கேணிவனம் – 20

காலை 10.30 மணி…

ரெட்ஹில்ஸலிருந்து பூதூர் செல்லும் ரோட்டில், ரெண்டு பக்கமும் வயல்களும் பனைமரங்களும் சூழ்ந்திருக்கும் வளைவான பாதைகளில், இன்ஸ்பெக்டர் வாசுதேவனின் ஜீப் சீறிக்கொண்டிருந்தது…

சென்னை மாநகரத்தின் மிகச்சொற்ப தூரத்தில் இப்படி வயல்படர்ந்த கிராமம் இருப்பது சில சமயம் கடத்தல்காரர்களுக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது என்று மனதளவில் வாசுதேவன் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார்.

லிஷா சந்தோஷூக்கு கடைசியாக செய்த ஃபோன்கால்-ஐ ட்ரேஸ் செய்ததில், அது இந்த பூதூர் கிராமத்தின் செல்ஃபோன டவரிலிருந்துதான் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று இன்று காலை அவருக்கு தகவல் வந்திருந்தது… அது சரியான தகவலாக இருக்கும்பட்சத்தில் லிஷாவை எப்படியும் காப்பாற்றிவிடலாம்… என்ற நம்பிக்கை அவரிடமிருந்தது…

அவர் தனக்கு பின்புறம் அமர்ந்திருக்கும் கான்ஸ்டபிளிடம்…

‘தாஸ்க்கும் சந்தோஷூக்கும் தகவல் சொல்லிட்டீங்களா..?’ என்று கேட்க

காலையில் அதிகமாக சாப்பிட்ட டிஃபனின் தாக்குதலாலும், வேகமாக போய்க்கொண்டிருக்கும் ஜீப்பின் காற்றினாலும், எந்நேரமும் தூங்கிவிடக்கூடிய அபாயக்கட்டத்திருந்த கான்ஸ்டபிள்… இன்ஸ்பெக்டரின் குரல்கேட்டதும், சட்டென்று சுதாரித்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தார்.

‘சார், சொல்லிட்டேன் சார், அவங்களும் இந்நேரம் இங்கதான் வந்துக்கிட்டிருப்பாங்க..’ என்று கூறினார்…

வெளியே ‘பூதூர்’ என்ற ஒரு பெயர்ப்பலகை… தன்னை கடந்து செல்லும் போலீஸ் ஜீப்பிற்கு முகம் திருப்பாமல் ரோட்டை வெறித்தபடி நின்றிருந்தது…

——————————

அதே சாலையில் 4 கி.மீ.க்கு முன், இன்னோவா வண்டி வேகமாக விரைந்துக் கொண்டிருந்தது…

‘இப்படி அதிரடியா போய் லிஷாவை காப்பாத்துறது நடக்குற காரியமா பாஸ்..? போலீஸ் வர்றது தெரிஞ்சி அந்த கடத்தல்காரங்க அவளை ஏதாவது பண்ணிட்டா..?’ என்று சந்தோஷ் பயந்தபடி கேட்க

‘சந்தோஷ்..!?! முதல்ல இந்த மாதிரி நெகடிவ்-ஆ திங்க் பண்றதை நிறுத்து…! இன்னிக்கி லிஷாவை எப்படியும் காப்பாத்திடலாம். அதை மட்டும் நம்பு… மத்ததெல்லாம் தானா நடக்கும்… டோண்ட் வர்ரி…’ என்று அவனுக்கு ஆறுதல் கொடுத்தபடி தாஸ் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தான்.

அவர்கள் பூதூர் கிராமத்திற்குள் நுழைந்தபோது… இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தனது ஜீப்பிற்கு முன்னால் நின்றபடியிருக்க… அவர்கள் வண்டி நெருங்கி வருவதை பார்த்துக் கொண்டிருந்தார்.

