ப்ரொஃபஸர் கணேஷ்ராமின் வீடு…
அவர் வீடு, பெரியளவில் இல்லாவிட்டாலும், ஒரு குட்டி பங்களா என்றே சொல்லலாம்… ரசனையுடன் கட்டியிருந்தார்…
வீட்டின் மாடியிலிருந்த ஒரு அறையை, பிரத்யேகமாக தனது ஆய்வுக் கூடமாக மாற்றியிருந்தார். (குட்டி ரகசியம் : முன்னொருநாள், இவர் வீட்டுக்கு வந்தபோது, இந்த அறையை பார்த்த தாஸ்-க்கு மிகவும் பிடித்துப் போகவேதான், பின்னாளில் பிரம்மாண்டமாய் Ancient Park என்று தனது ஆஃபீஸை வடிவமைக்க வேண்டும் என்று முடிவெடுத்து நிறைவேற்றினான்)
இப்போது, அதே அறையில் தாஸ்-ம், சந்தோஷூம், லிஷாவும் ப்ரொஃபஸரை சுற்றி நின்றிருந்தனர்.
ப்ரொஃபஸர், தனது அறையின் நடுவே வைத்திருந்த அந்த கேணிவன ஓவியத்தை, பூதக்கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தார்.
‘தாஸ்? இங்க வாய்யா… இதைத்தான் நான் சொன்னேன்… இந்த க்ரீடத்தை உத்துப்பாரு…’ என்று பூதக்கண்ணாடியிலிருந்து கண்களை விலக்கியபடி, அந்த பூதக்கண்ணாடியை தாஸிடம் கொடுத்துவிட்டு திரும்பினார். அவன் அதை வாங்கிக் கொண்டு ஆர்வமாய் அந்த ஓவியத்தை உற்றுப் பார்த்தான்.
ப்ரொஃபஸர் திரும்பியதும், அங்கே நின்றிருந்த லிஷாவை பார்த்தார்…
‘நீ திரும்பி வந்ததுல ரொம்ப சந்தோஷம்மா…’ என்றார்… அவளும் சிரித்தபடி கண்களால் நன்றி செலுத்தினாள்.
பூதக்கண்ணாடியில் கண்கள் புதைத்திருந்த தாஸ், ஒன்றும் புரியாமல்… ‘என்ன சார் இருக்கு இந்த க்ரீடத்துல..?’ என்று கூறியபடி ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருக்க…
‘அந்த க்ரீடத்துல எதாவது தெரியுதா..?’ என்று ப்ரொஃபஸர், அந்த அறையின் ஓரமாய் இருந்த மேஜையை நெருங்கி நின்றபடி கேட்டார்.
‘என்னமோ ஒரு உருவம் பொறிக்கபட்டிருக்கு… ஆனா, என்னன்னு தெளிவா தெரியல சார்…’ என்று தாஸ் புலம்பியபடி பூதக்கண்ணாடியில் அந்த உருவத்தை பார்த்துக் கொண்டிருக்க… ப்ரொஃபஸர் அந்த மேஜையின் டிராயரிலிருந்து, ஒரு பெரிய கலர் ப்ரிண்ட் அவுட் ஃபோட்டோவை எடுத்து வந்து தாஸிடம் கொண்டு வந்தார்.
‘அந்த கிரீடத்துல இருக்கிறது இந்த உருவம்தான்..’ என்று அந்த ஃபோட்டோவை அவனிடம் கொடுக்க… தாஸ் அந்த ஃபோட்டோவை பார்த்தான். அதில், கொம்பு வைத்த பன்றியின் உருவம் தெளிவில்லாமல் இருந்தது.
‘இ… இது…. ஒரு பன்னி உருவம் மாதிரியிருக்கு..’ என்று சந்தேகத்துடன் கூற…
‘அதேதான், காட்டுப்பன்னி, வராக முத்திரை… இதுதான் அந்த கிரீடத்துல இருக்கிற உருவம்…’ என்று கூறினார். தாஸ் மிகவும் ஆச்சர்யப்பட்டான்.
