Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » இரை தேடிய இரவுகள் – 5

இரை தேடிய இரவுகள் – 5

கண் போன போக்கிலே கால் போகலாமா..
கால் போன போக்கிலே மனம் போகலாமா..

எலேய்.. அந்த சவுண்ட கொஞ்சம் குறைப்பியா……

சவுந்தராஜனின் இனிமையான அந்தக்குரலில் ஒலித்துக்கொண்டிருந்த அந்தத் தத்துவப்பாடலை குறுக்கறுத்த அவன் குரல் பேரூந்தில் ஆழ்ந்த நித்திரையில் இருந்த அநேகமானோரைக் குழப்பியே விட்டது.

எறங்கு எறங்கேய்…. சாப்புடறவங்கள்லாம் சாப்பிடுங்கப்பா…இன்னும் 6 மணி நேரத்துக்கு வண்டி எங்கயும் நிக்காது…. பேரூந்து உதவியாளனின் எச்சரிக்கைத் தொனி கலந்த அந்த வேண்டுகோள் பலரின் வயிற்றை நேரடியாகத் தாக்கியது.

சாதாரண ஓட்டல்தான் ஆனா சாப்பாடு தரமுங்கோவ்…. அது யார் குரல்? ஓ அவர் இன்னும் ஒரு உதவியாளர்.. 16 மணி நேர நெடுந்தூரப் பயணம், வண்டிக்கு ஓரிரண்டு உதவியாளர்கள் தேவை தானே.. 8 மணி நேரம் கடந்தாச்சுது…. இன்னும் பாதித் தூரம் தான்.

பேரூந்தில் இருந்த குழந்தைகள்,பெண்கள் உட்பட அநேகமானோர் தமது இரவுப் போசனத்தைப் பெற்றுக்கொள்ள விரைந்துகொண்டிருந்தனர்…

என்னப்பா…ஒனக்கு பசிக்கலயா …

தூக்கம் தூக்கியெறியப்பட்ட நிலையில் அரை குறை பார்வையில் தன்னை உசுப்பியெழுப்பிய பேரூந்து உதவியாளனைப் பார்த்தான் அவன்…

என்னப்பா … பசிக்கலையா .. இங்கை கொட்டிக்கிட்டாதான், இன்னும் 6 மணி நேரத்துக்கு வண்டி எங்கயும் நிக்காது…

ம்… ம்…. தன்னை எழுப்பியவனுக்கு நன்றியும் நளினமுமாய் சைகை காட்டியவன் மெதுவாகத் தன் கண்களை விழித்துப் பார்க்கிறான்.

யன்னலுக்கு வெளியே கும்மிருட்டு ..

தலைக்கு மேலே பொதிகளை வைக்கும் இடத்தில் எதையோ பார்க்கிறான்…ம் இருக்கிறது என்கின்ற பாணியில் தன் தலையை அசைத்து விட்டு..வயிற்றுப் பசிக்குப் பதில் சொல்ல மெதுவாக இறங்கிச் செல்கிறான்..

கையில் சிறியதொரு மஞ்சள் நிறத்துணியாலான பை.. அப்பாவித் தோற்றம், சவரஞ்செய்ய மறந்த முகத்திரை அடர்த்தி சற்று அதிகமாகத் தெரிகிறது..கேசங்கலைந்த நிலையில் அழுக்குத் துணிபோல காட்சி தரும் அந்த ஆடை…

கொஞ்சம் அறுவெறுக்கத்தக்க தோற்றம் போல் தான் இருக்கிறது.ஆனாலும் முகத்தில் தோன்றும் அப்பாவித்தனம் அத்தனையையும் மறக்கச்செய்கிறது.

உணவகத்திற்குள் நுழைந்தவன் சுற்று முற்றும் பார்க்கிறான்.யாரையோ தேடுவது போல் இருக்கிறது.ம்… இவன் தோற்றத்தைப் பார்த்தால் நாதியில்லாமல் திரிபவன் போலிருக்கிறது..இவன் யாரைத் தேடுவது என்றும் கேட்கத் தோன்றுகிறது.