இருவரும் இறங்கி அவரை சமீபித்தனர்…

‘சார், ஏதாச்சும் தகவல் தெரிஞ்சுதா..?’ என்று சந்தோஷ் அவரை நெருங்கியபடி கேட்க…

‘விசாரிக்க சொல்லியிருக்கேன்! இங்க இருக்கிற பழைய பாழடைஞ்ச வீடு, குடோன், உபயோகிக்கப்படாத கல்யாண மண்டபம், இப்படி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிங்களா பாத்து தேட சொல்லியிருக்கேன். கான்ஸடபிள்ஸ் தேடிக்கிட்டிருக்காங்க…’

‘வேற ஏதாச்சும் புது ஆளுங்க ஊருக்குள்ள வந்து போனதை விசாரிச்சீங்களா?’ என்று தாஸ் கேட்க

‘விசாரிச்சுட்டேன் தாஸ், அப்படி எதுவும் பாக்கலையாம். ஒருவேளை கடத்தல்காரங்க அதிகாலையில இங்க வந்திருக்கலாம். ஏன்னா, 5 மணிக்குதானே லிஷா சந்தோஷூக்கு ஃபோன்கால் பேசியிருக்கா..! அதனால, அவங்க இருட்டின நேரத்துல மட்டும்தான் வந்து போயிட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.’

‘ஒரு வேளை அவங்க இந்த ஊரை தாண்டி போய் வேற எங்கேயாவது லிஷாவை வச்சிருந்தா..?’ என்று சந்தோஷூம் சந்தேகத்துடன் கேட்க..

‘இருக்கலாம். முதல்ல இங்க தர்ரோவா செக் பண்ணிட்டு இதுக்கடுத்து பக்கத்துல இருக்கிற ஊருக்கு போவோம்..’ என்று இன்ஸ்பெக்டர் கூறியபடி, அங்கிருந்த தெருவை நோட்டம் விடுகிறார், அந்த ஊரில் சகஜ நிலையில் இருந்த மக்கள் போலீஸ் நுழைந்திருப்பதை வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் பார்த்துக்கொண்டிருந்தனர்…

தாஸ், அந்த மக்களில் யாராவது தனக்கு வித்தியாசமாக தெரிகிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு தாத்தா, தன் கையில் குடையை பிடித்தபடி தாஸை முறைத்துக் கொண்டே கடந்து சென்றார். சிறுவர்கள் சிலர் கையில் கிரிக்கெட் பேட் மற்றும் பால்-ஐ கையில் வைத்து கொண்டு போலீஸையே உற்று நோக்கியபடி கடந்துக்கொண்டிருந்தனர்… பெண்கள் சிலர் இடுப்பில் ப்ளாஸ்டிக் குடங்களை சுமந்தபடி இவர்களை பார்த்தபடி கடந்தனர். ஒரு காய்கறி வண்டிக்காரன், போலீஸ் ஜீப்பிலிருந்து மிகவும் ஒதுங்கியபடி தனது வண்டியை தள்ளிக்கொண்டு சென்றான்.

இப்படி அந்த ஊர்காரர்கள் அனைவரும் சகஜமாகவே தெரியவே தாஸ் குழம்பிக்கொண்டிருந்தான்.

ஒருவேளை நாம் தப்பான இடத்தில் வந்து தேடிக்கொண்டிருக்கிறோமோ? என்று அவன் மனதில் நினைத்திருந்த வேளை, சற்று தொலைவிலிருந்த ஒரு டிஃபன் கடையில், ஒரு ஜோடி கண்கள்… இன்ஸ்பெக்டரும், தாஸூம், சந்தோஷூம் நடுவீதியில் நின்று கிராமத்தை நோட்டம் விட்டுக் கொண்டிருப்பதை, நிழலுருவாய் மறைவாய் நின்று பார்த்துக் கொண்டிருந்தது…

——————————

‘சார், நீங்க சொன்ன மாதிரி, இங்கே இருக்கிற பழைய பில்டிங், குடோன் இப்படி எல்லா இடத்துலயும் தேடிப்பார்த்துட்டோம்… எதுவும் க்ளூ இல்ல சார்..’ என்று சளைப்பாக கூற…

சந்தோஷூக்கு ஒரு யோசனை வந்தது… ‘சார், ஒண்ணு பண்ணலாமா, லிஷாவோட நம்பருக்கு டயல் பண்ணி பாத்தா, ஒருவேளை ஃபோன் ரிங் ஆகுற சவுண்டு ஏதாவது சுட்டுவட்டாரத்துல கேக்குதான்னு பாப்போமா..?’ என்று கூற

