ஜோனாதன் மறுநாள் மிகவும் தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுந்தார். இரண்டுநாள் பயணக் களைப்புக்கு நிம்மதியான உறக்கம்.
காலைக்கடன்களை முடித்துக் கொண்டு சாப்பாட்டு அறைக்கு வந்தார். அவருக்காக பிரபு டேபிள்மீது வைத்துவிட்டுப் போயிருந்த கார்டு ஒன்றை எடுத்து வாசித்தார்.
“எனக்காகக் காத்திருக்க வேண்டாம். கொஞ்ச நேரத்திற்கு இங்கு இருக்கமாட்டேன். – டிராகுலா.’
டேபிளில் இருந்த சுவையான சிற்றுண்டியை எடுத்து வயிறுமுட்டச் சாப்பிட்டார் ஜோனாதன். சாப்பிட்ட பின்பு அந்த டேபிளைச் சுத்தம் செய்ய வேலைக்காரர் யாரையாவது அழைக்கலாம் என்று நினைத்தார். அதற்கான அழைப்பு மணியைத் தேடினார். ஆனால் அப்படி ஏதும் அங்கு இருப்பதாகத் தெரியவில்லை.
அந்தச் சாப்பாட்டு மேஜைமீது இருந்த பாத்திரங்கள் எல்லாம் தங்கத்தால் செய்யப்பட்டிருப்பதையும் பார்த்தார். அதுமட்டுமின்றி, அங்கேயிருந்த மெத்தை போன்ற இருக்கைகளில் ஜன்னல் திரைகளும் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது மட்டுமின்றி, மிகவும் பழமை வாய்ந்ததாக- ஒரு நூற்றாண்டுக்கும் மேலுள்ளதாகத் தோன்றியது.
ஆனால் இத்தனை இருந்தும் அந்த அறையில் முகம் பார்க்கும் நிலைக்கண்ணாடி ஒன்றுகூட எங்கும் இல்லாமலிருந்தது கண்டு ஆச்சரியபட்டார்.
நல்ல வேளை! அவர் தன்னுடன் ஒரு சிறிய கண்ணாடியை தலை வாருவதற்காகவும் முகம் பார்ப்பதற்காகவும் கொண்டு வந்திருந்தார்.
அந்தக் கோட்டைக்குள் எங்கு தேடியும் மருந்துக்குகூட ஒரு மனித உயிரை அவரால் பார்க்க முடியவில்லை. அடிக்கொருதரம் அங்கு கேட்கும் ஓநாய் ஊளைச் சத்தத்தை விட்டால் வேறு எந்த சத்தமும் இல்லாத அமைதிதான் அங்கே ஆட்கொண்டிருந்தது.
அங்கே தனியாக இருக்கும் அலுப்பைப் போக்க ஏதாவது வாசித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
அந்த அறையில் வாசிப்பதற்கு ஒரு துண்டு நாளிதழ்கூட இல்லை. டிராகுலா பிரபுவின் அனுமதியின்றி கோட்டையைச் சுற்றிப்பார்க்க மனம் வரவில்லை.
தன்னுடைய அறைக்குப் பக்கத்து அறையில் வாசிப்பதற்கு ஏதாவது கிடைக்குமா என்று தேடிப்பார்க்க முடிவு செய்தார்.
என்ன ஆச்சர்யம், அவர் அந்த அறைக் கதவைத் திறந்தவுடன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதுவொரு நூலகம். ஆராய்ச்சிக்கூடம் போலத் தோன்றியது.
அந்த நூலகப் பகுதியில் கணக்கிலடங்காத ஆங்கில நூல்கள் அலமாரிகளில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. மேலும் வார, மாத இதழ்கள் வால்யூம்களாக பைண்டு செய்யப்பட்டு வைக்கப்பட் டிருந்தன.
அங்கிருந்த மேஜைமீது சில பழைய பத்திரிகைகள் சிதறிக் கிடந்தன. அந்தப் புத்தகங்களுக்கு நடுவே சட்டப் புத்தகங்களும் இருப்பதைப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்ட ஜோனாதன் ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டினார்.
அப்போது கதவைத் திறந்து கொண்டு டிராகுலா பிரபு உள்ளே நுழைந்தார். மெலிதான குரலில் குட்மார்னிங் சொல்லிவிட்டு அவர் கேட்டார்:
“ராத்திரி ஓய்வு எடுத்த பின்பு சந்தோஷம் ஏற்பட்டிருக்குமென நம்புகிறேன். அதுபோலவே இந்த அறையும் உங்களுக்கு சந்தோஷத்தைத் தரும் என நினைக்கிறேன்.”
“ஆம்; உண்மைதான்.”
எனக்கு மிகவும் பிடித்தமானவை புத்தகங்கள்தான். நான் லண்டனுக்கு செல்வதென முடிவெடுத்த நாள் முதலாக இவை எல்லாம் எனக்கு எத்தனை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன தெரியுமா?” என்றார் பிரபு.
அதனைக் கேட்டபின், “”நீங்கள் மிகவும் நன்றாக ஆங்கிலம் பேசுகிறீர்கள்” என்றார் ஜோனாதன்.
