ஜோனாதன் அப்படிப் பார்ப்பதை வண்டிக்காரர் பார்த்துவிட, “அய்யா உங்களை அழைத்துக்கொண்டு செல்ல வேண்டிய வண்டி ஒன்றும் காணவில்லையா? அப்படியென்றால் உங்களை யாரும் எதிர்பார்க்க வில்லை என்றுதானே அர்த்தம். எல்லாம் நல்லதுதான் அய்யா. இதே வண்டியிலேயே இப்போதே புக்கோவினாவுக்கு திரும்பிப் போய் விடுங்கள். நாளைக்காவது நாளை மறுநாளாவது வேண்டுமானால் நாம் திரும்பி வருவோம். அதுதான் உங்களுக்கு நல்லது” என்று வண்டிக்காரர் கூறினார்.
அச்சமயம் அந்த வண்டிக்காரர் மேலும் ஏதோ பதில் சொல்ல வாய் திறந்தபோது, சாரட்டில் பூட்டப்பட்டிருந்த குதிரைகள் எதனையோ கண்டு மிரண்டது போல உச்சஸ்தாயியில் கனைத்தன.
அந்த சூழ்நிலையில் வண்டியில் இருந்தவர்கள் பயந்துபோய் உரத்து அலறியும் சிலுவை போட்டுக் கொண்டும் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர். அதே சமயம் மின்னல்போல எதிரே மற்றொரு நான்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டி பாய்ந்து வந்து சட்டென்று நின்றது.
ஜோனாதன் அந்த வண்டியில் பூட்டப்பட்டிருந்த பயங்கரமான கறுப்புக் குதிரைகளையும் அதனை ஓட்டி வந்த உயரமான – ஒல்லியான மனிதனையும் கூர்ந்து பார்த்தார்.
தலையில் தொப்பி, கூர்மையான செம்பட்டை தாடியுடனிருந்த அந்த மனிதனின் முகத்தைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. ஆனாலும் நெருப்புத் துண்டுகளைப்போல கண்கள் இரண்டை மட்டும் காண முடிந்தது.
அந்தப் புதிய வண்டிக்காரர் இன்றைக்கு நீ சற்று சீக்கிரமாகவே வந்துவிட்டாய் நண்பனே’ என்று கூறியபோது, இவர் அவசரம் காட்டியதால்தான் இவ்வாறு முடிந்தது’ என்று உதடு நடுங்க அவர்களை ஏற்றி வந்த வண்டிக்காரர் கூறினார்.
ஓகோ! அதனால்தான் அவரை நீ திரும்பவும் புக்கோ வினாவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டாயோ? என்னை நீ ஏமாற்ற முடியாது. நான் எல்லாவற்றையும் அறிந்தவன். அது மட்டுமல்ல; என் குதிரைகள் படுசுட்டி” என்று கூறிவிட்டு அதிரும்படியாக அவர் வாய்விட்டுச் சிரித்தார்.
செத்துப் போனவர்கள்தான் சீக்கிரமாகப் பயணம் செய்வார்கள்” என்று பயணி ஒருவர் முணுமுணுத்ததை ஜோனாதன் கவனித்தார். வண்டிக்காரரும் அதனைக் கேட்டு லேசாகச் சிரித்தார்.
அச்சமயம் மற்ற பயணிகள் சிலுவை போட்ட இரண்டு விரல்களால் வண்டிக்காரரை சுட்டிக் காண்பித்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டனர்.
இப்போது புதிய வண்டிக்காரர் மிகுந்த அதிகாரம் தொனிக்கும் குரலில், அய்யாவுடைய பெட்டிகளை இங்கு கொடு’ என்று அதட்டினார்.
ஜோனாதன் அந்தப் புதிய வண்டியில் ஏறியபோது அவர் ஏறுவதற்கு கையைப் பிடித்து உதவினார் வண்டிக்காரர்.
அந்தக் கைகளிரண்டும் எஃகு போன்று உறுதியாகவும் பனிக்கட்டியைப் போல குளிர்ச்சியாகவும் இருந்தது கண்டு ஜோனாதனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இனம்புரியாத சூனியத் தன்மையும் படபடப்பும் நிம்மதியற்ற சூழ்நிலையும் தன்னைச் சுற்றிலும் பரவிக் கிடப்பதை ஜோனாதன் உணர்ந்தார்.
ஒரு பெரிய கறுத்த கம்பளிப் போர்வையை அவரிடம் கொடுத்த வண்டிக்காரர் அதனைப் போர்த்திக் கொள்ளும்படி கூறினார்.
