12ஆம் நூற்றாண்டில் நடந்தது…
தான் வந்தடைந்திருக்கும் வனப்பிரதேசம் வித்தியாசமாகவிருப்பதை கண்டு சுற்றிலும் தெரியும் வானவனாந்திரங்களை கண்ணிமைக்காமல் தாஸ் கண்டுகளித்துக் கொண்டிருந்தான். அகஸ்மாத்தாக அமர்ந்திருப்பதைவிட பாதசாரியாய் நடந்து பார்ப்போமென்று முடிவெடுத்தவன் எழுந்து நடக்கலானான். காற்றில் சந்தனவாசம் கலந்து வந்தது. சுற்றிலும் சந்தன மரங்கள். தான் சந்தனக்காட்டில் நடந்து கொண்டிருப்பதையுணர்ந்தான். தோளில் அவன் மாட்டியிருந்த ஹேண்டிகேமிரா அப்படியே இருந்தது. அதைக் கண்டதும் அதை எடுத்து இயக்கினான். சந்தனக்காட்டை, காட்சிப்பதிவில் கடத்திக் கொண்டான்.
காலம் நடந்தவற்றை மறக்கடிக்கும் அரிய மருந்து… ஆனால், காலம் முந்தி வந்திருக்கும் தாஸூக்கு அம்மருந்து செயலாற்றவில்லை… தனது சிநேகிதன் சந்தோஷூம், காவலர் வாசுவும், உபாத்தியாயர் கணேஷ்ராமும் 21ஆம் நூற்றாண்டில் இறந்துபோனதை அவ்வப்போது நினைகூர்ந்து அதையெண்ணி வருந்தலானான்.
இருப்பினும், தான் வந்தடைந்திருக்கும் பகுதி முற்றிலும் மாறுபட்ட ஒரு விநோத லோகமாக அவனுக்கு புதுவானுபவத்தை கொடுத்துக்கொண்டிருந்தது…
சில காததூரம் நடையாய் நடந்து கடந்து வந்து கொண்டிருந்தான். சூரியன் இருக்கும் திசையை அவ்வப்போது ஊர்ஜிதப்படுத்தியபடி நடக்கலானான். நீண்டதூரம் நடந்துவிட்டபடியால் அவனது நாக்கு நீர் வேண்டி தவித்தது. தூரத்தில் ஓடை ஏதாவது புலப்படுகிறதா என்று தேடியபடியிருக்க, அந்தரத்தில் கொக்கு இனங்கள் எதிர்ப்புறமாய் பறந்து வருவதை கண்டான். அப்படியென்றால் எதிர்புறமாய் எங்கோ நீர்பிரவாகம் இருப்பது திண்ணம் என்று எண்ணியபடி முன்னேறினான்.
அவன் கணிப்பு உண்மைதான், எதிரில் சற்றே தூரத்தில் அழகிய நீர்பிரவாகம் ஓடிக்கொண்டிருந்தது… நீரின்றி அமையாது உலகு… என்ற வள்ளுவன் வாக்கை சிலாகித்தபடி அவன் முன்னேறி, அப்பிரவாகத்தில் இறங்கி, குளித்து, களைப்பகற்றி நீருண்டு புத்துணர்ச்சி பெற்றவனாய் எழுந்துவந்தான். யாருக்கு கிடைக்கும் இப்படி தான் வாழுங்காலத்துக்கு 1000 வருடம் பழமையான நீரில் குளிக்கும் பிராப்தம்…
களைப்பகன்று மீண்டும் நடையைத் தொடரவெண்ணிய தாஸூக்கு பயங்கரமாக பசித்தது… புசிக்கவேதாங்கிலும் கிடைக்கிறதாவென்று அங்குமிங்கும் தேடியவனுக்கு தூரத்தில் ஒரு மான் தெரிந்தது…
