ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அந்த காலை வேலையில் தாஸ், சந்தோஷ், லிஷா மூவரும் காரில் சீறிக்கொண்டிருந்தனர். தாஸின் கையில், முன்னாள் இரவு, சந்தோஷ் வீடியோவில் கண்டெடுத்த சித்தரின் பாடல் ப்ரிண்ட் அவுட் இருந்தது. அதை தாஸ் ஆவலுடன் படித்துக் கொண்டிருந்தான்.
என்கண் நிறையிறை யவன்
எண்கண்ணு வுடையவனா ஆனதில்
நான் முகனவன் முகமதில்
நாரெண் டெட்டாம் கண்
நீகண்ட ததுவொன்றெனி
லெஞ்சியுள தேழென வெடுத்துரைத்தேன்
எனதா ஆசனுக்கு
என்று சித்தர் எழுதிய இப்பாடலை பார்த்தபடி தாஸ் காரில் சீறிக்கொண்டிருந்தான். தாஸ் அந்த பாடலுக்கு மனதினில் உரையெழுதிக் கொண்டிருந்தான்.
‘பாஸ்..? இந்த பாடலோட பொருள் உங்களுக்கு ஏதாவது புரியுதா..?’ என்று கேட்டான்
‘புரியற மாதிரித்தான் இருக்கு கொஞ்சம் டைம் கொடு… சொல்லிடுறேன்..’
‘நான் வேணும்னா ஹெல்ப் பண்ண்டடுமா..?’ என்று லிஷா கேட்டாள்
‘இல்ல லிஷா… ஜஸ்ட் கிவ் மி ஃப்யூ மினட்ஸ்..’ என்று மீண்டும் பாட்டில் லயித்தான்.
சில நிமிடங்கள், சாலையோடு சேர்ந்து கரைந்தது…
சந்தோஷ், தான் கொண்டு வந்திருந்த புது பேட்டரியை தாஸின் செல்ஃபோனில் பொருத்திக் கொண்டிருந்தான்.
தாஸூக்குள் ஒரு தெளிவு… பாடலின் பொருளை பிடித்துவிட்டான். சித்தர் கூறிவிட்டு சென்ற மாபெரும் ரகசியமது என்று தெரிந்து கொண்டான்.
ஆனால் கார் தாஸின் ஆஃபீசை இதற்குள் நெருங்கி விடவே, மூவரும் இறங்கி… நீண்ட நாட்களாக பூட்டியிருந்த தாஸின் ‘Ancient Park’-இனுள் நுழைந்தனர்.
தாஸின் ஆஃபீஸறையில் நுழைந்து, ஏஸியை போட்டு, மிதமான ஆரஞ்சு வெளிச்சத்தில் அமர்ந்தனர்.
‘என்ன பாஸ்… பாட்டு என்னன்னு தெரிஞ்சுதா..?’ என்று மீண்டும் சந்தோஷ் ஆவர்மாய் கேட்க, சூழலை சுவாரஸ்யமாக்கும்பொருட்டு தாஸ் சிரித்தபடி லிஷாவிடம்…
‘பாட்டுல என்ன இருக்குன்னு சொல்லணும்னா, லிஷா நீ போய் 3 பேருக்கும் காஃபி கொண்டுவா…’ என்று கூற, லிஷா அந்த பாடலின் பொருளை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் எழுந்து சென்றாள்.
அடுத்ததாக சந்தோஷிடம் திரும்பி, ‘நீ என்ன பண்றேன்னா, இந்த சித்தர் பாட்டோட ப்ரிண்ட் அவுட்-ஐ ஸ்கீர்ன்ல ப்ரொஜெக்ட் பண்ணு..’ என்றான். சந்தோஷ் எழுந்து தனது பெண்-டிரைவில் இருந்த அந்த சித்தர் பாடல் கொண்ட ஸ்க்ரீன்ஷாட் ஃபோட்டோவை லேப்டாப்பினில் இணைத்து, சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பெரிய திரையில் ரிஃப்ளெக்ட் ஆகும்படி ப்ரொஜெக்ட் செய்தான்…
லிஷா இதற்குள், காஃபி மெஷினிலிருந்து, சுடச்சுட 3 காஃபியை கொண்டு வந்து கொடுத்தாள்.