“மிகவும் நன்றி. நீங்கள் என்னை ஒரேயடியாகப் புகழ்கிறீர்கள். நீங்கள் கூறும் அளவுக்கெல்லாம் எனக்கு ஆங்கிலப் புலமை கிடையாது” என்று டிராகுலா பிரபு பதில் கூறினார்.
சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு பிரபு தொடர்ந்து பேசினார்.
“என்னுடைய நண்பர் பீட்டர் ஹாக்கினின் பிரதிநிதியாக மட்டுமே நீங்கள் இங்கு வந்திருப்பவரல்ல. இங்கே நீங்கள் தங்கியிருக்கும் கொஞ்ச நாட்களுக்குள் என்னுடைய ஆங்கிலத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்துதர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். மேலும் இன்றைக்கு நான் இத்தனை தாமதமாக வந்ததற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்.”
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இந்த நூலகத்திற்கு நான் விரும்பிய நேரத்தில் வந்துபோவதற்கு ஏதாவது ஆட்சேபனை உண்டா தங்களுக்கு?” என்று ஜோனாதன் கேட்டார்.
“நிச்சயமாக இல்லை. எப்போது வேண்டுமானாலும் தாங்கள் இங்கு வந்து போகலாம். எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் போகலாம். ஆனால் பூட்டிய அறைக்குள் மட்டும் நுழைவதற்கு ஆர்வம் காட்டாதீர்கள். அதற்கெல்லாம் சில காரணங்கள் உண்டு!”
சரி என்பது போல ஜோனாதனும் அப்போது தலையாட்டினார்.
“மேலும் நாம் எல்லாரும் இப்போது டிரான்சில்வேனியாவில் இருக்கிறோம். இங்கிலாந்து நடைமுறைகளும் பழக்க வழக்கங்களும் இங்குள்ள நடைமுறைகளிலிருந்து வேறுபடலாம். அசாதாரணமாகத் தோன்றலாம்” என்று பிரபு கூறினார்.
இதுதான் சமயம் என்று தான் இதுவரை கேட்க நினைத்த பல்வேறு சந்தேகங்களையும் கேட்டுவிட முடிவு செய்தார் ஜோனாதன்.
அந்த நாட்டில் உள்ளவர்களின் மூடநம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி அவர் கேட்ட கேள்விகள் பலவற்றிற்கும் பதில் கூறாமல் தவிர்த்தார் பிரபு. பலவற்றை சமாளித்தார்.
அந்த இடத்திற்கு வரும் வழியில் ஓரிடத்தில் தான் பார்த்த நீலநிற வெளிச்சம் பற்றியும், குதிரை வண்டிக்காரர் அடிக்கடி இறங்கிச் சென்றது குறித்தும் ஜோனாதன் அவரிடம் கேட்டார்.
“இது ஒரு யுத்த பூமி. நாட்டை நேசித்தவர்களும் ஆக்கிரமித்தவர்களும் ரத்தம் சிந்திய பூமி இது. இந்த நாட்டினர் எதிரிகளின் ஆயுதங்களுக்கு பலியானபோது அவர்களுடைய செல்வங்களையெல்லாம் மண்ணில் புதைத்திருக்க வேண்டும். சில குறிப்பிட்ட நேரத்தில் அந்தச் செல்வங்கள் புதைக்கப்பட்ட இடங் களிலிருந்து அப்படிப்பட்ட நீலநிற வெளிச்சம் தட்டுப்படுவதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.”
“சரி, நீங்கள் கூறியபடியே இருந்தாலும் இத்தனை காலமாகியும் யாரும் இதுவரை அந்தச் செல்வங்களைக் கண்டுபிடிக்கவே இல்லையா? நிச்சயம் அது தொடர்பான நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபடாமலா இருப்பார்கள்?” என்று ஜோனாதன் அவரை மடக்கினார்.
ஆனால் டிராகுலா பிரபு அதற்குத் தயக்கமின்றி பதில் வைத்திருந்தார்.
“நீங்கள் நினைப்பது போலில்லை. இங்குள்ள விவசாயிகள் தொடை நடுங்கிகள். அந்த நீல வெளிச்சம் தோன்றும் நள்ளிரவுப் பொழுதுகளில் எந்த ஒரு மனித உயிரும் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை.”
அதன்பிறகு ஜோனாதன் என்ன காரணத்தாலோ அந்தப் பேச்சைத் தொடர விரும்பவில்லை.
பிரபுவுக்காக இங்கிலாந்தில் ஹாக்கின்ஸ் பார்த்து வைத்திருந்த இடத்தை வாங்குவது பற்றி பேச்சைத் திருப்பினார் ஜோனாதன்.
அதற்கான பத்திரங்கள் மற்றும் ஆவணங்களில் பிரபு விடமிருந்து கையெழுத்துகளைப் பெற்றார் ஜோனாதன். ஹாக்கின்ஸி டம் கொடுக்கச் சொல்லி அச்சமயம் ஒரு கடிதத்தை எடுத்து ஜோனாதனிடம் பிரபு ஒப்படைத்தார்.
தொடரும்…