‘அட ஆமா..! சார்..? நாங்க இந்த ஓவியத்தை எத்தனையோ தடவை ஃபோட்டோஷாப்-ல முடிஞ்சவரைக்கும் டீடெய்ல்ஸ் படிக்க ட்ரை பண்ணியிருக்கோம். அப்போ இந்த உருவம் சிக்கவேயில்லியே… ஆனா, நீங்க எப்படி இதை ப்ளோ-அப் செஞ்சி எடுத்தீங்க..?’ என்று கேட்க
‘பழைய டிராயிங்க்ஸை படிக்கிறதுக்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கு… இருந்தாலும் நான் சமீப காலமா ஒரு வழிமுறைய பத்தி ஸ்டடி பண்ணிட்டிருக்கேன். HDRI (High Dynamic Range Imaging)-ன்னு ஃபோட்டோகிராஃபில ஒரு ப்ராஸஸ் இருக்கு. அந்த வகையில ஒரே இடத்தை எக்ஸ்போஷரை கூட்டி குறைச்சி ஃபோட்டோ எடுத்து மிக்ஸ் பண்ணும்போது, அந்த ஃபோட்டோ பயங்கர டீடெய்லிங்கோட துல்லியமான தெரியும். அதே வழிமுறையை இந்த மாதிரி பழைய ஓவியத்துக்கு அப்ளை பண்ணி பாத்தேன், 60% அந்த ஃபோட்டோவுக்குள்ள மறைஞ்சியிருக்கிற கண்ணுக்கு தெரியாத விஷ்வல் டீடெய்ல்ஸ் தெரிய வருது… ட்ரை பண்ணி பாத்தேன், சிக்கிக்கிச்சி..’ என்று பெருமையாக கூறினார்.
‘சூப்பர் சார், ஃபோட்டோகிராஃபியில யூஸ் பண்ற ஒரு ப்ராஸஸ்-ஐ இப்படி பழைய விஷயங்களை தெரிஞ்சிக்கிறதுக்கு யூஸ் பண்ணியிருக்கீங்க… ப்ரில்லியண்ட் ஐடியா..’ என்று கூற, அவர் அந்த பாராட்டை காதில் வாங்காமல்…
‘சரி, என்னை புகழ்றதை விடு, விஷயத்துக்கு வர்றேன். இந்த வராக முத்திரை யாரோடதுன்னு தெரியுமா..?’ என்று கேட்க, தாஸ் கொஞ்சம் தடுமாறினான்.
‘சாரி சார், படிச்சிருக்கேன், ஆனா ஞாபகமில்ல..’ என்று அசடுவழிந்தான்.
‘என்னய்யா, என் மாணவர்கள்லியே ப்ரில்லியண்ட் ஸ்டூடன்ட் நீன்னு நினைச்சிட்டிருக்கேன். ஆனா, நீயே இப்படி சொதப்பற..? இது சாளுக்கியர்களோட முத்திரைய்யா..’ என்று கூற.. தாஸ் நினைவு வந்தவனாய்…
‘ஓ… ஆமா… அப்போ இந்த ஓவியத்துல இருக்கிற மன்னன் சாளுக்கியனா..?’
‘இருக்கலாம் அப்படி இல்லன்னா, சாளுக்கியர்களுக்கு கீழ இருந்த ஏதாவது ஒரு சிற்றரசனாகூட இருக்கலாம்..’ என்றதும், தாஸூக்குள் ஏகப்பட்ட குழப்பம்.
‘ஆனா, அந்த கோவில் கிணத்துக்குள்ள தமிழ்ல எழுதியிருந்ததே சார்..? சாளுக்கியன்னா இந்த தமிழ் சித்தர் எதுக்கு அங்கே போய் தமிழ்ல பாட்டெழுதணும்?’
‘ஒருவேளை அப்போ இந்தாளு சாளுக்கிய சோழனா இருப்பான்னு நினைக்குறேன்..?’
‘சாளுக்கிய சோழனா..? சாளுக்கியர்களுக்கும் சோழர்களும் பகைவர்கள்தானே..?’ என்று கேட்க
‘ஹா ஹா.. பகைவர்கள் என்னிக்குமே பகைவர்களா மட்டுமே இருந்ததில்ல தாஸ்..! ம்ம்ம்.. சரி, உதாரணத்துக்கு ஒரு கேள்வி… கலிங்கத்துப்பரணி படிச்சிருக்கியா..?’
