அந்தப் பாதை செங்குத்தாக சரிவாகக் கீழ்நோக்கி இறங்கியதாலும், கம்பளிப் போர்வை மற்றும் தேவையான பொருட்களை சுமந்து செல்லவேண்டியிருந்ததாலும், நிதான மாகவே நடந்து சென்று கொண்டிருந்தனர்.
பின்புறம் திரும்பிப் பார்த்தபோது டிராகுலா கோட்டை தூரத்தில் தெரிந்தது. விசில் சத்தமும் சூறைக்காற்றும் பனிப் பொழிவுமாக இருந்தது. அவர்கள் நடக்க ரொம்பவும் சிரமப்பட் டனர். இதுபோக தூரத்தில் ஓநாய் கூட்டத்தின் ஊளைச் சத்தம் வேறு.
ஓய்வெடுப்பதற்காக ஓரிடத்தைக் கண்டுபிடித்தனர். பாறைகளுக்கு இடுக்கில் குகைவாசல் போன்ற இடுங்கிய ஒரு பகுதியைப் பார்த்துவிட்டு, “மினா, இந்த இடம் நமக்குப் பாதுகாப் பாக இருக்கும். ஓநாய்க் கூட்டமே வந்தால்கூட நான் ஒற்றை யாளாகச் சமாளிக்க முடியும்” என்று கூறினார் ஹென்சிங்.
சிறிது நேரத்துக்குப் பிறகு ஒரு தொலைநோக்கி கண்ணாடி வழியாக சுற்றுப்புறத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஹென்சிங், திடும்மென்று எதையோ கண்டுபிடித்ததைப்போல மினாவை அழைத்துக் காண்பித்தார்.
அவர் காட்டிய திசையில் தூரத்தில் ஜிப்ஸிகளின் கூட்டம் மலையேறி அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஜிப்ஸி களுக்கு நடுவே சரக்குகளை ஏற்றிய வண்டி ஒன்றும் தென்பட்டது.
அந்த வண்டியில் ஒரு பெரிய மரப் பெட்டி இருப்பதைக் கண்டு அவளது இதயம் திடுக்கிட்டது. அந்தப் பெட்டிக்குள் அடைப்பட்டுக் கிடக்கும் ஆவி ஏதாவது கொடிய வடிவம்பூண்டு வெளியே வந்து தாக்கக்கூடும் என்று எச்சரிக்கை செய்வதற்காக ஹென்சிங் பக்கம் திரும்பினாள்.
ஆனால் அதற்குள் ஹென்சிங் பாறையைச் சுற்றிலும் புனிதமான ரொட்டித் துண்டுகளைத் தூவி பெரிய வட்டம் வரைந்து கொண்டிருந்தார்.
“மினா, அவர்கள் குதிரையை படுவேகமாக விரட்டிக் கொண்டு வருகிறார்கள். சூரியன் மறைவதற்குள் டிராகுலா கோட்டையை வந்தடைவதற்காகத்தான் இத்தனை அவசரப்படுகிறார்கள்” என்றார் ஹென்சிங்.
தொலைநோக்கியால் பார்த்தபடி, “அந்த வண்டிக்குப் பின்னால் இவர்களைத் தவிர வேறு யாரோ விரைவாகப் பின் தொடர்வது தெரிகிறது” என்றாள் மினா.
“அது மாரீஸும் டாக்டர் செர்வாண்டுமாக இருக்கலாம்” என்றார் ஹென்சிங்.
“ஆம்… ஆம்” என்று உறுதி செய்தாள் மினா.
அதுபோலவே வடக்குத் திசையிலிருந்து வேறு இருவர் வருவது தெரிந்தது. அது ஜோனாதனும் க்வின்செயும்தான்.
அவர்களும் முன்னால் வரும் வண்டியைப் பின்தொடர்ந்து விரட்டிக் கொண்டு வந்தனர். மினா அத்தகவலை கூறியபோது ஹென்சிங் தனது துப்பாக்கியைத் தயாராக எடுத்து வைத்துக் கொண்டார்.
மீண்டும் டிராகுலா வேட்டைக்கு ஒன்று சேர்ந்துவிட்டனர். திடும்மென அந்த ஜிப்ஸி கூட்டத்தினரை மூன்று புறங்களிலும் சுற்றி வளைத்துக் கொண்டனர்.
ஹென்சிங் தன்னுடைய துப்பாக்கியை உயரே தூக்கிப் பிடித்து தாக்குதலுக்குத் தயாரானார். சூரியன் மறைவதற்குள் திட்டமிட்ட படி இந்த தாக்குதல் நடந்து முடியவேண்டும். சூரியன் மறைந்து விட்டால் எல்லாமே தலைகீழாகிவிடும்.
