திசைமாறி வந்துவிட்டோம் என்று தாஸ் சொன்னதைக் கேட்ட அனைவரும் அதிர்ந்து நின்றனர்.
‘திக்கு தெரியாத காடு’ என்று கதைகளில் உபயோகப்படுத்தபடும் உவமை எவ்வளவு கொடுமையானது என்று அங்கிருந்த 6 பேரும் உணர்ந்து கொண்டிருந்தனர். காட்டில் தொலைந்து போவது என்பது, கிட்டத்தட்ட உயிருடன் இறந்து போவதற்கு சமம்.
அடுத்த என்ன செய்வதென்று தெரியாமல் அனைவரும் சிலையாய் நின்றிருக்க… சக்கரவர்த்தி மிகவும் கவலை கொண்டவராய் தாஸின் அருகில் வந்தார்…
‘தாஸ்? என்ன இப்படி சொல்றீங்க..? இது தப்பான ரூட்டுன்னு எப்படி தெரிஞ்சது..?’ என்று கேட்டார்
‘ஆமா சார், நான் போன தடவை கேணிவனக்கோவிலை நோக்கி போனப்போ அது மேட்டுப்பகுதி… அதுவும் ஏற்றம் ஏறுவதே தெரியாத ஊமை மேடு… ஆனா, இப்போ நாம சரிவை நோக்கி போயிட்டிருக்கோம்… இதோ இந்த ஓடையைப் பாருங்க… நாம நடக்கிற திசையை நோக்கித்தான் ஓடிட்டிருக்கு… இது சரிவுப்பகுதி. எனக்கு கன்ஃபர்மா தெரியும்… கேணிவனம் மேட்டுப்பகுதியிலதான் இருக்கு…’ என்று கூறவும், அனைவரும் கவலைக்குள்ளாகின்றனர்…
‘இவ்வளவு உள்ள வந்துட்டோமே, இப்ப சரியான வழியை எப்படி கண்டுபிடிக்கிறது..’ என்று ப்ரொஃபஸர் கேட்க, தாஸ் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தான்.
சந்தோஷ், தனது செல்ஃபோனை எடுத்து செக் செய்தான். சுத்தமாக டவர் இல்லை…
‘யார் மொபைல்லியாவது, சிக்னல் இருக்கா..?’ என்று கூற, அனைவரும் அவரவர் செல்ஃபோனை எடுத்துப் பார்த்து, முகத்தில் ஏமாற்றம் காட்டினர்.
இன்ஸ்பெக்டர் தனது பேக்-ஐ எடுத்து உள்ளிருந்து வாக்கி-டாக்கி-ஐ இயக்கினார்.
‘Hello… Hello… Can anyone hear me..?’ என்று கூறி அடுத்த பக்கத்திலிருந்து பதிலுக்கு காத்திருந்தார்….
பதிலில்லை…
மீண்டும் சக்கரவர்த்தி, தாஸிடம், ‘தாஸ், கொஞ்ச நல்லா யோசிச்சி பாருங்க… நீங்க போன தடவை இங்க வந்தபோது, என்ன மாதிரி இடங்களை கடந்து போனீங்கன்னு நினைவிருக்கா..?அப்படியிருந்தா அதைவச்சி நாம சரியான பாதையை பிடிச்சிடலாம்!’ என்று கேட்க… தாஸ் யோசித்துப் பார்த்தான். குணா புலம்பிக்கொண்டே வந்ததும், பயந்தபடி அந்த காட்டிலிருந்து எப்படியாவது வெளியேறிவிட அலைந்ததும், போன முறையும் இதே போல் மழை பெய்தது.ம்.. என்று மிகவும் பொதுவான விஷயம்தான் நினைவுக்கு வந்தது.