மூவரும் அமர்ந்து காஃபியை குடித்தனர். தாஸ் எழுந்து சென்று ஒரு போர்டு மார்க்கர் எடுத்துக் கொண்டான்.
திரையில் தெரிந்து கொண்டிருக்கும் சித்தர் பாடலை அந்த போர்டிலேயே மார்க் செய்தபடி கீழ்கண்டவாறு எழுதி காட்டியபடி பொருள் உரைத்தான்.
என் கண் நிறை இறை அவன் (பிரம்மா)
‘என் கண் நிறைந்த கடவுள் அப்படின்னு தன்னோட கடவுள் பிரம்மாவைப் பத்தி சொல்றாரு..’ என்று தொடர்ந்து எழுதினான்
எண் (8) கண் உடையவன் ஆனதில்
‘அந்த பிரம்மா கடவுள் 8 கண் உடையவருன்னு சொல்றாரு…’
நான்முகன் = பிரம்மா முகம் அதில்
‘4 முகம் கொண்ட பிரம்மாவுக்கு…’
நாரெண்டு எட்டு உள்ளதாம் கண் (4X2=8)
‘4X2 எட்டு கண்ணு இருக்கிறதால…’
நீ கண்டதது ஒன்றெனில்
‘நீ பாத்தது ஒண்ணுதான்…’
எஞ்சியுள்ளது ஏழு என எடுத்துரைத்தேன்
‘இன்னும் மிச்சமிருக்கிறது 7 இருக்குன்னு சொல்றாரு…’
என் தாசனுக்கு
‘தாசன்-னா..? சீடன்..! தன்னோட சீடனுக்கு சொல்ற மாதிரி எழுதியிருக்காரு…’ இல்லை மறைமுகமா சீடனுக்கு சொல்ற மாதிரி எனக்கும் சொல்லியிருக்கலாம். ஏன்னா என்னையும் தாஸ்-னுதான் அவர் கூப்பிட்டாரு…’ என்று தாஸ் கூறி முடித்து காஃபியைத் தொடர்ந்தான்.
லிஷா ஆச்சர்யத்துடன் கேட்டாள்.., ‘தாஸ்… இது உண்மையா..?’
‘உண்மையா இருக்கிறதாலத்தானே எழுதியிருக்காரு..?’ என்று தாஸ் அவளுக்கு பதிலளிக்க, சந்தோஷ் சற்று புரியாமல் விழித்தான்.
‘என்னது உண்மையான்னு பேசிக்குறீங்க..? எனக்கு புரியல..?’
‘அடப்பாவி சேண்டி, இதுகூடவா புரியல…? உன்னை கட்டிக்கிட்டு நான் எப்படித்தான் காலந்தள்ள போறேனோ..’ என்று அவனை லிஷா செல்லமாய் திட்டினாள்…
‘நம்ம சண்டைய அப்புறம் வச்சிக்கலாம் டியர்… நீ இப்ப என்ன விஷயத்தை உண்மையான்னு ஆச்சர்யமா கேட்டே..?’
‘டேய், அந்த சித்தர் கேணிவனத்தைத்தான் பிரம்மாவோட கண்ணுன்னு ஏற்கனவே சொல்லியிருக்காருல்ல… இப்போ இந்த பாட்டு, நாம பாத்தது ஒரு கண்ணுதான், ஆனா, மொத்தம் 8 கண்ணு, அதுல ஒண்ணு போக மிச்சம் இன்னும் 7 கேணி இருக்கிறதா சொல்லியிருக்காரு… கரெக்டா தாஸ்..?’ என்று தாஸை கேட்டாள்
‘பர்ஃபெக்ட்லி ரைட் லிஷா…’ என்று கூறினான். இப்போது சந்தோஷூம் ஆச்சர்யத்தில் மூழ்கினான்.
‘பாஸ்… ஒரு கேணிவனத்துக்கே நாம் இவ்வளவு பாடுபட்டோம். அப்போ இன்னும் 7 இருக்கா..’ என்று கேட்டான்
தாஸ் அதற்கு கண்களால் ஆம் என்று பதிலளித்தபடி அந்த பாடலையே பார்த்துக் கொண்டிருந்தான்.
