கேணிவனம் – 14

லிஷாவைப் பற்றி அவதூறாக கம்ப்ளைண்ட்டில் குணா எழுதியிருந்ததைப் படித்த சந்தோஷ்… போலீஸ் ஸ்டேஷனில் உறைந்து போய் அமர்ந்திருந்தான்.

‘சார், இது அநியாயம் சார், இதெல்லாம் பொய்..’  என்று தனக்கருகிலிருந்த கான்ஸ்டெபிளிடம் கூற, அவர் அவனை சிறிதும் சட்டை செய்யாமல் அமர்ந்திருந்தார்.

‘சார்… உங்ககிட்டதான் சார் சொல்லிட்டிருக்கேன். இந்த கம்ப்ளைண்ட்ல எழுதியிருக்கிறதெல்லாம் சுத்த பொய் சார்..’

‘அதுக்கு நான் என்னய்யா பண்ண்டடும்..? எதுவா இருந்தாலும் ஐயா வந்ததும் பேசிக்கோ..’ என்று அவர் தனது வேலையில் மூழ்க…

சந்தோஷால் இதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை…  என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான். மனதிற்குள் கதறி அழுதுக்கொண்டிருந்ததால், அவன் முகம் வெளிறிப் போயிருந்தது… எழுந்தான்… சுற்றும் முற்றும் பார்த்தான். கான்ஸ்டெபிள் அவன் நிலையை பார்த்து வருந்தினார். ஆனால், வெளியில் காட்டிக்கொள்ளவில்லை…

‘யோவ், இப்ப எதுக்கு எந்திரிக்கிறே… அப்படியே உக்காரு…’ என்று கூற. அவன் அவரை நெருங்கி வந்து அழ ஆரம்பித்தான்.

‘சார், நான் கட்டிக்கப் போற பொண்ணைப் பத்தி தப்பு தப்பா எழுதியிருக்கான் சார்… நான் எப்படி சார் சும்மா இருக்கிறது…’

‘அதுக்கு நான் என்னய்யா பண்றது..?’

‘எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் பண்ணுங்க சார்… ‘ என்று கெஞ்சலாய் கேட்டான்.

‘என்ன..?’

‘ஒரே ஒரு ஃபோன் பண்றதுக்கு மட்டும் ஹெல்ப் பண்ணுங்க சார்.. ப்ளீஸ்..?’ என்று கூற, அவர் சற்று யோசித்தபடி… ஏறிட்டு அவன் முகத்தை பார்த்தார். மனதிற்கு சரி என்று படவே, தனது மொபைல் ஃபோனை எடுத்து அவனிடம் கொடுத்தார்.

————————————————–

அதே நேரம் லிஷா…. காருக்குள் தனது மொபைல் ஃபோனில் ‘பரசுராமலிங்கேஸ்வரர் கோவில் அயன்புரம்’ என்று கூகிள் மேப் தேடுதளத்தில் தேடிக்கொண்டிருந்தாள்.

‘என்ன லிஷா, கூகிள் மேப், ஏதாச்சும் ரிசல்ட் காட்டுதா..?’ என்று தாஸ் காரை ஓட்டியபடி கேட்டான்…

‘காட்டுது தாஸ்… அயனாவரத்துல, கோபி கிருஷ்ணா தியேட்டருக்கு கொஞ்சம் தூரத்துல அந்த கோவில் இன்னமும் இருக்கு…’

‘தேங்க் காட்…’ என்று தாஸ் சந்தோஷப்பட்டான்.

‘இருங்க, இந்த கோவிலைப் பத்தி வேற ஏதாச்சும் டீடெய்ல்ஸ் கிடைக்குதான்னு ட்ரை பண்ணி பாக்குறேன்..’ என்று கூறியபடி, அதே குறிச்சொல்லை, கூகிள் content search-லும் டைப் செய்துக் கொண்டிருக்கும்போது, அவளது மொபைல் ரிங் ஆனது…

‘ஹே சேண்டி..’ என்று குதூகலித்தபடி ஃபோனை எடுத்து, ‘டேய், ஏண்டா நைட் ஃபோன் பண்ணல… லஞ்ச போதலைன்னு டின்னருக்கும் அந்த HR பொண்ணுகூட போயிட்டியா…’ என்று அவனை திட்டினாள். ஆனால், மறுமுனையிலிருந்து சந்தோஷ் மிகவும் பதற்றத்துடன் பேசினான்.

