ஜோனாதன் தன்னுடைய டைரியில் குறிப்பிட்டிருந்ததைப் போல அந்தப் பாதையில் அவர்கள் மணிக்கணக்கில் பயணம் செய்தனர்.
டிராகுலா பிரபுவின் கோட்டையை நெருங்க நெருங்க மினாவின் உடல்நிலையில் ஏதோ மாற்றம் ஏற்படுவதைப் பார்த்தார் ஹென்சிங்.
அப்போது மினாவை மயக்கத்தில் ஆழ்த்த முயன்று தோற்றுப் போனார் ஹென்சிங். மனித நடமாட்டமே இல்லாத மலைகள் நிறைந்த பாலைவனப்பகுதியில் அவர்களின் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. மினா நன்றாக உறங்கலானாள்.
மினா என்ன காரணத்தினாலோ சாப்பாடு வேண்டாம் என்று கூறிவிட்டாள். அந்த பயங்கரமான குதிரையின் அமானுஷ்ய சக்திதான் அவளைச் செயலற்றதாக்கி உள்ளது என்று அவர் நினைத்தார்.
சூரியன் மறையும் வேளையில் அவர்கள் செங்குத்தான மலையின் உச்சியில் இருந்தனர். அதன் உச்சியில் ஜோனாதன் கூறியதுபோல ஒரு கோட்டை இருந்தது.
தங்கள் பயணம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்பதை உணர்ந்தார் ஹென்சிங். பனிபடர்ந்த அந்தப் பாதையில் சன்னமான வெளிச்சம் மட்டும் தென்பட்டது.
ஹென்சிங் வண்டியை நிறுத்திவிட்டு குதிரைகளை அவிழ்த்து மரத்தினடியில் கட்டிப் போட்டார். காய்ந்த மரத்துண்டுகளைப் பொறுக்கி வந்து நெருப்பு மூட்டினார். பின்னர் அதற்கு அருகில் கம்பளிப் போர்வை ஒன்றை விரித்து அதில் மினாவை வசதியாகப் படுக்க வைத்தார்.
அங்கே ஹென்சிங் இரவுக்கான உணவைச் சமைத்தார். அப்போதும் மினா தனக்கு பசிக்கவில்லை என்று கூறிவிட்டாள். ஹென்சிங்கும் அவளை வற்புறுத்தவில்லை.
ஹென்சிங் சாப்பிட்டவுடன் மினாவைச் சுற்றிலும் ஒரு பெரிய வட்டம் போட்டு அந்தப் பகுதியில் புனித ரொட்டித் துண்டுகளைத் தூவினார்.
மினா எந்த அசைவுமின்றி அத்தனையையும் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவள் முகம் வெளிறிப் போயிருந்தது.
மினாவை அந்த நெருப்புக் கணப்புக்கு அருகில் வரும்படி அழைத்தார் அவர். ஆனால் மினா எழுந்து இரண்டு அடி எடுத்து வைத்து சட்டென யாரோ தன்னைத் தாக்கி நிறுத்தியதுபோல நின்றுவிட்டாள். ஹென்சிங் அவளைச் சோதிக்கத்தான் அவ்வாறு செய்தார்.
“என்ன மினா? என்ன ஆகிவிட்டது? ஏன் அப்படியே நின்றுவிட்டீர்கள்?” என்று ஹென்சிங் கேட்டபோது, “”என்னால் முடியவில்லை” என்று மினா வேதனையால் துடித்தவளாகக் கூறினாள்.
ஹென்சிங் எதிர்பார்த்ததும் அதுதான். மினாவின் உடம்பில்தான் ஆவி புகுந்திருக்கிறது. ஆத்மாவில் இல்லை. அது இன்னும் புனிதமாகவே இருக்கிறது என்பதை உறுதிசெய்து கொண்டார்.
என்னவோ தெரியவில்லை. குதிரைகள் பயங்கரமாக குரல் எழுப்பி அழுதன. ஹென்சிங்கின் கரம் பட்டவுடன் சிலிர்த்து, நன்றியுடன் அவரது கரங்களை நக்கின.
இரவின் கடைசி ஜாமத்தில் விறகுகள் எரிந்து தீர்ந்து போயிருந்ததால் ஹென்சிங் மேலும் விறகுகளைப் போட்டு நெருப்பு மூட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது பனித்துளிகள் காற்றில் பறந்து வந்து நெருப்பைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டன. திடும்மென அந்தப் பனிப்படலம் பளபளப்பான உடையணிந்த பெண் உருவங்களாக மாறின.
ஹென்சிங்கின் மனமும் பயத்தால் ஊசலாடியது. புனிதமான ரொட்டித் துண்டுகளால் தான் உருவாக்கிய வட்டப்பரப்புக்குள் தான் இருக்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டதால் சற்று ஆறுதல் அடைந்தார்.
ஹென்சிங் மிகுந்த யோசனையோடு அடுத்து என்ன செய்யலாம் என்று இருந்தபோது, அந்த வெண்மையான உருவங்கள் வட்டப்பகுதிக்கு வெளியே சூழ்ந்து கொண்டு நடனமாடத் தொடங்கின.