அய்யா, ராத்திரிக்கு ரொம்பவும் குளிரடிக்கும். பிரபு அய்யா உங்களை நன்றாக கவனிக்கச் சொல்லியிருக்கிறார். குளிருக்கு சூடு உண்டாக்க உங்க இருக்கைக்கு அடியில் பிராந்தி இருக்கிறது. வேண்டுமானால் நீங்கள் எடுத்து அருந்தலாம்” என்றார்.
ஆனால் ஜோனாதன் அதற்கெல்லாம் பதில் கூறுவதாயில்லை. இந்த இரவுப் பயணத்தைத் தவிர்த்திருக்கலாமே என்பதுதான் இப்போது அவரது யோசனையாக இருந்தது.
ஜோனாதனுக்குள் திடுக்கென ஒரு நினைவு தோன்றியது. தான் பயணம் செய்து வந்த வண்டி ஓரிடத்தில் வட்டமடித்துவிட்டு, திரும்பவும் ஏற்கெனவே பயணம் செய்த பாதையிலேயே பயணம் செய்வதுபோலத் தோன்றியது.
அடையாளங்களைக் கூர்ந்து பார்த்துவிட்டு அது சரிதான் என்று உணர்ந்தபோது, அதைப் பற்றி வண்டிக்காரரிடம் கேட்பதற்கு வாயெடுத்தார்.
பின்னர் வேண்டாம் என முடிவெடுத்தார். ஒருவேளை வேண்டும் என்றே திட்டமிட்டு அது நடந்து கொண்டிருந்தால் தான் கேட்பதில் அர்த்தம் இல்லாமல் போய்விடுமே!
சிறிது நேரம் கண்ணை மூடியபடி இருந்தவர், அப்போதைய நேரம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக தீக்குச்சியை உரசி கைக்கடிகாரத்தில் மணி பார்த்தார்.
சரியாக நள்ளிரவுக்கு ஒரு சில நிமிடங்கள்தான் பாக்கி. திடும்மென மனதுக்குள் ஒரு கலக்கம். நள்ளிரவுப் பொழுதைப் பற்றி பலதரப்பட்ட தகவல்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டு மனத்திரையில் ஓடின.
யாரும் எதிர்பாராத நிகழ்வாக திடும்மென மலையடிவாரத்தில் எங்கோ தூரத்தில் ஒரு நாய் அப்போது ஊளையிடத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாயாக ஊளையிட, அந்தப் பகுதியெங்கும் ஒட்டுமொத்த நாய்களின் ஊளைச் சத்தம் இடைவெளியில்லாமல் எழுந்தது.
அந்த நாய்களின் ஊளைச் சத்தம் கேட்ட மாத்திரத்தில் மிரண்டுபோன கறுப்புக் குதிரைகள் நடுங்கியதுமில்லாமல் தயங்கிய படி சட்டென நின்றுவிட்டன.
ஆனால், அந்த வண்டிக்காரர் ஒரு மாதிரியான குரலில் ஏதோ ஒரு சில வார்த்தைகளைக் கூறி சத்தமிட்டவுடன், அந்தக் குதிரைகள் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தன.
ஒரு வழியாய் அந்த நாய்களின் ஊளைச் சத்தம் நின்று போய்விட்டது என்று ஜோனாதன் சற்று நிம்மதியடைந்த நேரத்தில், அதனைவிட இரண்டு மடங்கு சத்தமாக மிரட்டும் தொனியில் பயங்கரமாக ஓநாய்கள் ஊளையிடத் தொடங்கின.
அதனைக் கேட்டு ஜோனாதன் அதிர்ந்து போனார். வண்டியிலிருந்து குதித்து ஓடிவிட அவர் நினைத்தபோது, குதிரைகளும் பயத்தால் நடுங்கிப் பாயத் தொடங்கின. வண்டிக்காரர் மிகவும் சிரமப்பட்டு குதிரைகளை ஒருவாறாகப் பிடித்து நிறுத்தினார்.
செல்லும் வழியில் வளர்ந்து சாய்ந்து கிடந்த மரங்கள் பயணத்தை ஆங்காங்கே நிறுத்தின.
ஓநாய்களின் கூட்டம் வட்டமாக நான்கு திசைகளிலும் சூழ்ந்துகொண்டபோது, ஜோனாதன் வண்டிக்குள் உட்புறமாக நகர்ந்து கொண்டார். குதிரைகள் திரும்பத் திரும்ப மிரண்டுபோய் பயணம் செய்ய மறுத்தன.
தொடரும்…