‘சாரி சார்..! எனக்கு புதுசா எதுவும் நினைவுக்கு வரலை… போன தடவையும் இதே மாதிரி மழை வந்தது…’ என்று கூற… சக்கரவர்த்திக்கு உடனே ஒரு யோசனை தோன்றியது…
‘தாஸ், மழைக்கு நீங்க ஏதாவது ஒரு மரத்துக்கு கீழ ஒதுங்கி நின்னீங்களான்னு கொஞ்சம் நினைவுப்படுத்தி பாருங்க.. அது ஏதாவது ஸ்பெஸலான மரமா இருந்தாலும் நீங்க நடந்து போன ரூட்-ஐ கண்டுபிடிச்சிடலாம்..’ என்று கூற…
‘இல்லைங்க… மரத்துக்கு கீழல்லாம் ஒதுங்கி நிக்கல… நாங்க ஒரு பெரிய சைஸ் வாழையிலைய தலைக்கு வச்சிக்கிட்டு நின்னோம்…’ என்று கூற…
‘வெரிகுட், வாழையிலையை தலைக்கு வச்சிக்கிட்டீங்கன்னா, மலைவாழை மரங்கள் இருக்கிற பகுதியிலதான் எங்கேயோ ஒதுங்கியிருப்பீங்கன்னு நினைக்கிறேன். நாம இப்போ வந்த ரூட்டுல மலைவாழை இருந்த பகுதி எனக்கு நல்லா நினைவிருக்கு…’ என்று கூற, சந்தோஷூம் அதே விஷயத்தை நினைவுக்கூர்ந்தான்.
‘ஆமா பாஸ், நாங்கூட பசிக்கு கொஞ்சம் எடுத்து வச்சிக்கலாமான்னு யோசிச்சிட்டே அந்த இடத்தை கடந்து வந்தேன்..’ என்று கூற
‘அப்போ அதுவரைக்கும் நாம திரும்பி போய் அங்கிருந்து மேட்டுப்பகுதியில ஏறுனா, ரூட்டை பிடிச்சிடலாம்னு நினைக்கிறேன்…’ என்று இன்ஸ்பெக்டரும் உற்சாகமானார்.
‘வாங்க வாங்க… நாம இன்னும் உயிரோடத்தான் இருக்கோம். இப்படியே நின்னுட்டிருந்தா ஒண்ணும் நடக்காது…’ என்று சக்கரவர்த்தி அனைவரையும் பார்த்து சிரித்தபடி கூறி நடக்க ஆரம்பித்தார்.
தாஸூக்கு சக்கரவர்த்தயை நினைக்க ஒருபுறம் பயமாகவும் இருந்தது. இந்த நபர் புதியவர் என்றாலும், இந்த கேணிவனத்தை கண்டுபிடிப்பதில் இப்படி ஆர்வம் காட்டுகிறாரே என்று பயத்துடன் மலைக்கவும் செய்தான்.
மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது…
நனைந்தபடி ஆறுபேரும் நடந்துப் போய்க்கொண்டிருக்க…
மற்றவர்கள் எப்படியோ லிஷா மழையை ரசித்தபடி நடந்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு முன்னால் போய்க்கொண்டிருந்த தாஸ் கவலையுடன் நடந்துக் கொண்டிருக்க…
‘ஏன் தாஸ் இப்படி டல்லாவே வர்றீங்க..?’ என்று கேட்டாள்…
‘இருட்டுறதுக்குள்ள நாம எப்படியாவது அந்த கேணிவனம் கோவிலை கண்டுபிடிச்சாகனும் லிஷா… இல்லன்னா..?’ என்று தாஸ் இழுத்தான்.
‘இல்லன்னா..?’ என்று லிஷா கேட்க…
‘காட்டுல இரவு நேரத்துல மாட்டிக்குவோம்… இங்க நைட் ஷிஃப்ட் பாக்குற மிருகங்க நிறைய இருக்கு… விடிஞ்சா ஆறு பேரும் உயிரோட இருப்போம்னு சொல்லமுடியாது…’ என்று கூற, லிஷா நடையில் வேகம் காட்டினாள்.
அதே உணர்வுடன் அனைவரும் தமது உடமைகளுடன் இதுவரை நடந்து வந்த திக்கிலேயே திரும்பி நடந்து கொண்டிருந்தனர் மழை இவர்களை பொருட்படுத்தாமல் தன் கடைமையை சரிவர செய்துக் கொண்டிருந்தது.