‘பாஸ், இது எங்கேயிருக்கும்னு உங்ககிட்ட நேர்ல பேசும்போது ஏதாவது அந்த சித்தர் சொல்லியிருக்காரா..?’
‘எங்கேயிருக்குன்னு சொல்லலை, ஆனா, அதோட தன்மையை மறைமுகமா சொல்லியிருந்தாரு… உன் பிறவியில் உன்னை நீயே பார்க்க ‘இந்த’ காலத்துவாரத்தில் முடியாது-ன்னு சொன்னாரு… அப்போ அதுக்கு என்ன அர்த்தம், மத்த கேணியில இந்த விஷயம் சாத்தியம்னுதானே..! ஆனா, அது அப்போ புரியல… இப்போத்தான் புரியுது..’ என்றான்.
‘பாஸ், அப்போ, மத்த கேணியில ஒவ்வொரு கேணிக்கும் ஒவ்வொரு ஸ்பெஷாலிட்டி இருக்கும்னு சொல்றீங்களா..?’
‘ஆமா…’
‘எங்கேன்னு போயி தாஸ் இதெல்லாம் தேடுறது…’ என்று லிஷாவும் ஆர்வத்துடன் கேட்டாள்
‘எங்கே வேணும்னாலும் இருக்கலாம் லிஷா… இனிமே பழைய கோவிலுங்களுக்கு போனா, அங்கே கிணறு ஏதாவது மூடியிருக்கான்னு பாக்கணும்… அதுல எந்த கிணறும் காலத்துவார கேணியா இருக்கலாம்..? இது ஜஸ்ட் ஒரு கெஸ்ஸிங்-தான்’
‘பாஸ்… எனக்கு தெரிஞ்சு திருவொற்றியூர்ல ஒரு கோவில்ல ஒரு கிணறு மூடியிருக்கும்… ஆனா, அதுக்கு அவங்க வேற காரணம் சொல்றாங்க… அதாவது, கண்ணகி மதுரையை எரிச்சிட்டு கோபமா அங்க வந்தப்போ அவங்களை ஏதோ ட்ரிக் பண்ணி அந்த கிணத்துக்குள்ள போட்டு அடச்சிட்டாங்களாம்… சினம் குறையாத கண்ணகி இன்னும் அந்த கிணத்துக்குள்ள இருக்கிறதாவும், அதை திறந்தா, மறுபடியும் கோபத்தோட வந்து உலகத்தையே எரிச்சிடுவாங்கன்னும் சொல்றாங்க…’
‘இந்த பழங்கதைகள் எல்லாம், கேக்குறதுக்கு சுவாரஸ்யமாவும் நம்பறதுக்கு கஷ்டமாவும் இருக்கும். ஆனா, ஒவ்வொரு கதைக்கு பின்னாடியும் அந்த கதைக்கு துளியும் சம்மந்தமில்லாத ஏதோ ஒரு பெரிய உண்மை மறைஞ்சியிருக்கும். உதாரணத்துக்கு இப்போ, இந்த கண்ணகி கிணறுக்குள்ள காலத்துவாரம் இருக்குன்னே வச்சிக்கோங்க… அதை ஓபனா சொல்லாம இப்படி ஒரு புனைவுக்கதையை வச்சி சொல்லியிருக்கலாமில்லியா… இதுவும் ஒரு ப்ளைண்ட் அஸெம்ப்ஷன்தான். நம்மளை சுத்தி நம்ம முன்னோர்கள் விட்டுட்டு போன எத்தனையோ ரகசியங்கள் இருக்கு… அது ஒவ்வொன்னும் ஒவ்வொருவிதத்துல ஒரு பொக்கிஷம்தான்… நாம முன்னோர்களையும் மறந்துட்டோம் பொக்கிஷத்தையும் தொலைச்சிட்டோம். இன்னைக்கு எத்தனையோ தாத்தாக்கள் விட்டுட்டு போன மருத்துவ குறிப்புக்கள்லாம் பொட்டலம் சுத்துற பேப்பரா தொலைஞ்சி இருக்கு…’ என்று தாஸ் மிகவும் ஃபீலிங்குடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவனது செல்ஃபோன் ஒலித்தது…
ரிங்டோன் பாடல்
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை – வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை!