சௌந்தர்யமான மான்..! இதற்குமுன்பு தனது காலக்கட்டத்தில் கிண்டி பிரதான சாலையில் ராஜ்பவன் கட்டிடத்திற்கருகில் மானொன்று ஓடிப்போனதை வேடிக்கையாய் ஊர்தியில் அமர்ந்தபடி பார்த்து சிலாகித்தது நினைவுக்கு வந்தது… மானை தூரத்திலிருந்தபடி ஹேண்டிகேமிராவில் காட்சிப்பதிவு செய்துக்கொண்டான். அதனிடத்தில் சென்று வாஞ்சையாக அதை தடவிக்கொடுக்க தோன்றவே. அதை சமீபித்தான். ஆனால், அந்த மான் அங்குமிங்கும் ஓடி அவன் கையில் சிக்க மறுத்தது, அதை எப்படியாவது பிடித்துவிடும் வாஞ்சையெழவே, தாஸ் அதை துரத்தி போகலானான். மான் அந்த வனாந்திரத்துக்கு பழக்கப்பட்டதெனவே அது சாமர்த்தியமாக ஓடிக்கொண்டிருந்தது. அதை தொடர்ந்து ஓடும் தாஸ், அந்த காட்டுபிரதேசத்தில் கண்மண் தெரியாமல் ஓடினான்.
ஒரு கட்டத்தில் தான் கட்டுக்கடங்காமல் ஓடிக்கொண்டிருப்பதையுணர்ந்து நிற்க எண்ணியபோது, திடீரென வோரிடத்தில் விழுந்து வழுக்கிக்கொண்டு போனான். அப்படியவன் போய்க்கொண்டிருக்கும் பகுதியானது தாழ்வான சரிவுப்பகுதியென்றறிந்து ஐயமுற்றான். தன் கட்டுப்பாட்டையிழந்து குழைந்திருந்த மண்தரையில் ஊன்றிப்பிடிக்க கைகளை அங்குமிங்கும் காற்றில் வீசிப்பார்த்தான். பலனில்லை, எந்தவொரு காட்டுச்செடியும் அவன் கைக்குள் சிக்கவில்லை… அப்போது காணவெண்ணாத ஒரு காட்சியை அவன் கண்கள் கண்டது… அது… அந்த தாழ்வுப்பகுதி முடியுமிடத்தில், ஒரு மாபெரும் பள்ளத்தாக்கு..!
ஐயோ…ஓஓஓஓ…. என்று அவன் பயத்தைக்கூட்டி அலற, உடம்பின் அத்தனை பகுதியும் சில்லிட… அந்த பள்ளத்தில் விழுந்தான்.
விழுந்ததும் உடனே தரை தட்டுப்பட்டது. அவன் நினைத்ததுபோல் அதுவொன்றும் பள்ளத்தாக்கல்ல, மிகச்சிறியதொரு சரிவுதான்.
அவன் விழுந்த இடம் ஒரு பூவனம். அவன் இதுவரை நுகர்ந்திராத அரிய நறுமணங்களை கொடுக்கும் மலர்களை கொண்ட பூவனம். இதை பள்ளம் என்று அலறியதையெண்ணி வெட்கினான்.
அந்த பூவனத்தை காட்சிப்பதிவு செய்துக் கொண்டிருந்தான், அப்போது தூரத்தில் ஏதோ ஒரு கோவில் இருப்பது தெரிந்தது. அதை நெருங்கலானான். அந்த கோவில், பூவனத்திற்கு மையத்தில் அமைந்திருந்தது தெரிந்தது.
ஆம்… அவன் எண்ணியது சரிதான். அது… கேணிவனக் கோவில்தான். உள்ளே தீபம் எரிந்து கொண்டிருந்தது.
அந்த கோவிலின் அமைதியான சூழலும், அதற்கு காட்டுக்குயில்களின் பின்னனி இசையும் இது சொர்கலோகமோ என்று எண்ணவைத்தது.