‘இல்ல சந்தோஷ், நாமளே, அந்த கடத்தல்காரனுக்கு சிக்னல் கொடுக்கிற மாதிரியாயிடும், தவிர, எங்கேன்னு போய் கேப்பீங்க… நீங்க பதற்றத்துல இருக்கிறதால இப்படியெல்லாம் பேசத் தோணுது. கொஞ்சம் அமைதியாயிருங்க… ஒரு தகவலும் இல்லாம இருந்தோம், இப்போ நிறைய தகவல் கிடைச்சிருக்கு… எப்படியும் புடிச்சிடலாம்..’ என்று கூற…

‘உயிரோட பிடிக்கணும் சார்… அதுதான் ரொம்ப முக்கியம்’ என்று சந்தோஷ் சற்றே கோவப்பட்டான்.

‘ஹே சந்தோஷ், அமைதியாயிரு..’ என்று தாஸ் அவனுக்கு சமாதானம் கூறிவிட்டு, இன்ஸ்பெக்டரை நெருங்கினான்.

‘சார், இன்னும் கொஞ்சம் போலீஸ் ஃபோர்ஸ்-ஐ கூட்டிக்கிட்டு, அதிரடியா எல்லா வீட்டுக்குள்ளயும் போய் சர்ச் பண்ண முடியுமா..?’

‘என்ன தாஸ் நீங்களும்..! ப்ராப்பரான டீடெய்ல்ஸ் இல்லாம அப்படி பண்ணா, பப்ளிக்-கு பயங்கர தொல்லையாயிடும்…’ என்று கூறிய இன்ஸ்பெக்டர் உள்ளுக்குள், தாஸும் பதற்றமாய் இருப்பதை உணர்ந்தார்.

‘சொல்றதெல்லாம் வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டிருக்கீங்க… வேற என்னதான் சார் செய்யலாம்..’ என்று சந்தோஷ் மீண்டும் கேட்க… இன்ஸ்பெக்டர் சற்று கோபமாகவே அவனை முறைத்தார்…

அவர் முறைப்புக்கு சந்தோஷ் அடங்கினான்.

ஆனால், உண்மையில் வேறு என்ன செய்வது என்று இன்ஸ்பெக்டரும் திணறிக்கொண்டிருந்ததை அவர் முகம் காட்டிக்கொடுத்தது.

——————————

சிறுவர்கள் சிலர், அந்த பூதூர் கிராமத்துக்கு சற்று தொலைவிலிருந்த ஒரு ஒதுக்குபுறமான பகுதியில் க்ரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அதில் ஜெய் என்ற சிறுவன் பவுண்டரி எல்லையில் நின்றிருந்தான்.

அவன் முகத்தில், போன முறை மேட்சில் தோற்ற அவமான ரேகை இன்னமும் ஓடிக்கொண்டிருந்தது… அதற்கு காரணம், இப்போது அங்கே பேட்டிங் செய்துக் கொண்டிருந்த ரவி என்றவன்தான்.

ரவி பேட்டிங்-இல் எமகாதகன்… அவன் மட்டும் எந்த டீமில் ஆடினாலும், அந்த டீம் ஜெயித்துவிடுகிறது. இந்த முறை விடக்கூடாது. எப்படியும் அவனை தோற்கடிக்க வேண்டும், 4 அல்லது சிக்ஸர் ஒன்று கூட போக விடக்கூடாது. கேட்ச் வந்தால், தவறாமல் பிடித்து அவனை திருப்பி அனுப்ப வேண்டும் என்று ஜெய்-யின் ஒட்டுமொத்த கவனமும் அந்த ரவியின் மீதுதான் இருந்தது. எப்படியாவது அவனது ரன் ரேட்டை குறைத்து, அவனை அவமானப்படுத்த வேண்டும் என்று உள்ளுக்குள் என்னென்னமோ திட்டம் தீட்டிக்கொண்டிருந்தான்.

அவன் எதிர்பார்த்ததுபோல், ரவி தன்னிடம் வந்த பந்தை, ஓங்கி அடிக்க, அது உயரே பறந்து சரியாக கீழே நின்றிருந்த ஜெய்யின் கண்களில் நம்பிக்கை ஒளி படர்ந்தது.