‘படிச்சிருக்கேன்’
‘அதுல தலைவன் யாரு..?’
‘குலோத்துங்க சோழன்…’
‘அந்த பாட்டுல அவனை வெறும் சோழனாத்தான் எழுதியிருக்காங்க.. ஆனா, அவன் ஒரு சாளுக்கிய-சோழன்..’
‘குலோத்துங்கன், சாளுக்கிய சோழனா..?’
‘ராஜராஜ சோழனோட பொண்ணு குந்தவை. இருந்தால்ல.. அவ விமலாதித்தன்னு ஒரு சாளுக்கிய மன்னனைத்தான் கட்டிக்கிட்டா… அதுலருந்துதான், சாளுக்கிய சோழர்களோட தோற்றம் ஆரம்பிச்சது… அதுக்கப்புறம் 2வது ராஜேந்திர சோழனோட மகள்வழி பேரன்தான் இந்த குலோத்துங்கன். அப்போ சோழவம்சத்துல அதிராஜேந்திர சோழன் இறந்ததுக்கப்புறம் வாரிசு இல்லாததால இந்த குலோத்துங்கனை சோழமன்னனா உக்கார வச்சிருக்காங்க… அதுக்கப்புறமா வந்த சோழர்கள் எல்லாரையும் சாளுக்கிய சோழர்களாத்தான் சொல்றாங்க…’ என்று ப்ரொஃபஸர் கூற, தாஸ் வாயை பிளந்து கேட்டுக்கொண்டிருந்தான்.
சந்தோஷூக்கு உடனே, சிவாஜி நடித்த ராஜராஜசோழன் படம் நினைவுக்கு வந்தது… ‘சார்… நீங்க சொன்ன ஒரு விஷயத்தை நான் ஏற்கனவே சினிவாவுல பாத்திருக்கேன். சிவாஜி சார் தன்னோட மகளா நடிச்ச லஷ்மிய விமலாதித்தனா நடிச்ச முத்துராமனுக்கு கட்டி கொடுப்பாரு… கரெக்டா..?’ என்று கேட்க
‘பரவாயில்லியே… சினிமாவைப் பாத்தும் வரலாறை தெரிஞ்சி வச்சிருக்கியே…’ என்று அவனை ப்ரொஃபஸர் பாராட்ட, லிஷாவுக்கு கடுப்பாக இருந்தது…
‘ப்ரொஃபஸர் சார், ஒண்ணு க்ளாஸ் எடுக்குறீங்க..! இல்ல அவார்டு கொடுக்குறீங்க..! விஷயத்துக்கு வாங்க சார்… அப்போ, இந்த ஓவியத்துல இருக்கிற ராஜா தமிழ் ராஜாதான்னு சொல்றீங்களா..?’ என்று கேட்டாள்
‘அப்படித்தான் தோணுது..’
தாஸ் நீண்ட யோசனையிலிருந்தான். ‘சார், நீங்க சொன்னதுக்கப்புறம் இன்னொரு விஷயமும் ஒத்துப்போகுது..’ என்றான்
‘என்னய்யா..?’
‘நான் இங்கே பரசுராம லிங்கேஷ்வரர் கோவில்ல கேள்விப்பட்ட செய்திப்படி, அந்த சித்தர் சமாதியை சோழமன்னன் வேற எங்கேயோ கொண்டு போய் ஒளிச்சி வச்சதா தெரிஞ்சுது… ஒரு வேளை அந்த சோழ மன்னன் நீங்க சொன்ன மாதிரி சாளுக்கிய சோழனா இருந்தா..? அவர்தான் இந்த ஓவியத்துல இருக்கிறவரோ என்னமோ..? நாம வேணும்னா அந்த கோவிலை இன்னும் டீடெய்லா ஸ்டடி பண்ணா இந்த ஓவியம் வரையபட்ட காலம் தெரியவருமில்லியா..?’ என்று கேட்க
‘தெரிய வரும்ம்ம்…’ என்று இழுத்துக் கொண்டே வேறு எதையோ யோசித்த ப்ரொஃபஸருக்குள் ஒரு கேள்வி எழுந்தது, உடனே அவர் தாஸிடம்…
‘ஆமா..? எதுக்கு அந்த ராஜா, சித்தர் உடம்பை வேறு இடத்துக்கு ஷிஃப்ட் பண்ணாராம்..?’ என்று ஆர்வமாய் கேட்க…
‘அந்த ராஜாவோட கனவுல அந்த சித்தரே வந்து சொன்னதால அப்படி செஞ்சாராம்…’ என்று தாஸ் விடையளித்தான்.