‘லிஷா நான் சொல்றதை கேளு ப்ளீஸ்… நான் இப்போ தி-நகர் போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கேன். என்னை அரெஸ்ட் பண்ணியிருக்காங்க…’ என்றதும், லிஷா திடுக்கிட்டாள்.

‘வாட்..?’ என்றதும், தாஸ் திரும்பி லிஷாவை குழப்பத்துடன் பார்த்தான். லிஷா அவன் பார்ப்பதைப் கவனித்து, முகத்தை சாதாரணமாக்கிக் கொண்டு, அவனிடம் பொய்யாக சிரித்தபடி போனில் காதுகொடுத்தாள்.
‘ஆமா லிஷா..! அந்த குணா ராஸ்கல் என்னென்னவோ பண்ணிட்டான்…’ என்று நடந்தவற்றை லிஷாவிடம் சந்தோஷ் கூற ஆரம்பித்தான்.

லிஷா எதுவும் இடைமறிக்காமல் அவன் கூறுவதை கூர்ந்து கவனித்து வந்தாள். அவள் மௌனமாக ஃபோனை கேட்டுக் கொண்டிருப்பதை தாஸ் கவனித்தான்.

நீண்ட நேரத்துக்கு பிறகு, லிஷா சந்தோஷிடம் பேசினாள்.

‘சந்தோஷ், நீ அங்கேயே இரு… நான் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வர்றேன்…’

‘சரி லிஷா, முடிஞ்சவரைக்கும் விஷயம், பாஸூக்கு தெரியாம பாத்துக்கோ…’

‘பாத்துக்குறேன்..’ என்று முகத்தில் ஆயிரம் யோசனைகளுடன் ஃபோனை கட் செய்தாள்.

‘என்ன லிஷா… ஏதாவது பிரச்சினையா..?’

‘இல்ல தாஸ்… நத்திங் சீரியஸ்… நீங்க என்னை, நம்ம ஆஃபீஸ் போற ரூட்ல இறக்கி விட்டுட்டு அந்த அயன்புரம் கோவிலுக்கு கிளம்புங்க… எனக்கு வேற ஒரு சின்ன வேலை இருக்கு..’ என்று கூற, தாஸ் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் வண்டியை ஓட்டினான்.

—————————————————-

சில மணி நேரங்களில்…

தாஸ், லிஷாவை Ancient Park-ல் இறக்கிவிட்டு நேராக அயன்புரத்துக்கு வந்தடைந்தான்.

லிஷா ஏற்கனவே கூகிள் மேப்பில் பார்த்து வழி கூறியிருந்ததால், அந்த கோவிலை கண்டுபிடிப்பதில், தாஸுக்கு சிரமம் இருக்கவில்லை…

பரசுராமலிங்கேஸ்வரர் ஆலயம் என்று பெயர்ப்பலகை அவனை வரவேற்றது. மக்கள் நடமாட்டம் அதிகம் புழங்கும் சாலையில் வலதுபுறமாய் அந்த கோவில் இருந்தது. கோவில் வாசலில், பூக்கடை ஒன்றும், ரோட்டுக்கு இடதுபுறமாய் கோவில் குளமும் இருந்தது.

தாஸ் காரை சற்று தள்ளி பார்க் செய்துவிட்டு, அந்த கோவிலுக்குள் நுழைந்தான். வெறும் கையோடு கோவிலுக்கு போக மனமில்லாததால் அங்கிருந்த பூக்கடையில் பூ வாங்கிக்கொண்டு, 100 ரூபாய் கொடுத்தான்.

கடையிலிருந்த இளைஞன், ‘சார் சில்லறை இல்ல… நான் மாத்தி வைக்கிறேன். நீங்க போகும்போது வாங்கிக்கோங்க…’ என்று அந்த பூக்கடைக்காரன் கூற, அவனும் சரி என்று கோவிலுக்குள் நுழைந்தான்.