டிஸ்ப்ளேவில் ஓல்டு ஃப்ரெண்டு என்று வந்தது…
அட..! தாத்தா..! என்று குதூகலத்துடன் ஃபோன் எடுத்தான்.
‘ஹலோ… தாத்தா..?’ என்று தாஸ் ஆனந்தமாக ஆரம்பிக்க, மறுமுனையில் சுசீலாம்மா…
‘தம்பி, நான் சுசீலா பேசுறேம்ப்பா..?’
‘சுசீலாம்மா..? சொல்லுங்க..’
‘தா… தாத்தாவுக்கு, ரொம்ப முடியலப்பா… நான் நேத்துலருந்து உங்கிட்ட பேச பாக்குறேன். உன்னை பிடிக்கவே முடியல… சீ..சீக்கிரம் வந்துடுப்பா… எதுவும் நடக்கும்போலருக்கு…’ என்று பூடகமாய் சொல்ல… தாஸ் புரிந்து கொண்டான்.
‘நா… நான்… வர்றேம்மா… இ..இப்பவே வர்றேன்…’ என்றான்
—————————————-
கந்தன் கொள்ளை கிராமத்தில்…
தாத்தாவின் அறையில் தாஸ், சந்தோஷ் மற்றும் லிஷா இருந்தனர்… சுசிலாம்மா சுவரோரமாக சாய்ந்தபடி நின்றிருந்தார்.
தாஸ் கட்டிலில் படுத்திருக்கும் தாத்தாவை சமீபித்து அமர்ந்தான்…
‘தா… தாத்தா..’ என்றான்.
அவர் சுயநினைவு தப்பியவராயிருந்தார். தாஸ் அழுதான். லிஷாவும் சந்தோஷூம் அருகில் வந்து அவனை தேற்றினார்கள்.
சுசீலாம்மா மெல்லிய குரலில் புலம்பினாள்.
‘உன்னிய பாக்கணும்னு துடியாக் கெடந்தாரு தம்பி… மனுசன் ஒருதடவை உன்னிய பாத்துட்டாருன்னா நிம்மதியாயிடும்… இப்போ நீ வந்தும் முழிப்பில்லாம போச்சேன்னுதான் கஷ்டமாயிருக்கு..’ என்று கூறினாள்
தாஸூக்குள் மிகவும் குற்றவுணர்வாய் இருந்தது… தாஸ் சிறுவயதிலிருந்து தாய் தந்தையில்லாமல் தாத்தாவுடன் மட்டுமே வளர்ந்தவன். ஆனால், தாய் தந்தை பாசத்தை உணராத குறை எள்ளளவும் இல்லாதபடி தன்னை வளர்த்த தாத்தா இப்போது இப்படி சுயநினைவில்லாமல் ஜடமாய் கிடப்பது மிகவும் வேதனையளித்தது…
நான் மட்டும் கேணிவனத்துக்கு பயணப்படாமலிருந்திருந்தால், இப்போது தாத்தாவுடன் பேசியிருந்திருக்கலாம். கடைசி காலத்தில் மனிதன் தன்னுடன் என்னவெல்லாம் பேச ஆசை பட்டிருப்பார். எப்போதுமே என்னுடன் வந்து சில நாட்களாவது தங்கிவிட்டுப் போ என்று கெஞ்சி கெஞ்சி கேட்பாரே… சே..! என்ன பேரன் நான்… இவருக்கு என்ன கைமாறு செய்திருக்கிறேன். இவரை விட்டுப் பிரிந்து இத்தனை வருடங்களாய் வேலை! எழுத்து! புத்தகம்! என்று இவரை மறந்தேவிட்டேனே..! என்று மனதிற்குள் தன்னைத் தானே தாஸ் ஏகத்துக்கும் திட்டி தீர்த்துக் கொண்டிருந்தான்.
திடீரென்று சடகோப சித்தரின் ஞாபகம் வந்தது.. மனதால் அவரிடம் பிரார்த்தனை செய்தான்.