2 மணி நேரத்திற்கு பிறகு…
மழை ஒருவழியாக அடங்கியிருந்தது…
சுற்றிலும் தவளைகள் கத்தும் ஓசையும், ஏதேதோ இனம் தெரியாத பூச்சிகளின் க்றீச் குரல்கள் பலமாக கேட்டுக்கொண்டிருக்க… அங்குமிங்கும் சுற்றி சுற்றி மேட்டுப்பகுதியை ஒருவழியாக கண்டுபிடித்து ஆறுபேரும் ஏறுநிலத்தில் நடக்க ஆரம்பித்திருந்தார்கள்.
தாஸூக்கு தனது காலில் ஏதோ ஒருவிதமான உணர்வு உறுத்தியது. எதேச்சையாக தனது ஷூவுக்குமேலிருக்கும் பேண்ட் துணியை தூக்கிப் பார்க்க… 3 அட்டைகள் அவன் கால்களில் ஊறிக்கொண்டிருந்தது. இதை லிஷாவும் கவனித்துவிட அவள் அலறினாள்.
‘அய்யோ… தாஸ்… என்னதது…’ என்று அங்கிருந்து விலகி நின்றபடி தனது பேண்ட் துணியையும் முட்டிவரை தூக்கிப்பார்க்க, அவள் காலிலும் 6… 7… அட்டைகள் ஏறியிருந்தது… அவள் கிட்டத்தட்ட அழுதுவிட்டாள்.
‘அய்யோ… சந்தோஷ்… ஏதாச்சும் செய்டா.. பயமா இருக்கு…’ என்று அழுதபடி கேட்க, சந்தோஷ் துரிதமாக செயல்பட்டு, அவள் கால்களிலிருக்கும் அட்டைகளை ஒவ்வொன்றாக ஒரு குச்சியைக் கொண்டு எடுத்தான்.
சக்கரவர்த்தி அவளுக்கு சமாதானம் கூறினார்…
‘ஹலோ…! லிஸா..! பதறாதீங்க… அட்டை கடிக்கிறது உங்களுக்கு வலிக்காது. பொறுமையா இருங்க…’ என்று கூறி, தனது பேக்-லிருந்து ஒரு எண்ணை பாட்டிலை எடுத்து அவளிடம் கொடுத்தார்.
‘இந்த அட்டைங்க நாம நின்னுட்டிருந்த இடத்துல ஏறியிருக்கும்னு நினைக்கிறேன். உங்க பேண்ட் துணியை நல்லா தூக்கிக்கிட்டு, இந்த வேப்பெண்ணெயை தடவிக்கிக்கோங்க…’ என்று கூற, அவள் அதேபோல் செய்துவிட்டு அந்த எண்ணெயை சந்தோஷிடம் கொடுக்க, அவனும் தேய்த்துக் கொண்டு, அதை இன்ஸ்பெக்டரிடம் நீட்டினான்.
‘எனக்கு வேண்டாம்…’ என்று இன்ஸ்பெக்டர் வாங்க மறுக்கவே, சக்கரவர்த்தி அவரை பார்த்தபடி…
‘வாங்கிக்கோங்க சார்… உங்க துப்பாக்கியால அட்டை பூச்சிகளை ஸூட் பண்ண முடியாது…’ என்று கூற, அவர் சக்கரவர்த்தியை முறைத்தபடி எண்ணெயை வாங்கிக்கொண்டார். அப்படியே அந்த எண்ணெய் அனவரது கால்களிலும் தடவப்பட்டது…
மீண்டும் நடைப்பயணம்…
யாருமில்லா காடு… பாதையில்லாப் பயணம்… முடிவு தெரியாத தேடல் என்று இவர்கள் சிரமப்படுவது தெரியாமல் சூரியன் விரைவாக கரைய ஆரம்பித்திருந்தது…
அனைவரும் சூரியனை துரத்திப்பிடிப்பது போல் நடையில் வேகம் காட்டினாலும், கோவில் கண்ணுக்கு எங்கும் தெரியவில்லை… இது சரியான பாதைதானா என்று தாஸூக்கு இன்னுமும் பலத்த சந்தேகம் இருந்து…
ஒரு சமயத்தில் மிகவும் களைத்துப் போன ப்ரொபஸர் நின்று மூச்சுவாங்க… இதை கவனித்த சக்கரவர்த்தி சட்டென்று திரும்பி…
‘தாஸ், எல்லாரும் நில்லுங்க… இனிமேலும் நடந்து போய் தேடுறது முட்டாள்தனம். இன்னும் அரைமணி நேரத்துல இருட்டிடும். ஒழுங்கா இப்போ இருக்கிற வெளிச்சத்துல, நாம இன்னைக்கு நைட் தூங்குறதுக்கான ஏற்பாடை செஞ்சிக்கனும். இல்லன்னா… ராத்திரி ரொம்பவும் சிரமமாயிடும்…’ என்று கூற. தாஸூம் மற்றவர்களும் இதை ஆமோதித்தனர்.
