கேணிவனம் – 18

கடத்தல்காரனிடமிருந்து வந்த ஃபோன்கால், ஒருவகையில் மிரட்டலை விட்டு சென்றாலும், ஒரு வகையில் லிஷா இன்னும் உயிரோடு இருப்பதை ஊர்ஜிதப்படுத்தியிருந்ததால் தாஸ் சற்று ஆறுதலாயிருந்தான்…

ஆனால், இருப்பிடம் தெரியாத பிரம்ம சித்தர் சமாதியை, எங்கென்று போய் தேடுவது… சோழ மன்னன், அதுவும் எந்த காலத்து சோழன், அவன் பெயரென்ன என்று ஒன்றும் தெரியாத நிலையில் எப்படி தேடுவது… மேலும், நான் சித்தர் சமாதியை தேடிக்கொண்டிருப்பதை எப்படி வெளியே தெரிந்தது… யாரோ தன்னை ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து வந்திருக்கிறார்கள். யாராயிருக்கும்…

இந்த கேணிவனத்தை பற்றிய விஷயம் தெரிந்தவர்கள் சிலர்தான், அவர்கள் அனைவரும் என் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள். வெளி ஆள் என்றால், லிஷா அடிக்கடி சென்று சந்திக்கும் ரிச்சர்ட்-தான்… ஆனால், அவனுக்கும் இந்த சித்தர் சமாதி விஷயம் எப்படி தெரிந்திருக்கும்… என்று மனம் குழம்பியபடி இருந்தான்.

இன்ஸ்பெக்டர் வாசுவும் கிட்நாப்பிங் குறித்து  மிகவும் குழப்பத்துடன் இருந்தார்…

‘தாஸ்…? நீங்க எதையோ எங்கிட்ட சொல்லாம மறச்சிருக்கீங்க… ஏதோ ஒரு சித்தர் சமாதியை கண்டுபிடிக்க சொல்லி, கிட்நாப்பர் டிமாண்ட் பண்றான்னா… இதுக்கு பின்னாடி ஏதோ பெரிய விஷயம் இருக்கு..? ஏதாவது புதையல் அது இதுன்னு இன்வால்வ் ஆயிருக்கீங்களா..?’

‘ஐயோ, அதெல்லாம் இல்ல சார்… இது வேற விஷயம்…’

‘நீங்க காரணத்தையும், சரியான சஸ்பெக்ட்-ஐயும் சொன்னாத்தான் நாங்க லிஷாவை கண்டுபிடிக்க முடியும்..?’

‘சார், காரணத்தை கண்டிப்பா சொல்றேன். அதுக்கு முன்னாடி எனக்கு இன்னொருத்தர் மேல இப்போ சந்தேகமா இருக்கு…’

‘யாரது..?’

‘பேரு ரிச்சர்ட்… ஃபாரினர்… லிஷாவோட ஃபேஸ்புக் ஃப்ரெண்டு… அவனோட டீடெய்ல்ஸ்-ஐ சந்தோஷ் உங்களுக்கு தருவான்… எதுக்கும் அவனையும் செக் பண்ணி பாத்துருங்க…’ என்று கூற, இன்ஸ்பெக்டர் ஒரு கான்ஸ்டபிளை அழைத்து ரிச்சர்ட் பற்றிய விவரங்களை சந்தோஷிடம் வாங்கிக்கொண்டு நேரில் சந்தித்து விசாரித்து வருமாறு உத்தரவிட்டார்… அதேபோல், லிஷாவின் நம்பரிலிருந்து பேசிய கடத்தல்காரன் எந்த ஏரியாவிலிருந்து பேசியிருக்கிறான் என்று கால் ட்ரேஸ் செய்யும்படி கூறிவிட்டு மீண்டும் தாஸிடம் வந்தார்…

‘தாஸ் இப்பவாவது, நீங்க மறைக்கிற விஷயத்தை முழுசா சொல்லுங்க..’ என்று கொஞ்சம் கடுமையாகவே கேட்டார்.

‘ஆமா பாஸ், எல்லாத்தையும் சொல்லிடலாம் பாஸ்..? லிஷாவை எப்படியாவது காப்பாத்தணும் பாஸ்’ என்று அருகிலிருந்த சந்தோஷூம் பரிதாபத்துடன் கெஞ்சிக்கொண்டிருந்தான்.