_______________________________________

பசியோடு வந்திருக்கும் பயணிகளைக் கவனிப்பதில் களைகட்டி நிற்கும் உணவகத்திற்குள் குழந்தைகளின் அழுகைச் சத்தங்கள் கொத்து பரோட்டாவின் வெட்டுச்சத்தத்தையும் மீறி ஒலிக்கின்றது…

அமளி துமளியான ஒரு முக்கால் மணி நேரம்…இதற்குள் சிறிய அந்தக் கழிப்பறைப்பக்கமும் ஒரே புகை மண்டலம்… விதை நிலத்திற்கு மருந்து தெளித்தது போன்று கப்பென்று வீசும் யூரின் மனம் வேறு குமட்டுகிறது…

மூச்சை அடக்கிப்பிடித்தவனாய் கழிப்பறைப் பக்கம் சென்றவன் அந்த மனிதர் உள்ளே இருப்பதையும் தெரியாமல் கதவை வேறு திறந்து விட்டான்.

டேய் யாருடா அது….. குந்தியிருப்பவரின் மிரட்டல் சத்தம்..

மனசுக்குள் பயந்தவனாய் கதவை இழுத்து சாத்திவிட்டு .. நமக்கே உரிய பாணியில் ஒரு சுவரோரம்…… சுர்…..

என்னம்மா ஒன் வீட்டுக்காரர் வந்தாச்சா… “ஆமாங்க” .. அந்த அம்மாவின் பதில்

கடைசி நேர சோதனைகள் நடைபெற்றுப் பயணிகள் அனைவரும் மீண்டும் பேரூந்தில் ஏறிக்கொண்டிருக்கின்றனர்..

என்னய்யா எல்லாரும் ஏறியாச்சா ? ஓட்டுனரின் இறுதிக் கேள்வி..
எ ரைட் .. ரைட்…..

வண்டி மெதுவாகத் தன் பயணத்தைத் தொடர ஆரம்பிக்கும் அந்த வேளை….

யோவ் நிறுத்துய்யா…………. பெரிய ஒரு கூக்குரல்

ஹோல்டின்…. ஹோல்டின்…. பாரிய ஒரு ப்றேக் சப்தத்துடன் வண்டி நிற்கிறது.

எங்கைய்யா போய்த் தொலைஞ்ச…. ம்..பதிலில்லை. என்ன இவன் பார்க்குறதுக்கும் ஒரு மாதிரியா இருக்கான்… எலேய் ஏறு ஏறு..தனக்குள் முணு முணுக்கிறான் உதவியாளன்..

எதற்காக இவன் தாமதமானான்? தெரியவில்லை ஆனால் அவன் ஆசனத்தில் சென்று அமர்ந்து விட்டான்…அட..அயர்ந்து தூங்கியுமா விட்டான்…

இல்லை இல்லை யன்னல் பக்கம் சாய்ந்து…உலகத்தைப் பார்க்கிறான்..

எ ரைட்…ரைட்…கௌம்பேய்….. உதவியாளனின் கலவைத் தமிழில் ஓட்டுனருக்குக் கிடைத்த சமிக்ஞையைத் தொடர்ந்து பேரூந்து நகர்கிறது….

ஏம்மா… என்னம்மா குழந்தை அழுதுக்கிட்டேயிருக்கு… பாக்கமாட்டியா? அழுது கொண்டிருக்கும் குழந்தையின் தாய்க்கும் ஒரு மிரட்டல் வண்டியின் நிர்வாகத்திடமிருந்து..

மெதுவாக ஆரம்பித்த வண்டி மின்னல் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது..

வெளியில எந்த வயல் வரப்புல ஓட்டுறானோ தெரியல ..
நமக்கென்னய்யா போய்ச் சேர்ந்தோமுன்னா சரி தானே…. பயணிகளின் கடிக் கதைகள்..

வண்டி புறப்பட்டு இப்போது அரை மணி நேரம் தாண்டியிருக்கும்… இரவின் அமைதி அனைவரையும் ஆட்கொள்கிறது..பேரூந்தின் விளக்குகளும் நித்திரைக்குச் செல்கின்றன..

எலேய்… எதையாவது கதைங்கடா…இல்லைன்ன நான் வேற தூங்கிறப்போறன்.. ஒட்டுனரின் அன்பு வேண்டுகோள்..