21ஆம் நூற்றாண்டில் இதே கோவிலை பாழடைந்த நிலையில் கண்டதை ஒப்பிட்டு பார்த்தான். தான் இதற்கு முன்(?) 21ஆம் நூற்றாண்டில் இந்த கோவிலில் தங்கியபோது மேலே கூரைமீது வரைந்திருந்த ஓவியம் இருக்கிறதாவென்று பார்த்தான். அதே ஓவியம், மிகவும் புதிதாக இருந்தது. அந்த ஓவியத்தை தெளிவாக கேமிராவில் பதிவு செய்து கொண்டான். அந்த ஓவியத்தில் அழிந்திருந்த பகுதி இப்போது புதிதாயிருந்ததால், அதில் இருந்த சித்தரின் முகத்தை பார்த்தான். அவர் முகம் மிகவும் சாந்தமாயிருந்தது.
உள்ளே கோவிலுக்குள் பிரம்மதேவனின் கருவறைச்சிலை தேஜஸாகவிருந்தது. தூபதீபங்கள் ஏற்றப்பட்டு மிகவும் பக்திபரவசமாகவிருந்தது.
தனது ஹேண்டிகேமிராவில் கோவிலை சுற்றி சுற்றி முழுவதுமாக பதிவு செய்துக் கொண்டான்.
கோவிலுக்குள் தீபம் எரிகிறதென்றால், யாரோ இக்கோவிலை பூஜித்து போயிருக்கிறார்கள். அவர்கள் கண்டிப்பாக மீண்டும் இங்கே வரக்கூடும். கொஞ்சம் இங்கே காத்திருந்து பார்ப்போம் என்ற எண்ணத்தில் அந்த கோவில் மண்டபத்தில் அமர்ந்தான்.
மெல்ல தூணில் சாய்ந்தான், அந்த தூபதீபங்களின் நறுமணமும், பூவனத்திலிருந்து வரும் பூக்களின் வாசமும் சேர்ந்து விரைவில் உறங்கிப்போனான்.
.
.
.
மெல்ல தூக்கம் கலைந்தது. ஆனால் கண்விழிக்க மனம் வரவில்லை…! உடம்பு வலியாய் வலித்தது. அவன் மேற்கொண்டது என்ன சாதாரண பிரயாணமா? கிட்டத்தட்ட 1000 ஆண்டுகள் பிரயாணமல்லவா..!
யாரோ தன் தலையை அன்பாக வருடிக்கொடுப்பது தெரிந்தது. அந்த வருடலுக்குப்பின் அவன் புத்துணர்ச்சியாய் உணர்ந்தான்.
யாரது என்று கண்விழித்துப் பார்க்க, தான் ஒரு வயதான தாத்தாவின் மடியில் படுத்துக் கொண்டிருப்பதை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தான்.அய்யோ..! என்று பதறியெழுந்தான்.
அந்த வயோதிகர், ஓவியத்தில் இருக்கும் சித்தர்-ன் உருவத்தோடு ஒத்திருந்தார். அவரேதான்..! நேரில் பார்க்க இன்னும் சாந்தமாய் தெரிந்தார்..! முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். ஒரு சின்னஞ்சிறிய துண்டு மட்டுமே உடுத்தியிருந்தார்.. நெற்றியில் விபூதிக்கீற்றும், நடுவே சந்தனமும் குங்குமும் அச்சுபிசகாமல் வரைந்ததுபோலிருந்தது.
தாஸ் பதறியதைக் கண்டு சித்தர் அவனை ஆச்சர்யமாக பார்த்தார்.
‘ஏன் தாஸ், இப்படி பதறுகிறாய்..?’ என்று சிரித்தார்
‘என் பேரு உங்களுக்கெப்படி..?’
‘தெரியும்..! சொல்… ஏன் இப்படி பதற்றம்..?’ என்றார்.’