ஐயா..! சித்தரே..! உன்னைப் பார்க்கத்தானே, நான் இவரை புறக்கணித்து வந்தேன். இப்படி எங்களிருவரையும் பேசவிடாமல் செய்தல் நியாயமா..! எனது அன்புக்குறிய தாத்தாவிட்ம நான் பேச வேண்டும்… எப்படியாவது எனக்கு உதவி செய்யுங்கள்..! உங்களுக்கு கோடி புண்ணியம்..! என்று அவன் மனதிற்குள் நடத்தும் பிரார்த்தனைக்கு கண்களில் கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது…
திடீரென்று தாத்தா பேசினார்…
‘தா..ஆஆஆ…ஸ்ஸ்…’ என்று மிகவும் மெல்லிய குரலில் வார்த்தை வந்தது
தாஸ் அவர் கைகளை கெட்டியாக பிடித்தான்.
‘தாத்தா… ஓ..ஓல்டு ஃப்ரெண்டு… நா.. நான் வந்துட்டேன்…’ என்றான்
‘தா..ஆஆ…ஆஸ்.ஸ்…’ என்றார்
சுசீலாம்மா முகம் மலர்ந்தாள். நல்லவேளை இரண்டு பேரும் பேசிக் கொள்கிறார்கள் என்ற மகிழ்ச்சி அது…
தாத்தா தனது மெல்லி குரல்களில் தாஸ்க்கு மட்டும் கேட்கும்படி ஏதோ சொன்னார்
‘நா… நான்… ஒரு அ..நாதை… ரொ…ம்ம்.. ப…. க..ஸ்டப்பட்… வளந்தேன்.. நிறைய… சாதி..ச்சேன்…’
அவர் சொல்வது புரிந்தாலும், அவர் சொல்லும் விஷயம் புதிது என்பதால் தாஸ் குழம்பியபடி ‘தாத்தா..?’ என்றான்
‘ஆ..னா… நா..ன்… அநாதை… நீ… அநாத ஆயிடக்கூடா..து…ன்னுதான்… நா… நான்…தி..திரும்பி… வந்தேன்…’ என்றார்
தாஸூக்கு ஒன்றும் புரியவில்லை…
‘உன்ன… பாசமா… நானே… வளத்தேன்…’
‘தாத்தா..?’
‘நா..நான்… உ..உன்… தாத்தா.. இ…ல்ல…’
‘தாத்தா… என்ன சொல்றீங்க.. தாத்தா… அப்போ நீ..நீங்க… யாரு…’ என்று கண்களில் நீர்வழிந்தபடி கேட்டான்
அவர் மிகவும் பிரயத்தனத்துடன், தனது இடதுகையை தன் தலையணைக்கு கொண்டு செல்ல முயன்றார்… அவர் கைகளில் சக்தியற்று தலையணையை எட்ட முடியாமல் தவித்தது.. தாஸ் அவர் எதையோ எடுக்க முயல்வதை புரிந்துக் கொண்டு அவர் தலையணையை கொஞ்சமாக எடுத்துப் பார்த்தான். அங்கே ஒரு குட்டி சாவி இருந்தது…
‘சாவியா..? இந்த சாவியா..! இதோ இதோ..’ என்று அதை எடுத்து அவர் கண்முன் காட்டினான்.
‘அவர் தனது கைகளை தாஸின் கைகளில் வைத்து அழுத்தி, அந்த சாவியை பத்திரமாக வைத்துக் கொள்ளும்படி அவன் கையை மூடினார். பிறகு மெல்லிய குரலில்
‘நா…ன்…. நீ…’ என்று கூறியபடி மூச்சை துறந்தார்…
சுசீலாம்மா ஓவென்று அலறினாள். தாஸ்க்கு அவர்கூறிய கடைசி வார்த்தைகள் இன்னமும் ஓடிக்கொண்டிருந்தது… அதற்கு என்ன அர்த்தம்… என்று யோசித்தபடி தனது கைகளிலிருக்கும் சாவியைப் பார்த்தான்… மெல்ல எழுந்தான்.