இது சுலபமான கேட்ச்… இதை பிடித்துவிட்டால், ரவி அவுட்… பிடி… பிடி… பிடித்துவிடு என்று அவன் முணுமுணுத்துக் கொண்டிருக்க, அவன் கண்களில் ஏதோ ஒரு சிகப்பு திரவம் விழுந்தது… கண்கள் கூசியது… அவன் கண்களை கசக்கிக் கொண்டிருந்த சமயம், பந்து கீழேவிழுந்து… அவனைத் தாண்டி பின்புறம் சென்று அங்கிருந்த பழைய வாட்டர் டேங்க்-ஐ தொட்டது…

‘ஃபோஓஓஓஓர்ர்ர்…’ என்று சற்று தொலைவில் அமர்ந்திருந்த சிறுவர்கள் அனைவரும் ஆரவாரக்கூச்சலிட்டனர்…

ஆனால், பௌலிங் டீமின் சிறுவர்கள் பயங்கர கோபத்துடன் ஜெய்-ஐ நோக்கி ஓடி வந்தனர்…

‘டேய், சப்ப-கேட்ச்-டா, இதைப் போய் மிஸ் பண்ணிட்டியே… பவுண்ட்ரியில நின்னுக்கிட்டு தூங்கிட்டிருந்தியா..?’ என்று ஒருவன் அவனை திட்டியபடி நெருங்கிவந்தவன், ஜெய் கண்களிலிருந்து ரத்தம் வழிவதைப் பார்த்து, நின்றான்.

‘என்னடா… உன் கண்ணுல ரத்தம் வருது..?’ என்று சொல்ல, ஜெய் கண்களை கசக்கிய தனது கைகளை பார்த்தான். அதிலும் ஏதோ சிகப்பு கலரில் தண்ணியாய் இருந்தது…

அவன் கலவரத்துடன் தன்னை நெருங்கி வந்த சிறுவனை பார்த்துக் கொண்டிருக்க, இப்போது மீண்டும் அவன் தலையில் சிகப்பு திரவம் அதிகமாக விழுந்து அவன் முகமெங்கும் வழிந்து ஓடியது…

‘அய்யோ, ரத்தம், ரத்தம்…’ என்று ஜெய் அங்கிருந்து நகர்ந்துவிட, அந்த ரத்தம், இப்போது அவன் நின்றிருந்த இடத்தில் தரையில் விழுந்து… அங்கிருந்த மணல் சிகப்பு கலரில் மாற்றிக்கொண்டிருந்தது…

அந்த ரத்தம் மேலிருந்து விழுந்து கொண்டிருப்பதை உணர்ந்த ஒரு சிறுவன் மேலே பார்க்க, அவனை தொடர்ந்து அனைவரும் மேலே பார்க்க… அங்கே அவர்கள் பார்வையில், அந்த பழைய வாட்டர் டேங்க் பிரம்மாண்டமாக தெரிந்தது.
——————————

2 மணி நேர தீவிர தேடல்களுக்கு பிறகும் எதுவும் கிடைக்காததால் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தனது ஜீப்பிலும், தாஸ் மற்றும் சந்தோஷ் தனது இன்னோவாவிலும் அந்த பூதூரை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர்.

இந்த இடத்திலிருந்துதான் டவர் கிடைத்திருக்கிறது ஆனால், லிஷா அங்கு இல்லை எனபதால், இந்த வழியாக கடத்தல்காரர்கள் அவளை வேறு ஏதோ ஒரு இடத்திற்கு அழைத்து போயிருக்கக்கூடும் என்று எண்ணியபடி போய்க்கொண்டிருக்கும்போது…

‘பூதூர்’-ன் எல்லை முடிவு பலகையின் அருகில், ரோட்டோரமாக சிறுவர்கள் சிலர் கும்பலாக நின்றிருப்பதை இன்ஸ்பெக்டர் ஜீப்பிலிருந்தபடி பார்த்துக்கொண்டிருக்க… ஜீப் அந்த சிறுவர்களை கடந்து சென்றது…

