இல்லை…….நான் உன்னை கைவிட மாட்டேன்……….வனி……….ஏன்மா இப்படி பண்ணிட்ட…………….ஐயோ……
கதறி அழுகிறான் மோகன்………………
அவை அவள் அமைதியாக உதிர்த்த கடைசி வார்த்தைகள்…
நேரம் பதினொரு மணி ஐம்பத்து ஆறு நிமிடம்……………..
இரவொன்று மீண்டும் இரைதேடிக்கொண்டது………..!
தொடரும்…