வேறு வழியின்றி தாஸ், இன்ஸ்பெக்டரிடம் கேணிவனத்தை பற்றிய உண்மையை கூற முடிவெடுத்தான்…

‘சார்… நீங்க தப்பா எடுத்துக்கலன்னா, இங்கே ரோட்டுல வேண்டாம்… என் இன்னோவாவுக்குள்ள உக்காந்துக்குவோம்… ப்ளீஸ்… திஸ் இஸ் சம்திங் கான்ஃபிடென்ஷியல்…’ என்று கூற, அவரும் ஆர்வம் அதிகமானவராக… இருவரும் இன்னோவாவுக்குள் சென்று அமர்ந்து கொண்டனர்.

சந்தோஷ் காருக்குள் செல்லாமல், வெளியிலேயே நின்று ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து, லிஷாவுக்காக புகைப்பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தான்.

தாஸ் காருக்குள் வந்ததும், சைடு ஜன்னல் கண்ணாடிகள் அனைத்தையும் ஏற்றிவிட்டு, உள்ளே ஏஸியை போட்டான்… பிறகு இன்ஸ்பெக்டர் பக்கம் திரும்பி உண்மையை கூற ஆரம்பித்தான்…

‘சார், எல்லாத்தையும் சொல்லிடுறேன்… நான் கொஞ்ச நாள் முன்னாடி, மேற்கு கர்நாடகா காட்டுப்பகுதியில போக நேரிட்டது… அப்போ..’

————————————————————–

லிஷா நினைவு திரும்பி கண்களை திறந்தாள்… கண்கள் திறந்தோமா இல்லையா என்று அவளால் நிச்சயம் செய்து கொள்ள முடியாதபடி அங்கே இருட்டு பரவியிருந்தது..

கைகள் பின்பக்கம் கட்டப்பட்டிருந்ததை மணிக்கட்டுகளில் ஏற்பட்ட வலி உறுதிப்படுத்தியது…

ஏதோ போதையில் இருப்பது போல் இருந்தது அவளுக்கு…

எவ்வளவு நேரம் இங்கே இப்படி இருந்தோம்… எப்போது இங்கே வந்தோம்… என்று உடனே அவளது உள்மனது கேள்விகேட்க ஆரம்பித்தது… அதே உள்மனது, கடைசியாக நினைவிருந்த விஷயங்களை தேடிக்கொண்டிருந்தது.

பெசன்ட் நகர் கிஃப்ட் ஷாப்புக்கு வெளியே அவள் சந்தோஷூக்கு கிஃப்ட் வாங்கி முடித்து காரில் கிளம்ப எத்தனித்த போது, ஒருவன் அவளிடம் வந்து, சில ஓவியங்களை காட்டி வாங்கிக்கொள்ளும்படி வற்புறுத்தியதும். அதில் கேணிவனக்கோயிலின் ஓவியம் இருந்ததும், அதை யார் வரைந்தது என்று கேட்டபோது, அருகிலிருக்கும் குப்பத்தில் ஒரு பையன் வரைந்தானெனக் கூறியதும், வரைந்தவனிடம் தன்னை அழைத்து செல்லும்படி இவள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவன், பெசன்ட் நகர் ‘ப்ரோக்கன் ப்ரிட்ஜ்’-க்கு அருகிலிருக்கும் குப்பத்திற்கு அழைத்து சென்றதும், அங்கே போகும் வழியிலேயே அவள் கடத்தபட்டதும் நினைவுக்கு வந்தது…

ஓவியத்தை காட்டி தூண்டில் போட்டிருந்ததால், தன்னை பணத்துக்காகவோ உடம்புக்காகவோ யாரும் கடத்தவில்லை என்று தெரிந்து ஆறுதலடைந்தாள்… நிச்சயம் இது வேறு விவகாரம்தான்.