பழங்காலத்து கோவிலுக்கு பெயிண்ட் பூசப்பட்டு, புதிய முகம் கொடுத்திருந்தார்கள். இருந்தாலும், அந்த கோவிலின் பழமையை உணர முடிந்தது. கோவிலுக்குள் ஆட்கள் அதிகமில்லாமல், ஆங்காங்கே ஒருசிலர் மட்டுமே தெரிந்தனர். சுற்றும் முற்றும் பார்த்தபடி தாஸ் நிதானமாக கோவிலுக்குள் சுற்றிக்கொண்டிருந்தான்.

வழியில்… மண்டபத்தில் ஒரு வயதான கிழவர் ஒரு புத்தகத்தை வைத்து மெல்லிய குரலில் மெதுவாக தேவாரம் பாடிக் கொண்டிருந்தார். அவரது குரல் அந்த கோவில் பிராகரத்தில் இனிமையாக எஃகோ எஃபெக்டில் கேட்டுக் கொண்டிருந்தது.

நீலமேனி அமணர் திறத்து நின்
சீலம் வாது செயத் திருவுள்ளமே?
மாலும் நான்முகனும் காண்பு அரியதோர்
கோலம் மேனியது ஆகிய குன்றமே
ஞாலம் நின்புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே…

தாஸுக்கு அந்த பாடலை கேட்டதும், நீண்ட தூரம் பயணம் செய்துவந்த களைப்பு முற்றிலுமாக மறந்து போனது. அவருக்கருக்கில் சிறிது நேரம் நின்றுவிட்டு, மீண்டும் நடையைத் தொடர்ந்தான்.

உள்ளே கருவறையில் ஒரு குருக்கள் தீபாராதனை காட்டினார். அதை பெற்றுக்கொண்டு அவரிடம் பேச்சு கொடுத்தான்.

‘சாமி, இந்த கோவில்… பத்தி..’ என்று ஆரம்பிக்க… அவர் பட்டென்று பதிலளித்தார்…

‘இது பல்லவர் காலத்து கோவில்… 1000… 2000… வருஷத்து பழையது…’

‘இந்த கோவில் பாடல் பெற்ற ஸ்தலமா..?’

‘இல்லை, வரலாற்று ஸ்தலம்தான்… ஆனா ரொம்பவும் விசேஷம்..’

‘அப்படியா..! இந்த கோவில்ல அந்த காலத்துல சித்தர் யாராவது சமாதியடைஞ்சியிருக்காங்களா…?’  என்று தாஸ் கேட்டதும், அந்த குருக்கள் அவனை சற்று நேரம் ஏற இறங்க பார்த்தார். பிறகு சுதாரித்துக் கொண்டு…

‘இல்லையே அப்படி எதுவும் கிடையாதே..!’ என்று கூற, தாஸ் குழப்பமடைந்தான். அவன் முன்னாள் இரவு, தாத்தாவுடன் கணித்தது தப்பாக இருக்குமோ என்று ஐயமுற்றான். இனி இந்த குருக்களிடம் பேசி பயனில்லை என்று தெரிந்து கொண்டு நடையைத் தொடர்ந்தான்.

பிறகு அங்கிருந்து நடைபோட்டு திரும்பவும் மண்டபத்துக்கு வந்தான். மீண்டும் தேவாரப் பாடல் எஃகோ எஃபெக்டில் கேட்டது. மனதிற்கு இதமாக இருந்தது. சரி, வந்தவரைக்கும் இந்த பாடல் கேட்டதுதான் மிச்சம் என்று சுதாரித்துக் கொண்டு வெளியே வந்தான்.

அங்கே பூக்கடைக்காரன் தாஸிடம் நூறு ரூபாய்க்கு மீதி சில்லறையை கொடுத்தான்… அதை பெற்றுக் கொண்டிருக்கும்போது, தாஸின் செல்ஃபோன் ஒலித்தது.

ரிங்டோன்
கண்போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா

டிஸ்ப்ளேவில் OLD FRIEND CALLING என்று வந்தது… ஃபோனை எடுத்தான்.

‘தாத்தா..’