அண்ணேய்..நான் இருக்கன்ல .. உதவியாளன்

அது சரி நீ இருப்படா .. நாங்க இருக்க வேணாமா…. வண்டி நிர்வாகத்தின் சிரிப்புக் கதைகள் இப்படியொரு பக்கம்…

இவையனைத்தையும் தாண்டி எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் வெறிச்சோடிய பார்வையுடன் யன்னல் வழியே பார்த்துக்கொண்டிருக்கும் அவன் கண்களை அந்தக் குளிர் காற்று தாக்கியதோ என்னவோ மெதுவாகக் கண்ணீரும் வழிகிறது…பொருட்படுத்தாத இவனை நினைக்க வியப்பாகத்தான் இருக்கிறது.

அப்படி என்ன சிந்தனை அவனுக்கு..?
மை…….. தி….. அவன் உதடுகள் எதையோ உச்சரிக்கின்றனவே..?

மைதிலி…அந்த அழகிய கடலோரக் கிராமத்தின் பஞ்சவர்ணக்கிளி…
அவள் மேல் படாத கண்கள் அந்த வட்டாரத்திலேயே இருக்காது எனலாம்..
அவள் நிறம் என்னவோ மிகச் சாதாரணமான பொது நிறம் தான் ..
ஆனால் அவள் கன்னத்தில் குலுங்கி நிற்கும் அந்தக் குளு குளுப்பும் அம்பு போல் பாயும் அந்த அகலமான கூர்மையான கண்களும்….
துண்டுத் தக்காளிகள் போல் பளபளப்புடன் எப்போதும் மிதக்கும் அவள் கனமான உதடுகள்…இவைதான் அவள் கவர்ச்சிக்கு அத்திவாரம்..

ஊரையே கிறங்கடிக்கும் இவள் பார்வை எப்போதும் தவித்ததில்லை. யாருக்காகவும்..எதற்காகவும்..

ஆனால் இவனைக் காணும் வரை….!

அந்த நாள்… கடலோரத்தில் ஒரு காவியம் பிறந்த நாள்..
வேலை விடயமாக கடலூர் கிராமத்திற்கு வந்திருந்த மகேஷ்.. அவள் பார்வைக்குள் விழுந்த நாள்..

அவளும் தன்னை மறந்த நாள்…

________________________

கடலூர்க்கிராமம் இயற்கை வளம் மாத்திரமல்ல .. ஒரு பிரதேசத்திற்கே வர்த்தகச் சந்தையாகவும் திகழ்கிறது.வெளி நாட்டுத் தயாரிப்புகள் முதல் உள்ளுர் செத்தல் மிளகாய் வரை கிடைக்கும் ஒரு பாரம்பரிய சந்தை…

இங்கு வருபவர்கள் தமது வியாபாரத் தேவைகள் முடிந்ததும் ஒரு தடவை இந்த அழகிய கடலில் நீராடி மகிழ்வது வழக்கம்…

அப்படி நீராடும் போது மின்சாரத்தைப் பாய்ச்சிய காதல் வலையில் சிக்கிய மீண்கள் தான் மகேஷனும் மைதிலியும் …

ஏதோ ஒரு இனந்தெரியாத உணர்ச்சி.. அது வெறும் காதலல்ல..பூர்வ ஜென்ம உறவு போல் நினைத்தார்களோ என்னவோ… இன்றுதான் கண்டிருந்தாலும் ஒருவரையொருவர் தயக்கமில்லாமல் அறிமுகப்படுத்திக்கொண்டு சிரித்துக்கதைக்க ஆரம்பித்துவிட்டனர்…

அன்றே அந்தக் காதலும் இருவர் உள்ளத்திலும் ஆழமாய் வேரூன்றிவிட்டது…

பொழுது நன்றாகவே கழிந்து மாலைச்சூரியனை கவ்வியிழுத்துக்கொண்டிருந்தது…

பிரசவத்தில் வெளிவரத்துடிக்கும் குழந்தைபோன்று விம்மி விம்மி அந்தச் சந்திரனும் வெளிவரும் நேரம்…

கடற்கரையிலிருந்து ஒரு கால் மைல் தூரத்தில் அமைந்திருந்த அந்த தேவாலயத்தின் பின்புறம்….

காடாக வளர்ந்திருக்கும் புற் பதர்களுக்கு மத்தியில் எதுவுமே பேசாத நிலையில் இந்தக் காதல் சிட்டுக்கள்..