விழித்துக் கொள் லிஷா…

முழுவதுமாக உன்னை தயார்படுத்திக்கொள்… என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்… இது பெரிய விவகாரம்…தாஸ் சொன்னது போல், இது ஒரு வகையில் இந்திய ரகசியம் சம்பந்தப்பட்டது… இதற்காக என்ன செய்யவும் துணிவார்கள்.
இந்த இடம் என்ன இடம்..? இப்படி கும்மிருட்டு சூழ்ந்துள்ளதே என்று அந்த இடத்தை அறிய முயற்சித்துக்கொண்டிருந்தாள்…

‘ஹலோ…? ‘யாராவது இருக்கீங்களா..?’ என்று சத்தமாக கத்தினாள்…

அவள் குரல், பயங்கரமாக எஃகோ அடித்தது…

இது பெரிய இடம்… ஒரு கூடம் என்று தெரிந்துக் கொண்டாள்.

ஒரு வித வாடை அந்த இடத்தில் நிரம்பியிருந்தது….

கைகளை விடுவிக்க முயற்சி செய்தாள் ஆனால், சக்தி போதவில்லை…  மூச்சு விட சிரமமாக இருந்ததால், அந்த கூடத்தில் ஆக்ஸிஜன் கம்மியாக இருக்க வேண்டும் என்று யூகித்தாள்… அப்படியென்றால் இது நீண்ட நாட்களாகவே மூடியிருக்கும் கட்டிடமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

இந்த இடத்தில் ஓடுவதோ, துரிதமாக நடப்பதோ மிகவும் ஆபத்தானது, பயங்கரமாக மூச்சு திணறும்… சிலையாய் அமர்ந்திருந்தால், இருக்கலாம்… இனிமேல், இப்படி கத்தவும் கூடாது என்று முடிவெடுத்தாள்.

சந்தோஷ்.க்கு இன்று பிறந்த நாள்… வாழ்த்த வேண்டும் போலிருக்கிறது… நான் வாங்கிய கிஃப்ட்-ஐ இந்நேரம் சந்தோஷ் பார்த்திருப்பான். பாவம், என்னை காணாமல் ரொம்பவும் அழுதிருப்பான்.

சந்தோஷ்…! ஹேப்பி பர்த்டேடா… என்று கூறும்போது, அவள் கண்களில் கண்ணீர் சொட்டியதை அவளால் தடுக்க முடியவில்லை…

இல்லை அழக்கூடாது, சிறுவயதிலிருந்தே அழுவதை கோழைத்தனம் என்று எண்ணி வளர்ந்தவள் நான்… நானே அழலாமா… அழக்கூடாது… என்று தனது கண்ணுக்கு மேலிருக்கும் Lachrymal Glandக்கு கட்டளையிட்டாள்! கண்ணீர் சுரப்பது நின்றது..!

சந்தோஷூம் தாஸூம் இந்நேரம் தன்னை காப்பாற்றும் முயற்சியில் கண்டிப்பாக ஈடுப்பட்டிருப்பார்கள்.
அதனால் தற்போது அமைதியாயிருப்பதுதான் தன்னை உயிரோடு வைத்திருக்க உதவும் ஆயுதம் என்று முடிவெடுத்து அமைதியாயிருந்தாள்.

அமைதி..!

————————————————————–
பெசண்ட் நகரில்…

இன்னோவாவிற்குள் அனைத்தையும் கேட்டுமுடித்த இன்ஸ்பெக்டர் வாசுவின் முகம் மிகவும் குழப்பமாய் இருந்தது…

சாதாரண கடத்தல் கேஸ்தான் இது என்று நினைத்தது தவறு… இதில் வேறு என்னென்னவோ சம்பந்தப்பட்டிருக்கிறது… என்று அவருக்குள் எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது…

அவரை தொடர்ந்து காரிலிருந்து இறங்கிய தாஸ் அவருக்கருகில் வந்து நின்றான்…

‘சார்? நான் சொன்னதை நம்ப உங்களுக்கு கஷ்டமாயிருக்குன்னு நினைக்கிறேன்…’

‘பின்ன என்ன தாஸ்… ஏதோ காட்டுக்கோவிலுக்குள்ள வார்ம்ஹோல்-னா நம்பற மாதிரியா இருக்கு..? வார்ம்ஹோல்-ங்கிறது உலகத்துலியே இருக்க வாய்ப்பில்லேன்னு சொல்லப்பட்ட ஒரு விஷயம். இதுவரைக்கும் யாரும் அது இருக்கிறதா ப்ரூவ் பண்ணதுமில்ல… அது நம்ம ஊர்ல ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே கண்டுபிடிச்சு வச்சிருக்காங்க அதுவும், Controller-ஓடன்னு சொன்னா நம்பற மாதிரியா இருக்கு… நீங்க கதை எழுத வேணும்ன்னா இந்த விஷயம் சுவாரஸ்யமா இருக்கலாம். ஆனா நேர்ல பாத்தேன்னு சொல்றீங்க… இதை எப்படி நம்புறது தாஸ்..!’