‘என்னப்பா, பிரயாணம் முடிஞ்சுதா… கோவிலைப் போய் பாத்தியா.?’ என்று அவரும் தாஸைப் போல் ஆர்வமாக கேட்க

‘பிரயாணம்லாம் ஓகேதான்… ஆனா, இந்த கோவில்ல சித்தர் சமாதி எதுவும் இருக்கிறதா அறிகுறியே இல்ல தாத்தா… கோவில் ரொம்ப நல்லாயிருக்கு… அதுவும், உள்ள ஒரு பெரியவர் தேவாரம் பாடிட்டிருந்தாரு… அதை கொஞ்ச நேரம் கேட்டுட்டு இருந்தேன். மத்தபடி அந்த சித்தர் சமாதி கிடைக்கலியேன்னு தான் மனசுக்கு கஷ்டமா இருக்கு’ என்று தாஸ் கூற, அருகிலிருந்த பூக்கடைக்காரன் தாஸை சற்று நேரம் வெறித்துப் பார்த்தான்.

‘அப்படியா..!’ என்று அவர் குரலும் தாழ்ந்து போனது, ‘சரி விடுப்பா… அந்த சித்தர் எங்கே போயிடப் போறாரு… எப்படியும் கண்டுபிடிச்சிடுவோம்..’ என்று நம்பிக்கை கொடுத்தார்.

‘சரி தாத்தா… நான் உங்களுக்கு மறுபடியும் ஃபோன் பண்றேன்’ என்று கூறி ஃபோனை வைத்து அங்கிருந்து கிளம்ப எத்தணித்த தாஸை அருகில் இருந்த பூக்கடைக்காரன் அழைத்தான்.

‘சார் ஒரு நிமிஷம்..’ என்றதும் தாஸ் நின்று பூக்கடைக்காரனை திரும்பி என்ன என்பதுபோல்  பார்த்தான்

‘ஏதோ சித்தர் சமாதி-ன்னு ஃபோன்ல பேசிட்டிருந்தீங்களே… என்னன்னு தெரிஞ்சுக்கலாமா..?’ என்றதும், தாஸ் அவனை சில விநாடிகள் உற்றுப் பார்த்து, யோசித்துவிட்டு தொடர்ந்தான்.

‘அது ஒண்ணுமில்லப்பா, இந்த கோவில்ல சித்தர் ஒருத்தர் சமாதியடைஞ்சதா என் தாத்தா சொன்னாரு… அவரு சமாதி இங்க இருக்கான்னு பாக்க வந்தேன்.. பாத்தா ஒண்ணுமில்ல…’

‘உங்க தாத்தாவுக்கு எப்படி இந்த விஷயம் தெரியும்..’ என்று பீடிகை போட… தாஸ் அந்த பூக்கடைக்காரனிடம் ஏதோ விஷயமிருக்கிறது என்பதை ஊகித்தான்.

‘தம்பி, அங்கே என் கார் நிக்குது… அதுக்குள்ள போய் பேசலாமா..?’ என்று கேட்க… அவன் சற்று தயங்கி நின்று யோசித்துவிட்டு, பிறகு சரி என்று அருகிலிருக்கும் ஒரு பெண்ணிடம் கடையை ஒப்படைத்துவிட்டு, தாஸூடன் காரை நோக்கி நடந்தான்.

இரண்டு ஸ்ட்ராங் டீ வாங்கிக் கொண்டு, இருவரும் காருக்குள் அமர்ந்து கொண்டார்கள்

தாஸ் பேச்சை ஆரம்பித்தான்…

‘நான் ஒரு எழுத்தாளன். இந்த கோவிலை அடிப்படையா வச்சி ஒரு கதை எழுதிட்டிருக்கேன்…’

‘சரி சார்..’

‘அந்த கதைக்காக, இந்த கோவிலைப் பத்தின சில குறிப்புகளை தேடும்போது, அதுல இந்த கோவில்ல பிரம்ம சித்தர்-னு ஒருவர் சமாதியடைஞ்சதா ஒரு தகவல் தெரிஞ்சுது..’

‘சரி சார்..’

‘ஆனா, உள்ளே குருக்கள்-கிட்ட கேட்டா அப்படியெல்லாம் ஒண்ணுமில்லன்னு சொல்றாங்க..’

‘குருக்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல சார்… அவங்கள்லாம், சமீபத்துல வேறெடத்துல மாத்தலாகி வந்தவங்க…’

‘அப்போ உனக்கு தெரியுமா..? நீ எத்தனை நாளா இங்க இருக்கே..?’ என்று கேள்விகளை அடுக்க…

‘நாங்க இந்த கோவிலுக்கு பரம்பரை பரம்பரையா புஷ்பகைங்கர்யம் செய்யறவங்க சார்… நாங்க பல்லவ ராஜா காலத்துலருந்து இங்கேதான் இருக்கோம். அவங்கதான் இந்த கோவிலை கட்டினாங்க…’

‘அவ்வளவு நாளா இங்கே இருக்கீங்களா..? ரொம்ப நல்லது. உங்களுக்கு இங்க சித்தர் சமாதி ஏதாவது இருக்கான்னு தெரியுமா..?’