போகலாமா…. சிணுங்கினாள் மைதிலி..
ம்…. அரைகுறை மனதுடன் மகேஷ்..
இப்ப மணி என்ன ஆச்சு…..
ஏழு….
ஏழு மணியா… பகல் 1 மணிக்கு வந்தது….
மைதிலி சொன்னதில் உண்மையிருப்பதை உணர்ந்த மகேஷ்… முதலில் எழுந்தான்…

அந்தப் பிரியும் கணத்தில்..மௌனத்தில் தமக்குள் பரிமாறிக்கொள்ளும் காதல் மொழியினை அவர்களே சொன்னாலன்றி நாமறிய வாய்ப்பில்லை…

விடாத மனது… விட்டுச்செல்லும் உறவு…. கலைந்தது அந்தப் பொழுது….

________________________

ஊருக்குத் திரும்பாமல் கடலூரிலேயே ஒரு சிறிய விடுதியில் தங்கிவிட்டான் மகேஷ்….
நாளையும் அவளைப் பார்க்க வேண்டுமே…..

விடியலுக்காய்க் காத்திருந்த அவன் கண்கள் அவனையே அறியாமல் விடிந்த பின்தான் சற்று நித்திரைக்குச் சென்றது….

ஏதோ ஒரு பாரிய சத்தத்தில் … சட்டென்று கண் திறந்தவன்…

நேரம்… நேரம் இப்போ 12 ஆச்சு… ஐயோ மைதிலியைப் பாக்கனுமே.. என்று புலம்பிக்கொண்டவனாய் .. அவசர அவசரமாகத் தன்னை அலங்கரித்துக்கொண்டு…

ஓ… புது மாப்பிள்ளை போன்றொரு பொலிப்புடன் …

ஐயோ அவள் வந்து பாத்துட்டுப் போனாளோ தெரியல … என்று தனக்குத்தானே புலம்பிக்கொண்டு அவசர அவசரமாகக் கடற்கரையை அடைந்தான்….

ஆதவன் நடுவானை ஆட்கொள்ளும் நேரத்தில் வந்தவன்…
நிலவுப் பெண் வெளி வந்தும் இதுவரை அவளைக் காணவில்லை….

ஏக்கம் அவனை ஆட்கொண்டது… ஒரே நாளில் தன்னை மறந்து வீழ்ந்த அந்தக் காதல் அவனை அசைய விடாமல் கட்டிப்போட்டது….

பல மணி நேரக் காத்திருப்பு….
இது ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல மூன்று வாரங்களுக்கும் மேலாகிவிட்டது..
கண்டதும் கொண்ட காதல் தான் ஆனால் அவளோடு இருந்த ஒவ்வொரு விநாடியிலும் தன்னைப் பறி கொடுத்துவிட்டான்… அவள் அன்பு வார்த்தைகளால் தன்னையே மறந்த அவன் இதயத்திற்கு அன்று முதல் இன்று வரை… மைதிலி..மைதிலி…! மைதிலியைத் தவிர வேறு எதையுமே எண்ணிப்பார்க்கத் தெரியவில்லை.

மூன்று வாரங்கள் கடந்த நிலையில் அன்று ஒரு நாள்…

பித்துப்பிடித்தவன் போல் கடலுர்க் கடற்கரையில் அலையும் இவனிடம்…

தம்பி நீங்களும் தினமும் இங்க வாறிங்க நிற்கறிங்க.. போறிங்க என்ன விசயம்பா..? அன்போடு அருகில் வந்து விசாரித்தாள் அந்த முதியவள்…

சில நிமிடங்கள் பேச முடியாமல் தவித்தவன் .. யாரிடமாவது கேட்கவும் வேண்டுமே எனும் நோக்கத்துடன்… மை .. தி.. லி .. என்று ஆரம்பித்தான்…

அதையேன்பா கேட்கற அவளத்தான் கெடுத்து கொண்டுபோட்டாங்களே….

முதியவளின் சர்வ சாதாரணமான இந்த வார்த்தைகள் அவன் மார்பையே பிளந்தது….

பாட்;டி…பா…. இவனால் நம்ப முடியவில்லை…. அவள் வேறு அவள் பாட்டில் நடந்து செல்கிறாள்… அவளைப் பின் தொடர .. ம்.. முடியவில்லை ஒரு தடவை கடல் மண்ணை விரும்பியோ விரும்பாமலோ முத்தமிட்டான் தடுமாற்றத்தின் வீழ்ச்சியால்….