மினாவும் ஹென்சிங்கும் பெரிய பாறையின் மறைவில் ஒளிந்து கொண்டு துப்பாக்கியை சரி செய்து கொண்டு தயாராக இருந்தனர். அப்போது ஜிப்ஸிகளின் தலைவன் சாட்டையைச் சுழற்றி குதிரைகளை விரைந்து செலுத்துவதற்கு முயற்சி செய்தபோது, நான்கு பேரும் துப்பாக்கிகளை ஜிப்ஸிகளுக்கு நேராக நீட்டினர்.
அப்போது ஜிப்ஸிகளின் தலைவன் குதிரையிலிருந்து அவர்களுக்கு முன்பாக சட்டென குதித்தான். அவன் சூரியனையும் கோட்டையையும் சுட்டிக்காட்டி அவர்களது மொழியில் ஏதேதோ கூறினான்.
அதே நொடியில் ஜோனாதனும் மாரீஸும் க்வின்செயும் ஆவேசத்துடன் பெட்டியை நோக்கிப் பாய்ந்து ஓடினர்.
சட்டென அந்த ஜிப்ஸிகள் பெட்டிக்கு காவலாக சுற்றி நின்று கொண்டனர். சூரியன் மறைவதற்குள் தங்கள் லட்சியத்தை நிறைவேற்றும் தீவிரத்துடன் ஜோனாதனும் க்வின்செயும் காவலிருந்த ஜிப்ஸியை தள்ளி விட்டு முன்னால் பாய்ந்தனர்.
அந்த ஜிப்ஸிகளின் வாள்கள் தங்களை நோக்கி விரைவதை அவர்கள் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
ஜிப்ஸிகளையும் அங்கானிகளையும் இருபுறங்களிலும் வெட்டி வீழ்த்திக் கொண்டு முன்னேறிய மாரீஸை சட்டென ஒரு அங்கானி கத்தியால் குத்தினான்.
தன்னுடைய இடக்கையால் வயிற்றின் இடப்புறத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டு அவர் தள்ளாடித் தள்ளாடி நடந்தார்.
அந்த நிலையிலும் அவர் ஜோனாதனுக்கு வழிவிட்டபடி வண்டியை நெருங்கினார். அந்த நிமிடத்துக்குள் ஜோனாதன் அந்தப் பெட்டியை வண்டியிலிருந்து கீழே தள்ளிவிட்டார்.
அதனைத் தொடர்ந்து கீழே குதித்த ஜோனாதன் தன்னுடைய குறுவாளால் பெட்டியின் தாழ்ப்பாளை உடைத்து மூடியைத் திறக்க முயன்றார்.
தன்னுடைய வயிற்றுப் பகுதியை இறுக்கி பிடித்துக் கொண்டே வந்த மாரீஸ் தன்னுடைய வேட்டைக் கத்தியைக் கொடுத்து உதவினார்.
அந்தப் பெட்டியைத் திறந்தபோது டிராகுலா பிரபுவின் கோர வடிவத்தை அவர்களால் பார்க்க முடிந்தது. ஜோனாதன் பெட்டியை கீழே தள்ளியதால் ஈரமண் அந்த உடம்பில் ஒட்டியிருந்தது. அந்த பிசாசின் கோரமுகம் வெளுத்துப் போயிருந்தது. அந்தக் கண்களில் ஒரு ஜொலிஜொலிப்பும் முகத்தில் ஒரு பழி தீர்க்கும் வெறியும் இருந்தது.
சூரியன் மலையுச்சிகளுக்குப் பின்னால் அச்சமயம் மறையத் தொடங்கிய அந்த நேரத்தில் அந்த பிசாசு முகத்தில் லேசாக மகிழ்ச்சி பரவியது. ஆனால் சடாரென அந்த விநாடியில் ஜோனாதனின் கையிலிருந்த கத்தி அந்த பயங்கர பிசாசின் தொண்டைக்குள் கூர்மையாக – ஆழமாக இறங்கிவிட்டது.
அந்த ரத்தக் காட்டேரியின் கழுத்தை அறுத்துக் கொண்டு கத்தி ஊடுருவுவதைப் பார்த்து மினா அலறினாள். அச்சமயம் க்வின்செ தன்னுடைய வேட்டைக் கத்தியால் அந்த டிராகுலா பிரபுவின் இதயத்துக்குள் கைப்பிடிவரை பதியும்படி ஆழமாக ஓங்கிக் குத்தினார்.
எட்டுத் திசையும் அலறியது அப்போது. ஓநாய்களின் ஓலமும் அதில் அடங்கின. அந்த பயங்கரமான ரத்தக் காட்டேரியின் வடிவம் ஒரு விநாடி நேரத்துக்குள் பனித்துளிகளாக மாறி மறைந்து போனது!
முற்றும்.