‘முன்னபின்ன தெரியாத, உங்க மடியில படுத்துட்டேன். மன்னிச்சிக்குங்க..’ என்றான்
‘குழந்தைபோல் உறங்கிக்கொண்டிருந்த உன்னை, நான்தான், என் மடியில் கிடத்திக்கொண்டேன். யாராயிருந்தால் என்ன, அன்பிருந்தால் யாரும் அன்னையாகலாமில்லையா..? அன்னையாகிவிட்டால், மடியிலென்ன, மனதிலுமிடம் கிடைக்கும்’ என்று கூறினார்.
அவர் பேசும் தமிழும், அதிலிருக்கும் கருத்தும் மிகப்பழமையாக அவனுக்கு தோன்றியது.
‘இது கேணிவனக்கோவில்தானே..?’ என்று சந்தேகத்துடன் தாஸ் கேட்டான்.
‘ஹ்ம்ம்…! தெரிந்தே கேட்கும் கேள்வி..?’ என்று அவர் மெலிதாக சிரித்துக் கொண்டார்.
‘நீங்கதான் பிரம்மசித்தரா..?’ என்றான்
‘சித்தனா..! அது மிகப்பெரிய நிலை, நான் சித்தனல்ல… சித்து பயில்பவன். அவ்வளவுதான்.’
‘அப்படின்னா, இந்த கேணிவனத்தை செஞ்சது நீங்கதானா..?’ என்று கேட்க, அந்த பெரியவர் அவனை ஒரு குழந்தையைப் பார்ப்பது போல் பார்த்தார்.
‘ஐயா..! நான் இங்க ரொம்பவும் கஷ்டப்பட்டு வந்திருக்கேன். நீங்க சில உண்மைகளை மறைக்காம சொல்லணும்..?’
‘சில உண்மைகளென்ன, நான் உண்மையைத் தவிர வேறெதுவும் பேசியறியாதவன்.’ என்றார்.
உடனே, தாஸ், தன்னுடன் கொண்டுவந்திருந்த ஹேண்டிகேமிராவை எடுத்து இயக்கினான். சித்தர் அந்த கேமிராவை வித்தியாசமாக பார்த்தார். தாஸ் அவரிடம் பேட்டிக்காண தயாரானான்.
‘ஐயா உங்க பேரென்ன..?’
‘சடகோபன்…’
‘இ..இந்த கேணிவனத்தை உருவாக்கினது நீங்கதானா..?’
‘வனத்தை நான் உருவாக்கவில்லை..! கேணியை மட்டும்தான் உருவாக்கினேன். காலப்போக்கில் மக்கள் கேணிவனம் என்று தம் வசதிக்கு சேர்த்துப் பேசிகொண்டார்கள்…’
‘சரி, கேணியை ஏன் உருவாக்குனீங்க..?’
‘உலகில் அமைதியை நிலைநாட்டும் ஒரு சிறு கருவியாக இதை உருவாக்கியுள்ளேன்.’
‘இதை எப்படி செஞ்சீங்க..?’
‘சொன்னால் சத்தியமாக உனக்கு புரியாதப்பா..?’
‘பரவாயில்லை சொல்லுங்களேன்..?’
‘இடமில்லாத பாத்திரத்தில் நீரிரைப்பது வீண்…’ என்றார்.
‘சரி, இந்த கேணியை எப்போ உருவாக்கினீங்க..?’ என்றான்.
‘சில வருடங்களுக்கு முன்பு உருவாக்கினேன்..’ என்றார்.
‘ஐயா, கொஞ்சம் விளக்கமா இது உருவான கதையை சொல்லுங்களேன்..?’ என்று ஆர்வமாய் கேட்டான்.