ஜீப்பின் சைடு மிரர்-ல் இன்ஸ்பெக்டர் எதேச்சையாக பார்க்க, அதில், ஒரு சிறுவன் போலீஸை அழைக்க முயலும்போது, இன்னொரு சிறுவன் அவன் வாயை பொத்தி அவனை தடுப்பதை கண்டார், அழைக்க முயன்ற சிறுவனின் சட்டையில் சிகப்பாய் ஏதோ பரவியிருந்தது… இன்ஸ்பெக்டர் குழப்பத்துடன் வண்டியை நிறுத்தச் சொன்னார்…

‘வெயிட் வெயிட்… வண்டியை நிறுத்துங்க..! ரிவர்ஸ் எடுங்க..!’ என்று கூற, டிரைவர் ரிவர்ஸ் எடுத்தார்…

அந்த சிறுவர்கள் போலீஸ் வண்டி திரும்பி வருவதை கண்டதும், அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர். ஆனால், ஒரு சிறுவன் மட்டும் அப்படியே நின்றிருந்தான்.

வண்டி முழுவதுமாக அவர்கள் பக்கம் வந்து நின்றது…

இன்ஸ்பெக்டர் இறங்கியபடி… ‘உன் பேரு என்னப்பா..?’

‘ஜெய் சார்..’ என்று அவன் சொல்லும்போது, அவன் முகத்திலும் லேசாக சிகப்புச்சாயம் இருப்பதை காண முடிந்தது…

இதற்குள் இன்னோவாவும் அங்கு வந்து நின்றது…  உள்ளிருந்து தாஸூம் சந்தோஷூம் அவரை நெருங்கி வந்தனர்…

‘என்ன உன் சட்டையெல்லாம் சிகப்பா இருக்கு..?’ என்று இன்ஸ்பெக்டர் அவனை மிரட்டாமல் கேட்க…

‘சார், அதுக்காகத்தான் உங்களை கூப்பிடலாம்னு பாத்தேன் சார்… இந்த ரவிப்பய வாயை பொத்திட்டான்…’ என்றவன் கூறும்போது, இன்ஸ்பெக்டர் அந்த இடத்தை நோட்டம் விட்டார்.

அது ஒரு பழைய பூங்கா… அந்த பூங்காவுக்கு நடுவே, நீண்ட நாட்களாக உபயோகிக்கப்படாத ஒரு பெரிய சைஸ் வாட்டர் டேங்க் மிகவும் பழையதாக இருந்தது..

‘என்னாச்சு, க்ரிக்கெட் மேச்சுல ஏதாச்சும் தகராறா..? ஒருத்தருக்கொருத்தர் அடிச்சிக்கிட்டீங்களா..?’

‘இல்ல சார்… அந்த வாட்டர் டேங்க்-லருந்து என் மேல ரத்தம் ஒழுகிச்சு சார்..’ என்று கூற, இன்ஸ்பெக்டர் வாசுதேவன் நிமிர்ந்தார்… தாஸூம் சந்தோஷூம் கூட அவரை உற்று நோக்கினர்… உடனே இன்ஸ்பெக்டர் தனது கான்ஸ்டபிள்களை அழைத்துக் கொண்டு அந்த வாட்டர் டேங்கின் மீது, துப்பாக்கியை தயாராக கையில் வைத்துக் கொண்டு ஏற ஆரம்பித்தனர்…

சந்தோஷ் பயந்தான். உள்ளுக்குள் ஏதோ ஒரு அசௌகரிய பாரம் அவனை அழுத்தியது. இது டேங்க்-ன் மீது இருந்து ஒழுகிய ரத்தமென்றால், லிஷா-வை இங்குதான் கடத்தி வைத்திருக்கிறார்களா! ஆனால்… ரத்தம்..? ஒரு வேளை போலீஸ் இங்கு நுழைந்ததை பார்த்ததும் அவளை கொன்று போட்டுவிட்டு ஓடிவிட்டார்களா..? ஹய்யோ..!