‘ஓஹோ…’ என்று கூறி மீண்டும் எதையோ யோசித்தவர் சட்டென்று நிமிர்ந்து, ‘யோவ் தாஸ், இவ்ளோ நாளா விடையை கையில வச்சிக்கிட்டியே தேடிக்கிட்டிருக்கியேய்யா..?’ என்று கூற, மற்ற மூவரும் நிமிர்ந்தனர்…
‘நம்மகிட்ட என்ன விடை சார் இருக்கு..?’ என்று தாஸூம் ஆர்வமாய் கேட்டான்.
‘இப்ப நாம அனலைஸ் பண்ண விஷயத்தையெல்லாம் வச்சி பாக்கும்போது, இந்த ஓவியத்துல சித்தர் சாளுக்கிய மன்னனோட கர்நாடகாவுல வாழ்ந்திருக்காரு… இல்லையா..?’
‘ஆமா..?’
‘அப்புறம் ஏதோ காரணத்துனால, இங்கே சென்னையில இருக்கிற கோவில்ல சமாதியாயிருக்காரு…’
‘சரி..?’
‘இங்கே இருக்கிற ராஜாவோட கனவுல வந்து, தன்னை ஒரு இடத்துக்கு கொண்டு போக சொல்லியிருக்காரு…’
‘ஆமா..?’
‘திருவிழாவுல தொலைஞ்சிபோன ஒரு குழந்தை, யார்கிட்டயாவது உதவி கேக்கும்போது, என்னன்னு சொல்லும்..? தன்னை தன்னோட வீட்டுல கொண்டுபோய் விட்டுடும்படியாத்தானே கேட்கும்..?’ என்று கூற, அங்கிருப்பவர்களுக்கு அவர் சொல்ல வரும் விஷயம் புரிந்தது… அவர் தொடர்ந்தார்…
‘அப்படின்னா.. அந்த சித்தர், சோழ ராஜாவோட கனவுல வந்து தன்னை ஏன் கேணிவனக்கோவில்ல கொண்டு போய் வைக்கும்படியா சொல்லியிருக்கக்கூடாது..’ என்று கூற, அந்த அறையில் ஒரு 5 விநாடிகள் அமைதி நிலவியது… சந்தோஷ் அவருக்கு கைகொடுத்தான்.
‘ப்ரொஃபஸர் சார்… கலக்கிட்டீங்க… பாஸ் உங்காளு கிரேட் பாஸ்… இவரு சொலறதுல பாய்ண்ட் இருக்கு… இந்த சின்ன விஷயத்தை நாம இவ்வளவு நாள் யோசிக்காம விட்டுட்டோம்…’ என்று குதூகலித்துக் கொண்டிருந்தான். லிஷாவும் ப்ரொஃபஸரை எண்ணி வியந்துக் கொண்டிருந்தாள்.
தாஸூக்கும் அவர் சொன்ன விஷயம் உறைத்தது. இதை நாம் யோசிக்கவேயில்லையே..! ஒருவேளை அந்த கோவிலிலேயே அந்த சித்தரின் உடம்பு மறைத்து வைக்கப்பட்டிருந்தாலும் இருக்கலாம்தானே… கடிவாளம் கட்டிய குதிரைப் போல் ஒரே ரீதியில் யோசித்து இருந்துவிட்டோமே… ஆனால் உடனே அவனுக்குள் வேறு கேள்வியெழுந்தது..
‘ஆனா சார்..? நான் அந்த கோவிலை முடிஞ்சவரைக்கும் பாத்திருக்கேனே சார்… அங்கே அந்த சித்தர் சமாதி இருக்கிறதுக்கான தடங்கள் எதுவும் கிடைக்கலியே..?’
‘அப்படியா… இங்க சென்னை கோவில்ல, அவரோட சமாதி எங்கே இருந்ததுன்னு சொன்னே..?’ என்று ப்ரொஃபஸர் கேட்டார்.