‘இருக்குன்னு எங்கப்பா சொல்லி கேட்டிருக்கேன். அவரை கேட்டா விவரமா சொல்லுவாரு…’ என்று கூற… தாஸ் கொஞ்சம் நம்பிக்கை வந்தவனாய்…

‘உங்கப்பாவை பாக்க முடியுமா..?’ என்று கேட்டான்.

‘அப்பா இப்போ, கோவிலுக்குள்ளதான் இருக்காரு… நீங்க உள்ளே தேவாரம் பாடக்கேட்டதா சொன்னீங்களே..? அது எஙப்பாதான் பாடுறது… தினமும் கோவில்ல தேவாரம் பாடுறது அவரோட வழக்கம்…’

‘ஓ… அவருதான் உங்கப்பாவா…! அவர்கிட்ட நான் கொஞ்ச பேசணுமே..!’ என்று தாஸ் ஆர்வமாக கேட்க…

‘இருங்க அழைச்சிட்டு வர்றேன்’ என்று கூறி அந்த இளைஞன் காரிலிருந்து இறங்கி கோவிலுக்குள் நுழைந்து மறைந்தான். சற்று நேரத்தில் அந்த பெரியவருடன் காருக்கு அருகில் வந்து நின்றான்.

தாஸ் அந்த பெரியவரை பார்த்ததும், கையெடுத்து கும்பிட்டபடி…

‘வணக்கம் சார்.. என் பேரு தசரதன்… உங்ககிட்ட கொஞ்சம் பேசனும். காருக்குள்ள ஏறுங்களேன் ப்ளீஸ்…?’

‘மன்னிக்கனும் தம்பி… காருக்குள்ள வேண்டாம்… நாம வேணும்னா அந்த குளத்துக்கரையில உக்காந்து பேசுவோமே..’ என்று அவர்கேட்க, தாஸ் மறுக்காலமல் புன்னகைத்தபடி காரிலிருந்து இறங்கினான். மூவரும் குளத்துக்கரையை சமீபித்து ஒரு நல்ல இடம்தேடி அமர்ந்தனர்.

அந்த பெரியவர், கோவிலைப் பற்றி கூறினார்…

‘இந்த அயனாவரத்துக்கு ஒரு காலத்துல ‘பிரம்மபுரி’ன்னு பேரு… இதோ இந்த குளத்துக்கு இப்போகூட பிரம்மதீர்த்தம்-னுதான் சொல்வாங்க… புராணக்கதைப்படி பிரம்மா முருகனோட தண்டனைக்கு ஆளானதால அதுக்கு பிராயசித்தம் தேட இங்க வந்து வழிப்பட்டதா சொல்லுவாங்க… பழைய கோவிலுன்னு சொல்றதுக்கு ஆதாரமா… உள்ளே இருக்கிற முருகர் சிலையை பல்லவர் காலத்து சிற்பம்-னு வல்லுனர்கள்லாம் வந்த பாத்து வியந்துட்டு போனாங்க…’

‘ஐயா… இந்த கோவில்ல… பிரம்ம சித்தர்-னு ஒரு சித்தரோட சமாதியிருக்கிறதா எங்க தாத்தா சொன்னாரு… அது உண்மையா..?’ என்று தாஸ் நேரடியாக விஷயத்துக்கு வந்தான். அந்த பெரியவர், அருகிலிருந்த தனது மகனை ஒருமுறை ஏறிட்டு பார்க்க…

அவன், ‘அப்பா இவரு எழுத்தாளராம்ப்பா. நம்ம கோவிலைப் பத்தி கதையில எழுதப்போறாராம் அதான் விசாரிக்கிறாரு… தைரியமா சொல்லு…’ என்றதும், அவர் மீண்டும் தாஸை பார்த்து…