அந்த சித்தர் மெல்ல கூற ஆரம்பித்தார்…
‘ஒருமுறை இதே தென்மண்டலத்தில் வீரமார்த்தாண்டன், ராஜசேகரவர்மன் என்ற இரண்டு சிற்றரசர்களிடையே கடும்போர் எழுந்தது. அதில் ராஜசேகரவர்மன் தோற்றுப் போனான். அவன் படையையும், உடைமைகளையும், இழந்து தவித்தான். அவன் இதே காட்டில் தலைமறைவாய், என் ஆசிரமத்தில் அடைக்கலமாய் தங்க நான் அனுமதித்தேன். தன் நாடும் பதவியும் போனதைக் காட்டிலும், 4000 மனித உயிர்கள் அப்போரில் மாண்டு போனதை எண்ணி அந்த மாமன்னன் வருந்தலானான்.’ என்று தொடர்ந்தார்.
‘நான் அப்போது மெஞ்ஞான சித்திகளை பயின்று கொண்டிருந்த காலம்,. மானுடத்திற்கு பயனளிக்கக்கூடிய மெஞ்ஞான படைப்புகளை படைக்கும் ஆவல் எண்ணிலிருந்தது. அந்த மாமன்னன், எனக்கு சீடனாய் இருந்து பணிவிடை செய்து கொண்டிருந்தான். அவன் நினைவில் கர்வமில்லை, எண்ணத்தில் எள்ளளவும் களங்கமில்லை..! எனக்கு மிகவும் உண்மையான சீடனாகவே மாறியிருந்தான்.’ என்று கூற அவர் கூறுவதனைத்தும், கேமிராவில் பதிவாகிக் கொண்டிருந்தது…
‘அவனுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினேன். ஒருமுறை, என்னிடம், அந்த மாமன்னன், நடந்துமுடிந்த இப்போரை நிறுத்தமுடியுமா..? ஐயா என்று குழந்தையாய் கேட்டான். அப்போதுதான் எனக்கு காலத்துவாரத்தை பற்றிய நினைவு வந்தது.’
‘காலத்துவாரம்-னா..?’
‘காலத்துவாரமென்பது, என் அய்யன் பிரம்மாவின் கண்கள் ஆகும். இந்த கண்கள் பூமியிலிருப்பதை கண்டுபிடிப்பது சாதாரண விஷயமல்ல..! அதை கண்டுபிடித்து துவாரமமைத்தால், காலப்பயணம் மேற்கொள்ளலாம். அப்படி காலப்பயணம் மேற்கொண்டு போரை நிறுத்துவது சாத்தியமே என்ற எண்ணம் தோன்றியது. உடனே செயலில் இறங்கினேன். முதல் காலத்துவாரத்தின் ஓட்டம் இந்த காட்டிலிருப்பதை அரும்பாடுபட்டு கண்டுபிடித்து, இங்கு வந்து அதை உயிர்ப்பித்தேன். பிறகு, கேணியும் கோவிலும் அமைத்தேன்.’ என்று கூறிமுடித்தார்.
‘அதுக்கப்புறம் அந்த போர்-ஐ நிறுத்துனீங்களா..?’ என்று ஆர்வமாக தாஸ் கேட்டான்.
‘ராஜசேகர வர்மனை போர் நடப்பதற்கு முந்தைய காலகட்டத்திற்கு இந்த கேணிவனம் மூலம் அழைத்து சென்றேன். போர் நடப்பதற்கான காரணத்தை முன்கூட்டியே அறிந்திருந்ததால் அதை தடுத்து நிறுத்தும் சாதுர்யத்தை அந்த மாமன்னன் பெற்றிருந்ததால் போர் நிறுத்தப்பட்டது. நாட்டில் அமைதி நிலவியது. 4000 உயிர்கள் தப்பியது. இதுவரை 3 பெரும்போர்களை நிறுத்தியுள்ளேன். இனியும் நிறுத்துவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.’ என்று கூறிமுடிக்க, இதை தாஸ் ஆச்சர்யமாக கேட்டபடி, தனது ஹேண்டிகேமிராவில் பதிவு செய்துக்கொண்டிருந்தான்.
‘ஐயா..? எங்க தாத்தா அடிக்கடி ஒண்ணு சொல்லுவாரு… நீங்கதான் ஏதோ காரணத்துக்காக என்னை உங்ககிட்ட வரவச்சீங்கன்னு சொல்லுவாரு. அது உண்மையா..?’ என்று கேட்டான்.