‘ம்ம்ம்… அந்த கோவில் கோபுரத்துல மேலே இருந்தது…’
‘நீ கேணிவனக்கோவிலோட கோவில் கோபுரத்துக்கு மேல ஏறி பாத்தியா..?’
‘மேலே ஏறிப் பாக்கலை…! ஆனா, உள்ளே கருவறையிலருந்து பாத்திருக்கேன். அது அவ்வளவு பெரிய கோபுரமில்ல, ரொம்ப சின்னதுதான். ஆனா, நான் முழுசா பாக்கலை, ரொம்பவும் இருட்டா இருந்ததால ஒரு குறிப்பிட்ட அளவுதான் பாக்க முடிஞ்சது’
‘அப்போ, நீ முழுசா பாக்கலை..’
‘இல்லை…’
‘இங்கே சென்னை கோவில்ல, நூத்துக்கணக்கான வருஷமா இருந்த அவர் சமாதியை யாரும் பாக்கலை, யாரோ ஒரு திருடன் போய் ஒளியவேத்தான் சமாதியை கண்டிபிடிச்சிருக்காங்க… அப்படி இருக்கும்போது, நீ ஒரே ஒரு இராத்திரி, அந்த கேணிவனக் கோவில் கோபுரத்தை அறையிருட்டுல பாத்துட்டு, அங்கே சமாதி இருக்க வாய்ப்பில்லைன்னு சொல்றது எந்த வகையில நியாயம்னு சொல்லு..’ என்று கேட்க, அவரது இந்த கேள்வி தாஸூக்கு சரியென்றே பட்டது. அவனுக்கு மட்டுமல்ல, சந்தோஷூக்கும் லிஷாவுக்கும் கூட சரியென்றே பட்டது.’
‘அப்ப அங்கேதான் இருக்கும்னு சொல்றீங்களா..?’
‘இருக்கலாம்னு சொல்றேன். போய் பாத்தா தெரியப்போகுது… ‘ என்று கூறிவிட்டு அவர், தாஸின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தார். இதை சந்தோஷ் கவனித்தான். பாவம் இந்த மனுசன், அந்த கேணிவனக்கோவிலை பார்த்துவிட ரொம்பத்தான் ஆவலாய் இருக்கிறார் என்று மனதில் நினைத்துக் கொண்டான். தனக்கும் உள்ளே ஆர்வம் இருக்கிறது… ஆனால, தனது பாஸ்-தான், இன்னும் கிளம்பவே மாட்டேன் என்கிறார் என்று வருந்தினான்.
தாஸ் கையில் அந்த வராக உருவம் பொறித்த கிரீடத்தின் ஃபோட்டோவை வைத்துக் கொண்டிருந்தான். அவனுக்குள் கேணிவனத்துக்கு கிளம்ப நேரம் வந்துவிட்டதோ என்று அசைபோட்டுக் கொண்டிருந்தான்.
அந்த காடு, அந்த மலை, அந்த பச்சை வாசனை, வண்டுகளின் ரீங்காரம், புலியின் உருமல் இதெல்லாம் அவனை மீண்டும் வா என்று அழைப்பது போல் இருந்தது. ஆபத்துகள் நிறைந்த இந்த பயணத்தை மீண்டும் தொடர்வது ஒரு பக்கம் பயமாக இருந்தாலும், ஒரு பக்கம் குதூகலமாகவும் இருந்தது. இந்த முறை பயணத்தில் தன்னுடன் ப்ரொஃபஸரும், சந்தோஷூம், லிஷாவும் வருவார்கள். இவர்களுடன் அந்த காட்டுக்குப் போவது என்பது, படைபலத்துடன் போர்களத்துக்குள் நுழைவது போன்றதுதான். என்று யோசித்துக் கொண்டிருக்க, இன்னொரு எண்ணமும் வந்தது… ஏற்கனவே அந்த காட்டிற்கு போயிருக்கும் குணா என்ன ஆனான் என்று தெரியவில்லை… என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, அவனது செல்ஃபோன் ஒலித்தது…
செல்ஃபோன் ரிங்கடோன்
காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா- உள்ளம்
அலைமோதும் நிலை கூறவா?
