பிரபு கடிதத்தை வாங்கி கவனத்துடன் வாசித்துவிட்டு, ஜோனாதனிடமே கொடுத்து வாசிக்கும்படி கூறினார்.
ஜோனாதன் வாங்கிப் படித்தபோது கடிதத்தின் ஒரு பகுதியில் தன்னைப் பற்றிய வாசகங்களையும் கண்டார்.
“தொலைதூரப் பயணம் செய்ய முடியாதபடி வாத நோயால் கடுமையாக நான் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கும் தங்களுடைய நாட்டுக்கு வரமுடியாது போனது வருத்தம்தான். இருந்தபோதிலும் என்னுடைய முழுமையான நம்பிக்கைக்குரிய ஒரு பிரதிநிதியை உங்களிடம் அனுப்பி வைத்திருக்கிறேன்.
ஜோனாதன் ஹார்க்கர் மிகுந்த கெட்டிக்காரர் மட்டுமின்றி விசுவாசமானவரும்கூட. தெளிந்த தீர்மானமான முடிவை எடுப்பதில் வல்லவர் இவர். அதிகமாகப் பேசமாட்டார். ஆனால் விவேகமாக காரியமாற்றுவார். நீங்கள் விரும்பும்படியான எந்த உதவியையும் அவரிடமிருந்து பெற முடியும்.”
ஜோனாதன் சாப்பிட்ட பின்பு, டிராகுலா பிரபுவே பாத்திரங் களையெல்லாம் ஒதுக்கி வைத்தார்.
கோழி இறைச்சியும் சாலட்டும் மிகவும் சுவையாக சமைக்கப் பட்டிருந்ததால் ஜோனாதன் நன்றாக – திருப்தியாக சாப்பிட்டு முடித்தார். டிராகுலா பிரபு இடையிடையே நிறைய கேள்விகள் கேட்டார். ஜோனாதனும் சளைக்காமல் பதில் கூறினார். அதுமட்டுமின்றி தனது பயண அனுபவங்களையும் அவர் சொல்லத் தவறவில்லை.
சாப்பிட்ட பின்பு அந்த கனப்பு அடுப்பு முன்பாக வந்தமரும் படி ஒரு நாற்காலியினைச் சுட்டிக் காண்பித்தார் பிரபு.
விலையுயர்ந்த சுருட்டு ஒன்றையும் புகைப்பதற்காக அவருக்கு வழங்கினார் பிரபு. ஆனால் தான் புகை பிடிப்பதில்லை என்று மறுத்துவிட்டார்.
கனப்பு அடுப்பின் முன்பாக நின்று கொண்டிருந்த டிராகுலா பிரபுவை இப்போதுதான் அவர் நன்றாகப் பார்த்தார்.
தசைப்பற்றில்லாத முற்றிப்போன அந்த முகத்தில் நீண்டு உயர்ந்து வளைந்திருந்த மூக்கைப் பார்த்தார். அகலமாக முட்டிக்கொண்டு நிற்கும் நெற்றிப் பரப்பையும் பின்னோக்கி வாரப்பட்ட நீண்ட முடியையும் அடர்த்தியான புருவ ரோமங்களையும் பார்த்தார்.
தடித்த மீசைக்குக் கீழே வாய் குரூரமாக இழுபட்டு நிற்பது போலிருந்தது. அவரைப் பார்த்த ஒரே பார்வையில் அவர் வலிமையானவராகவும் இரக்கமற்ற மிருகத்தன்மையுடையவராகவும் காணப்பட்டார்.
டிராகுலா பிரபுவின் உள்ளங்கைப் பகுதி வெள்ளை நிறத்தில் பளபளப்பாக முரட்டுத்தனமாக இருந்தது. ஆனால் அதைவிட ஆச்சரியம் என்னவென்றால் அவருடைய உள்ளங்கைப் பகுதியிலும் முடி வளர்ந்திருந்தது.
அவருடைய நீண்ட கை எலும்புகளின் முனையில் விரல்களின் நகங்கள் கூர்மையான கத்திபோல தென்பட்டன.
ஜோனாதனின் தோள்மீது பிரபுவின் கை பதிந்தபோது ஏதோ மின்னல் ஊடுருவியது போலிருந்தது.
பிரபு பேசுவதற்காக ஜோனாதனின் முகத்துக்கு அருகில் குனிந்து வாய்திறந்தபோது, குடலைப் புரட்டும் ஒருவித நாற்றம் குப்பென்று பரவியது.
அவருக்கு அந்த நாற்றம் மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் புரிந்து கொண்டதாலோ என்னவோ சட்டென்று பின் நகர்ந்து கொண்டார்.
அச்சமயத்தில் தூரத்தில் எங்கோ ஓநாய்களின் ஊளைச் சத்தம் கேட்டு டிராகுலா பிரபுவின் முகத்தில் வெளிச்சம் பரவியது.
“மிஸ்டர் ஹார்க்கர், அந்தச் சத்தத்தைக் கேட்டீர்களா? இரவின் செல்லக் குழந்தைகளாகிய அவை எழுப்பும் இசை அது” என்று டிராகுலா பிரபு கூறியதைக் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தார் ஜோனாதன்.
“நீங்கள் மிகவும் களைப்பாக இருக்கிறீர்கள். உங்களுக்கு உடனடியாக ஓய்வு தேவை. நன்றாகப் படுத்து உறங்குங்கள். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உறங்கலாம். நாளை மதிய நேரம் வரை வேறொரு இடத்திலிருப்பேன்” என்று மிகவும் பணிவுடன் சொல்லிவிட்டு, அந்த அறைக் கதவைத் திறந்து கொண்டு பக்கத்து அறைக்குச் சென்று தாழிட்டுக் கொண்டார்.
தொடரும்…