‘உண்மைதான் தம்பி… ஆனா, அவர் பிரம்ம சித்தர்-னு நீங்க சொல்லித்தான் தெரியும். ஆனா, இங்க ஒரு சித்தரோட உடம்பு கிடைச்ச கதையை எங்க முன்னோர்கள் வாய்வழியா சொல்லி வந்திருக்காங்க…’

‘அது என்ன கதைங்க..?’ என்றதும் அந்த பெரியவர், தனக்கு பின்புறம் தெரியும் அந்த கோவில் கோபுரத்தை அண்ணாந்து பார்த்தபடி, தனக்கு தெரிந்த அந்த கதையை கூற ஆரம்பித்தார்…

‘அது சோழ ராசா காலமாம்… அப்போ ஒரு தடவை, இந்த கோவில் நகைகளை ஒரு திருடன் திருடிக்கிட்டு இரவு நேரத்துல ஓடப்பாத்திருக்கான்… அவனை துரத்திட்டு வந்தவங்ககிட்டருந்து தப்பிக்க அப்போயிருந்த கோவில் கோபுரத்துல ஏறி உள்பக்கமா உச்சியில போய் ஒளிஞ்சி உக்காந்திட்டானாம். இதை எப்படியோ கண்டுபிடிச்சு, சிப்பாய்கள் அவனை பிடிக்கா கோபுரத்துக்குள்ள ஏறியிருக்காங்க… ஆனா, அவனை பிடிக்க போன இடத்துல… அதாவது கோபுர உச்சியில, உள்புறமா சுவரோட சுவரா ஒட்டினமாதிரி, ஒரு வயசான சித்தரோட உடம்பு உக்காந்த நிலையில கிடைச்சிருக்கு… அந்த உடம்புல நகமும், முடியும் அப்பவும் வளர்ந்திட்டு இருந்திருக்கு. உடம்புல சூடும் இருந்திருக்கு. இதைப் பாத்த சிப்பாய்கள் சோழராசா கிட்ட சொல்ல…

அவரும் வந்து பாத்துட்டு என்ன செய்றதுன்னு தெரியாம குழம்பிட்டு இருந்தாராம். அப்போ அவரு கனவுல வந்த அந்த சித்தர்… தன்னோட உடம்பை இன்னொரு இடத்துல பத்திரமா வைக்கும்படி சொன்னாராம். ஆனா, அவரோட உடம்பு சுவரோட ரொம்பவும் ஒட்டியிருந்ததால, அந்த சித்தர் உடம்பை எடுக்க முடியாம தவிச்ச ராசா, அந்த கோபுரத்தை உடைச்சி அவர் உடம்பை தனியா எடுத்தாராம். ஆனா, இது எதுவுமே மக்களுக்கு தெரியாம இருக்கிறதுக்காக, கோபுரத்தை செப்பணிடுறோம்னு சொல்லி அவர் உடம்பை இன்னொரு இடத்துல மறைச்சி வச்சாராம்…’ என்று அந்த பெரியவர் தனக்கு தெரிந்த உண்மைகளை கூறிமுடிக்க…தாஸ் ஆச்சர்யத்தில் உறைந்து போயிருந்தான்.

‘இது ஏதாவது கல்வெட்டுல இருக்காங்க..?’

‘இல்லைங்க தம்பி… இதைப் பத்தின எந்த குறிப்பும் யாருக்கும் இதுவரைக்கும் கிடைக்கலை… இது உண்மையா பொய்யான்னு கூட எனக்கு தெரியாது… எங்கப்பா எனக்கு சொன்னாரு… நான் என் மவனுக்கு சொன்னேன்… இப்படி இது வெறும் வாய்வழியா வந்து கதை…’ என்று கூற… தாஸ் அந்த தந்தை-மகன் இருவரையும் நன்றியுடன் பார்த்தான். கல்வெட்டுகளும், ஓலைகளும், சாசனங்களும் மட்டும் வரலாறுகளல்ல… இதுபோன்ற தலைமுறை தகவல்களும் நமக்கு வரலாற்று களஞ்சியம்தான் என்று அவனுக்குள் ஒரு எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது…

‘ஐயா… அந்த சித்தரோட உடம்பை அந்த ராஜா எங்கே ஒளிச்சி வச்சாருன்னு தெரியுமா..?’ என்று தாஸ் கேட்டுவிட்டு, அந்த பெரியவர் கொடுக்கப் போகும் பதிலுக்காக ஆவலுடன் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top