சுசீலாம்மா தொடர்ந்து அழுதுக் கொண்டிருக்க… லிஷா அவளை தாங்கலாக பிடித்துக் கொண்டு தேற்றிக்கொண்டிருந்தாள். சந்தோஷ் அமைதியாக ஓரமாக நின்றிருந்தான்.
தாஸ் அந்த அறையை சுற்றி சுற்றி பார்த்தான். அறையின் ஓரத்தில், தாத்தாவின் மரபீரோ கம்பீரமிழந்து ‘எனது எஜமான் இறந்துவிட்டான்’ என்பது போல் தாத்தாவின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்தபடி நின்றிருந்தது.
அதை சமீபித்தான்.
மெல்ல அதை திறந்தான்.
உள்ளே, ஒரு லாக்கர் அறை போல் இருந்தது…
அதையும் திறந்தான்.
உள்ளே பணம் வைக்கும் இரும்பு பெட்டி ஒன்று இருந்தது…
தனது கையிலிருக்கும் சாவியை அந்த பெட்டியில் பொருத்தி பார்த்தான்.
திறந்துக் கொண்டது…
உள்ளே..! ஒரு பழைய புத்தகமும் ஒரு கடிதமும் இருந்தது…
அந்த புத்தகத்தை பிரித்துப் படித்தான். அது நேற்றிரவு தாஸ் ஆஸ்பிடலில் எழுத ஆரம்பித்த கேணிவனம் புத்தகம். நேற்று இரவு வரை ஐந்தரை பாகம் மட்டுமே எழுதி முடித்த புத்தகம் இன்று முழு புத்தகமாய் அவன் கையில்…
குழம்பினான். உடனிருந்த கடிதத்தை பிரித்து படித்தான்.
‘அன்புள்ள என் பிரதி தாசுக்கு,
சிறுவயதில் அநாதையாக வளர்ந்த எனக்கு பாசம் நேசம் போன்ற அந்நிய வார்த்தைகள் மீது ஆசை வந்தது… வாழ்வில் எத்தனையோ விஷயங்களை சாதிக்க துடித்தேன். அதில் சிலவற்றை செய்தும் முடித்தேன். ஆனாலும், இன்னொருவர் அரவணைப்பில் அன்பில் திளைப்பதுமென்பது கடவுள் போல் கண்ணுக்கு தெரியாத பொருளாகவே இருந்தது… இந்நிலையில் என் இளமைக்காலத்தில் கேணிவனத்தின் மூலம் காலத்துவாரம் என்ற மாபெரும் பொக்கிஷம் எனக்கு தெரியக் கிடைத்தது… அதுவும் ஒன்றல்ல ஏழு என்பது தெரிந்து, அதில் என் வாழ்நாட்களில் நான்கு காலத்துவாரங்களை கண்டுகொண்டேன்.
கல்யாணம் செய்து கொண்டேன். துணைவியின் மூலம் அன்பும் ஒரு அன்பான மகனும் கிடைத்தான். ஆனால், ஒரு விபத்தில் சீக்கிரமே இருவரும் மீண்டும் என்னை பிரிந்து சென்றார்கள். நான் நினைத்தால் அவர்களை கேணிவனத்தை பிரயோகித்து காப்பாற்றியிருக்கலாம். ஆனால், நான் சித்தருக்கு அளித்த வாக்கின்படி, அவசியமில்லாமல் இயற்கை நிகழ்வுகளை மாற்றியமைக்க கூடாது என்பதில் திண்ணமாய் இருந்துவிட்டேன். மனைவி மகனின் அன்பை மறக்க, என்னை முழுமையாக பயணங்களில் ஈடுபடுத்திக் கொண்டேன். பல அரிய பொக்கிஷங்களை கண்டெடுத்தேன். பல்வேறு பகுதிகளுக்கு பலவருடங்கள் பயணித்தேன். எனது வாழ்க்கையில் பயணமும், சாகசமும் பஞ்சமில்லாமல் நிகழ்ந்தது..! எனக்கேற்பட்ட பஞ்சமெல்லாம் பாசத்திற்குத்தான்.