டேங்கின் மீது துருப்பிடித்த இரும்பு கதவு ஒன்று மூடப்பட்டு, வெளிப்புறமாக தாழ் போடப்பட்டிருந்தது… அதைத் திறந்து கொண்டு போலீஸ் உள்ளே எட்டிப் பார்க்க…

இருட்டான பெரிய டேங்க… திறந்த கதிவு துவாரத்தின் வழியே வெளிச்சம் உள்ளே பாய, அதில் ஒரு இரும்பு ஏணி இருப்பது தெரிந்தது… உள்ளே இறங்கினார்…

தன்னிடமிருந்த சிகரெட் லைட்டரை எடுத்து பற்ற வைத்தார்… உள்ளே ஓரளவுக்கு வெளிச்சம் தெரிந்தது…

‘லிஷாஆஆஆ..?’ கத்தினார்…

‘லிஷாஆஆஆ..? ஆர் யூ தேர்..?’ மீண்டும் கத்தினார்

சந்தோஷ் அந்த துவாரத்தின் வழியாக மேலிருந்தபடியே கத்தினான்…

‘லிஷா..ஆ..!’

அவன் குரலுக்கு மிகவும் களைப்பாக ஒரு எதிர்குரல் கேட்டது…

‘சேண்ண்ண்டிஈஈஈஈ…!’

——————————

ரெட் ஹில்ஸ்-லிருந்து சென்னைக்கு செல்லும் சாலையில் இன்னோவா கார் சந்தோஷமாக சீறிக்கொண்டிருந்தது…

உள்ளே லிஷாவும் சந்தோஷூம் பின்புறம் அமர்ந்திருக்க… தாஸ் மிகவும் உற்சாகமாக வண்டி ஓட்டிக்கொண்டிருந்தான்.

ரியர் வியூ கண்ணாடியில் பார்க்க, லிஷா சந்தோஷின் தோளில் சாய்ந்திருந்தாள்.

‘என்ன லிஷா எங்க எல்லாரையும் இப்படி பதற வச்சிட்டியே..! நீ திரும்பி வருவியோ இல்லையோன்னு ஆயிடுச்சு..’ என்று தாஸ் கூற, லிஷா கண்களை மூடியபடியே மெலிதாக சிரித்தாள்.

‘என்னை விட்டுட்டு கேணிவனம் போயிடலாம்னு பாத்தீங்களா..?!’ என்று மெல்லிய குரலில் கூறினாள்.

‘உனக்கு ஏதாச்சும் ஆயிருந்தா பாவம் இந்த சந்தோஷ் அழுதே செத்திருப்பான்..’

‘இவனா..?! நீங்க வேற, என்னை விட இன்னொரு சூப்பர் பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணியிருந்திருப்பான்..’ என்று கலாய்த்தாள்

‘ஹே லிஷா… என்னைப் பத்தி அவ்வளவுதான் புரிஞ்சி வச்சிருக்கே..! நீ மட்டும் மேல உயிரோட இல்லாம இருந்திருந்தா… அதே வாட்டர் டேங்க்லருந்து நான் குதிச்சி செத்திருப்பேன்…’

‘லிஷா? உனக்கு நீ இருந்த இடம் வாட்டர் டேங்க்-தான்னு தெரியுமா.?’

‘முதல்ல தெரியாது… ஆனா, அந்த இடத்துல நடந்து பாத்தப்போ, நிறைய பைப் இருந்தது தெரிஞ்சுது… அதுல ஒரு பைப் தரையோட தரையாவும் இன்னொரு பைப் கொஞ்சமா மேல எம்பின மாதிரியும் இருந்தது… ஒரு பைப் சப்ளை பைப்-னும் இன்னொரு பைப் ஸ்லட்ஜ் பைப்-ஆ இருக்கும்னும் ஜட்ஜ் பண்ணேன். வாட்டர் டேங்க்-லதான் அந்த அமைப்பு இருக்கும்…’

‘அதுக்கு முன்னாடி அது என்ன இடம்னு நினைச்சே..?’

‘ஏதோ ஒரு பாதாள அறைன்னு நினைச்சேன். ஆனா, உள்ளே ஒரு எலி கூட இல்ல… பாதாள அறைன்னா, எப்படியாவது எலியோட ஆதிக்கமிருக்கும்… ஸோ கூட்டி கழிச்சி பாக்கும்போது, உண்மை தெரிஞ்சது..’