ஜோனாதன் ஏற்கெனவே விவரித்திருந்த அந்த இளம்பெண் பிசாசுகளை ஹென்சிங் உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார்.
அந்தப் பெண் பிசாசுகள் குரூரமாக மினாவைப் பார்த்துச் சிரித்தன. அவை யாவும் மினாவைப் பார்த்து, “சகோதரி வாருங்கள். அங்கிருந்து இறங்கி எங்களுக்கு அருகே வாருங்கள்” என்று அழைத்தன.
ஹென்சிங் ஒரு கையில் கொள்ளிக் கட்டையுடன் மறுகையில் ரொட்டித் துண்டுகளை வைத்துக் கொண்டு, அந்தப் பெண் பிசாசுகளை நோக்கிச் சென்றபோது அவை சட்டென பின்னோக்கி நகர்ந்து கொண்டன.
விடியலின் கதிர்கள் படர்ந்ததும் அந்தக் கோரப் பிசாசுகள் பனித்துளிகளாக மாறி மறைந்தன. பின்னர் அந்தப் பனித்துளிகள் கோட்டையின் பக்கமாகச் சென்றதாக ஹென்சிங்குக்குத் தோன்றியது.
புனித வட்டத்துக்குள் மினா பத்திரமாக இருப்பதை உறுதி செய்து கொண்ட பிறகு, ஹென்சிங் டிராகுலா கோட்டைக்குள் அன்றைக்கு மதிய நேரத்துக்குப் பின்பு சென்றார்.
டிராகுலா கோட்டையின் எல்லா கதவுகளும் திறந்து கிடந்தன. ஆனாலும் ஜோனாதனுக்கு ஏற்பட்டதுபோல தனக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக அனைத்து கதவுகளின் தாழ்ப்பாழ்களையும் அடித்து நொறுக்கினார்.
அந்தக் கோட்டையின் திறந்து கிடந்த வாசலின் உட்புறமிருந்து வந்த நாற்றம் தாங்க முடியாத அளவுக்கு இருந்தது. அந்தப் பெண் பிசாசுகள் ஓய்வு எடுக்கும் மூன்று சவப் பெட்டிகளும் அந்தக் கோட்டைக்குள்தான் இருக்க வேண்டுமென நினைத்தார் ஹென்சிங்.
அதில் ஒரு பெட்டியை தேடிக் கண்டுபிடிக்கவும் செய்தார். அந்தச் சவப் பெட்டியில் மிகுந்த கவர்ச்சியுடன் ஒரு இளம்பெண் படுத்து கிடப்பதைக் கண்டார். அதன்பின் மேலும் இரண்டு சவப் பெட்டிகளையும் கண்டுபிடித்தார். உறங்கிக் கொண்டிருந்த மூன்று ரத்தக்காட்டேரிகளையும் அழித்தார் ஹென்சிங்.
அந்தப் பெண் பிசாசுகளின் இதயங்களில் கூர்மையான மரக்கம்புகளை அடித்து இறக்கினார். அந்த பிசாசுகள் அலறித் துடிக்க, அவற்றின் மார்பு மற்றும் வாய்ப் பகுதிகளிலிருந்து கெட்டியான ரத்தம் பீய்ச்சியடித்தது.
ஹென்சிங் தன்னுடைய தேடுதல் வேட்டையை இன்னும் தொடர்ந்தார். அவர் தேடிய சவப் பெட்டியை கடைசியாக ஓரிடத்தில் கண்டார்.
அது மிகவும் பெரியதாக ராஜதோரணையில் கம்பீரமாகத் தெரிந்தது. அதன் மேற்புறம் டிராகுலா என்று ஒரு வார்த்தை மட்டும் எழுதப்பட்டிருந்தது.
ஒரு வழியாக அதுதான் டிராகுலாவின் இருப்பிடப் பகுதி என்பதை அறிந்து கொண்டார். மிகவும் ஆவேசம் கொண்டவராக அந்தப் பெட்டியை ஹென்சிங் திறந்தார்.
அதன் உட்புறம் காலியாக இருந்தது. உடனே ஹென்சிங் அந்த டிராகுலா அந்த இடத்துக்கு ஒருபோதும் திரும்ப வரமுடியாதபடி அந்தப் பெட்டிக்குள் ஏராளமான புனித ரொட்டித் துண்டுகளைத் தூவினார்.
அதன்பிறகு அந்தக் கோட்டையிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக அங்கு இருந்த எல்லா வழிகளிலும் பரிசுத்த ரொட்டித் துண்டுகளைத் தூவி அவற்றை டிராகுலா கடந்து செல்ல முடியாதபடி செய்தார்.
அவற்றையெல்லாம் பரிசுத்த ஆன்மாவின் பெயரால் கட்டிப் போட்டார். அந்தக் கோட்டையைவிட்டு வெளியே வந்தார்.
ஏனென்றால் கோட்டைக்கு சற்று தொலைவில் பாதுகாப்பு வட்டத்துக்குள் மினாவை விட்டுவிட்டு அல்லவா அவர் வந்திருந்தார்!
அடுத்த நாள் மாலை நேரமாகியதும் மினாவை அழைத்துக் கொண்டு ஹென்சிங் கிழக்குத்திசையில் பயணத்தைத் தொடங்கினார்.
தொடரும்…