பாட்டி… என்ன சொல்றிங்க…
அட நீ வேறப்பா… மூணு வாரம் இருக்கும் …
யாரு பாட்டி … பதற்றத்துடன் மகேஷ்… அவன் உயிர் இப்போது அவன் வசமே இல்லை போன்றொரு உணர்வு அவனுக்கு…

எங்க வைச்சு பாட்டி…..
அதோ…….. அந்த தேவாலயத்தைக் காட்டுகிறாள் அந்த முதியவள்…
இவனால் நினைத்துக் கூடப்பார்க்க முடியவில்லை…

யாரு … ? யார்.. எப்புடி பாட்டி….. வாயால் வெளிவர வார்த்தைகளும் மறுக்கின்றது..

நமக்கேன்பா வீண் வம்பு…? முதியவள் அலுத்துக்கொள்கிறாள்…
பாட்டி தயவு செஞ்சு சொல்லுங்க பாட்……..டி மண்டியிட்டு வீழ்ந்தான்..

அவன் நிலையைக் கண்டு வியப்படைந்த முதியவளோ…

நீ ஏன்பா மைதிலி விசயத்துல இவ்வளவு அக்கறையாருக்கே…. ஆச்சரியத்துடன் தன் நாடியில் கையை வைத்தவள்… இன்னும் சர்வ சாதாரணமாக…. அவன் மாமன்… கூப்பிட்டுருக்கான்…போகல.. அவனுக்கு வேற மப்பு….. கொண்ணுபோட்டாய்ன்….

தலை வெடித்து சுக்கு நூறாகியது….போல் இவனுக்கு… இவனால் நம்பவும் முடியவில்லை…. மூன்று வாரங்களாகக் அவளைக் காணாத இந்நிலையில் நம்பாமலும் முடியவில்லை…

பாட்டி…… அவ மாமன் யாரு….? விரக்தியே உருவான குரலில்….

இவன் என்னடா இவன்…. எலேய் நமக்கெதுக்குப்பா வம்பு…. அந்தப் பசுபதிப் பய பொல்லாதவன்லேய்….
ப….சு….. பசுபதி அவன் பேரா…
ஏ…ஆள விடுப்பா….. வலுக்கட்டாயமாகத்தன்னை விலக்கிக்கொண்டு தன் வழியே அந்த முதியவள் செல்கிறாள்…

ஒரு அரைநாளில் தன் இதயத்தையே இறக்கச் செய்த அந்தப் பைங்கிளி … இன்று உலகத்திலேயே இல்லை…. ம்.. எப்படி நம்புவது…? இதயமே வெடிக்கிறது….

ஏன்….. தெரியவில்லை….
எதுக்கு… அதுதான் விதி…
ஐயோ … மைதிலி…………புலம்புகிறான்,அழுகிறான்.. இயற்கை மண்ணில் இவன் அழுகைக்கு விடையேதும் இல்லாததை அறியாமலே…. !

_____________________________

காதல் சில வேளைகளில் கண்டவுடன் உருவாகிறது…ஆனால் அதிலும் சில காதல் உண்மையே உருவானதாக இருப்பதனால் தானோ என்னவோ காதல் இன்றும் உலகத்தின் உந்து சக்தியாகத் திகழ்கின்றது….?

இவனும் அப்படித்தான்…

கவர்ச்சியினால் அல்ல… காமத்தினால் அல்ல… உள்ளத்தால் காதலித்து விட்டான்…. அன்று முதல் அவன் கொண்டதுதான் இந்த நாதியற்ற கோலம் ….

இன்று ஏதோ ஒரு தேவைக்காக இந்தப் பேரூந்தில்……. அவனை நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளது..

ம்… அவன் பரட்டைத் தோற்றத்திற்குள் இப்படியும் ஒரு சங்கதி….
இதைத் தெரியாமலே பட்டிணம் நோக்கிப் பறந்து கொண்டிருக்கிறது பேரூந்து..

அதிகாலைச் சூரியன்… செவ்வானத்தை ஆக்கிரமிக்கும் நேரம்… பேரூந்தும் பட்டிணம் வந்து விட்டது…..

அவைங்க அவைங்க சாமாங்கள சரியாப் பாத்துக்கங்கலே…
அப்புறம் அதக்காணல இதக்காணலன்னு நம்ம கிட்ட கேட்காதிங்க ஆமா….

வண்டி நிர்வாகம் மீண்டும்…. அச்சுறுத்துகிறதோ…இல்லை அது வேண்டுகோளும் தான்….

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top