‘அப்புறம் எப்படி ரத்தம் மூலமா கீழ சிக்னல் கொடுத்தே..?’ என்று சந்தோஷ் கேட்க

‘அது ரத்தமேயில்ல… நேத்து நைட் தயிர்சாதத்துக்கு சைட்-டிஷ்ஷா வந்த பீட்ரூட் பொறியல்… எனக்குத்தான் பீட்ரூட் பிடிக்காதே அதனால சாப்பிடாம ஒதுக்கி வச்சிருந்தேன். முக்கா பாட்டில் தண்ணியிருந்துச்சு… ஸோ, அந்த பீட்ரூட்டை நல்லா மென்னு தண்ணிபாட்டில துப்பினதும், தண்ணி நல்ல கலர் பிடிச்சது… அதை கொண்டு போய் ஸ்லட்ஜ் பைப்ல தலைகீழ தூக்கி போட்டேன். ஆனா, டேங்க் கீழ யாருமே வந்தில்லன்னா தெரிஞ்சிருக்காது. அங்கேதான் கொஞ்சம் லக் கை கொடுத்திருக்குன்னு நினைக்கிறேன்..’ என்று ஒரு வழியாக நடந்த விஷயத்தை நிதானமாக கூறி முடிக்க…

சந்தோஷ் அவளை கட்டிக்கொண்டான். ‘உன் இடத்துல நான் இருந்திருந்தா உன்னை நினைச்சிக்கிட்டே செத்திருப்பேன்..’ என்றான்…

‘நீ இப்படி ஏதாவது லூசுத்தனமாதான் செய்வேன்னு எனக்கு தெரியும்..’ என்று நக்கலாக அவள் சொல்ல, அவளை தலையில் கொட்டினான்…

‘ஹே… வலிக்குதுடா..’ என்றவள் கொஞ்ச… தாஸ் சிரித்துக் கொண்டான்.

சந்தோஷ் திடீரென்று பொறுப்பு வந்தவனாய், ‘பாஸ், அந்த ப்ரொஃபஸருக்கு ஃபோன் பண்ணி சொல்லிடுங்க… அவர் பாட்டுக்கு சித்தர் சமாதியை கண்டுபிடிக்கமண்டைய பிச்சிக்கிட்டிருக்கப் போறாரு..?’

‘இல்ல சந்தோஷ், அவர் கண்டுபிடிக்கட்டும்… லிஷா திரும்பி வந்தது அவர் தெரிஞ்சிக்க வேண்டாம்… அந்த சித்தர் சமாதி லிஷாவை காப்பாத்த மட்டும் கண்டுபிடிக்க சொல்லலை… அந்த கேணிவனத்தைப் பத்தி முழுசா தெரிஞ்சிக்க உதவியா இருக்கும்னுதான் கண்டுபிடிக்க சொன்னேன்.’

‘தாஸ், அந்த கேணிவனம் பத்தி வேற ஏதாவது தெரிய வந்ததுதா..?’ என்று லிஷா ஆர்வமாய் கேட்க…

‘எங்கே லிஷா..? நீ இல்லாம சந்தோஷூம் ஆஃப் ஆயிருந்தான்… நீ திரும்பி வந்ததுக்கப்புறம்தான்.. எனக்கு என் ரெண்டு கையும் கிடைச்ச மாதிரியிருக்கு… இனிமே என் கவனம் முழுதும் கேணிவனம் பத்தின ரகசியத்தை கண்டுபிடிக்கிறதுதான்…’

அதே நேரம், ப்ரொஃபஸர் கணேஷ்ராம், பழைய ஓவியத்தில் ஒரு மிகப்பெரிய விஷயம் கண்டுபிடித்தவராக ஓவியத்தின் மீது பிடித்திருந்த பூதக்கணாடியிலிருந்து கண்கள் விலக்கியவாறு… ஆர்வத்துடன் தாஸுக்கு ஃபோன் செய்தார்…

வண்டியில் தாஸ்-ன் மொபைல் ஒலித்தது…

தாஸின் ரிங்டோன்
அமைதியான நதியினிலே ஓடும் – ஓடம்

அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்…

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top