ஒரு பெரிய மரத்தின் அடியில் புற்கள் வெட்டிப்போட்டு, அதன்மீது, ப்ளாஸ்டிக் விரிப்பு விரித்து. அதே விரிப்பை சற்றே உயரத்தில் கட்டிக்கொண்டு, ஒரு தற்காலிக திறந்தவெளி கூடாரம் போடப்பட்டது.
இருட்டிக்கொண்டது…
சென்ற முறைபோல் ஆகிவிடாமலிருக்க தீமூட்டும் உபகரணங்களை தாஸ் கொண்டு வந்திருந்ததால். அதைக்கொண்டு தீ மூட்டப்பட்டது.
அனைவரும் கொண்டு வந்திருந்த உணவில் மிகச்சிறு பாகத்தை கொஞ்சமாய் உண்டு அரைவயிற்றை நிரப்பிக் கொண்டனர்.
லிஷா, தனது வாழ்நாளில் இப்படி ஒரு பயந்த நிலையில் இருந்ததில்லை. அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற பயம் அவளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது… இந்த நிலையில் பயத்தை மறக்கடிக்கும் ஒரே ஆயுதம்… தூக்கம்தான் என்று முடிவெடுத்து கண்களை கெட்டியாக மூடிக்கொண்டாள். களைப்பினால் விரைவில் உறங்கிப்போனாள்.
மற்ற ஐவரும் முழித்துக் கொண்டு நெருப்பை சுற்றி அமர்ந்திருந்தனர்.
‘யாராவது ஒருத்தர் மாத்தி மாத்தி முழிச்சிட்டுருக்கணும்..’ என்று தாஸ் கூற…
‘நான் முழிச்சிட்டிருக்கேன். நீங்க எல்லாரும் வேணும்னாலும் தூங்குங்க..’ என்று இன்ஸ்பெக்டர் சொன்னார்.
‘இல்ல சார், ஒருத்தரா முழிச்சிட்டிருந்த்தா நாளைக்கு நடக்க சிரமமாயிடும்’ என்று தாஸ் கூற
‘எனக்கெதுவும் ஆகாது.. என்னைப் பத்தி கவலைப்படாதீங்க… நான் பாத்துக்குறேன்..’ என்று அவர் முரண்டுபிடித்தார்
‘சார்! கவலை உங்களைப்பத்தி மட்டும் இல்ல… உங்களுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா, நாங்கதான் உங்களை தூக்கிக்கிட்டு அலையணும்… நம்ம ட்ரிப் பாதிக்கப்படும்… அதனால, மாத்தி மாத்தி முழிச்சிருப்போம்…’ என்று முடிவாய் கூற, இன்ஸ்பெக்டருக்கு சக்கரவர்த்தி மீது பயங்கர கோபம் வந்தது…
‘ப்ரொஃபஸரை விட்டுடலாம்… அவருக்கு ரொம்பவும் டயர்டா இருக்கு..’ என்று தாஸ் கூறினான்.