அந்நேரத்தில் பாசத்துக்கு துடிக்கும் இன்னொரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடிவெடுத்தேன். அப்போதுதான் எனக்கு ஒரு புதிய யோசனை தோன்றியது..! யாரோ ஒருவரை தத்தெடுப்பதற்கு நானே என்னை ஏன் தத்தெடுத்து வளர்க்க கூடாது என்று தோன்றியது… நான் கண்டுபிடித்த காலத்துவாரங்களில் 4ஆவது கேணியின் வாயிலாக எனது பிரதியை நான் நோக்கும் விதமாய், எனது 64 வயதிலிருந்து 60 வருடம் பின்னோக்கி எனது 4ஆம் வயதிற்கு காலப்பயணம் மேற்கொண்டேன். நானே அநாதையாக இருக்கும் உன்னை தத்தெடுத்து தாத்தாவாய் வளர்த்தேன். நானான உன்னின் மீது பாசத்தை பொழிந்து அன்பும் கணிவும் கொடுத்து வளர்த்தேன்.
உன் வாழ்வில் இன்னும் நிறைய அனுபவங்கள் உனக்கு கிடைக்கவிருக்கிறது. நான் எதிர்காலத்திலிருந்து வந்ததற்கு அடையாளமாய் நான் கொண்டு வந்ததெல்லாம் ஒரே ஒரு பொருள்தான்.. அது நான்(நீ) எழுதிய கேணிவனம் என்ற புத்தகம்தான். இதில் நான் புனைந்து எழுதிய சில விஷயங்கள், அடுத்த 7 கேணியைத் தேட உனக்கு மிகவும் உபயோகமாய் இருக்கும்..! நடக்கப்போவதை நடந்திருந்து பார்..! என்று சித்தர் கூறியதை மறவாதே..! நான் எதிர்காலத்தில் நடக்கப்போவதை உனக்கு ஆருடம் சொல்லப்போவதில்லை..! ஆனால், எதிர்காலம் நிகழ்காலத்தைவிட மிகவும் மோசமானதாய் இருக்கும்… இந்த வாக்கியம் எந்த காலக்கட்டத்திற்கும் பொருந்தும். எதிர்காலத்தை எதிர்கொள்ளும் துணிச்சலையும் திடத்தையும் வளர்த்துக் கொள்வதுதான் பரிணாம வளர்ச்சி..! அது இயற்கை உனக்கு கொடுக்கும்.
இப்படிக்கு அன்புடன்
நீ..!’
கடிதத்தை படித்து முடித்து திரும்பி கட்டிலில் இறந்துக் கிடக்கும் தாத்தாவைப் பார்த்தான். உடம்பெல்லாம் மயிர்கூச்செரிவது போலிருந்தது…
லிஷா ஒருமுறை ‘உங்க தாத்தா ஜாடை அப்படியே உங்கிட்ட இருக்கு..’ என்று சொன்னதும்…
‘இவர்தான் என் தாத்தா, இவர் பேர் தசரதன். இவரு பேரைத்தான் எனக்கு வச்சிருக்காங்க…’ என்று தாஸ் பலரிடம் கூறியதும் நினைவுக்கு வந்தது…
பயங்கரமாக அழுகை வந்தது… ஓடிச்சென்று அவர் பாதங்களைப் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதான்.
‘நீ யாராக இருந்தாலும், எனக்கு நீ தாத்தாதான். இத்தனை வருடமும், அன்பில் திளைக்க செய்த நீ என் தாத்தாதான். தமிழை கற்றுக் கொடுத்தாய், சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுத்ததாய், பள்ளிக்கு என்னுடன் நடந்து வந்தாய், கோவில்களுக்கு அழைத்து சென்று சிற்பங்களின் மேன்மைகளை புகட்டினாய்… இப்படி அரிய பல விஷயங்களை அன்புடன் கற்றுக் கொடுத்த நீ என் தாத்தாதான்’ என்று கதறியழுதான்.
அருகிலிருந்த அனைவரும் தாஸ் இப்படி அழுவதை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தாஸ் அவர் கால்களை கட்டிப்பிடித்தபடி அழுதுமுடித்து மெல்ல நிமிர்ந்தான்.
அவர் உள்ளங்கால் இரண்டிலும், 12ஆம் நூற்றாண்டில் நள்ளி-யால் வரையப்பட்ட அதே தோல்சித்திரம்…
முற்றும்.