சித்தர் ஒரு மர்மச்சிரிப்பு சிரித்தபடி ‘உன் தாத்தாவா..? ஹாஹ்ஹா… நீ சொன்னது உண்மைதான்’ என்றார்.
‘எதுக்கு வரவச்சீங்க..?’
‘எனக்கு சொந்தமான ஒரு பொருள், உனது நூற்றாண்டில் உள்ளது. அதை கொண்டு வந்து என் நூற்றாண்டில் கொண்டு சேர்ப்பிக்க வேண்டும்’
‘என்ன பொருள்..?’
‘என் பிரேதம்..!’ என்று அவர் கூறியதும் தாஸ் திடுக்கிட்டான்.
‘ஐயா..?’
‘ஆம், நான் தொண்டைமண்டலத்தில், எனது அய்யன் பிரம்மாவின் கோவிலில் சில காலம் உபாசனையில் இருந்தேன். அங்கே ஒரு சமயத்தில், என்னையே மெய்மறந்து ஜீவசமாதியாகிவிட்டேன். ஆன்மாவிற்கு, இடம் பொருள் பாதகமில்லை..! ஆனால், உடல்..? அதை உறிய இடத்தில் கொண்டு வந்து சேர்ப்பிக்க வேண்டும். அந்த உடல் 12ஆம் நூற்றாண்டிற்கு சொந்தமானது. அதை 21ஆம் நூற்றாண்டில் விட்டுவைத்தல் நியாயமன்று..! இதை செய்துமுடிக்க, எனக்கு உன் உதவி தேவை…’ என்று கூற, தாஸிற்கு விஷயம் புரிந்தது…
அவர் தொடர்ந்தார்…
‘இந்த கேணிவனம் ஒருவரை எந்தவொரு காலக்கட்டத்திற்கும் அழைத்து செல்லும் ஒரு அரிய காலயந்திரம்தான். அதற்காக, இயற்கைவிதியை நாம் மீறுதல் கூடாது. ஒரு காலகட்டத்திற்கு உறிய ஒரு பொருளை இன்னொரு காலக்கட்டத்தில் நிரந்தரமாக விட்டுவைத்தல் நல்லதல்ல… அந்த பொருளை அதற்குறிய காலத்தில் கொண்டு சேர்ப்பித்தலே தகும்…’ என்றார்.
‘ஐயா, 21ஆம் நூற்றாண்டுல உங்க உடம்பு எங்கேயிருக்கு..?’ என்று தாஸ் கேட்டான்.
‘இதே கேணிவனக்கோவிலில் இருக்கிறது…’
‘கோபுரத்துமேலயா..?’
‘இல்லை… இதோ இந்த ஓவியத்துக்கு பின்னால், கூரையின்மீது ஒரு ரகசிய அறையுள்ளது’ என்று அவர்கள் அமர்ந்திருக்கும் மண்டபத்தின் மேலிருக்கும் ஓவியத்தை சுட்டிக்காட்டினார்.
‘இதற்குள் எனது பூதவுடல் இருக்கிறது. அதை எடுத்து, இந்த கேணியில், நான் சொல்லும் காலத்திற்கு வந்து சேரும்படி போட்டுவிடு… இந்த உதவியை நீ எனக்கு செய்வாயா..?’ என்று கூற, தாஸ் மிகவும் யோசித்தான்.
தாஸ் தயக்கத்துடன், ‘ஐயா..? கண்டிப்பா செய்றேன்..! ஆனா, எனக்கு பதிலுக்கு நீங்க ஒரு உதவி செய்யணும்..’ என்றான்.
அவர் சிரித்தபடி, ‘ஹ்ம்ம்..! 21ஆம் நூற்றாண்டுக்காரனல்லவா..? பரவாய்யில்லை..! இதை நீ செய்துமுடிக்க நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் சொல்..?’ என்று கேட்டார்.