‘சார் உங்களுக்கு எப்படி புரியவைக்கிறது… இதோ இப்போ நாம உக்காந்துட்டிருக்கிற இந்த கார்கூட, ஒரு காலத்துல குதிரையில்லாம ஓட்டுற வண்டின்னு சொல்லும்போது, நம்பமுடியாமதான் இருந்திருக்கும். அதுக்காக இல்லன்னு ஆயிடுமா..? மனுஷன் ஆசப்பட்டு கண்ட கனவுகள்தான்… இன்னிக்கி சைன்ஸ் கண்டுபிடிப்புகளா இருக்கு… அந்த மாதிரி மனுஷனோட நீண்ட நாள் கனவு, இந்த டைம் ட்ராவல்..! மாடர்ன் சைன்ஸ்-ல இன்னும் சாத்தியப்படாத இந்த விஷயத்தை பல வருஷத்துக்கு முன்னாடியே அந்த சித்தர் ஸ்பிரிச்சுவல் சைன்ஸ்ல செஞ்சிக்காட்டியிருக்காரு…’ என்று தாஸ் முழுமூச்சில் கூறிமுடிக்க, இன்ஸ்பெக்டர் வாசுவிடம் பதிலில்லை…

அவர் அமைதியாக காரை விட்டு இறங்கினார். இவ்வளவு நேரமும், காருக்குள் வெளிச்சத்தம் கேட்காமல் இருக்க, கதவை திறந்ததும், வெளிச்சத்தம் அவர் கவனத்தை மீண்டும் கடத்தல் பக்கம் கொண்டு வந்தது… அவரை தொடர்ந்து தாஸூம் இறங்கினான். சந்தோஷ் இவர்கள் இறங்குவதை பார்த்ததும் மீண்டும் அவர்களிடம் ஓடி வந்தான்.

இன்ஸ்பெக்டர், தனக்கருகில் ஓடி வந்த சந்தோஷை சந்தோஷை பார்த்தும், லிஷாவின் கவலை அவரையும் தொற்றிக் கொண்டது…

‘ஓகே… தாஸ்.. நீங்க சொன்னதை நான் நம்புறேனோ இல்லியோ… ஆனா, இப்போ ஒரு பொண்ணோட உயிரை காப்பாத்தியாகனும்… நாம முதல்ல அதுல கான்ஸன்ட்ரேட் பண்ணுவோம்… இப்ப அந்த சித்தர் சமாதி எங்கேயிருக்குன்னு உங்களுக்கு தெரியுமா..?’

‘உண்மையிலேயே எனக்கு அது தெரியாது சார்…’

‘அப்படியே விட்டுட முடியாது… தாஸ்..? அடுத்த ஃபோன்கால் வரும்போது, நீங்க பதில் சொல்ற வேண்டியிருக்கும்… அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க…’ என்றவர் கூற

தாஸூக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை… நீண்ட நேரம் யோசித்தவன், இந்த கேணிவனத்தின் ரகசியத்தை யார் யாரிடமோ சொல்லிவிட்டோம்., இன்னும் ஒருத்தரிடம் சொன்னால், நமக்கு சில உருப்படியான தகவல் கிடைக்கும் என்று நினைத்து தனது ஃபோனை எடுத்து ஒருவருக்கு டயல் செய்தான்…