இன்ஸ்பெக்டர் வாசு பேசினார்
‘தாஸ், மிஸ்ட்ரி டிவியிலருந்து குணாவோட போன மூணு பேரை பத்தி விசாரிச்சேன்…’ என்றார்… அவர் குரலில் இயல்பு மாறியிருந்தது…
‘என்ன சார் தகவல்..?’
‘டிவி ஆளுங்க யாரையும் தொடர்பு கொள்ளவே முடியலியாம்… கடைசியா நேத்து கடப்பாலருந்து ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக்காங்க… அதுக்கப்புறம் தகவலே இல்ல… சேனல்லியே கொஞ்சம் பயந்து போயிருக்காங்க…’ என்று கூற, தாஸ்-ம் பயந்து போனான்.
அது பயங்கர காடு… அவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கும்… நமக்கும் இந்த நிலை ஏற்படுமோ… மீண்டும் கேணிவனத்துக்கு போகத்தான் வேண்டுமா… என்று மனதிற்குள் குழம்பிக்கொண்டிருந்தான்.
‘என்ன தாஸ்… எதுவும் பேச மாட்டேங்குறீங்க..?’ என்று இன்ஸ்பெக்டர் அவன் கவனத்தை கலைத்தார்…
‘இல்ல சார்… இப்பதான் அந்த கேணிவனத்துக்கு மறுபடியும் போலாமான்னு யோசிட்டிருந்தேன். ஆனா, நீங்க சொன்னதைக் கேட்டா, போகணுமான்னு தோணுது..’
‘இல்ல தாஸ், நாம கேணிவனத்துக்கு போயே ஆகணும்…’ என்றதும் தாஸ் திடுக்கிட்டான்
‘என்ன சார்? நீங்களும் வர்றீங்களா..?’ என்று கூற, இதை கேட்டுக் கொண்டிருந்த ப்ரொஃபஸரும் வியந்தார்.
‘ஆமா தாஸ். குணாவுக்கும் உங்களுக்கும் மட்டும்தான் கேணிவனத்தைப் பத்தி தெரியும். அவன் தனியா போய் அங்கே மாட்டியிருந்தாலும் பரவாயில்ல, ஆனா மீடியா ஆட்களோட போயிருக்கான். நாம அவங்களை நல்லபடியா காப்பாத்தி கொண்டு வரலேன்னா, இந்த விஷயம் மீடியா மூலமா உலகத்துக்கே தெரிஞ்சிடும். நீங்கதானே இந்த விஷயத்தை இரகசியமா வச்சிக்க என்ன வேணும்னாலும் செய்யலாம்னு சொன்னீங்க… இப்ப முடியாதுன்னா எப்படி..?’ என்று கூற… தாஸ் உள்ளுக்குள் கேணிவனத்துக்கு போயே ஆகவேண்டும் என்று முடிவெடுத்தான்.
‘சரி சார்… இன்னைக்கு ஒரு நாள் மட்டும் எனக்கு டைம் கொடுங்க… நாளைக்கே நாம கேணிவனத்துக்கு கிளம்புவோம்’
‘ஏன் இன்னைக்கு நைட், மெயில் வண்டியில போகலாமே..?’ என்று கேட்க
‘இல்ல சார், வாழ்க்கையில மறக்க முடியாத ஒரு பயணத்துக்கு கிளம்ப போறோம். அதுக்கு தயார் படுத்திக்க நாம எல்லாருக்குமே இந்த ஒரு நாள் அவகாசம் தேவைன்னு நினைக்கிறேன்… நாளைக்கு தயாரா இருங்க…’ என்று கூறி ஃபோனை கட் செய்து அங்கிருக்கும் அனைவரையும் பார்த்தான். அனைவரும் தாஸையே உற்று நோக்கியபடி, அவன் கண்களில் ஏற்கனவே அவன் பார்த்துவந்த கேணிவனத்தை தேடிப் பார்க்க முயற்சித்துக் கொண்டிருந்தனர்.
இந்த பயணம் அவ்வளவு பயங்கரமானதா..? அப்படி என்ன நடக்கப்போகிறது…? சரி… பார்க்கத்தானே போகிறோம்..! என்று அங்கு நின்றிருந்த அனைவருக்குள்ளும் ஓடிக்கொண்டிருந்தது…
தொடரும்…