‘என் நண்பர்கள் சில பேர் இந்த கேணிவனக் கோவிலை கண்டுபிடிக்க வரும்போது இறந்துட்டாங்க… அவங்களை எப்படியாவது மறுபடியும் நான் சாகவிடாம காப்பாத்தனும், அதுக்கு..! நீங்க எனக்கு உதவி செய்யணும்’ என்று கேட்டான்.
சித்தர் மறுத்தார்.
‘இல்லை..! இது தவறு… அவர்கள் பகைமையில் சண்டையிட்டு இறந்தவர்கள். அவர்களை காப்பாற்றுவதும் இயற்கைக்கு புறம்பானது..’ என்று சற்றே கோபப்பட்டார்.
‘உயிரை காப்பாதனும், அமைதிய நிலைநாட்டனும்னுதானே கேணிவனத்தை படைச்சியிருக்கிறதா சொன்னீங்க..’
‘ஆம்..?’
‘நானும் எனது நண்பர்களும், இந்த கேணிவனக் கோவிலுக்கு வரும்போதுதான், பேராசை, பொறாமை சண்டை இதெல்லாம் வந்தது. அதுலதான் அவங்க இறந்தும் போனாங்க… இந்த கேணிவனம்-ங்கிற கோவிலே இருந்தில்லன்னா, நாங்கள்லாம் வந்திருக்கவே மாட்டோம், அவங்களும் சண்டை போட்டு இறந்திருக்கவே மாட்டாங்களே..! இதுவும் ஒரு போர்-தானே. இந்த போரை நிறுத்தி அவங்களுக்கு உயிர் கொடுக்கிறது ஒண்ணும் தப்பில்லியே ஐயா..?’ என்று கூற, அவர் யோசிக்க ஆரம்பித்தார். ஒரு நீண்ட சிந்தனைக்கு பிறகு
‘ஆம்..! இது என் தவறுதான். அவர்கள் உயிரிழப்பை கண்டிப்பாக ஈடுகட்ட வேண்டும்..’ என்று கூறி தாஸை சற்று நேரம் உற்று நோக்கியபடி
‘உன் குழுவில் சண்டைக்கு காரணமான பகைவனைச் சொல், அவனை தவிர மற்ற அனைவரையும் நான் உயிருடன் எழுப்பும்படி திட்டம் சொல்கிறேன்.’ என்றார்
‘இல்ல ஐயா..! வேண்டாம், இறந்தவங்க எல்லாருக்கும் உயிர் கொடுங்க… அதுல எதுக்கு இந்த வஞ்சகம்..’ என்று கூற, அந்த சித்தர் சிரித்தார்.
‘நீ கொஞ்சமும் மாறவில்லை… அப்படியே இருக்கிறாய்..’ என்று சிரிக்க, தாஸூக்கு ஒன்றும் புரியவில்லை..!
‘உங்களுக்கு என்ன முன்னாடியே தெரியுமா..?’ என்று கேட்க…
‘முன்பே என்றால், மிகவும் முன்பிலிருந்தே தெரியும்…’
‘எப்போத்திலருந்து..?’
‘உனது போன ஜென்மத்திலிருந்து..’ என்று கூறியதும், தாஸ் திடுக்குற்றான்.
‘என்னை போன ஜென்மத்திலருந்தே தெரியுமா..? நான் யாரு..?’
‘உனக்காகத்தானே நான் இந்த கேணிவனத்தை உருவாக்கிக் கொடுத்தேன்…’ என்றதும் தாஸ் குழம்பினான்.
‘அப்படின்னா..?’
‘ஆம், நீதான் மாமன்னன் ராஜசேகரவர்மன்…’ என்று அந்த சித்தர் கூறிய உண்மையை கேட்ட தாஸ் உடம்பில், (அந்த நூற்றாண்டில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத) மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது.
தொடரும்…