மறுமுனையில் ஃப்ரொஃபஸர் கணேஷ்ராம் பேசினார்…
————————

லிஷா இருந்த கூடத்தில்…

திடீரென்று படாரென்ற பெரிய சத்தம் ஒன்று கேட்டு திடுக்கிட்டு பார்த்தாள்…

சற்று தூரத்தில் அந்தகூடத்தின் மேல்பக்கம் ஒரு துவாரம் தெரிந்தது… அதற்குள்ளிருந்து மந்தமான சூரிய வெளிச்சம் கூடத்துக்குள் அடித்தது…

அந்த வெளிச்சத்தில் ஒரு ஆஜானுபாகுவான ஆள் இறங்கி வருவது தெரிந்தது…

யாரிவன் இவன்? எப்படி சூரிய வெளிச்சத்தில் மிதந்தபடி இறங்கி வருகிறான்? என்று மனம் குழம்ப, சற்று உற்று நோக்கினாள். அந்த துவாரத்தை தொடர்ந்து உள்பக்கமாக ஒரு இரும்பு ஏணி இறங்குவது தெரிந்தது… அதில்தான் அந்த மனிதன் இறங்கி வந்துக் கொண்டிருந்தான்.

அவனை எழுந்து தாக்கி அங்கிருந்து தப்பிப்பது என்பது நடவாத காரியம்… வாசலிருக்குமிடமாவது தெரிந்ததே..! அமைதியாயிரு… காத்திரு…

இறங்கியவன் அந்த வெளிச்சக்கீற்றை தாண்டியதும் எங்கு போனான் என்று தெரியவில்லை… மீண்டும் இருட்டுப் பகுதியில் ஒரு புள்ளி வெளிச்சம் தெரிந்தது… அது அவன் கையில் வைத்திருக்கும் டார்ச்லைட்…

டார்ச்லைட் வெளிச்சம் தன்னை நெருங்கி வருவதை பார்த்துக் கொண்டு அமைதியாயிருந்தாள்.

நெருங்கியதும், அந்த டார்ச்சுக்கு பின்னால் நின்றிருந்த அவன், தன் தோளில் மாட்டியிருந்த பையிலிருந்து, ஒரு ப்ளாஸ்டிக் கவர் பார்சலை எடுத்து அருகில் போட்டான்.

‘சாப்பாடு லிசா..’ என்றான்.

இதுவரை நான் கேட்டிராத குரல், இவன் எனக்கு தெரிந்தவனில்லை… புதியவன்… முகம் பார்க்கமுடியவில்லை… இருள் மறைத்தது… இந்த குரலுக்கு முகம் எப்படியிருக்கும் என்று அவன் கரிய நிழலையும் குரலையும் வைத்து அவனுக்கு கற்பனை முகம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

அவன் ஒன்றும் பேசாமல் லிஷாவின் கட்டுக்களை அவிழ்த்து விட்டான்…

ஆனால், லிஷாவுக்கு உண்மையிலேயே பசித்தது…

உடனே அந்த பொட்டலத்தை எடுத்து பிரித்தாள். உள்ளே தயிர்சாதமும், பீட்ரூட் பொறியலும் அதிகமாக இருந்தது… பீட்ரூட்  சத்தான உணவுதான், ஆனால், அவளுக்கு கொஞ்சமும் பிடிக்காத உணவுவகை… என்று மனது ஏனோ அலுத்துக் கொண்டது… அதை ஒதுக்கியவள்… அவசர அவசரமாக தயிர் சாதத்தை மட்டும் சாப்பிட்டு முடித்தாள்.

அவனே ஒரு பாட்டிலில் தண்ணீரையும் கொடுத்தான். அதை வாங்கி கொஞ்சமாய் குடித்தாள்… மீதத்தை அருகில் வைத்துக் கொண்டாள்.

மீண்டும் அவளது கைகளை கட்டியவன், அதற்குமேல் காத்திராமல் அங்கிருந்து நகர தொடங்கினான்.

அவன் செல்லும் வழியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் ஏணியில் ஏறி மேலே சென்று துவாரத்தை மூடிக்கொண்டான். மீண்டும் கும்மிருட்டு..

தான் ஏதோ ஒரு பாதாள கூடத்தில் கிடத்தப்பட்டிருப்பது தெரிந்தது… நாம் இங்கிருந்து தப்பிக்க முடியுமா..? என்று எண்ணியபோது லிஷாவின் பயம் பலமடங்கு அதிகரித்தது…

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top