‘இல்லய்யா தாஸ், எனக்கெதுவுமில்ல, நானும் கொஞ்ச நேரம் முழிச்சிருக்கேன்..’ என்று கூற… சக்கரவர்த்தி மறுத்தார்…
‘இல்ல ப்ரொஃபஸர், நீங்க தூங்குங்க, நாங்க 4 பேரும் சேர்ந்து இந்த வேலையைப் பாத்துக்குறோம்..’ என்று கட்டளையாய் கூற, ப்ரொஃபஸர் மறுத்துப் பேசாமல் படுக்க சென்றார்.
‘நீங்க எல்லாரும்கூட போய் படுங்க… முதல் ரவுண்டு நான் முழிச்சிருக்கேன். கொஞ்ச நேரம் கழிச்சு யாரையாவது எழுப்புறேன்..’ என்று மீண்டும் கட்டளையிட அனைவரும் தூங்க சென்றனர்…
சந்தோஷ் படுத்தபடி தனக்கருகில் தூங்கிக்கொண்டிருக்கும் லிஷாவைப் பார்த்தான். பேய்க்கதை கேட்டுவிட்டு தூங்கும் குழந்தையைப் போல் இருந்தது அவளது முகம். தூக்கத்தில் இப்படி ஒரு குழந்தைத்தனத்துடன் படுத்திருக்கும் அவளைப் பார்த்து பரிதாபப்பட்டான். ஒருவேளை இவளை இந்த பயணத்திற்கு அழைத்து வந்திருக்க கூடாதோ..? என்று எண்ணியபடி புரண்டு படுத்தான். இப்போது அவன் பார்வையில் நெருப்புக்கு அருகில் அமர்ந்திருக்கும் சக்கரவர்த்தி தெரிந்தார். அவரது மிரட்டலான நடவடிக்கைகள் சந்தோஷூக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை…
எப்போதும் ஒரு குழுவுக்குள் இதுபோல் தலைவனாய் மாற முயற்சிக்கும் ஆட்களால்தான் பிரச்சினைகளே விளைகிறது என்று எண்ணினான். ஆனால், இவர்கள் குழுவில் நியாயப்படி இன்ஸ்பெக்டரிடம்தான் துப்பாக்கி இருக்கிறது, அவர்தான் தலைவனாக முயற்சிப்பார் என்று எண்ணியிருந்தான். ஆனால், இந்த சக்கரவர்த்தியிடம் அபாரமான அனுபவம் இருக்கிறது. இந்த காட்டுவழிப் பயணத்தை பொறுத்தவரை அனுபவம்தான் பயங்கர ஆயுதம் என்பதால் இவன்தான் தலைமைக்கு உகந்தவனோ? என்று குழம்பியபடி உறங்கிப்போனான்.
– – – – – – – – – – – – – – – –
விடிந்தது…
லிஷா கண்விழித்தபோது, அந்த காலைவேளையில் காடு முழுவதும் பனி சூழ்ந்து… காடு கனவுலோகமாய் காட்சியளித்தது… சே! இந்தக் காட்டை பார்த்தா நேற்று நான் இப்படி பயந்தேன் என்று அவள் வியக்குமளவிற்கு அந்த காட்டுச்சூழல் ரசிக்கும்படியாய் ரம்யமாய் காட்சியளித்தது…
திரும்பி கூடாரத்திற்குள் பார்க்க, தாஸ் மட்டும் இன்னமும் உறங்கிக்கொண்டிருந்தான். அனைவரும் எழுந்து ஆளுக்கொரு வேளையில் ஈடுபட்டிருந்தனர்… தாஸ் மட்டும் ஏன் இவ்வளவு நேரம் தூங்கிக்கொண்டிருக்கிறான் என்று அவனை எழுப்புவதற்காக அவனருகில் சென்றாள்…
தாஸின் முகம் மிகவும் வெளிறிப்போய் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது… மேலும், அவன் உடம்பின் தூங்கும் நிலையும் கொஞ்சம் மாறுபட்டு வித்தியாசமாக தெரிந்தது..! எழுப்ப முயன்று அவனை லிஷா தொட்டுப் பார்த்தாள்… அவன் உடம்பு அசைவற்றுக் கிடந்தது… அய்யோ..?
தொடரும்…